Wednesday, April 3, 2024

கதை கதையாம் காரணமாம்.(தொடர்ச்சி)

கதை கதையாம் காரணமாம்.
(தொடர்ச்சி)

சாப்பாடு ருசியாக இருக்கிறதா?

காரணம், அம்மா.

தான் சாப்பிடுவதற்காக அம்மா சமைக்கவில்லை,

நமக்குச் சாப்பிடத் தருவதற்காகச் சமைக்கிறாள்.

பிரபஞ்சம் அதிசயமாக இருக்கிறதா?

காரணம் கடவுள்.

கடவுள் தனது நன்மைக்காக பிரபஞ்சத்தைப் படைக்கவில்லே.

அவர் சுயமாக நன்மைத் தனமே உருவானவர்.

நமது நன்மைக்காகப் பிரபஞ்சத்தைப் படைத்தார்.

தனக்கு ஏதாவது கிடைக்கும் என்பதற்காக நம்மைப் படைக்கவில்லை.

நம்மோடு தனது நன்மைத்தனத்தைப் பகிர்ந்து கொள்ளவே நம்மைப் படைத்தார்.

எதிர் முனைகள் ஒன்றை ஒன்று ஈர்க்கின்றன.

Opposite poles attract each other.

எதிர் முனைகளின் ஈர்ப்பினால்தான் உலகமே இயங்குகிறது.

ஆண் X பெண்.

கணவன் X மனைவி.

படைத்தவர் X படைக்கப்பட்டவை.

எதிர் முனைகளின் ஈர்ப்பினால்தான் குடும்பமே இயங்குகிறது.

கடவுள் சர்வ வல்லவர்.

மனிதனால் சுயமாக ஒன்றும் செய்ய முடியாது.

சர்வ வல்லமையும் இயலாமையும் ஒன்றை ஒன்று ஈர்க்கின்றன.

கடவுளால் நாம் ஈர்க்கப் படுகிறோம்.

கடவுளே மனிதனாகப் பிறக்கும் அளவுக்கு நம்மால் கடவுள் ஈர்க்கப் படுகிறார்.

கடவுளுக்கும் நமக்கும் இடையில் ஏற்படும் ஈர்ப்புக்குப் பெயர் தான் அன்பு.

சுயமாக ஒன்றும் செய்ய முடியாத மனிதன் கடவுளோடு அன்பினால் இணைந்து விட்டால் அவரது அன்பினால் செயல்பட ஆரம்பித்து விடுகிறான்.

செயல்படுபவது அவனல்ல, அவனுள் இருந்து அவனை இயக்கும் கடவுள்.

படைத்தவர் X படைக்கப் பட்டவர்.
தருபவர் X தராதவர்.

படைத்தவர் படைக்கப் பட்டவரிடம் கூறுகிறார்,

"கேளுங்கள் தரப்படும்."

ஆனால் அநேக சமயங்களில் கேட்பதைத் தருவதில்லை.‌

 ஏன்?

தருவதற்காக.

தருவதற்காகத் தருவதில்லை.

புரியவில்லை?

கேளாததைத் தருவதற்காகக் கேட்பதைத் தருவதில்லை.

நாம் கேட்பது நமக்கு நல்லதா, கெடுதியா என்று அவருக்குத் தெரியும்.

நாம் கேட்பது நமக்கு உகந்தது அல்ல என்றால்

அதைத் தராமல் நமக்கு உகந்ததைத் தருவார்.

ஒரு பையன் தனது அப்பாவிடம் விளையாடுவதற்கு பாம்பைக் கேட்டால் கொடுப்பாரா?

"தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள்.

 அப்படியானால் விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா! "
(மத்தேயு நற்செய்தி 7:11)

உலகத்தை உற்று நோக்கும் போது அது எதிர்மறைகளின் தொகுப்பு போல் தோன்றும்.

ஆள்பவர், அடிமைகள்,

பணக்காரர்கள், ஏழைகள்,

நல்லவர்கள், கெட்டவர்கள்,

எதிர் எதிரில் போரிடுவோர்,

வெல்பவர்கள், தோற்பவர்கள்,

மேலோர், கீழோர் Etc. etc.


கடவுள் ஏன் எதிர்மறைகளை அனுமதிக்கிறார்?

தனது சர்வ வல்லமையால் அனைவரையும் நல்லவர்களாக மட்டும் படைத்திருக்கலாமே, என்று கேட்கத் தோன்றும்.

ஆனால் சர்வ ஞானம் உள்ளவர் கடவுள்.

நமது உடலைப் பல உறுப்புகளோடு படைக்காமல் ஒரே உறுப்பாக மட்டும் படைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

கற்பனை செய்து பாருங்கள்.

உடல் முழுவதும் தலையாக இருக்கும் மனிதனைக் கற்பனை செய்து பாருங்கள்.


கடவுள் எதிர்மறைகளை அனுமதித்திருக்கிறார்,

அவை அவரது சித்தப்படி செயல்பட வேண்டும் என்பதற்காக.

கதையை ஆரம்பித்து கதாநாயகனை மறந்து எங்கெல்லாமோ சுற்றுகிறோம்.

ஆனால்  நாம் சுற்றவில்லை.

கதாநாயகன்தான் சுற்றுகிறார் சிந்தனைத் தேரில்.

குரு மடத்தில் படிக்கும் போது எதிர்காலத்தில் எப்படியெல்லாம் இறைப்பணி ஆற்ற வேண்டும் என்று திட்டங்கள் தீட்டி யிருந்தார்.

வயல் கிடைத்தால் தானே பயிர்த் தொழில் செய்ய முடியும்!

கிடைத்திருப்பதோ கட்டாந்தரை.

அதை முதலில் வயலாக மாற்ற வேண்டும்.

அந்த முயற்சியின் ஆரம்பம் தான் கோபுரம்.

முயற்சிக்கு ஆரம்ப வெற்றி கிடைத்து விட்டது.

மக்கள் கோவிலுக்கு வர ஆரம்பித்து விட்டார்கள்.

தொடர்ந்து வர வைக்க வேண்டும்.

அவர்களை ஆன்மீகத்தில் வளர்க்க வேண்டும்.

வருடக் கணக்கில் பாவ சங்கீர்த்தனம் செய்திருக்க மாட்டார்கள்.

அடிக்கடி பாவ சங்கீர்த்தனம் செய்ய வைக்க வேண்டும்.

தகுந்த முறையில் திவ்ய நற்கருணை உட்கொள்ள வைக்க வேண்டும்.

ஆண்டவரில் ஆண்டவருக்காக வாழ வைக்க வேண்டும்.

கோபுரம் தயாராகி விட்டது.

திறப்பு விழா நாள் குறிக்கப் பட்டு விட்டது.

திறப்பு விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் சபையார் கூட்டம்.

கூட்டத்தில் சாமியார் உரையாற்றுகிறார்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment