"உங்களுக்குப் பிறர் என்னென்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அவற்றையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்."
( மத்.7:12)
"தாத்தா, எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நேசி,
உன்னை நேசிப்பது போல உனது அயலானையும் நேசி
என்று இரண்டு கட்டளைகள் கொடுத்த கடவுள்
ஏன் உன்னை நேசி என்று கட்டளை கொடுக்கவில்லை?"
'''நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல். அன்பு செய், நேசி என்ற வார்த்தைகளுக்கு என்ன பொருள்?"
"அன்பு செய்னா நேசின்னு அர்த்தம். வேறு என்ன அர்த்தம்? கேள்வி புரியவில்லை."
"'ஒரு தாய் தன் பிள்ளையை அன்பு செய்கிறாள் என்று சொல்லும் போது உனது மனதில் என்ன படுகிறது?"
''பிள்ளையை அன்பு செய்கின்ற தாய் அதற்கு ஒழுங்காக உணவு ஊட்டுவாள், அதை நன்கு கவனித்துக் கொள்வாள், அதை வளர்ப்பாள், அதற்கு எந்த ஒரு பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்வாள், அதற்கு சுகம் இல்லாவிட்டால் வைத்தியரைப் பார்ப்பாள்...இன்னும் இது போன்ற எண்ணங்கள்தான் மனதில் வருகிறது."
"'அன்பு செய்யாவிட்டால்?"
"பிள்ளையைக் கவனிக்க மாட்டாள். அழுகின்ற பிள்ளை அழுது கொண்டேயிருக்கும், தாய் கவலைப் பட மாட்டாள்."
"'இப்பொழுது ஒன்று புரிந்து இருக்கும். நாம் யாரை அன்பு செய்கிறோமோ அவருடைய நலனிலும், மகிழ்ச்சியிலும் அக்கறை காட்டுகிறோம்.
உன்னை நீயே அன்பு செய் என்று சொன்னால் என்ன அர்த்தம்?"
"உன்னுடைய நலனிலும், மகிழ்ச்சியிலும் அக்கறை காட்டு என்று அர்த்தம்.''
"'இதற்கு யாராவது உனக்கு கட்டளை கொடுக்க வேண்டுமா?"
"நமது நலனில் அக்கறை காட்ட நமக்கு யாரும் கட்டளை கொடுக்க வேண்டியதில்லை.
கடவுள் நம்மை படைக்கும் போது அத்தகைய அன்போடு தான் படைத்திருப்பார்."
"'பாவம் செய்யும்போது நாம் நமது நலனில் அக்கறை காட்டுகிறோமா?"
"பாவம் செய்யும் போது நாம் நமது ஆன்மாவை நோயில் விழ செய்கிறோம். ஆகவே அக்கறை காட்டவில்லை."
"'பாவம் என்றால் என்ன?"
"இறைவன் கொடுத்த கட்டளைகளை மீறுவது தான் பாவம்."
"'அப்படியானால் பாவம் செய்யாதே என்று சொன்னால் என்ன அர்த்தம்?"
"இறைவனையும் உனது அயலானையும் நேசி என்று அர்த்தம்,
அதுதான் இறைவன் கொடுத்திருக்கும் கட்டளை."
"'இப்போ கவனி. நீ கடவுளது கட்டளைப் படி நடக்கும்போது,
அதாவது இறைவனையும் அயலானையும் நேசிக்கும் போது,
நீ உன்னையும் நேசிக்கிறாய்.
அதாவது, இறைவனையும், அயலானையும் நீ நேசிக்காவிட்டால்
உன்னையும் நேசிக்கவில்லை.
அன்பு இல்லாதவரிடம் யார் நலனிலும் அக்கறை இருக்காது.
அன்பைப் பிரிக்க முடியாது.
இறையன்பும், பிறர் அன்பும், சுய அன்பும் ஒரே அன்பு தான்.
உண்மையான அன்பு உள்ளவன்
கடவுளுடைய மகிழ்ச்சியிலும் மகிமையிலும் மிக அதிக ஆர்வம் காட்டுவான்.
தன் நலனில் அக்கறை காட்டுவான்.
அதைப் போல பிறர் நலனிலும் அக்கறை காட்டுவான்.
கடவுள் தன்னை தானே நித்திய காலமாக நேசிக்கிறார்.
தனது சாயலாக நம்மை படைத்த போது
நம்மை நாமே நேசிக்கும் படியாகவும்,
அவரை நேசிக்கும் படியாகவும்,
நமது பிறனை நேசிக்கும் படியாகவும்தான் படைத்தார்."
"அப்படியானால் கடவுளையும் பிறனையும் நேசிக்காதவன் தன்னையும் நேசிக்கவில்லையோ?"
"'உறுதியாக. கடவுளையும் பிறனையும் நேசிக்காதவன் பாவம் செய்கிறான்.
பாவம் ஒரு தீமை.
தனக்கு தானே தீமை செய்பவன் எப்படி தன்னை நேசிப்பான்?"
"இயேசு, "உங்களுக்குப் பிறர் என்னென்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அவற்றையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்"
என்று கூறியிருக்கிறார்.
'என்னென்ன' என்பதற்க்குள் என்னென்னவெல்லாம் அடங்கும்?"
"'எல்லாமே அடங்கும். குழந்தை பிறந்த உடனே எதற்கெல்லாம் ஏங்குகிறது?"
"தன்னை சுற்றி உள்ளவர்கள் தன்னைக் கவனிக்க வேண்டும், தனது தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்ய வேண்டும் என்று ஏங்குகிறது."
"'அது வளர வளர இதே ஏக்கம் மற்றவர்களுக்கும் இருக்கும் என்று தெரியவரும்.
அப்போது மற்றவர்கள் தான் குழந்தையாக இருக்கும்போது எப்படி தன்னை கவனித்துக் கொண்டார்களோ
அதே போல அது மற்றவர்களையும் கவனிக்க வேண்டும்.
நீ ஒரு வளர்ந்த குழந்தை. உனக்குள் இருக்கும் ஆசைகளை சொல் பார்ப்போம்."
"மற்றவர்கள் என்னை நேசிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்."
"'அப்படியானால் நீயும் மற்றவர்களை நேசிக்க வேண்டும்."
"எனது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்னென்ன தேவையோ அவற்றை பெற மற்றவர்கள் எனக்கு உதவ வேண்டும்."
"'நீயும் அப்படியே செய்ய வேண்டும்."
"எனக்கு கஷ்டங்கள் வரும்போது மற்றவர்கள் எனக்கு ஆறுதல் கூற வேண்டும்."
"'மற்றவர்களுக்கு நீயும் அதையே செய்ய வேண்டும்."
"நான் அறியாமல் மற்றவர்களுக்கு எதிராக ஏதாவது தவறு செய்து விட்டால்
மற்றவர்கள் என்னை மன்னிக்க வேண்டும்."
"'நீயும் அப்படியே செய்ய வேண்டும்."
"மற்றவர்கள் எனக்கு எந்த கஷ்டமும் கொடுத்து விடக்கூடாது."
"'உன்னாலும் மற்றவர்களுக்கு கஷ்டங்கள் எதுவும் வரக்கூடாது."
"இப்படியே சொல்லிக் கொண்டு போனால் விடிய விடிய சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.
அதனால் தான் ஆண்டவர் எல்லாவற்றையும் ஒரே வசனத்திற்குள் அடக்கி விட்டார்."
"'உனக்கு நிலை வாழ்வு பெற ஆசையாக இருக்கிறதா?"
"ஆசையாக இருப்பதால் தானே கிறிஸ்தவனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்."
"'மற்றவர்களும் நிலைவாழ்வு பெற நீ விரும்ப வேண்டும்."
''அப்படியானால் மற்றவர்களுக்கும் நான் கிறிஸ்துவை அறிவிக்க வேண்டும்."
"'அதற்குப் பெயர் தான் நற்செய்தி அறிவித்தல்.
நாம் விண்ணகம் நோக்கி சென்று கொண்டிருக்கும் வழியை மற்றவர்களுக்கும் காட்ட வேண்டும்.
இது இறைவன் நமக்கு தந்த கட்டளை. இதை நிறைவேற்றுவது நமது தலையாக கடமை."
"அப்படியானால் நற்செய்தியை அறிவிக்கும் கடமை குருக்களுக்கு மட்டுமல்ல நமக்கும் இருக்கிறதோ?"
"'குருக்கள் மட்டுமல்ல, நாம் அனைவருமே இயேசுவின் சீடர்கள் தான்.
அவர்களைப் போலவே நாமும் நமது சிலுவைகளைச் சுமந்து கொண்டு இயேசுவைப் பின்பற்றுகிறோம்.
நிலையான விண்ணக வாழ்வு அனைவருக்கும் உரிமையானது.
பதவி வேறுபாடின்றி அனைவரும் இறைவனின் பிள்ளைகள் தான்.
ஆகவே இறைவனை மற்றவர்களுக்கு அறிவிக்கும் கடமை அனைவருக்கும் உண்டு.
நம்மை நாம் நேசிப்பது போல மற்றவர்களையும் நேசிப்போம்.
நாம் விண்ணகம் செல்வது போல மற்றவர்களும் அங்கு வர ஆசைப்படுவோம், அதற்காக உழைப்போம்.
ஏனெனில் விண்ணகம் நம் அனைவருக்கும் தாய் வீடு."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment