Friday, March 3, 2023

சிலுவைப் பாதை.

     சிலுவைப் பாதை.



''தாத்தா, சிலுவையை சுமந்து நடந்து செல்லும் பாதை தானே சிலுவைப் பாதை."

"'நீ 'தானே' போடுவதைப் பார்த்தால் உனக்கு கொஞ்சம் சந்தேகம் இருப்பது போல் தெரிகிறது."

"கொஞ்சம் அல்ல, நிறைய."

'"இதில் சந்தேகப்படுவதற்கு என்ன இருக்கிறது?

பஸ்ஸில் போனால் பஸ் பயணம்.
ரயிலில் போனால் ரயில் பயணம்.
சிலுவையோடு போகும் பாதை 
சிலுவைப் பாதை.
இதில் என்ன நிறைய சந்தேகம் இருக்கிறது?"

"தாத்தா சிலுவை என்றால் என்ன அர்த்தம்? அதாவது இயேசுவின் சொற்படி."

"'இயேசு கல்வாரி மலைக்குச் சுமந்து சென்ற மரத்திலான சிலுவையும் சிலுவை தான்.

நாம் இயேசுவுக்காக ஏற்றுக்கொள்ள வேண்டிய துன்பமும் சிலுவை தான்."

"அப்படியானால் இயேசுவின் சிலுவைப்பாதை எப்பொழுது ஆரம்பிக்கிறது?"

"' அன்னை மரியாளின் வயிற்றில் கருத்தரித்த அன்றே அவரது சிலுவைப்பாதை ஆரம்பிக்கிறது.

அவர் மனிதவுரு எடுத்த வினாடியிலிருந்து கல்வாரியில் நமக்காக உயிரைப் பலியாக ஒப்புக்கொடுத்த வினாடி வரை அவருக்கு சிலுவைப் பாதை தான்."

"தாத்தா, அன்னை மரியாளின் சிலுவைப்பாதை அதற்கு முன்னாலேயே ஆரம்பித்துவிட்டது என்று நினைக்கிறேன்."

"'எதை வைத்து அப்படிச் சொல்லுகிறாய்?"

"நமக்குப் பிரியம் இல்லாத ஒன்றை இயேசுவுக்காக ஏற்றுக் கொள்வது தானே சிலுவை.

மரியாள் மூன்று வயதிலிருந்தே கோவிலில்தான் வளர்ந்தாள்.

  கோவிலில் வளர்ந்து கொண்டிருந்த காலத்திலேயே கன்னிமை வார்த்தைப்பாடு  கொடுத்துவிட்டாள்.

அவளுக்கு குழந்தைப் பேற்றின் மீது பிரியம் இருந்திருந்தால் கன்னிமை வார்த்தைப்பாடு  கொடுத்திருப்பாளா?"

"'கொடுத்திருக்க மாட்டாள்."

"தனது கன்னிமைக்கு எந்தவித பழுதும் ஏற்படாது என்று அறிந்தவுடன்,

இறைமகனை மனு மகனாக பெற்றெடுக்க சம்மதித்தாள்.

தனக்கு பிரியம் இல்லாதிருந்த குழந்தைப் பேற்றை இறைமகனுக்காக ஏற்றுக் கொள்ள சம்மதித்தாள்.

இது சிலுவை தானே!"

"'கரெக்ட். மனித குல மீட்புக்காக சிலுவைப் பாதையில் நடக்க தாயும் மகனும் ஏற்றுக் கொண்டார்கள்."

''ஏற்றுக்கொண்ட பின் சூசையப்பரையும் துணைக்குச் சேர்த்துக் கொண்டார்கள்.

சூசையப்பர் ஏற்கனவே திருமணமாகி, குழந்தைகளைப் பெற்ற பின் மனைவியை இழந்த விதவன்.( Widower)

கோவிலில் வளர்ந்த மரியாளுக்கு 12 வயது ஆனவுடன்,

அவளின் கன்னிமைக்குப் பாதுகாவலராக இருக்கும் ஒருவரை 

அவளது  கணவனாக ஏற்பாடு செய்ய கோவிலின் தலைமை குரு தீர்மானித்தார்.

வானதூதரின் ஆலோசனைப் படி,

 மனைவியை இழந்தவர்களை கோவிலுக்கு வரும்படி அறிவிப்பு கொடுத்தார்.

அந்த அறிவிப்புக்கு ஏற்ப சூசையப்பரும் கோவிலுக்கு வந்தார்.

ஒவ்வொருவருக்கும் ஒரு கம்பு கொடுக்கப்பட்டது.

சூசையப்பர் வைத்திருந்த கம்பிலிருந்து ஒரு புறா வெளியே வந்தது.

அவரைத்தான் மரியாளின் கணவராக்க இறைவன் தீர்மானித்திருப்பது தெரிய வந்தது.

மரியாளின் கன்னிமைக்குப் பாதுகாவலராக அவளை மணக்க சூசையப்பர் சம்மதித்தார்.

திருமண ஒப்பந்தமும் செய்யப்பட்டது.

திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டபோது 

பரிசுத்த ஆவியின் வல்லமையால் மரியாள் இறைமகனை மனு மகனாகக் கருத்தரிப்பாள் எந்த விசயம் மாதாவுக்கும் தெரியாது,

சூசையப்பருக்கும் தெரியாது.

ஆகவேதான் மாதா கருத்தரித்த போது சூசையப்பர் அதிர்ச்சி அடைந்தார்.

ஆனாலும் வானத்தூதரின் அறிவுரைக்கு ஏற்ப தான் எதிர்பாராமல் நடந்த ஒன்றை ஏற்றுக்கொள்ள சம்மதித்தார்.

இது அவர் சுமப்பதற்காக இறைவன் கொடுத்த சிலுவை."

"'ஆக திருக்குடும்பமே சிலுவைப் பாதையில்  நடக்க ஆரம்பித்தது.

மக்கள் தொகை கணக்கில் பதிவதற்காக நடைப்பயணமாகத்  திருக்குடும்பம் பெத்லகேமுக்குச் சென்றது,

சாணி நாற்றம் வீசிக்கொண்டிருந்த மாட்டுத் தொழுவத்தில் இயேசு பிறந்தது,

ஏரோதுவிடமிருந்து தப்பிப்பதற்காக எகிப்துக்குச் சென்று நாடோடிகளாக வாழ்ந்தது,

நாசரேத்துக்கு திரும்பிய பின்னும்,

ஐந்து அப்பங்களைக் கொண்டு 5000 பேருக்கு உணவளிக்க வல்ல இறைமகனை உடன் வைத்துக் கொண்டே,

அன்றாட உணவுக்காக தச்சு வேலை செய்து பிழைத்தது,

இயேசுவுக்கு 12 வயது நடக்கும் போது காணாமல் போன அவரைத் தேடி சூசையப்பரும் மாதாவும் அலைந்தது,

இயேசு பொது வாழ்வுக்கு வருவதற்கு முன்னாலேயே சூசையப்பர் மரணம் அடைந்தது

இவையெல்லாம் திருகுடும்பம் சுமந்த சிலுவைகள்.

அன்னை மரியாள் இறுதி வினாடி வரை சிலுவைப் பாதையில் இயேசுவுடன் நடந்தாள்."

''சிலுவை பாதை இயேசுவின் மரணத்தோடு முடிந்து விட்டதா?"

"'இல்லை.

 இன்னும் தொடர்கிறது."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment