"லாசரே, வெளியே வா"
(அரு.11:43)
"தாத்தா, இறந்த லாசரை இயேசு உயிர்ப்பித்த நிகழ்ச்சியை வாசிக்கும் போது
நமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் இறைவனின் திட்டப்படி தான் நடக்கின்றது என்பது உறுதியாகிறது."
"'தான் சர்வ வல்லமை வாய்ந்த இறைவனின் மகன் என்பதை மக்களுக்கு புரிய வைப்பதற்காக இயேசு செய்த புதுமைகளில் ஒன்று லாசரை உயிர்பித்தது.
லாசர் சுகம் இல்லாமல் படுத்ததிலிருந்து, இறந்து, உயிர்ப்பிக்கப்படும் வரை நடந்த எல்லா நிகழ்வுகளும் இயேசுவின் திட்டப்படி தான் நடந்தன.
இலாசர் சுகமில்லாமல் படுத்தவுடன் இயேசுவுக்குச் செய்தி அனுப்பப் படுகிறது.
அவர் நினைத்திருந்தால் இலாசருக்கு நோய் வராமலேயே தடுத்திருக்கலாம்.
ஒரு முறை இயேசுவிடம் சீடர்கள் பிறவிக் குருடன் ஒருவனைப் பற்றி,
"ராபி, இவன் குருடனாகப் பிறந்தது யார் செய்த பாவம்? இவன் செய்த பாவமா? இவன் பெற்றோர் செய்த பாவமா?" என்று வினவினர்.
இயேசு, "இவன் செய்த பாவமும் அன்று, இவன் பெற்றோர் செய்த பாவமும் அன்று. கடவுளுடைய செயல்கள் இவன் மட்டில் வெளிப்படும் பொருட்டே இப்படிப் பிறந்தான் என்று சொன்னார்.
அதேபோல லாசரின் சுகமின்மை கூட கடவுளின் மகிமையை வெளிப்படுத்துவதற்காகவே ஏற்பட்டது.
அவனது சுகமின்மையைப் பற்றி கேள்விப்பட்டவுடன் இயேசு அவனைக் குணமாக்கவில்லை.
மாறாக "இப்பிணி சாவில்வந்து முடியாது, கடவுளின் மகிமைக்காகவே இப்படி ஆயிற்று: இதனால் கடவுளுடைய மகன் மகிமை பெற வேண்டியிருக்கிறது" என்று சொன்னார்.
அதுமட்டுமல்ல செய்தி கிடைத்த ஊரிலேயே இரண்டு நாள் தங்கிவிட்டார்.
அதாவது லாசர் சாவதற்கு நேரம் கொடுத்தார்.
இரண்டு நாள் கழித்துதான் பெத்தானியாவுக்குப் புறப்பட்டார்.
அங்கு போகுமுன் லாசர் இறந்து அவனை அடக்கம் செய்து விட்டார்கள்.
"உங்களுக்கு விசுவாசம் உண்டாகும் என உங்கள்பொருட்டு, நான் அங்கு இல்லாமற்போனதுபற்றி மகிழ்கிறேன். வாருங்கள், அவனிடம் செல்வோம்".
என்று இயேசு சீடர்களிடம் கூறினார்.
அங்கு சென்ற பின் கல்லறையை மூடியிருந்த கல்லை அகற்றச் சொல்லிவிட்டு,
உரத்த குரலில், "லாசரே, வெளியே வா" என்றார்.
என்றதும் இறந்தவன் வெளியே வந்தான்.
அவனுடைய கை கால்கள் துணியால் சுற்றிக் கட்டுண்டிருந்தன.
அப்போது இயேசு, "கட்டவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்" என்றார்.
நடந்ததை பார்த்தவர்கள் அவர் மீது விசுவாசம் கொண்டார்கள்.
அவர் சர்வத்தையும் படைத்த கடவுள்.
லாசரையும், அவனது சகோதரிகளையும்,
லாசர் உயிர்பெற்ற நிகழ்ச்சியைப் பார்த்த மக்களையும் படைத்தவர் அவர்தான்.
அனைவரையும் ஒவ்வொரு வினாடியும் பராமரித்து வருபவர் அவர்தான்."
"தாத்தா, இயேசு லாசரின் வாழ்வில் திட்டமிட்டது போல்தானே நமது வாழ்விலும் திட்டமிட்டிருப்பார்?"
"'நிச்சயமாக. அதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் பரிசுத்த ஆவியின் தூண்டுவதால் நற்செய்தியாளர் இந்த நிகழ்ச்சியை எழுதி வைத்துள்ளார்.
பைபிளை வாசிக்கும் போது கதை வாசிப்பதுபோல் வாசிக்கக் கூடாது.
ஒவ்வொரு இறைவாக்கையும் ஆழ்ந்த தியானத்தோடு,
அதை நமது வாழ்வாக்கும் நோக்கத்தோடு வாசிக்க வேண்டும்.
அப்படி வாழ்த்தால் நமது வாழ்க்கையைப் பற்றிய நமது கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும்.
"இதோ ஆண்டவருடைய அடிமை" என்று அன்னை மரியாள் கூறியது போல,
நாமும் நம்மை ஆண்டவருடைய அடிமைகளாக ஒப்படைத்துவிட்டு,
ஒவ்வொரு வினாடியும் அவருடைய தூண்டுதலின்படி வாழ்க்கையை வாழ்வோம்.
என்ன நடந்தாலும் அவருடைய சித்தப்படி நமது நன்மைக்காகவே நடக்கும்.
நோய் நொடிகள் வந்தாலும் அவற்றை ஆண்டவர் அவரது சீடர்களாகிய நாம் சுமப்பதற்காக அனுப்பிய சிலுவைகளாக ஏற்றுக் கொள்வோம்.
எந்த எதிர்மறை எண்ணமும் நம்மை இயேசுவிடமிருந்து பிரிக்காது.
மரணமே வந்தாலும் பயப்படாமல் ஏற்றுக் கொள்வோம்.
ஏனெனில் அதுதான் நமது நித்திய பேரின்ப வாழ்வுக்கான வாசல்."
"உண்மைதான், தாத்தா.
தாயின் இடுப்பில் அமர்ந்து கொண்டு பயணிக்கும் குழந்தை எதைப் பற்றியும் பயப்படாது.
நாமும் நம்மை படைத்தவரின் இடுப்பில் அமர்ந்து கொண்டுதான் பயணிக்கிறோம்.
இவ்வுலகில் வாழ்ந்தாலும், மறு உலகத்துக்கு சென்றாலும் அவரோடுதான் இருப்போம்.
வாழ்க்கையை பற்றிய கவலை இல்லாமல் இயேசுவின் சொற்படி நடப்போம்.
இருந்தாலும், இறந்தாலும் நாம் இறைவனின் கையில்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment