Friday, April 19, 2024

அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை. (அரு. 7:30)

அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை. 
(அரு. 7:30)


நாம் இடத்துக்கும், நேரத்திற்கும் உட்பட்டவர்கள்,

கடவுள் இடத்துக்கும்,நேரத்திற்கும் அப்பாற்பட்டவர்.

நித்தியர்.

அவர் நேரத்திற்கு அப்பாற்பட்டவராயினும்

நேரத்தைப் படைத்தவர் அவர்தான்.

நாம் வாழும் பிரபஞ்சம் படைக்கப் பட்ட போது நேரம் ஆரம்பமாயிற்று.

அவரால் படைக்கப்பட்ட நாம் அவரால் படைக்கப்பட்ட நேரத்துக்கு உட்பட்டு வாழ்கிறோம்.

காலங்களைக் கடந்தவர் காலத்திற்கு உட்பட்ட நம்மை மீட்பதற்காக

அவரே காலத்துக்கு உட்பட்ட மனிதராகப் பிறந்தார்.

குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடத்தில் பிறந்தார்.

குறிப்பிட்ட காலம் வரை வளர்ந்தார், வாழ்ந்தார்,

குறிப்பிட்ட காலத்தில் பாடுகள் பட்டார்,

குறிப்பிட்ட காலத்தில் மரித்தார்.

படைக்கப்பட்ட நமது வாழ்க்கை நிகழ்வுகளுக்கும் அவரே காலம் குறித்திருக்கிறார்.

அவர் குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட பெற்றோருக்குப் பிறந்தோம்.

நமது விருப்பப்படி பிறக்கவில்லை.

நமது கடந்த காலமும், நிகழ் காலமும் நமக்குத் தெரியும்.

எதிர் காலம் நமக்குத் தெரியாது.

அடுத்த வினாடி என்ன நடக்கும் என்று நமக்குத் தெரியாது,  அவருக்குத் தெரியும்.

நமது பிறப்பின், நேரமும் இடமும் அவரது நித்திய காலத் திட்டம்.

‌நமக்கு என்னென்ன உதவிகள் செய்ய வேண்டும் என்பதும் அவரது நித்திய காலத் திட்டம்.

பாவம் நமது தேர்வு, 

ஆனால் நாம் என்னென்ன தேர்வு செய்வோம் என்பது அவருக்கு நித்திய காலமாகத் தெரியும்.


நாம் என்னென்ன உதவிகள் கேட்போம் என்பதும் அவருக்கு நித்திய காலமாகத் தெரியும்.

நமக்கு என்னென்ன உதவிகள்
 எப்பெப்போ செய்ய வேண்டும் என்பதை அவர் நித்திய காலமாகத் திட்டமிட்டு விடுவார்.

இன்று, இந்த வினாடியில் நாம் அவரை நோக்கி வேண்டுவது அவருக்கு நித்திய காலமாகத் தெரியும்.

இதற்கான பதிலும் அவரிடம் நித்திய காலமாகத் தயார்.

அதற்காக அவர் நித்திய காலத்திலிருந்தே குறிப்பிடு வைத்திருக்கும் நேரத்தில் அது நமக்கு வரும்.

நித்தியரான அவரே மனிதனாகப் பிறந்த பின் தனக்காகத் தானே குறிப்பிட்ட நேரத்திற்காகக் காத்திருந்தார்.

பிறந்தபின் பொது வாழ்வுக்குள் நுழைய 30 ஆண்டுகள் காத்திருந்தார்.

பொது வாழ்வுக்குள் நுழைந்த பின் பாடுகள் பட்டு மரிக்க மூன்று ஆண்டுகள் காத்திருந்தார்.

ஆனால் அவருடைய சீடர்களாகிய நாம் எதை விரும்பினாலும் அது உடனே கிடைக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறோம்.

இதை எழுதும்போது ஒரு கதை ஞாபகத்துக்கு வருகிறது.

ஒரு பையன் அவனுடைய அம்மாவிடம் சென்று, 

"அம்மா, எனக்கு ஒரு குழந்தை வேண்டும்."  என்று கேட்டான்.

"அதற்கு நீ கல்யாணம் முடிக்க வேண்டும்."

"கல்யாணம் முடித்தால் குழந்தை கிடைக்குமா?"

"கட்டாயம் கிடைக்கும்."

ஒரு பெண்ணைப் பார்த்து அவனுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள்.

முதலிரவில் மனைவியைப் பார்த்தவுடனே,

"எனக்கு ஒரு குழந்தை வேண்டும்."

"கட்டாயம் கிடைக்கும். ஆனால் அதற்கு பத்து மாதங்கள் காத்திருக்க வேண்டும்."

"அதெல்லாம் முடியாது. கல்யாணம் முடித்தால் குழந்தை கிடைக்கும் என்று அம்மா சொன்னார்கள்.

முதலில் குழந்தை, அப்புறம் தான் குடும்ப வாழ்க்கை.

இப்போது தூங்கப் போகிறேன். கையில் குழந்தையை வைத்துக் கொண்டு எழுப்பினால் தான் எழுந்திருப்பேன்."

என்று சொல்லி விட்டு தூங்க ஆரம்பித்தான்.

நமது செப விசயத்திலும் கடவுளிடமிருந்து இப்படித்தான் எதிர் பார்க்கிறோம்.

இப்போது நாம் செய்யும் செபம் கடவுளுக்கு நித்திய காலமாகத் தெரியும்.

நாம் கேட்டதை எப்போது தரவேண்டும் என்று அவர் நித்திய காலமாகத் தீர்மானித்திருப்பார்.

அப்போது தான் தருவார்.

விசுவாசத்தின் தந்தை குழந்தைக்காக நூறு ஆண்டுகள் காத்திருந்தார்.

எலிசபெத்தம்மாள் முதல் குழந்தைக்காக கிழவி ஆகும் வரைக் காத்திருந்தாள்.

ஆனால் நமது அன்னை மரியாள் 13 வயதிலேயே, கன்னியாய் இருக்கும் போதே கருத்தரித்தாள்.

மரியாள் குழந்தை வரம் வேண்டி செபிக்கவில்லை,

மாறாக வாழ்நாள் முழுவதும் கன்னியாய் இருக்கப் போவதாக கடவுளுக்கு வாக்குறுதி கொடுத்திருந்தாள்.

கடவுள் அவளுடைய வாக்குறுதிக்கு பிரச்சினை வராமல் 

கன்னியின் வயிற்றில் தானே குழந்தையாய் உற்பவித்தார்.

ஆபிரகாம் கேட்டுக் குழந்தை வரம் பெற்றார்.

எலிசபெத் கேட்டுக் குழந்தை வரம் பெற்றார்.

கன்னி மரியாள் கேளாமலேயே குழந்தை வரம் பெற்றார்.

எது எப்போது நடக்க வேண்டும் என்று தீர்மானிப்பவர் கடவுள்.

அவரது தீர்மானம் நமது செபத்தின் விளைவாக இருக்கலாம்.

நாம் கேளாததாகவும் இருக்கலாம்.

அன்னை மரியாளைப் போல நாம் நம்மை முற்றிலுமாக இறைப் பணிக்கு அர்ப்பணித்து விட வேண்டும்.

இறைவன் தன் விருப்பத்தை நம் மூலம் நிறைவேற்றுவார்.

"உமது சித்தம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுவதாக''  மட்டும் நமது செபமாக இருந்தால் போதும்.

மரணத்தை நினைத்தவுடன் பயப்படுகிறவர்கள் பலர் நம்மிடையே இருக்கிறார்கள்.

அவர்கள் பயப்படத் தேவையில்லை.

"அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை."

என்று இறைவாக்கு கூறுகிறது.

அது நமக்கும் பொருந்தும்.

கடவுள் குறித்த நேரம் வரும் வரை நம்மை யாராலும், எதாலும் ஒன்றும் செய்ய முடியாது.

நமது நேரம் வரும் வரை எவ்வளவு பெரிய வியாதி வந்தாலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.

யாராலும் நமது உயிருக்கு ஆபத்து வர முடியாது.

ஆனால் நேரம் எப்போது வரும் என்று நமக்குத் தெரியாது.

அடுத்த வினாடியே வந்தாலும் வரலாம்.

ஆகவே பயம் இல்லாமல் எப்போதும் தயாராக இருப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment