Monday, April 8, 2024

"பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்."(அரு. 3:14)

"பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்."
(அரு.  3:14)

விடுதலைப் பயணத்தின்போது இஸ்ரேல் மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசினர்.

 உடனே ஆண்டவர் கொள்ளி வாய்ப் பாம்புகளை மக்களிடையே அனுப்பினார்; அவை கடிக்கவே இஸ்ரயேல் மக்களில் பலர் மாண்டனர். 

அப்போது மக்கள் மோசேயிடம் வந்து, "நாங்கள் பாவம் செய்துள்ளோம்" நாங்கள் ஆண்டவருக்கும் உமக்கும் எதிராகப் பேசியுள்ளோம்; அவர் இந்தப் பாம்புகளை அகற்றி விடும்படி நீர் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளும்" என்றனர். அவ்வாறே மோசே மக்களுக்காக மன்றாடினார். 


அப்போது ஆண்டவர் மோசேயிடம், "கொள்ளி வாய்ப் பாம்பொன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்" என்றார். 
(எண்ணிக்கை 21:8

அவ்வாறே மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; 

பாம்பு கடித்தவர்கள்  இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைத்தனர். 


"பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்."

பாம்பின் உருவம் உயர்த்தப் பட்டதோடு தனது சிலுவை மரணத்தை ஏன் ஆண்டவர் ஒப்பிடுகிறார்?

பாவம் செய்த இஸ்ரேல் மக்களைத் தண்டிக்க பாம்பு அனுப்பப்பட்டது.

பாம்பின் உருவம் கம்பத்தில் உயர்த்தப் பட்டது.

அதைப் பார்த்தோர் பிழைத்துக் கொண்டனர்.

கம்பத்தில் உயர்த்தப் பட்ட பாம்பு இஸ்ரேல் மக்கள் செய்த பாவத்திற்குக் கிடைத்த தண்டனைக்கு அடையாளம்.

ஆனால் சிலுவையில் உயர்த்தப் பட்ட இயேசு கடவுள்.

கடவுளாகிய தன்னைத் ஏன் தண்டனைக்கு  அடையாளமாகிய பாம்போடு ஒப்பிடுகிறார்?

" தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். "
( 3:16)

தந்தை ஏன் தனது ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார்?

பாவம் செய்த மனிதர்கள் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு.


பாவம் செய்த மனிதர்கள் அழியாமல் நிலைவாழ்வு பெற என்ன செய்ய வேண்டும்?

தங்களது பாவத்திலிருந்து விடுதலை பெற வேண்டும்.

மனிதர்கள் பாவத்திலிருந்து விடுதலை பெற இறைமகன் என்ன செய்தார்?

மனிதர்கள் செய்த பாவங்களை சிலுவை வடிவில் தானே சுமந்து, 

அதில் அறையப்பட்டு, 

அதில் தன்னையே பலியாக்கி,

 மனிதர்களின் பாவத்துக்குப் பரிகாரம் செய்தார்.

நாம் செய்த பாவத்துக்கு பரிகாரமாக இயேசு தன்னைத் தானே தண்டித்துக் கொண்டார்.

பரிகாரத்தின் மூலம் மனிதர்களுக்கு பாவத்திலிருந்து விடுதலை கொடுத்தார்.

சிலுவையில் உயர்த்தப்பட்டிருப்பது நமது பாவங்களுக்காகப் பரிகாரம் செய்த இயேசு.

மனிதர்கள் பாவத்திலிருந்து விடுதலை பெற என்ன செய்ய வேண்டும்?

இயேசு மரித்த சிலுவையை உற்றுப் பார்க்க வேண்டும்.

உற்றுப் பார்த்தால் நமது பாவச் சுமையைச் சுமந்து நமது பாவங்களுக்காகத் தன்னையே பலியாக்கிய இயேசு தெரிவார்.

அந்த நிலையில் அவரைப் பார்க்கும் போது அதற்குக் காரணமான நமது பாவங்களுக்காக உத்தம மனஸ்தாபப் படுவோம்.

நமது பாவங்கள் மன்னிக்கப் படும்.

நாமும் பாவத்திலிருந்து விடுதலை பெறுவோம்.

கடவுளால் செய்ய முடியாத சில காரியங்கள் உண்டு.

கடவுளால் பாவம் செய்ய முடியாது.

கடவுளால் கஷ்டப்பட முடியாது.

கடவுளால் மரிக்க முடியாது.

பாவம் செய்ய முடியாத கடவுள் மனிதர்களின் பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய விரும்பினார்.

பரிகாரம் செய்ய கஷ்டப்பட வேண்டும்.

ஆனால் அவரால் கஷ்டப்பட முடியாது, மரிக்க முடியாது.

பாடுகள் பட்டு மரிப்பதற்காகவே கடவுள் மனிதனாகப் பிறந்தார்.

கடவுள் தனது மனித சுபாவத்தில்

 பாடுகள் பட்டு 

சிலுவையில் அறையப்பட்டு 

 மரித்து 

நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்தார்.

நமது பாவச் சுமையைக் கடவுள் சுமந்ததை ஒரு ஒப்புமை மூலம் விளக்குவோம்.

ஒரு பள்ளிக்கூடத்தில் இரண்டு நண்பர்கள் படித்தார்கள்.

அவர்களில் ஒருவன் பள்ளி நிர்வாகியின் மகன்.

இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் நேசித்தார்கள்.

வெளியே இருந்து வந்து படித்த நண்பன் ஒரு பெரிய தவறு செய்து விட்டான்.

ஆசிரியருடைய கைக்கடிகாரத்தைத் திருடிவிட்டான்.

ஆசிரியர் மாணவர்களின் புத்தகப்  பைகளைப் பரிசோதிக்கப் போவதாகக் கூறினார்.

நண்பனின் முகத் குறிப்பிலிருந்து அவன்தான் திருடியிருப்பதை நிர்வாகியின் மகன் புரிந்து கொண்டான்.

அவனைத் தண்டனையிலிருந்து காப்பாற்றத் தீர்மானித்தான்.

ஆசிரியர் எல்லா மாணவர்களையும் வகுப்பை விட்டு வெளியே போகச் சொன்னார்.

கடைசியில் சென்ற நிர்வாகியின் மகன் யாருக்கும் தெரியாமல் நண்பன் பையில் இருந்த  கைக்கடிகாரத்தைத் தனது பைக்கு மாற்றி விட்டான்.

நிர்வாகி தான் பைகளைப் பரிசோதித்தார்.

அவருடைய மகன் பையில் கடிகாரம் இருந்தது.

தன் மகனுக்கே தண்டனை கொடுத்தார்.

மகனின் நண்பன் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்டான்.

இயேசுவும் இப்படித்தான் நமது பாவச் சுமையைத் தன் மேல் போட்டுக்கொண்டு பரிகாரம் செய்தார்.

நமது பாவங்களுக்குப் பரிகாரமாக திருடர்களோடு சிலுவையில் தொங்கினார்.

நம்மைப் படைத்துப் பராமரித்து வரும் கடவுளின் இந்நிலைக்குக் காரணம் நமது பாவங்கள்.

நமக்காகப் பாடுகள் பட்டு சிலுவையில் மரித்த ஆண்டவரைப் பார்த்தவுடன் 

நமது கால்கள் பாவ சங்கீர்த்தனத் தொட்டியை நோக்கி நகர வேண்டும்.

பாவ மன்னிப்பு பெற்ற பின் நமது பாவங்களுக்கு நாமும் பரிகாரம் செய்ய வேண்டும்.

பாவ மாசின்றி வாழ வேண்டும்.

அதுவே நம்மைப் படைத்தவர்க்கு நாம் காட்டும் நன்றிக் கடன்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment