Wednesday, March 8, 2023

"என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்?"(மாற்கு.15:34)

"என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்?"
(மாற்கு.15:34)

"தாத்தா, ஏன் இயேசு மரணம் அடைவதற்கு முன்

 "என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்?"
என்று கூறினார்?

"'பாவம் செய்வதையே வாழ்வாக கொண்டவர்கள் செய்கின்ற மிகப்பெரிய பாவத்திற்கு பரிகாரமாக இயேசு இந்த வார்த்தைகளை கூறினார்."

"அது என்ன பாவம்?" 

"'அவநம்பிக்கை. 

விசுவாசம், நம்பிக்கை, தேவ சினேகம் ஆகிய மூன்று தேவ சம்பந்தமான புண்ணியங்களில் நம்பிக்கைக்கு எதிரான பாவம்.

எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் அவனுக்கு கடவுள் மேல் நம்பிக்கை இருந்தால்தான்,

அதாவது கடவுள்  அவனது பாவங்களை மன்னிப்பார் என்று நம்பினால் தான்,

அவன் மன்னிப்புக் கேட்பான்.

மன்னிப்புக் கேட்காவிட்டால் பாவங்கள் மன்னிக்கப்படாது.

ஆகவேதான் அவநம்பிக்கை மற்ற எல்லாப் பாவங்களிலும் மிகப்பெரிய பாவம்.

அந்த பாவத்திற்குப் பரிகாரம் செய்யவே அத்தகைய பாவியின் பலகீனமான மனநிலைக்கு தன்னையே உட்படுத்தி 

அந்த அனுபவத்தின் மூலம் 
அவநம்பிக்கை என்னும் பாவத்திற்கு இயேசு பரிகாரம் செய்தார்."

"உண்மையிலேயே இயேசு தந்தை தன்னைக் கைவிட்டு விட்டதாக நினைத்தாரா?"

"'பேரப்புள்ள, இயேசுவைப் பற்றி எந்தக் கேள்வியைக் கேட்டாலும் அவர் கடவுள் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு கேட்க வேண்டும்.

தந்தை, மகன், தூய ஆவி மூவரும் ஒரே கடவுள்.

கடவுள் தன்னையே கைவிட முடியுமா?

தனது மனித சுபாவத்தில் பாடுகள் பட்ட இறை மகனுக்கு 

தந்தையால் தன்னைக் கைவிட முடியாது என்று உறுதியாக தெரியும்.

பாவப் பரிகாரம் செய்வதற்காக இறைமகன் மனித சுபாவத்தில் ஏற்றுக்கொண்ட மனித பலவீனங்களுள் இதுவும் ஒன்று."

"ஆனால் வார்த்தைகள் 
அவநம்பிக்கையைத் தானே காட்டுகின்றன."

"'மனித பலகீனத்தைச் சார்ந்தவை அந்த வார்த்தைகள்.

மனித பலகீன அனுபவத்தை இயேசு ஏற்று அதற்காகப் பரிகாரம் செய்தார்."

"இந்த அனுபவம் மனிதனுக்குப் பாவம். இயேசுவுக்கு?"

"'பாவம் என்றால் என்ன?" 

"கடவுளின் சித்தத்துக்கு எதிராக செயல்படுவது பாவம்."

"'கடவுளின் சித்தத்துக்கு இணங்க செயல்பட்டால்?"

"பாவமல்ல."

"'நீ என் உயிரை எடுத்தால்?"

"அது கொலை, பாவம்."

"'கடவுள் என் உயிரை எடுத்தால்?"

"அவருக்கு அது பாவம் அல்ல. ஏனென்றால் கொடுத்தவருக்கு எடுக்க முழு உரிமை இருக்கிறது.

உங்களுக்கு உயிரைக் கொடுத்தவர் அதை எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம்.

அது அவரது சித்தம்.

மரணம் என்றாலே கடவுள்  நமக்குத் தந்த உயிரை நம்மிடமிருந்து திரும்பவும் எடுத்துக் கொள்வது தானே!"

"'உலகம் ஒருநாள் அழியும். ஏன்?"

"படைத்தவர் அழிப்பார். அது அவரது உரிமை. 

கடவுள் படைத்த உலகை அழிக்க நமக்கு உரிமை இல்லை."

"'இப்போ உனக்குப் புரிந்திருக்கும்.

மனிதனுடைய அவநம்பிக்கை அவனுடைய  பலகீனத்தினால் அவன் செய்த பாவத்தின் விளைவாக ஏற்படுவது.

அவனுக்கு அது பாவம்.

அந்தப் பாவத்துக்குப் பரிகாரம் செய்வதற்காக அதே பலகீனத்தின்  அனுபவத்தை கடவுளாகிய  இயேசு ஏற்றுக் கொள்வது அவருடைய சித்தம்.

அவர் அனுபவித்த அந்தப் பலகீன அனுபவத்தின் விளைவுதான் அவர் கூறிய வார்த்தைகள்,

"என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்?"

எந்தக் காரணத்தை முன்னிட்டும்,
எந்தச் சூழ்நிலையிலும்,
கடவுள் நம்மைக் கைவிட மாட்டார் என்று நாம் உறுதியாக நம்ப வேண்டும்."


"தாத்தா,  இயேசு கூறிய வார்த்தைகள் திருப்பாடல் 22 இல் காணப்படுகின்றன."

"'நீ கூறுவது உண்மைதான்.

அதில் தனது எதிரிகளின் கேலிகள் மற்றும் வேதனைகளிலிருந்து தன்னைக் காப்பாற்றும்படி ஒரு நபர் கடவுளிடம் கூக்குரலிடுகிறார். 

கடைசி பத்து வசனங்களில் தன்னைக் காப்பாற்றியதற்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறார்.

திருப்பாடல் வசனங்களை கூறியதன் மூலம் 

 இயேசு தன்னுடைய பாடுகளின் மூலம்    எதிரிகளின் கையிலிருந்து நம்மை விடுவித்துவிட்டதைத் தெளிவு படுத்துகிறார்.

இயேசுவின் பாடுகளின் மூலம் நாம் பாவத்திற்கு காரணமான சாத்தானின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறோம்.

நாம் எவ்வளவு பெரிய பாவியாய் இருந்தாலும் 

 நமது பாவங்களை ஏற்று

 அவற்றுக்காக மன்னிப்பு கேட்டால் 

உறுதியாக அவர் நம்மை மன்னிப்பார்.

கடவுள் நம்மை கைவிட மாட்டார்.

நாம் அவரது கையை இறுக பற்றி கொண்டு, அதை விட்டுவிடக்கூடாது."

"நாம் கடவுளைக்  கைவிட்டு விடக்கூடாது என்கிறீர்கள்."

""உண்மைதான்.

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment