இயேசுவின் உயிர்ப்புத் திருவிழாவோடு தொடர்புடைய முக்கிய விழாக்கள்.
1.பெரிய வியாழன் - திவ்ய நற்கருணைத் திருவிழா.
2. வெள்ளி - இயேசுவின் பாடுகள், சிலுவை மரணம்.
3.ஞாயிறு- இயேசுவின் உயிர்ப்பு.
4. உயிர்த்த 40 ஆம் நாள் - இயேசுவின் விண்ணேற்றம்.
எல்லா விழாக்களும் இயேசுவின் வாழ்வில் ஏற்கனவே நடந்த நிகழ்வுகள் .
இயேசு எப்போது விண்ணேற்றம் அடைந்தார்?
கேள்வி வினோதமாகத் தெரியும்.
ஏனெனில் உயிர்த்த நாற்பதாம் நாள் என்ற பதில் தயாராக இருக்கும்.
உயிர்த்த நாற்பதாம் நாள் விண்ணேற்ற விழாவைக் கொண்டாடுகிறோம்.
அப்படியானால்?
பதிலுக்குள் புகுமுன் சில அடிப்படை விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் பேசுவது மனித மொழி.
மனித அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள மனிதர்கள் பயன்படுத்தும் மொழி.
மனித அனுபவங்களுக்கு அப்பாற்பட்ட இறைவனைப் பற்றி பேசவும் நமது மொழியைத் தான் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.
நமது மொழி நம்மைப் போலவே குறைபாடுகள் நிறைந்தது.
கடவுள் குறைபாடுகளுக்கு அப்பாற்பட்டவர்.
அவரைப்பற்றி பற்றி பேசும் வார்த்தைகளுக்கு நமது மொழி அகராதிப்படி பொருள் கொடுத்தால் பொருள் முழுமையாக இருக்காது.
நாம் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறோமோ அப்படிப் புரிந்து கொள்ள வேண்டும், நமது விருப்பப்படி அல்ல.
ஒரு சின்ன உதாரணம்.
"விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே."
என்று இயேசு நமது மொழியில் சொல்கிறார்.
மனிதனாகப் பிறந்த இறைமகன் இயேசு நமது வாழ்விடமாகிய மண்ணகத்தில் நின்று கொண்டு பேசுகிறார்.
இறைவன் வாழ்வது விண்ணகத்தில்.
நாம் வாழ்வது மண்ணகத்தில்.
மண்ணகமும், விண்ணகமும் நேர் எதிர் மாறானவை.
மண்ணகம் இடத்திற்கும், நேரத்திற்கும் உட்பட்டது.
மேடான இடத்திலிருந்து பள்ளமான இடத்திற்கு வருவதையே 'இறங்கி வருதல்' என்போம்.
ஆனால் இறைவன் வாழும் விண்ணகத்தில் இடமும் கிடையாது, நேரமும் கிடையாது.
அது ஒரு வாழ்க்கை நிலை, நித்தியமானது.
நமது மொழிப்படி இடத்திலிருந்து தான் இடத்துக்கு இறங்க முடியும்.
விண்ணகம் இடமல்ல, ஆகவே அங்கிருந்து இறங்க முடியாது.
ஆனால் இறைமகன் இறங்கி வந்தார் என்று சொல்கிறோம்,
ஏனெனில் இறைமகனைப் பற்றி பேச மனித மொழியில் பொருத்தமான வார்த்தைகள் இல்லை.
"இறைமகன் நமது உணவாக உலகில் பிறந்திருக்கிறார்" என்று புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் வாழ்வது மண்ணகம்.
2024 ஆண்டுகளுக்கு முன் இறைமகன் கன்னிமரியின் வயிற்றில் மனித உரு எடுத்து, மனிதனாகப் பிறந்து 33 ஆண்டுகள் வாழ்ந்தது நாம் வாழும் இந்த மண்ணகத்தில் தான்.
இந்த உலக வாழ்வு முடிந்தபின் இயேசு விண்ணேற்றம் அடைந்தார்.
இயேசு முழுமையாகக் கடவுள்,
முழுமையாக மனிதன்.
கடவுள் சுபாவத்தில் அவர் நித்தியமாக விண்ணகத்தில் வாழ்கிறார்.
விண்ணகம் ஒரு இடமல்ல, வாழ்க்கை நிலை.
நித்தியமாக விண்ணகத்தில் வாழ்கிறார் என்றால் நித்தியமாக கடவுளாக வாழ்கிறார் என்றுதான் பொருள்.
ஆக இயேசு தேவ சுபாவத்தில் நித்தியமாக விண்ணகத்தில் வாழ்கிறார்.
அதில் மாற்றமில்லை.
ஆனால் மனித சுபாவத்தில் 33 ஆண்டுகள் மண்ணகத்தில் நம்மைப் போல வாழ்ந்தார்.
மனித சுபாவத்தில் அவருக்கு ஒரு ஆன்மாவும், உடலும் இருந்தன.
ஆன்மா உடலோடு இருக்கும் மட்டும் உலகில் இருக்கும்.
உடலை விட்டு பிரிந்த வினாடியில் விண்ணகம் சென்று விடும்.
இயேசுவின் ஆன்மா எப்போது அவருடைய உடலை விட்டுப் பிரிந்தது?
"தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் "என்று இயேசு எப்போது உரத்த குரலில் கூறினாரோ
அப்போது இயேசுவின் ஆன்மா அவருடைய உடலை விட்டுப் பிரிந்தது.
அதாவது சிலுவையில் இயேசு மரித்த வினாடி அவரது ஆன்மா விண்ணகத்தில் இருந்தது.
இயேசு நல்ல கள்ளனைப் பார்த்து
"நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்"
என்று கூறியதை ஞாபகத்தில் கொள்வோம்.
"பாஸ்கா விழா தொடங்கவிருந்தது.
தாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார்."
(அரு. 13:1)
என்ற வசனத்தையும் ஞாபகத்தில் கொள்வோம்.
விசுவாசப் பிரமாணத்தில்
"பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடம் இருந்து
உயிர்த்தெழுந்தார்."
என்ற வசனத்தைச் செபமாகச் சொல்கிறோம்.
பாதாளத்தில்?
பாதாளம் என்பது ஒரு இடமல்ல.
இயேசு சிலுவையில் தன்னைப் பலிகொடுத்து மனிதர்களின் பாவங்களுக்குப் பரிகாரம் செய்ததற்கு முன்னால் இறந்த ஆபிரகாம், ஈசாக்கு போன்ற நல்ல மனிதர்கள் மோட்சத்துக்கு போக முடியாதிருந்த வாழ்க்கை
நிலைதான் பாதாளம்.
இயேசு தனது சிலுவை மரணத்தின் மூலம் அவர்களது பாவங்களுக்குப் பரிகாரம் செய்து விட்டதால் அவர்களை மோட்சப் பேரின்ப வாழ்வுக்குள் அழைத்துச் சென்றார்.
இயேசுவின் வளர்ப்புத் தந்தை சூசையப்பரும் அப்போதுதான் மோட்சத்துக்குச் சென்றார்.
அப்போது நல்ல கள்ளனுக்கும் மோட்ச பாக்கியம் கிடைத்தது.
எல்லாம் இயேசுவின் ஆன்மா அவரது உடலை விட்டுப் பிரிந்த வினாடியில் நடந்தது.
இப்போது ஒரு கேள்வி எழும்.
இயேசு மரித்தவுடன் விண்ணகம் சென்று விட்டால் ஏன் உயிர்த்த நாற்பதாம் நாள் விண்ணேற்ற விழாவைக் கொண்டாடுகிறோம்?
இயேசு மரித்தவுடன் அவரது ஆன்மா மட்டும் தான் விண்ணகம் சென்றது.
உயிர்த்த பின்புதான் ஆன்ம சரீரத்தோடு விண்ணகம் சென்றார்.
நாற்பது நாட்கள்?
உயிர்த்த பின் நாற்பது நாட்கள் தனது சீடர்களுக்கு அடிக்கடி காட்சி கொடுத்து அவர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தினார்.
நாற்பது நாட்களுக்குப்பின் சீடர்களுக்குக் காட்சி கொடுப்பதை நிறுத்தி விட்டார்.
ஆகவே தான் உயிர்த்த நாற்பதாம் நாள் விண்ணேற்ற விழாவைக் கொண்டாடுகிறோம்.
இயேசு விண்ணகம் சென்று விட்டாலும் தனது ஆன்ம சரீரத்தோடு தொடர்ந்து
திருச்சபையில் நம்மோடு வாழ்ந்து வருகிறார், திவ்ய நற்கருணை மூலமாக.
இது இயேசு நம்மீது கொண்டுள்ள அளவு கடந்த அன்பைக் காட்டுகிறது.
நமது அன்பை எப்படிக் காட்டப் போகிறோம்?
லூர்து செல்வம்.