"படைவீரன் ஒருவன் அவருடைய விலாவை ஈட்டியால் குத்தினான்: உடனே இரத்தமும் நீரும் வெளிவந்தன." (அரு.19:34)
"தாத்தா, எதற்காக இயேசு இறந்தபின் அவர் விலாவை படைவீரன் ஒருவன் ஈட்டியால் குத்தினான்?"
"'குத்தியவன் ஒரு நூற்றுவர் தலைவன்.
பிலாத்து இயேசுவுக்கு மரணத் தீர்வையிட்ட பின் அதை மேற்பார்வையிட
100 பேர்கள் கொண்ட ஒரு படைப் பிரிவை அதன் தலைவன் மேற்பார்வையில்
சிலுவையைச் சுமந்து சென்ற இயேசுவோடு அனுப்பினான்.
அந்த படை வீரர்கள் நல்லவர்கள் அல்ல.
சிலுவையைச் சுமந்து சென்ற இயேசுவைச் சாட்டையால் அடித்துக் கொண்டும்,
காலால் மிதித்துக் கொண்டும்,
அவமானப்படுத்திக் கொண்டும்
உடன் சென்றார்கள்.
இயேசு கீழே விழுந்த போதெல்லாம் அவரைச் சாட்டையால்தான் எழச் செய்தார்கள்.
சிலுவையில் அறையப்படுமுன் அவரது ஆடைகளைக் களைந்தார்கள்.
அவரைச் சிலுவையில் அறைந்தபின், படைவீரர் அவருடைய உடைகளை நான்கு பாகமாகப் பிரித்து, ஆளுக்கொன்று எடுத்துக்கொண்டனர்.
அங்கியைப் பங்கு வைக்கவில்லை.
அந்த அங்கி மேலிருந்து அடிவரை தையலில்லாமல் நெய்யப்பட்டிருந்தது.
அந்த அங்கி இயேசு பிறப்பதற்கு முன்பே அன்னை மரியாளால் குழந்தை அணிவதற்கு என்று தயாரிக்கப்பட்டது.
குழந்தையாக இருக்கும்போது இயேசு அணிந்த அந்த அங்கி அவர் வளர வளர அதுவும் வளர்ந்தது.
இயேசு குழந்தையாக இருந்த போது அணிந்த அங்கியைத்தான் தனது வாழ்நாள் முழுவதும் அணிந்திருந்தார்.
அன்னை மரியாள் இயேசுவுக்கு அணிவித்த அங்கியை அவரை சிலுவையில் அறைந்த படைவீரர்கள் சீட்டுப் போட்டு
சீட்டு விழுந்தவனுக்குக் கொடுத்தார்கள்.
தனது தாய்க் கரங்களால் மகனுக்காகத் தயாரித்த அங்கி பட்ட பாட்டை நினைத்து அன்னைக்கு எவ்வளவு வருத்தமாக இருந்திருக்கும்!
நிச்சயமாக கண்ணீர் விட்டு அழுதிருப்பார்கள்.
அந்த சமயத்தில் அன்னையின் முகம் எப்படி இருந்திருக்கும் என்று கொஞ்சம் கற்பனை பண்ணி பார்."
"தாத்தா, எனக்கு அழுகை வருகிறது."
"'நாம் செய்த பாவங்களுக்காக நாம் அழ வேண்டும்.
இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரிக்கும் வரை படைவீரர்கள் அவரோடுதான் இருந்தார்கள்.
இயேசு மரித்தவுடன் ஆலயத்தின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது.
நிலம் நடுங்கியது.
நிலம் நடுங்கியதைக் கண்ட நூற்றுவர்தலைவனும்
அவனுடன் இயேசுவைக் காவல் காத்துக்கொண்டிருந்தோரும்
"உண்மையில் இவர் கடவுளின் மகன் தான்" என்றனர்.
மாலையானதும் அரிமத்தியா ஊராரான சூசை பிலாத்துவிடம் இயேசுவின் உடலைக் கேட்டார்.
உடலை இறக்குமுன் அவர் இறந்து விட்டார் என்பதை உறுதி செய்து கொள்வதற்காக
பிலாத்துவால் அனுப்பப்பட்ட
நூற்றுவர் தலைவன் அவரது விலாவை ஒரு ஈட்டியால் குத்தினான்.
உடலிலிருந்து இரத்தமும் நீரும் வெளிவந்தன.
நூற்றுவர் தலைவனுக்கு ஒரு கண் தெரியாது.
இயேசுவின் உடலிலிருந்து வெளிவந்த ரத்தத்தின் ஒரு சொட்டு அவன் கண்ணில் விழுந்தது.
இரத்தம் கண்ணில் விழுந்தவுடன் அவனது கண் முழுவதுமாக குணமாகிவிட்டது.
இறந்த பின்பும் தன்னை ஈட்டியால் குத்தியவனது கண்ணை தனது ரத்தத்தால் இயேசு குணமாக்கினார்.
நூற்றுவர் தலைவனது மனம் இயேசுவை முற்றிலுமாக ஏற்றுக் கொண்டது.
இயேசுவைத் தனது மீட்பராக ஏற்றுக் கொண்டார்.
மனம் திரும்பியது மட்டுமல்ல
அதற்குப்பின் இயேசுவுக்காகவே வாழ்ந்தார்.
புனிதராகவும் மாறினார்.
அவர்தான் புனித லோஞ்சினுஸ். (Saint Longinus)
அவரது திருநாள் அக்டோபர் 16ல் கொண்டாடப்படுகிறது."
"தாத்தா, அன்னை மரியாள் தனது மகனுக்காக தயாரித்த அங்கியை சீட்டு போட்டு எடுத்துக் கொண்ட படை வீரர்களின் தலைவன்தான் நூற்றுவர் தலைவன்.
மகனின் உடை பட்ட பாடு நிச்சயமாக அன்னையின் கண்களில் பட்டிருக்கும்.
மக்களின் மீட்புக்காக தனது மகனையே பலியாக கையளித்த நமது தாய்,
தன் மகனின் உடைகளை எடுத்துக்கொண்ட படைவீரர்களின் ஆன்மாக்களின் மீட்புக்காக
நிச்சயமாக தனது மகனிடம் வேண்டிக் கொண்டிருந்திருப்பாள்.
கானாவூர் கல்யாணத்தில் அன்னையின் சொல்லுக்காக தண்ணீரை ரசமாக மாற்றிய இயேசு,
இப்போதும் தனது ரத்தத்தால் நூற்றுவர் தலைவரின் கண்ணைக் குணமாக்கி
அவரை மனம் திருப்பியது போல,
அவரது உடைகளை பங்கு வைத்துக் கொண்ட படை வீரர்களையும்,
அவரை சிலுவையில் அறைந்த படை வீரர்களையும்,
சிலுவையை சுமந்து கொண்டு வந்த போது அவரை அடித்து உதைத்த படை வீரர்களையும்
கட்டாயம் மனம் திருப்பியிருப்பார்.
இவ்வுலகில் இயேசு செய்த முதல் புதுமை கானாவூர் கல்யாணத்தில் தண்ணீரை ரசமாக்கியது,
கடைசிப் புதுமை நூற்றுவர் தலைவரின் கண்ணை தனது இரத்தத்தால் குணமாகியது.
இரண்டுமே அன்னை மரியாளின் வேண்டுதலால் தான் நடந்தன."
"'இன்றும் நமது அன்னையால் தொடர்ந்து புதுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
அன்னையின் வேண்டுதலால் இறைவனின் உதவிகளை நாம் பெற்றால் மட்டும் போதாது.
அன்னை இறைவனுக்காகத் தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்தது போல,
நாமும் இறைவன் பணிக்கு நம்மையே முற்றிலுமாக அர்ப்பணித்து வாழ வேண்டும்.
அவள் அவளுடைய மகனுக்கு எதிராக பாவம் செய்பவர்கள் மனம் திரும்பும் படி சதா வேண்டிக் கொண்டிருப்பது போல,
நாமும் பாவிகள் அனைவரும் மனம் திரும்ப இறைவனிடம் வேண்ட வேண்டும்.
இயேசு நமக்குத் தந்த தாயை நேசிப்போம்.
அவளைப் போலவே வாழ்வோம்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment