"உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஒருவன் என் வார்த்தையைக் கடைப்பிடிப்பானாகில் என்றுமே சாகான்" என்றார்."(அரு.8:51)
"தாத்தா, இயேசுவின் வார்த்தையைக் கடைப்பிடிப்பவன் என்றுமே சாக மாட்டான் என்று இயேசு சொல்லியிருக்கிறாரே,
அன்னை மரியாள் முதல் அனைத்து புனிதர்களுமே இறந்து விட்டார்களே!"
"தம்பி, இறைவாக்கு ஆன்மீகத்தைச் சேர்ந்தது.
இறைவன் நம்மை ஆன்மாவோடும், உடலோடும் படைத்து இவ்வுலகத்தில் விட்டிருந்தாலும்,
அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது உலகியல் வாழ்க்கையை அல்ல,
சிறந்த ஆன்மீக வாழ்க்கையைத் தான்.
இறைவாக்கு நமது ஆன்மீக வாழ்க்கையைப் பற்றி மட்டுமே அறிவுரை கூறும்.
மனிதனுடைய உடலுக்கு வாழ்வும் , மரணமும் இருப்பது போலவே,
அவனுடைய ஆன்மாவுக்கும் வாழ்வும் உண்டு, மரணமும் உண்டு.
உடலோடு ஆன்மா இருக்கும்போது உடல் வாழ்கிறது, ஆன்மா பிரியும்போது உடல் சாகிறது.
ஆன்மா தேவ இஸ்டப் பிரசாத நிலையில், அதாவது இறை உறவோடு இருக்கும்போது உயிர் வாழ்கிறது,
இஸ்டப் பிரசாதத்தை இழக்கும்போது அதாவது இறை உறவை இழக்கும்போது மரிக்கிறது.
சாவான பாவம்தான் ஆன்மா மரிக்க காரணமாகிறது.
ஒருவன் உடலளவில் உலகில் உயிர் வாழ்ந்தாலும்,
சாவான பாவத்தோடு வாழ்ந்தால் ஆன்மீகத்தில் இறந்த ஆன்மாவோடுதான் வாழ்கிறான்.
செய்த பாவத்திற்காக மனஸ்தாபப்பட்டு,
நல்ல பாவசங்கீர்த்தனம் செய்யும் போது,
பாவம் மன்னிக்கப்படும், மரித்த ஆன்மா உயிர்பெறும், இறை உறவு திரும்பக் கிடைக்கும்.
இறைவனது வார்த்தைகளைக் கடைப் பிடித்து வாழ்பவன் வாழ்வில் சாவான பாவம் புகாது.
ஆன்மீக ரீதியாக அவன் சாகமாட்டான்.
உடல் ரீதியாக அவன் மரணமடைந்தாலும்,
ஆன்மீக ரீதியாக அவன் என்றென்றும் வாழ்வான்.
இதைத்தான் நிலை வாழ்வு என்கிறோம்."
"இறைவனுக்கும், நமக்கும் உள்ள உறவைத்தானே இறை உறவு என்கிறோம்."
"'ஆமா."
"இறைவன் மாறாதவர் ஆச்சே. இறை உறவு எப்படி மாறும்?"
"'இறைவன் மாறாதவர். அவரது உறவு,
அதாவது, இறைவன் நம்மீது கொண்டுள்ள அன்பு
என்றென்றும் மாறாது.
ஆனால் சாவான பாவத்தினால் மனிதன் இறைவனோடு கொண்டுள்ள உறவைத் தானாகவே நிறுத்தி விடுகிறான்.
பாவமன்னிப்பு பெறும்போது உறவு செயல் நிலைக்குத் திரும்புகிறது.
உறவை வெட்டுவதும், ஒட்டுவதும் மனிதன்தான்.
இறைவன் நிலையில் மாற்றம் இல்லை.
மனிதன் அன்பு செய்தாலும் சரி செய்யாவிட்டாலும் சரி இறைவன் மனிதனை அன்பு செய்து கொண்டேயிருக்கிறார்.
அன்பு அவரது இயல்பு. (Nature)
அவரால் அன்பு செய்யாமல் இருக்க முடியாது.''
" என்றென்றும் சாகாமல் வாழ வேண்டும் என்றால் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்,
அன்பு செய்து கொண்டேயிருக்க வேண்டும், இறைவனையும் , அயலானையும்.
அன்பு செய்தால்
இவ்வுலகிலும் வாழ்வோம்,
மறுவுலகிலும் வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment