Thursday, March 2, 2023

"நானோ உங்களுக்குச் சொல்லுகின்றேன்: உங்கள் பகைவர்களுக்கு அன்பு செய்யுங்கள்: உங்களைத் துன்புறுத்துவோருக்காகச் செபியுங்கள்." (மத்.5:44)

"நானோ உங்களுக்குச் சொல்லுகின்றேன்: உங்கள் பகைவர்களுக்கு அன்பு செய்யுங்கள்: உங்களைத் துன்புறுத்துவோருக்காகச் செபியுங்கள்." (மத்.5:44)

நிறைவு என்றால் முழுமை.

கடவுள் ஒருவரே நிறைவானவர்.

நாம் அளவுள்ளவர்கள்.

நமக்கு எந்த அளவு கொடுக்கப்பட்டிருக்கிறதோ அந்த அளவு நாம் நிறைவாக இருக்க முயற்சி செய்யலாம்.

ஒரு பானையின் அளவு 10 லிட்டர் என்று வைத்துக் கொள்வோம்.

அது பத்து லிட்டர் தண்ணீர் ஊற்றினால் அது நிறைவாக இருக்கும்.

மனிதர்களுள் இயேசுவின் தாய் அன்னை மரியாள் மட்டுமே அருள் நிறைந்தவள்.

இறைவனின் நிறைவோடு மனிதனின் நிறைவை ஒப்பிட முடியாது.

ஏனெனில் இறைவன் எல்லா பண்புகளிலும் அளவில்லாதவர்.

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று தமிழில் ஒரு சொற்றொடர் உண்டு.

நம்மால் உயர்வடைய முடியாவிட்டாலும் மனது அளவிலாவது உயர்வாக நினைக்க வேண்டும்.

நினைத்ததுதான் செயலாகும்.

இயேசு, இறை மகன், நிறைவானவர்.

அளவுள்ள நம்மைப் பார்த்து அவர் சொல்கிறார், 

"ஆதலால், உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்." (மத்.5:48)

கடவுள் எவ்வளவு நிறைவுள்ளவரோ அவ்வளவு நிறைவாக நம்மால் இருக்க முடியாது.

ஏனெனில் நாம் அளவுள்ளவர்கள்.

தந்தை அவர் அளவில் நிறைவுள்ளவராக இருப்பது போல்,

 நாம் நம்ளவில் நிறைவுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

இயேசு தனது தாயை விசேசித்த விதமாக அருள் நிறைந்தவளாய் படைத்தார்.

நாமும் நிறைவுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று இயேசு ஆசிக்கிறார்.

அதற்கான ஆலோசனைகளையும் அவரே கூறுகிறார். 

"நானோ உங்களுக்குச் சொல்லுகின்றேன்: 

உங்கள் பகைவர்களுக்கு அன்பு செய்யுங்கள்: 

உங்களைத் துன்புறுத்துவோருக்காகச் செபியுங்கள்.

 அப்பொழுது வானகத்திலுள்ள உங்கள் தந்தையின் மக்களாயிருப்பீர்கள். 

அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரோனை உதிக்கச் செய்கிறார். 

நீதியுள்ளோர் மேலும் நீதியற்றோர் மேலும் மழை பொழியச் செய்கிறார்."
(மத்.5:44,45)

வானகத் தந்தையை பற்றி கூறுவது மகனுக்கும், பரிசுத்த ஆவிக்கும் பொருந்தும் ஏனெனில் மூவரும் ஒரே கடவுள்.

இயேசு தந்தையின் மகன்.

நாமும் தந்தையின் மக்களாக வாழ விரும்பினால்,

தந்தையைப் போல,

மகன் இயேசு அனைவரையும் அன்பு செய்தது போல,

நாமும் அனைவரையும் அன்பு செய்ய வேண்டும்.

நண்பர்களை அன்பு செய்வது பெரிய காரியம் அல்ல.

ஆனால் நம்மைப் பகைப்பவர்களையும் நாம் அன்பு செய்யும்போது நாம் தந்தையின் பிள்ளைகளாக செயல்படுகிறோம்.

கடவுளைப் பகைக்கின்ற சாத்தானையும் அவனது தோழர்களையும் இறைவன் தொடர்ந்து அன்பு செய்கிறார்.

சாத்தானின் சொல்லைக் கேட்டு பாவத்தினால் இறைவனை பகைக்கும் பாவிகளையும் இறைவன் அன்பு செய்கிறார்.

அவர் முன்னால் நல்லவர்களாக இருப்பவர்களையும்,

கெட்டவர்களாக இருப்பவர்களையும் அவர் அன்பு செய்கிறார்.

அவருடைய விதிமுறைகளின் படி இயங்கும் சூரியன் நல்லவர்களுக்கும், கெட்டவர்களுக்கும் ஒளி தருகிறது.

மழையினால் நல்லவர்களும் பயன்பெறுகிறார்கள், கெட்டவர்களும் பயன் பெறுகிறார்கள்.

அவர் படைத்த உலகில் நல்லவர்களும், கெட்டவர்களும் வாழ்கின்றார்கள்.

கெட்டவர்கள் எந்த அளவுக்கு அட்டூழியங்கள் செய்து கொண்டு வருகிறார்கள் என்பது நமக்குத் தெரியும்.

அவர்களுக்கும் இறைவனின் படைத்த உலகம் உண்ண உணவைக் கொடுக்கிறது, 

உடுக்க உடையைக் கொடுக்கிறது,

இருக்க இருப்பிடத்தையும் கொடுக்கிறது.

நாமும் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று பாகுபாடு பாராமல் 

அனைவரையும் நேசித்தால்,

 அனைவருக்கும் வேண்டிய உதவிகள் செய்தால்

நாம் தந்தையின் பிள்ளைகளாக வாழ்கிறோம்.

தந்தையின் மகனாகிய இயேசு நமக்காகப் பாடுகள் பட்டு, சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது,

தன்னை துன்புறுத்தியவர்களை மன்னிக்கும்படி தந்தையிடம் வேண்டினார்.

நாமும் நம்மை துன்புறுத்துவர்களுக்காக  
இறைவனிடம் செபிக்கும்போது அவருடைய பிள்ளைகளாக செயல்படுகிறோம்.

"உங்களுக்கு அன்பு செய்பவர்களுக்கே நீங்கள் அன்பு செய்தால், உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்?

 ஆயக்காரரும் இவ்வாறே செய்வதில்லையா?

 உங்கள் சகோதரருக்கு மட்டும் வணக்கம் செய்வீர்களாகில், நீங்கள் என்ன பெரிய காரியம் செய்கிறீர்கள்? 

புறவினத்தாரும் இவ்வாறே செய்வதில்லையா?"

நம்மை நேசிப்பவர்களை மட்டும் நாம் நேசித்தால் அப்படி செய்யும் பாவிகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?


நமது சகோதரருக்கு மட்டும் வணக்கம் செய்து, மற்றவர்களை கவனிக்காவிட்டால்

 நமக்கும் இயேசுவை பின்பற்றாதவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

இறை மகனாகிய இயேசு இவ்வுலகில் எப்படி வாழ்ந்தாரோ அதே மாதிரியாக நாமும் வாழ்ந்தால் தான் 

நாம் நம்மை தந்தையின் பிள்ளைகள் என்று அழைத்துக் கொள்ளலாம்.

நாம் வாழ்ந்து கொண்டிருப்பது தவக்காலம்,

 அதாவது இயேசுவின் பாடுகளைப் பற்றி தியானித்து,

அவர் எதற்காகப் பாடுகள் பட்டாரோ,

அதை நிறைவேற்றும் காலம்.

அவர் எதற்காகப் பாடுகள் பட்டு சிலுவையில் மரித்தார்?

நாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக.

நாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக இறைமகன் பாடுகள் பட்டிருக்கிறார்,

நாம் என்ன செய்திருக்கிறோம்?

நாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக அவர் விண்ணுலகிலிருந்து மண்ணுலகுக்கு துன்பங்களைத் தேடி வந்தார்.

நமது பாவங்களுக்குப் பரிகாரமாக நாம் எப்போதாவது துன்பங்களைத் தேடிச் சென்றிருக்கிறோமா?

தேடித்தான் செல்லவில்லை,

 அவை வரும்போது பாவப் பரிகாரமாக அவற்றை ஏற்றுக் கொண்டிருந்திருக்கிறோமா?

ஒரு சிறு துன்பம் வந்தால் கூட அதிலிருந்து விடுதலை கோரி  
எத்தனை செபங்கள் செய்கிறோம்?

பாடுபட்ட சுரூபத்தில் இயேசுவின் முகத்தைப் பார்க்கும் போது,

அவர் நம்மை பாவத்திலிருந்து விடுவிப்பதற்காக இத்தனை துன்பங்களை அனுபவித்திருக்கிறார்,

அவற்றில் கொஞ்சமாவது நாமும் அனுபவிக்க வேண்டும் என்று நமக்குத் தோன்றியிருக்கிறதா?

நோன்பு  கூட திருச்சபையின் கட்டளை என்பதற்காகத் தானே இருக்கிறோம்!

இயேசு நாற்பது நாள் நோன்பு இருந்தார் நமக்காக.

நாம் நமக்காக நாமாகவே எத்தனை நாள் நோன்பு இருந்திருக்கிறோம்?

கிறிஸ்தவர்களாக நாமே வாழ்கிறோமா?

அல்லது,

கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்து விட்டதற்காகக் கோவிலுக்கு வந்து போய்க் கொண்டிருக்கிறோமா?

இயேசு நமக்காகப் பாடுபட்டார்.

நாமும் நமக்காகத் தவம் செய்வோம்.

நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்து,

இறைவனின் மகிமைக்காக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment