Wednesday, April 10, 2024

"அவர் வளரவேண்டும், நானோ குறையவேண்டும்" (அரு. 3:30)

"அவர் வளரவேண்டும், நானோ குறையவேண்டும்" 
(அரு. 3:30)

இவை ஸ்நாபக அருளப்பர் தன்னைப் பற்றி கூறிய வார்த்தைகள்,

நாமும் நம்மைப் பற்றிக் கூற வேண்டிய வார்த்தைகள்.

ஸ்நாபக அருளப்பர் மெசியா அல்ல, மெசியாவின் முன்னோடி.

மெசியா வந்த பின் முன்னோடிக்கு வேலை இல்லை.

நாம் மெசியாவின் முன்னோடிகள் அல்ல. அவரது சீடர்கள்.

சீடன் குரு அல்ல, குருவைப் பின் பற்றுபவன்.

குரு அல்ல, ஆனால் குருவைப் போல் வாழ வேண்டியவன்.

நாம் இயேசுவைப் போல் வாழ வேண்டும்.

நமது வாழ்க்கை இயேசுவின் வாழ்க்கையைப் பிரதிபலிக்க வேண்டும்.

பிரதிபலிப்பின் சதவீதம் கூடிக் கொண்டே போக வேண்டும்.

நூற்றுக்கு நூறு பிரதிபலிக்க வேண்டும்.

அதாவது நாம் முற்றிலும் இயேசுவாக மாற வேண்டும்.

நம்மைப் பார்ப்போர் நம்மில் இயேசுவைப் பார்க்க வேண்டும்.

இயேசு முழுமையாக நமக்குள் வந்து விட்டால் 

அவர் தான் நம்மில் வாழ்வார்.

"வாழ்வது நானல்ல, என்னில் இயேசு வாழ்கிறார் '

என்ற புனித சின்னப்பரின் வார்த்தைகள் நமது ‌வார்த்தைகளாக மாற வேண்டும்.

நம்மில் இயேசு வளர வேண்டும், நாம் தேய வேண்டும்.

எப்படி?

நம்மோடு உள்ள நமது குணங்கள் குறைய வேண்டும்.

இயேசுவின் பண்புகள் நம்மில் வளர வேண்டும்.

நாம் பிரதிபலன் எதிர் பார்த்து அன்பு செய்கிறோம்.

நமது அன்புக்கு உலக ரீதியான பலன்களை எதிர்பார்க்கிறோம்.

ஆனால் இயேசுவின் அன்பு நிபந்தனையற்றது.

அவர் நல்லவர்களையும் அன்பு செய்கிறார், கெட்டவர்களையும் 
அன்பு செய்கிறார்.

தன்னை அன்பு செய்பவர்களையும் அன்பு செய்கிறார், 

அன்பு செய்யாதவர்களையும் அன்பு செய்கிறார்.

நாம் அவரை அன்பு செய்வதால் அவருக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை.

ஆனாலும் அவர் நம்மை அன்பு செய்கிறார்.

அவரிடமிருந்து எதுவும் கிடைக்கும் என்பதற்காக அல்ல, 

அவர் நம்மைப் படைத்தவர் என்பதற்காக மட்டும் அவரை அன்பு செய்ய வேண்டும்.

நமது பிறர் அன்பும் பிரதிபலன் எதிர் பாராத அன்பாக இருக்க வேண்டும்.

பிறருக்குத் தருவது தான் அன்பு, பிறரிடமிருந்து பெறுவது அல்ல.

இயேசு அவருக்கு எதிராகப் பாவம் செய்பவர்களை மன்னிக்கிறார்.

நாமும் நமக்கு எதிராகச் செயல் படுபவர்களை மன்னிக்க வேண்டும்.

நமக்குத் தீமை செய்பவர்களுக்கு நாம் நன்மை செய்ய வேண்டும்.

பிறருடைய நலனுக்காக நமது உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்.

இயேசு பாடுகள் பட்டு அவற்றை நமது பாவங்களுக்குப் பரிகாரமாகத் தனது தந்தையிடம் ஒப்புக் கொடுத்தார்.

நாமும் நமது துன்பங்களை உலகோர் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரமாகக் கடவுளுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும்.

இயேசு உலகமனைத்துக்கும் உரிமையாளராக இருந்தாலும் 

ஏழ்மையை நேசித்தார்.

ஏழையாகப் பிறந்தார்,
ஏழையாக வாழ்ந்தார்,
ஏழையாக மரித்தார்.

நாமும் ஏழ்மையை நேசிக்க வேண்டும்.

நமது குணங்கள் அனைத்தும் 

அன்பு, இரக்கம், மன்னிப்பு, தியாகம் போன்ற இயேசுவின் குணங்களாக மாற வேண்டும்.

ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஒவ்வொரு இயேசுவாக மாற வேண்டும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment