(லூக்கா நற்செய்தி 1:37)
கடவுள் சர்வ வல்லவர்.
நாம் வாழும் உலகத்தையும், நம்மையும் ஒன்றுமில்லாமையிலிருந்து
படைத்தவர்.
அவரது படைப்புகளின் மேல் அவருக்கு சர்வ அதிகாரம் இருக்கிறது.
கோடிக்கணக்கான நட்சத்திரத்தக் குடும்பங்களாலான பிரபஞ்சத்தில் சூரிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறு கிரகம் தான் நாம் வாழும் பூமி.
பூமியில் மட்டும் தான் மனிதர்கள் வாழ்கிறார்கள்.
ஒவ்வொரு மனிதனையும் பிரபஞ்சத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால்
உலகில் உள்ள அனைத்து சமுத்திரங்களின் முன் ஒரு சொட்டுத் தண்ணீரை ஒப்பிடுவதற்குச் சமம்.
ஆனால் கடவுள் மனிதனுக்காகத்தான் இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தைப் படைத்தார்.
மனிதனைப் பிரபஞ்சத்திற்காகப் படைக்கவில்லை.
மனிதனைத் தனக்காகப் படைத்தார்.
"படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக, மனுவைப் படைத்தான் தனை வணங்க."
இது தமிழ்.
படைக்கப்படுமுன் நாம் ஒன்றுமில்லை.
We were nothing before we were created.
ஆனால் படைக்கப்பட்ட நமக்கு கடவுள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தாரென்றால்,
பிரபஞ்சத்திலுள்ள கோடானுகோடி நட்சத்திரங்களையும், அவற்றை வலம் வரும் கிரகங்களையும் நமக்காகத்தான் படைத்தார்.
நம்மில் ஒவ்வொருவரையும் தனது சாயலில் படைத்தார்.
அவரது எல்லா பண்புகளையும் நம் ஒவ்வொருவருடனும் பகிர்ந்து கொண்டார்.
அவரால் எல்லாம் முடியும்.
அவரால் இயலாதது ஒன்றுமில்லை.
அப்படியானால் அவருடைய சாயலில் உள்ள நம்மால் எல்லாம் முடியுமா?
இயேசு தந்தையுள் இருக்கிறார்.
நாம் இயேசுவின் சித்தப்படி நடந்தால் நாம் இயேசுக்குள் இருப்போம்.
அதாவது இயேசுவுடன் தந்தையுள் இருப்போம்.
"என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்."
(அரு.14:23)
நாம் கடவுளுள்ளும், கடவுள் நம்முள்ளும் வாழும்போது
சர்வல்லப கடவுள் நம்முள் செயல்புரிவார்.
அதாவது கடவுள் நம் மூலமாக செயல் புரிவார்.
கோலியாத் முன் நின்று கொண்டு சிறுவன் தாவீது சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன.
அப்பொழுது தாவீது பெலிஸ்தியனிடம்,
"நீ வாளோடும் ஈட்டியொடும் எறிவேலோடும் என்னிடம் வருகிறாய்;
நானோ நீ இகழ்ந்த இஸ்ராயேலின் படைத்திரளின் கடவுளாகிய
படைகளின் ஆண்டவர்தம் பெயரால் வருகிறேன்."
(1 சாமுவேல் 17:45)
ஆண்டவரின் பெயரால் சென்ற சிறுவன் தாவீது
தன்னை யாராலும் வெல்ல முடியாது என்று திமிருடன் நின்ற கோலியாத்தை நொடிப்பொழுதில் வென்றான்.
கடவுள் நம்மோடு இருந்தால் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு தாவீது ஒரு எடுத்துக்காட்டு.
" நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்;
ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார்."
(அரு.14:12)
என்று இயேசுவே சொல்லியிருக்கிறார்.
கோடி அற்புதர் புனித அந்தோனியார் உயிரோடு வாழும்போதே அவரால் எண்ண முடியாத அளவுக்கு புதுமைகள் செய்ய முடிந்ததே,
அது எப்படி?
அவர் இயேசுவோடு இருந்தார்,
இயேசு அவரோடு இருந்தார்.
புதுமைகள் செய்தது அந்தோனியார் அல்ல, அவருள் வாழ்ந்த கடவுள்.
அந்தோனியாரும் ஒரு மனிதர் தான்.
அந்தோனியாரால் முடிந்தது மற்ற மனிதர்களால் முடியாதா?
முடியும், அவரைப் போல் வாழ்ந்தால்.
கடுகளவு விசுவாசம் இருந்தால் ஒரு மலையையே இடம் பெயர்க்கலாம்.
(மத்.17:20)
நம் கையில் ஒரு மந்திரக் கல் இருக்கிறது.
அது நம்மோடு இருக்கும் போது நாம் நினைப்பது நடக்கும்.
ஆனால் அது நம் கையில் இருப்பது நமது ஞாபகத்தில் இல்லை.
நம் ஆண்டவர் இயேசு தான் அந்த
மந்திரக் கல்.
இயேசு நம்மோடு இருப்பது நமது ஞாபகத்தில் இல்லாததால் தான்
நாம் எப்படி வாழ்க்கையில் முன்னேறுவது என்று தெரியாமல் நிற்கிறோம்.
எல்லாம் வல்லவர் நம்மோடு இருக்கும் போது நமக்கும் எல்லாம் முடியும்,
ஏனெனில் செயல் புரிவது நாமல்ல,
நம்முள் வாழும் எல்லாம் வல்லவர்.
இயேசுவின் நினைவில் இயேசுவாக வாழ்வோம்.
இயேசுவால் எல்லாம் ஆகும்.
நமக்கு வேண்டுவதெல்லாம் மக்களின் மீட்பு.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment