"தம்பி ஹோட்டலுக்கு வாரியா?"
"'ஹோட்டலுக்கா? என்ன விசேஷம்?"
''ஏதாவது tiffin சாப்பிட வேண்டும்போல் இருக்கிறது."
"'தாராளமாக சாப்பிடுங்கள். அதற்கு நான் எதற்கு?"
"எனக்கு கம்பெனி கொடுக்கத்தான்."
"'என்னிடம் எந்தக் கம்பெனியும் இல்லையே!"
''நீதான் கம்பெனி. வா, போவோம்"
"'சரி ஆசைப்பட்டு கூப்பிடுகிறீர்கள். வருகிறேன்."
ஹோட்டலுக்குப் போனோம். இருவருக்கான tableல் அமர்ந்தோம்.
சர்வர் வந்தார்.
"என்ன வேண்டும்?"
"இருவருக்கும் இட்லி கொண்டு வாருங்கள்."
கொஞ்ச நேரம் கழித்து கையில் இரண்டு தட்டுகளில் தோசையுடன் சர்வர் வந்தார்.
தட்டுகளை எங்கள் முன் வைத்தார்.
நாங்கள் கேட்டது இட்லி, வந்தது தோசை.
ஆனால் இட்லி order செய்த நண்பர் எதுவும் சொல்லாமல் தோசையைச் சாப்பிட ஆரம்பித்தார்.
ருசித்துச் சாப்பிட்டார்.
''சூப்பராக இருக்கிறது, சாப்பிடுங்கள்."
"நீங்கள் இட்லி order செய்தீர்களே.
தோசை வந்திருக்கிறதே.
அதைப் பற்றி சர்வரிடம் எதுவும் கேட்கவில்லையே."
"எனக்கு இந்த ஹோட்டலில் இது பழக்கமாகிவிட்டது.
நான் எனக்கு விருப்பமானதைக் கேட்பேன்.
சர்வர் இருப்பதைக் கொண்டு வருவார்.
அவர் எதைக் கொண்டு வந்தாலும் அது சுவையாகவே இருக்கும்.
கொண்டு வந்ததைச் சாப்பிடுவேன்."
நானும் சாப்பிட ஆரம்பித்தேன்.
சாப்பிட்டுக் கொண்டே சுற்றிலும் பார்த்தேன்.
எல்லோருமே தங்கள் முன் இருந்ததை ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
'''எல்லோரும் நம்மை போல்தானா? எதைக் கேட்டாலும் வந்ததைத்தான் சாப்பிடுவார்களா?"
"மற்றவர்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
என்னைப் பொறுத்தமட்டில் கேட்டது வந்தாலும் வரும்,
கேளாதது வந்தாலும் வரும்.
நான் எதையும் கேட்காமல் உட்கார்ந்திருந்தாலும் சர்வர் எதையாவது கொண்டு வருவான்.
எது வந்தாலும் ருசியாக இருக்கும். ஆகவே எது வந்தாலும் ருசித்துச் சாப்பிடுவேன்.
தோசை ருசியாக இருக்கிறதா?"
'''உண்மையில் ருசியாக இருக்கிறது.
இனிமேல் நான் இந்த ஹோட்டலுக்கு வந்தால் தோசைக்கு தான் order செய்வேன்."
"ஆனால் தோசை தான் வரும் என்று சொல்ல முடியாது.
இட்லி வரலாம்,
சப்பாத்தி வரலாம்,
பூரி வரலாம்,
வந்த பின்பு தான் என்ன வந்திருக்கிறது என்பது தெரியும்.
ஆனால் எது வந்தாலும் உண்பதற்கு ருசியாக இருக்கும்."
"'நீங்கள் இதைச் சொல்லும் போது எனக்குக் கடவுளைப் பற்றி ஞாபகம் வருகிறது."
''புரியவில்லை."
"'கடவுள் நல்லவர். அவரிடம் இருப்பவை எல்லாம் நல்லவை.
தன்னால் படைக்கப்பட்டவர்கள் ஏதாவது கேட்டால் அவர்களுக்குக் கேட்டதைக் கொடுப்பார் என்று சொல்ல முடியாது.
கேட்டதையே கொடுத்தாலும் கொடுப்பார்,
கேளாததை கொடுத்தாலும் கொடுப்பார்.
கேட்பவர்களுக்கு எது நல்லதோ அதைக் கொடுப்பார்.
அவர் எதைக் கொடுத்தாலும் பெறுபவர்களுக்கு அது நன்மை பயப்பதாகவே இருக்கும்.
நான் +2 முடித்தவுடன் பொறியியல் கல்லூரிக்கு விண்ணப்பம் போட்டேன்.
இடம் கிடைக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டினேன்.
ஆனால் இடம் கிடைக்கவில்லை.
அது எனது நன்மைக்காகத்தான் இருக்கும் என்று எண்ணிக் கொண்டு கலைக் கல்லூரிக்கு விண்ணப்பித்தேன்.
இப்போது இளங்கலை தமிழ் படித்து கொண்டிருக்கிறேன்."
"வேறு வழி இல்லாமல் படித்துக் கொண்டிருக்கிறீர்களா?
விருப்பத்துடன் படித்துக் கொண்டிருக்கிறீர்களா?"
"'விருப்பத்தோடு தான் படித்துக் கொண்டிருக்கிறேன்.
விரும்பியது கிடைக்காவிட்டால் கிடைத்ததை விரும்ப வேண்டும்."
"நீங்கள் சொல்வது உண்மைதான்.
நாம் இந்த உலகில் பிறக்க வேண்டும் என்று விரும்பிக் கொண்டு பிறக்கவில்லை.
பிறந்த பின்பு தான் நாம் உலகிற்கு வந்ததே நமக்குத் தெரியும்.
விரும்பி பிறக்கா விட்டாலும் விருப்பத்தோடு தானே வாழ்கிறோம்.
நான் இந்த ஹோட்டலில் கேட்டது கிடைக்காவிட்டாலும் கிடைத்ததைச் ருசித்து சாப்பிடுகிறேன்.
காரணம் இந்த ஹோட்டலில் எல்லா வகை உணவுகளும் விருப்பத்தோடு உண்பதற்கு ஏற்றவை."
"'ஹோட்டல் அனுபவத்தைப் போல தங்களுக்கு ஏற்பட்ட ஏதாவது ஒரு இறை அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்களேன்."
"நமது இறை அனுபவம் ஒரு பக்கம் இருக்கட்டும்.
முதலில் நமது அன்னை மரியாளின் இறை அனுபவத்தைப் பற்றி சிறிது பேசுவோம்.
மரியாள் மூன்று வயது முதல் கோவிலில்தான் வளர்ந்தாள்.
சிறுவயதிலேயே தனது கன்னிமையைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டாள்.
அவளுக்குத் திருமண வயது வந்தவுடன் அவரது கன்னிமைக்கு பாதுகாப்பாகத்தான் கோவிலில் உள்ள குரு அவளை விதவரான (Widower) சூசையப்பருக்கு திருமண ஒப்பந்தம் செய்தார்.
சூசையப்பர் தன்னுடைய கன்னிமைக்குப் பாதுகாவலராக இருப்பார் என்ற நிபந்தனையின் பேரில் தான் மரியாள் திருமணத்துக்குச் சம்மதித்தாள்.
கன்னியாக இருக்க வேண்டும் என்றாலே குழந்தைப் பேறு இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் தானே அர்த்தம்.
அவர் கடவுளிடம் தான் கன்னிமை வார்த்தைப்பாடு கொடுத்திருந்தாள்.
குழந்தைப் பேறு வேண்டாம் என்றிருந்த அவளிடம் இறைவனே குழந்தையாகப் பிறக்க வேண்டும் என்ற விருப்பத்தை வானத்தூதர் அவளிடம் தெரிவித்த போது,
தனது கன்னிமைக்கு எந்த பழுதும் ஏற்படாது என்று அறிந்தவுடன்,
இறைமகனை மனு மகனாகப் பெற சம்மதித்தாள்.
குழந்தைப் பேறே வேண்டாம் என்றிருந்த அவளிடம் கடவுளே குழந்தையாகப் பிறந்தார்.
கடவுள் நல்லவர்.
ஆகவே அவரது கன்னிமைக்கு எந்த பழுதும் ஏற்படவில்லை.
மரியாள் தாயானவுடன் ஒரு நல்ல தாய் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படியே நடந்து கொண்டாள்.
சுய விருப்பம் அல்ல, இறை விருப்பமே அவளிடம் நிறைவேறியது."
"'கன்னிமை என்ற அவளது சுய விருப்பத்துக்கு எந்தவித பழுதும் ஏற்பட வில்லையே.
அது கடவுள் எவ்வளவு நல்லவர் என்பதைக் காட்டுகிறது.
சூசையப்பர் மரியாளைத் திருமணம் புரியச் சம்மதித்தபோது இறை மகன் அவளிடம் அவளது மகனாகப் பிறப்பார் என்பது அவருக்குத் தெரியாது.
ஆனால் அதுவே இறைவனது திட்டம் என்பதை அறிந்தவுடன் அதை முழு மனதோடு ஏற்றுக் கொண்டார்.
வாழ்வின் இறுதிவரை மனு மகனாகப் பிறந்த இறை மகனுக்காகவே வாழ்ந்தார்.
அவர் மடியில் தனது தலையை வைத்தே மரணம் அடைந்தார்."
"மரியாளின் வாழ்வில் மட்டுமல்ல நமது வாழ்விலும் இறைவன் ஒவ்வொரு வினாடியும் நம்மோடு இருந்து நம்மைப் பராமரித்து வருகிறார்.
நம்மைப் படைக்கும் போது ஏதாவது ஒரு நோக்கத்தோடு தானே படைத்திருப்பார்.
அந்த நோக்கத்தை நாம் அடையும் வகையில் தானே நம்மை அவர் பராமரித்து வருகிறார்.
நம் ஒவ்வொருவருக்கும் அவர் ஒரு திட்டத்தை வைத்திருப்பார்.
நமக்கு அவர் முழு சுதந்திரத்தைக் கொடுத்திருப்பதால் நாமும் நமது வாழ்க்கைக்கான திட்டங்களைப் போடுகிறோம்.
கடவுளுக்கு முக்காலமும் தெரியும்.
நமக்கு நமது கடந்த காலமும் நிகழ்காலமும் மட்டுமே தெரியும்.
எதிர்காலத்தைப் பற்றி எதுவும் தெரியாது.
ஆனாலும் எதிர் காலத்திற்கென்று திட்டங்கள் போடுகிறோம்.
நமது திட்டம் இறைவனது திட்டத்தோடு ஒத்திருந்தால் பிரச்சனை இல்லை.
ஆனால் வித்தியாசமானதாக இருந்தால் கடவுள் நமது திட்டத்தை ரத்து செய்துவிட்டு அவரது திட்டத்தை நம்மில் நிறைவேற்றுவார்.
நாம் உண்மையான இறை விசுவாசிகளாக இருந்தால் நாம் திட்டம் போடும்போதே இறைவனது திட்டத்தை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தோடு போட வேண்டும்.
நமது திருமணங்கள் கூட இறைவனால் தான் நிச்சியமிக்கப்படுகின்றன.
அதனால் தான் இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக என்று இயேசு கட்டளை கொடுத்திருக்கிறார்."
"'உங்கள் திருமணம் எப்படி நடந்தது?"
"நான் விரும்பிய பெண் கிடைக்கவில்லை.
கிடைத்த பெண்ணைத் திருமணம் செய்து அவளோடு விருப்பமுடன் வாழ்கிறேன்.
ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம்.
பிறந்திருக்கும் இரண்டு குழந்தைகளும் பெண் குழந்தைகளே.
அன்போடும் ஆசையோடும்தான் வளர்த்து வருகிறோம்.
(தொடரும்)
லூர்து செல்வம்.