"தாத்தா, ஞாயிற்றுக் கிழமை அன்று பூசைக்கு வருபவர்களில் ஆண்கள் அதிகமா? பெண்கள் அதிகமா?"
"'ஏண்டா பொடியா, பூசைக்குப் போவது திருப்பலியில் கலந்து கொள்வதற்கா அல்லது பூசைக்கு வந்திருக்கும் ஆட்களை எண்ணிப் பார்க்கவா?"
"தாத்தா, ஆண்டவரின் பாடுகளைப் பற்றி பைபிளில் வாசிக்கும் போதும், தியானிக்கும் போதும் இந்த கேள்வி மனதில் தோன்றியது.
ஆண்டவர் 12 ஆண்களைத் தான் தனது அப்போஸ்தலர்களாகத் தேர்ந்தெடுத்தார்.
மூன்று ஆண்டுகளும் அவர்களை தன்னோடேயே வைத்திருந்தார்.
அவர்களுக்குத்தான் தன்னுடைய போதனையை அதிகமாக விளக்கினார்.
ஆனால் அவர்களில் ஒருவர் கூட இயேசு சிலுவையை சுமந்து கொண்டு வரும்போது அவருக்கு உதவ முன் வரவில்லை.
இயேசுவுக்கு மரணத் தீர்ப்பு கொடுக்கப்பட்ட போது ஒருவர் கூட எதிர்ப்புக் குரல் எழுப்பவில்லை.
தலைமை குருவின் வீட்டு முற்றம் வரை வந்த இராயப்பர் இயேசுவுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட கூறவில்லை.
மாறாக அவரை மூன்று முறை மறுதலித்தார்.
இயேசு சிலுவையைச் சுமந்து கொண்டு சென்ற போது அவருக்காக அழுது கொண்டு பின்னால் சென்றவர்கள் பெண்கள்தான்.
இயேசுவின் முகம் முழுவதும் ரத்தத்தால் மூடப்பட்டிருப்பதைத் தாங்க முடியாத வெரோணிக்கா என்ற பெண்மணிதான் அவரது முகத்தை ஒரு துணியால் துடைத்தாள்.
அருளப்பர் எப்படி வந்தாரோ அவர் மட்டும் சிலுவையடியில் நின்று கொண்டிருந்தார்.
அவரோடு நின்று கொண்டிருந்த நால்வரும் பெண்கள் தான்."
"'அந்த நான்கு பெண்களும் யார் யார் என்று உனக்கு தெரியுமா?"
"நன்றாகவே தெரியும்.
முதலில் இயேசுவின் அன்னை மரியாள்.
அடுத்து அவருடைய தாயின் சகோதரியும் கிலோப்பாவின் மனைவியுமான மரியாள்.
அடுத்து அருளப்பரின் தாயான
சலோமே மரியாள்.
அடுத்து மதலேன் மரியாள்.
தாத்தா, இவர்களில் இயேசுவின் அன்னை மரியாளைப் பற்றி எனக்கு நான்கு தெரியும்.
மற்ற மூவரைப் பற்றியும் கொஞ்சம் சொல்கிறீர்களா?"
"'இரண்டாவது மரியாள் அன்னை மரியாளின் சகோதரி, சூசையப்பரின் சகோதரனாகிய கிலோப்பாவின் மனைவி.
இவள் சின்ன யாகப்பர், சீமோன், யூதா, சூசை ஆகியோரின் அம்மா.
இயேசு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட மூன்றாவது நாள் காலையில் இவளும், சலோமே மரியாளும், மதலேன்மரியாளும்
இயேசுவின் உடலில் பூசுவதற்காகப் பரிமளப் பொருட்கள் வாங்கி வந்தனர்.
ஆனால் அதற்கு முன்பே இயேசு உயிர்த்து விட்டார்.
"ஓய்வுநாள் கழிந்ததும் மதலேன்மரியாளும், யாகப்பரின் தாய் மரியாளும், சலோமேயும் இயேசுவின் உடலில் பூசுவதற்காகப் பரிமளப் பொருட்கள் வாங்கினர்."
(மாற்கு.16:1)
"தாத்தா, சின்ன யாகப்பர் அப்போஸ்தலர்களில் ஒருவர்.
அவரை அல்பேயின் மகன் யாகப்பர் என்று லூக்காஸ் குறிப்பிடுகிறார்."
"'அல்பேயும், கிலோப்பாவும் ஒரே ஆள்தான்.
கிலோப்பா மரியாளின் பிள்ளைகளைத்தான் அன்னை மரியாளின் பிள்ளைகள் எனக் கூறி
நமது பிரிவினை சபையினர் எல்லோரையும் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்."
''தாத்தா, மீன் பிடிப்பவர்கள் தண்ணீரை குழப்புவார்கள்.
அதேபோல் தான் கத்தோலிக்கர்களைத் தங்கள் வலையில் விழ வைப்பதற்காகத்தான் அவர்கள்
குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
நாம் குழம்பக் கூடாது.
அடுத்து சலோமே மரியாளைப் பற்றிக் கூறுங்கள்."
"பின்னர், செபெதேயுவின் மக்களுடைய தாய், தன் மக்களுடன் இயேசுவைப் பணிந்து எதையோ கேட்க வந்தாள்.
"என்ன வேண்டும்" என்று அவர் அவளைக் கேட்டார்.
"என் மக்கள் இவ்விருவரும் உம் அரசில், ஒருவன் உமது வலப்பக்கமும்,
மற்றவன் உமது இடப்பக்கமும் அமரச் செய்வீர் என வாக்களியும்" என்றாள்.
என்று எங்கேயாவது வாசித்திருக்கிறாயா?"
"மத்தேயு நற்செய்தியில் வாசித்திருக்கிறேன்."
"'அந்தப் பெண்மணி தான் இந்த பெண்மணி."
"செபெதேயுவின் மனைவி, பெரிய வியாகப்பர், அருளப்பர் ஆகியோரின் தாய்.
பதவி ஆசை பிடித்த பெண்மணி."
"'அவர்களுடைய ஆசையைப் பார்த்த மற்ற அப்போஸ்தலர்களுக்குக் கோபம் வந்தது.
இயேசு "எவன் உங்களுக்குள் பெரியவனாக விரும்புகிறானோ அவன் உங்கள் பணியாளனாய் இருக்கட்டும்.
எவன் உங்களுக்குள் முதல்வனாய் இருக்க விரும்புகிறானோ அவன் உங்கள் ஊழியனாய் இருக்கட்டும்."
என்று அவர்களுக்கு அறிவுரை கூறினார்."
"தாத்தா, மூன்று மேரிகளுமே நசரேத் ஊரில் வசித்தார்கள்.
மூவரும் ஆன்மீக ரீதியால் மட்டுமல்ல உலக ரீதியிலும் உறவினர்கள்.
இயேசு நசரேத் ஊரில் தன் பெற்றோருக்கு கீழ்ப்படிந்து வாழும் போது மட்டுமல்ல,
அவரது பொது வாழ்வின் போதும் அவருக்கு உதவிக் கொண்டிருந்தவர்கள்.
மூவருமே இயேசுவின் எல்லா நலங்களிலும் அக்கறை காட்டினார்கள்.
சலோமே மரியாளும், கிலோப்பா மரியாளும் இயேசு தங்களது சகோதரியின் மகன் என்பதற்காக கூட அவருக்கு உதவிகரமாக இருந்திருக்கலாம்.
ஆனால் இயேசுவோடு உலக ரீதியாக எந்தவித உறவும் இல்லாத ஒரு மேரி இயேசுவுக்கு உதவிகரமாக இருந்திருக்கிறாள்.
அப்போஸ்தலர்களைப் போலில்லாமல்,
இயேசுவின் பாடுகளின் போதும் மரணத்தின் போதும் உடனிருந்திருக்கிறாள்.
இயேசு மரித்த மூன்றாம் நாள் அவளும் மற்ற மேரிகளோடு இயேசுவின் கல்லறைக்கு வந்திருக்கிறாள்.
அவளைப் பற்றி கொஞ்சம் கூறுங்களேன்."
(தொடரும்.)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment