(அரு. 6:66)
இயேசுவைத் தேடி வருபவர்களை இரு வகையினராகப் பிரிக்கலாம்.
ஒரு வகையினர் தங்கள் நலனுக்காக அவரைத் தேடி வருபவர்கள்.
மருத்துவரைப் பார்ப்பதற்காக மருத்துவ மனைக்குச் செல்பவர்கள் மருத்துவரைத் திருப்திப்படுத்துவதற்காகச் செல்லவில்லை.
தங்கள் நலன் கருதிச் செல்கிறார்கள்.
அவர்களுக்குத் திருப்தி ஏற்படாவிட்டால் போக மாட்டார்கள்.
அவ்வாறே தங்கள் நலனுக்காக மட்டும் இயேசுவைத் தேடி வருகின்றவர்கள் இருக்கிறார்கள்.
தாங்கள் ஆசைப்பட்டது நடக்கா விட்டால் இயேசுவை மறந்து விடுவார்கள்.
ஏதாவது நேர்ச்சை வைத்துக் கொண்டு திருத்தலங்களுக்குச் செல்பவர்களில் அநேகர் இப்படிப்பட்டவர்களாகத்தான் இருப்பார்கள்.
"என்ன வேளாங்கண்ணிக்கு?"
"ஒரு ஆண்குழந்தை வேண்டுமென்று அம்மாவிடம் கேட்டிருக்கிறேன்.
கிடைக்கும் வரை வேளாங்கண்ணிக்குத் திரு யாத்திரையாக வருவேன் என்று நேர்ந்திருக்கிறேன்."
"கிடைக்கா விட்டால்?"
"நம்பியவர்களை அம்மா கைவிட மாட்டாள்."
நம்பிக்கை சரிதான்.
சுயநலமில்லாத நோக்கம் இருந்தால் நலமாயிருக்கும்.
"குணம் பெறுவதற்காகவே இயேசுவைத் தேடி வந்தார்களே!
இயேசுவும் அவர்களைக் குணமாக்கினாரே."
"நலன் கருதித் தேடிச் செல்வது தவறில்லை.
தன்னலம் கருதாது இயேசுவை இயேசுவுக்காகத் தேடிச் செல்வது அதை விட நல்லது.
இரண்டாவது வகையினர் இயேசுவை அவருக்காகவே தேடிச் செல்வார்கள்.
முழுக்க முழுக்க இயேசுவுக்காகவே வாழ்வார்கள்.
ஒரு புனிதர்(பெயர் ஞாபகமில்லை)
"ஆண்டவரே, நீர் எனக்கு மோட்ச வாழ்வு தருவீர் என்பதற்காக உமக்கு ஊழியம் செய்யவில்லை.
நீர் எனது ஆண்டவர் என்பதற்காக மட்டுமே நான் உமக்கு ஊழியம் செய்கிறேன்."
கடவுள் நம் மீது கொண்ட அன்பினால் நம்மைப் படைத்தார்.
அன்பு மயமான அவரால் அன்பு செய்யாமல் இருக்க முடியாது.
அவரது அன்பை நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதற்காகவே நாம் அன்பு செய்ய வேண்டும்.
அன்பு செய்யக் குறைந்தது இருவர் வேண்டும்.
அன்பு செய்பவர் மனதில் அன்பு செய்யப்படுபவர் மட்டுமே இருப்பார்.
அவருக்காக அன்பு செய்பவர் தன்னையே தியாகம் செய்ய தயாராக இருப்பார்.
கடவுள் அன்பு மயமானவர்.
அன்பே கடவுள்.
கடவுளிடம் அன்பு இல்லை.
கடவுள்தான் அன்பு.
God does not have love, He is love.
கடவுளாகிய அன்புக்குள் அவரால் படைக்கப்பட்ட நாம் இருக்கிறோம்.
அவருள் இருக்கும் நமக்காக அவர் எந்த அளவுக்குத் தனனையே தியாகம் செய்திருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
துவக்கமும் முடிவும் இல்லாத கடவுள் நமக்காகப் பிறப்பும் இறப்பும் உள்ள மனிதனாகப் பிறந்தார்.
கஷ்டப்படவே முடியாத கடவுள் நமக்காக பாடுகள் படுவதற்காகவே மனிதனாகப் பிறந்தார்.
மரிக்க முடியாத கடவுள் நமக்காக மரிப்பதற்காகவே மனிதனாகப் பிறந்தார்.
எங்கும் நிறைந்துள்ள கடவுள் ஒரு நற்கருணைப் பேழைக்குள் நமக்காக வாழ்ந்து வருகிறார்.
நமது உடலுக்கு உணவு தருவதற்காக உலகைப் படைத்த கடவுள்
நமது ஆன்மாவுக்கு உணவாகத் தன்னையே தருகிறார்.
இவ்வளவுக்கும் நம் அனைவரையும் அவரது உள்ளத்தில் சுமந்து கொண்டிருக்கும் அவரை
நம்மில் அனேகர் தங்கள் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.
அவரைத் தங்கள் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களையும் அவர் அன்பு செய்கிறார்.
நம்மால் அவருக்கு எந்த பயனும் இல்லை
ஆனாலும் அவர் நம்மை தொடர்ந்து அன்பு செய்து கொண்டிருக்கிறார்.
ஒரு நண்பர் கேட்கிறார்,
"நிபந்தனை இன்றி நம்மை அன்பு செய்யும் அவர் ஏன் அவரை அன்பு செய்யும்படி நமக்கு கட்டளை கொடுத்திருக்கிறார்?
அது அன்பின் சுபாவம்.
உண்மையான அன்பினால் சிந்தனையாலும், சொல்லாலும் செயலாலும் அன்பு செய்யாமல் இருக்க முடியாது.
அன்பு செய்யப்பட ஆசைப்படாமலும் இருக்க முடியாது.
நம்மை நித்திய காலம் அன்பு செய்யும் அவர் தனது அன்பை தனது தீர்க்கத் தரிசிகள் மூலம் சொல்லால் நமக்குத் தெரிவித்தார்.
மனிதனாகப் பிறந்து நமக்காக பாடுகள் பட்டு, மரித்து, உயிர்த்து தனது அன்பை செயல் மூலம் நமக்கு காட்டினார்.
இன்றும் திவ்ய நற்கருணை மூலம் அவர் நம்மிடம் செயல் புரிந்து கொண்டிருக்கிறார்.
அன்பு செய்யப்பட ஆசைப்படுவது அன்பின் இயல்பு.
By its nature love desires to be loved.
அதற்காகத்தான் கடவுளின் அன்புக் கட்டளை.
நம்மிடம் உண்மையான அன்பு இருந்தால் நம்மால் சொல்லாலும் செயலாலும் அன்பு செய்யாமல் இருக்க முடியாது.
விளக்கால் ஒளி தராமல் இருக்க முடியுமா?
ஒளி தருவது விளக்கின் சுபாவம்.
குளிர்ச்சி தருவது தண்ணீரின் சுபாவம்.
சுடுவது வென்னீரின் சுபாவம்.
நேசிப்பதும், நேசிக்கப்படுவதும் அன்பின் சுபாவம்.
ஆகவே அன்பு மயமான கடவுள் தன்னால் படைக்கப்பட்ட அனைவரையும் அன்பு செய்கிறார்.
அனைவராலும் அன்பு செய்யப்பட ஆசையாக இருக்கிறார்.
ஆகவே அவரையும், அவரால் படைக்கப்பட்ட அனைவரையும் நாம் அன்பு செய்ய கடமைப் பட்டிருக்கிறோம்.
நாம் அன்பு செய்யப்பட ஆசைப்படுவதும் நமது இயல்புதான்.
By nature we long for love.
அன்பு செய்யவும் அன்பு செய்யப்படவும் ஆசைப்படுவதால் தான் நம்மால் குடும்ப வாழ்க்கை வாழ முடிகிறது.
மனித சமுகம் இயங்க முடிகிறது.
அன்பு இல்லங்கள், அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் போன்ற மனித நேய அமைப்புக்கள் இயங்குகின்றன.
பணத்தை மட்டும் மையமாகக் கொண்டு செயல்படும் ஸ்தாபனங்களால் மனித சமுதாயத்துக்கு எந்தப் பயனும் இல்லை.
இறையன்பினால் உயிரூட்டம்
பெறாத மனித அன்பினால் மனித இனத்துக்கு ஆன்மீக ரீதியாக எந்தப் பயனும் இல்லை.
சில மருத்துவ மனைகள் மக்களை குணப்படுத்துவதற்காக அல்ல,
பணம் ஈட்டவே இயங்குகின்றன.
சில கல்விக் கூடங்கள் கூட அப்படித்தான்.
இயேசு திவ்ய நற்கருணையைப் பற்றி பேச ஆரம்பித்தவுடன் அவரை விட்டுப் போனவர்கள் அவருடைய உண்மையான சீடர்கள் அல்ல.
லௌகீக உதவிகளை மட்டும் பெற அவர் பின்னால் சென்றவர்கள்.
வாசிக்கத் தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் புத்தகங்கள் பயன்படும்.
இறையன்பு உள்ளவர்கள் மட்டும் தான் இயேசுவால் ஆன்மீகப் பயன்பெறுவாராகள்.
பங்குச் சாமியாரை 'காக்கா' பிடித்தால் அவர் நடத்தும் பள்ளியில் வேலை கிடைக்கும் என்பதற்காக கோவிலுக்கு வருபவர்களுக்கு ஆன்மீக ரீதியாக என்ன பயன் கிடைக்கும்?
"ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன."
என்று இராயப்பரைப் போல் நினைப்பவர்கள் மட்டும்தான் கோவிலாலும், அங்கு வாழும் இயேசுவாலும் பயன் பெறுவர்.
நாம் எப்படிப் பட்டவர்கள் என்று நாம் தான் சிந்தித்து அறிய வேண்டும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment