Tuesday, March 7, 2023

இயேசு ஒப்புக்கொடுத்த பரிகாரப் பலி. (தொடர்ச்சி)3

இயேசு ஒப்புக்கொடுத்த பரிகாரப் பலி. (தொடர்ச்சி)3

"தாத்தா, இயேசு நமது பாவங்களுக்கு பரிகாரமாக தன்னை சிலுவையில் பலியாக ஒப்பு கொடுத்தார்.

ஆகவே சிலுவையை பாவப் பரிகாரத்தின் அடையாளமாக ஏற்றுக் கொள்கிறோம்.

அதனால்தான் நாம் நமக்கு ஏற்படும் துன்பங்களை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக ஏற்றுக் கொண்டால் 

அந்தத் துன்பங்களை சிலுவைகள் என்று அழைக்கிறோம்.

ஆனால் சிலர் சிலுவையை மகிமையின் சின்னம் என்று அழைக்கின்றார்களே,

சிலுவை பாவப் பரிகாரத்தின் சின்னமா?

 மகிமையின் சின்னமா?"

"'சிலுவையில் மரித்த இயேசு மரித்த மூன்றாம் நாள்...."

"உயிர்த்தார்."

"'புனித வெள்ளி இல்லாவிட்டால், உயிர்த்த ஞாயிறு இல்லை.

மரணம் இல்லாவிட்டால் மகிமை இல்லை.

இயேசு சிலுவையில் மரித்து

 மூன்றாம் நாள் உயிர்த்து மகிமை அடைந்ததால்

 சிலுவையை மகிமையின் சின்னம் என்றும் அழைக்கிறோம்."

"அப்படியானால் நமது மரணமும் மகிமையின் சின்னம் தானே!" 

"'நாம் மரணம் அடையும்போது அழுகின்றவர்கள் 

நாம் ஒருநாள் உயிர்த்து விண்ணக மகிமைக்குள் ஆன்ம சரீரத்தோடு நுழையும் போது மகிழ்ச்சி அடைவார்கள்.

பாவப் பரிகாரத்தின் நோக்கம் என்ன?"

"பாவ மன்னிப்பு."

"'பாவ மன்னிப்பின் நோக்கம்?"

"பரலோக மகிமை."

"'அதாவது,..."

"பாவ பரிகாரம் செய்கிறவர்கள் தான் பரலோக மகிமையை அடைவார்கள்."

"'அப்படியானால் நாம் விண்ணக மகிமைக்குள் நுழைய உதவும் நமது வாழ்வின் சிலுவைகள் விண்ணக மகிமையின் அடையாளம் தானே!"

"அப்படியானால் நமக்குத் துன்பங்கள் வரும்போது நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும்."

"'தன் மீது மிகுந்த அன்பு வைத்திருந்த அசிசி நகர் பிரான்சிசை இயேசு தனது ஐந்து காய வேதனையால் ஆசீர்வதித்தார்.

நமக்கும் வேதனைகள் வரும்போது அது இயேசு நமக்கு தரும் ஆசீர்வாதங்கள் என்று நினைத்து மகிழ்ச்சியுடன் அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்."

"இயேசுவோடு சிலுவையில் மரித்த நல்ல கள்ளனுக்கு அவனது சிலுவை மரணம் ஆசிர்வாதமாக மாறிவிட்டது.

"நாம் தண்டிக்கப்படுவது முறையே. ஏனெனில், நம் செயல்களுக்குத்தக்க பலனைப் பெறுகிறோம். இவரோ ஒரு குற்றமும் செய்யவில்லை" என்று அவனைக் கடிந்துகொண்டான்.

42 பின்பு அவன், "இயேசுவே, நீர் அரசுரிமையோடு வரும்போது, என்னை நினைவுகூரும்"

நல்ல கள்ளன் முதலில் தன் குற்றங்களை ஏற்றுக் கொள்கிறான்.

பின் தன்னை ஏற்றுக் கொள்ளும்படி இயேசுவிடம் மன்றாடுகிறான்.

அதாவது தனது பாவங்களை ஏற்று, 

அதற்காக வருத்தப்பட்டு,

 அவற்றை இயேசுவிடம் அறிக்கையிட்டுவிட்டு,

 அவற்றுக்காக மன்னிப்பும் கேட்கிறான்.

இயேசுவும் அவனது பாவங்களை மன்னிப்பது மட்டுமல்லாமல் அவனுக்கு அன்றே விண்ணக வாழ்வை உரிமையாக்குகிறார்."

"'இயேசுவின் சிலுவை மரணம் தான் விண்ணக வாயிலை திறக்கிறது.

அவர் மரணித்த விநாடியே அதுவரை பாதாளத்தில் காத்துக் கொண்டிருந்த பரிசுத்த ஆத்மாக்கள் விண்ணகத்திற்குள் நுழைகிறார்கள்.

நல்ல கள்ளன் இயேசுவின் கையைக் கோர்த்துக் கொண்டே அவரோடே விண்ணகத்திற்குள் நுழைகிறான்.

பாவிகள் மட்டில் இயேசுவுக்கு
 உள்ள அன்பை பார்!

வாழ்நாள் முழுவதும் உலகப் பொருள்களைத் திருடிய கள்ளன்

அன்பு என்னும் ஆயுதம் கொண்டு அவனைப் படைத்த இறைவனையே திருடி விட்டான்,
அவருடைய முழு சம்மதத்தோடு.

அன்புதான் இறைவனை தான் படைத்த மனிதர்களின் மீட்புக்காக சிலுவையில் தன் உயிரையே பலியிட செய்தது.

பாடுபட்ட சுரூபத்தைப் பார்க்கும் போது நமது உள்ளத்தில் 
இயேசுவின்பால் அன்பு பொங்க வேண்டும்.

அன்பு நம்மைப் படைத்தவரின் சிலுவை மரணத்திற்குக் காரணமான நமது பாவங்களுக்காக மனஸ்தாபத்தைத் தூண்ட வேண்டும். 

அவருக்காகவே நமது வாழ்வை அர்ப்பணிக்கச் செய்ய வேண்டும்.

கள்ளனை நல்ல கள்ளனாக மாற்றிய சிலுவை பாவிகளை நல்ல பாவிகளாக மாற்ற வேண்டும்.

சிலுவை அன்பின் சின்னம்,

சிலுவை தியாகத்தின் சின்னம்,

சிலுவை பாவப் பரிகாரத்தின் சின்னம்,

சிலுவை பாவ மன்னிப்பின் சின்னம்,

சிலுவை மகிமையின் சின்னம்.

 நமது வாழ்வாக இருக்க வேண்டியது சிலுவையும்,

 அதில் நமக்காகத் தன்னையே பலியாக்கிய இறை மகன் இயேசுவும் மட்டும்தான்."

"தாத்தா, இயேசு மரணம் அடைந்த சிலுவை தான்  நமது வாழ்வு.

சிலுவை அடையாளத்தோடு ஆரம்பித்த நமது கிறிஸ்தவ வாழ்வு,

சிலுவை அடையாளத்தோடுதான் விண்ணக வாழ்வாக மாற வேண்டும்.

இதை நமக்கு ஞாபகப்படுத்திக் கொண்டிருப்பதற்காகத்தான்

அடிக்கடி தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் சிலுவை அடையாளம் போடுகின்றோம்.

இயேசு மரித்த சிலுவைதான் நமக்கு வாழ்வு, இவ்வுலகிலும் மறு உலகிலும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment