(தொடர்ச்சி.)2
"தாத்தா, நான் கேட்ட கேள்வி ஞாபகத்தில் இருக்கிறதா?"
"'நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது.
இயேசு கடவுளின் அரசைப்பற்றிய நற்செய்தியை அறிவித்துக்கொண்டே
ஊர் ஊராய்ச் சென்றபோது பன்னிரு அப்போஸ்தவர்களும் அவருடன் சென்றனர்.
பொல்லாத ஆவிகளினின்றும் பிணிகளினின்றும் குணமான பெண்கள் சிலரும் அவர்களோடு இருந்தனர்.
இப்பெண்கள் யாரெனில், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மதலேன் என்னும் மரியாள்,
ஏரோதின் காரியத்தலைவன் கூசாவின் மனைவி அருளம்மாள், (Joanna)
சூசன்னா,
மற்றும் பெண்கள் பலர்
இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்."
(லூக்.8:1-3)
சின்ன யாகப்பரின் தாய் கிலோப்பா மரியாள், பெரிய யாகப்பரின் தாய் சலோமே மரியாள் ஆகியோரும் இயேசுவுக்குத் தேவையான உதவிகளைச் செய்துவந்தார்கள்.
இவர்களில் இயேசுவின் சிலுவை அடியில் நின்று கொண்டிருந்த பெண்மணி
.மதலேன் மரியாள்.
(Mary Magdalene)
இவள் கலிலேயா கடற்கரையில் அமைந்துள்ள மக்தலா (Magdala) என்னும் மீன் பிடிக்கும் தொழில் நடந்த ஊரைச் சேர்ந்தவள்.
அவளுடைய பெயரோடு அவளுடைய ஊரின் பெயரையும் சேர்த்துச் சொல்கிறோம்.
இயேசு ஊர் ஊராகச் சென்று நற்செய்தி அறிவித்து, நோய் நொடிகளை குணமாக்கிய போது
மதலேன் மரியாளைப் பிடித்திருந்த ஏழு பேய்களிலிருந்து அவளுக்கு விடுதலை கொடுத்து குணமாக்கினார்.
தன்னை குணமாக்கியவர் உலக மீட்புக்காக மனிதனாக பிறந்த இறைமகன் என்பதை அவள் ஏற்றுக் கொண்டாள்.
உண்மையான கடவுள் பக்தியுடன் அவருக்குச் சேவை செய்வதற்காக அவரைப் பின் தொடர்ந்தாள்.
அவள் பிறந்த குடும்பம் மீன் பிடிக்கும் தொழில் செய்து கொண்டிருந்த பண வசதி உள்ள குடும்பம்.
அவளது பெற்றோர் ஈட்டிய செல்வத்தைக் கொண்டு அவள் இயேசுவுக்குத் தேவைப்பட்ட உணவு சம்பந்தப்பட்ட காரியங்களுக்கு உதவி செய்தாள்.
அவளது தன்னலம் அற்ற கடவுள் பக்தியின் காரணமாகத்தான் இயேசுவின் பாடுகளின் போதும்
அவரைப் பின்பற்றுவதை விட்டு விடவில்லை.
இயேசு சிலுவையைச் சுமந்து கொண்டு சென்ற போது அவள் அழுது கொண்டே அவரைப் பின் சென்றாள்.
இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது அன்னை மரியாளோடு அவளும் நின்றாள்.
இயேசு மரித்து அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலையில்
சின்ன இயாகப்பரின் தாய் மரியாளும்
சலோமே மரியாளும்,
மதலேன் மரியாளும் கல்லறைக்குச் சென்றார்கள்.
கல்லறைக்குச் சென்ற பெண்கள்
இயேசுவின் உடலில் பூசுவதற்காகப் பரிமளப் பொருட்கள் வாங்கிச் சென்றதை நினைக்கும்போது
இயேசு உயிர்ப்பார் என்று நம்பிப் போனதாக தெரியவில்லை.
கல்லறை வாயிலிலிருந்து, யார் நமக்குக் கல்லைப் புரட்டிவிடுவார்?" என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டது இதை உறுதிப்படுத்துகிறது.
இயேசு மரித்த மூன்றாம் நாள் உயிர்ப்பார் என்று நம்பிய ஒரே பெண் அன்னை மரியாள் மட்டுமே.
அவள்தான் இயேசுவைப் பார்க்க கல்லறைக்கு வரவில்லை.
உயிர்த்த இயேசு முதல் முதலில் தன் தாய்க்குத் தான் காட்சியளித்தார்.
இரண்டு வான தூதர்கள் கல்லறைக்கு வந்த பெண்கள் முன் தோன்றி இயேசு உயிர்த்துவிட்ட செய்தியை அறிவித்தார்கள்.
உடனே அவர்கள் பதினொரு அப்போஸ்தலர்களையும் தேடிச் சென்றார்கள்.
அவர்கள் சென்று கொண்டிருந்த போது உயிர்த்த இயேசு அவர்களுக்குக் காட்சியளித்தார்.
அப்போஸ்தலர்களைப் பார்த்து
இயேசு உயிர்த்த செய்தியை அவர்களுக்கு அறிவித்தார்கள்.
இயேசு உயிர்த்த செய்தியை முதல் முதல் அப்போஸ்தலர்களுக்கு அறிவித்தவள் மதலேன் மரியாள் தான்.
ஆகையினால்தான் அவளை அப்போஸ்தலர்களுக்கு அப்போஸ்தலர் என்று அழைக்கிறோம்.
பெண்கள் நம்பியதை ஆண்கள் நம்பவில்லை."
"ஆக இயேசு உயிர்த்த நற்செய்தியை உலகுக்கு அறிவித்தவர்கள் பெண்களே.
தாத்தா, ஒரு சந்தேகம்.
மதலேன் மரியாளை மனம் திரும்பிய விலைமகள் (Prostitute) என்கிறார்களே.
நீங்கள் அதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே.''
"'அவள் மனம் திரும்பிய விலைமகள் என்பதற்கு பைபிளில் எந்தவித ஆதாரமும் இல்லை.
இயேசு ஒரு பரிசேயன் வீட்டில் உணவு அருந்திக் கொண்டிருந்தபோது,
அவருடைய கால்மாட்டில் பின்புறமாக இருந்து,
அழுதுகொண்டே அவர் பாதங்கள்மேல் கண்ணீர் பொழிந்து,
அவற்றைக் கூந்தலால் துடைத்து, முத்தமிட்டு அப்பாதங்களில் பரிமள தைலம் பூசிய
பெயர் சொல்லப்படாத பெண்
மரிய மதலேனாள்தான் என்று கூறப்பட்ட தவறான கருத்தின் காரணமாக
அவள் மனம் திரும்பிய விலைமகள் என்று மக்கள் கூறிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் அந்தக் கூற்றுக்கு எந்த வித ஆதாரமும் இல்லை.
அவள் ஏழு பேய்களிடமிருந்து விடுதலை பெற்றதன் காரணமாக இயேசுவை மெசியா என்று விசுவசித்த பெண், அவ்வளவுதான்.
இயேசுவைப் பின் சென்ற பெண்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள் என்று லூக்காஸ் கூறுகிறார்.
மதலேன் மரியாளை மனம் திரும்பிய விலை மகள் என்று ஏற்றுக்கொண்டால் அவளுடைய உடைமை அத்தொழிலைக் கொண்டு சம்பாதித்தது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிவரும்.
நிச்சயமாக இயேசு அத்தகைய உடைமையைக் கொண்டு செய்யும் உதவியை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்.
அவள் மீன் பிடிக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவள்.
அவளுடைய உடைமை அவளது தந்தைக்கு உரியது.
அதைக் கொண்டுதான் உதவி செய்தாள்.
அவளிடமிருந்த ஆழமான கடவுள் பக்திதான் அவளை இறைமகன் இயேசுவைப் பின்பற்ற வைத்தது.
புனித அருளப்பர் எபெசுசில் (Ephesus) நற்செய்தி அறிவித்தார்.
அன்னை மரியாளும் அவருடன் சென்றாள்.
மதலேன் மரியாள்
அன்னை மரியாளுடன் சென்று நற்செய்தி அறிவித்தாள்.
தன் மரணம் வரை அன்னை மரியாளுடன் அங்கேயே வாழ்ந்தாள்.
புனிதையாக வாழ்ந்து,
புனிதையாக மரித்து,
புனிதையாக விண்ணகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
அவளுடைய திருநாளை
சூலை 22 ல் கொண்டாடுகிறோம்.
புனித மதலேன் மரியாளே,
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment