Thursday, March 9, 2023

அன்னை மரியாளும் சிலுவையும்.

அன்னை மரியாளும் சிலுவையும்.


"தாத்தா, எனக்கு ஒரு சிறு சந்தேகம்.

 இயேசுவுக்கு   தான் பாடுகள் படப்போகும் நாள், மரிக்கும் நேரம் மற்றும் இதைச் சார்ந்த விஷயங்கள் எல்லாம் நித்திய காலத்திலிருந்தே தெரியும்.

தனது மரணத்திற்குப் பின் தன்னுடைய தாய்  யார் பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதை பாடுகள் ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே தீர்மானித்திருக்கலாம் அல்லவா.

 எதற்காக சிலுவையில் அறையப்பட்டு அதில் தொங்கும் நேரம் வரை காத்திருந்தார்?"

"'இயேசுவின் பாடுகளைப் பற்றி தியானித்த போது மனதில் உதித்த எண்ணங்களை உன்னோடு பகிர்ந்து கொள்கிறேன்."

"உங்கள் மனதில் உதிக்கும் எண்ணங்கள் உங்களது அனுபவ வட்டத்திற்குள் உள்ளவைகளாகத் தானே இருக்கும்.

அதற்குள் எப்படி இயேசுவின் அனுபவம் வரும்?"

"' நாம் கிபி 2023ல் வாழ்ந்து கொண்டிருந்தாலும்,

இயேசு இப்போதும் நம்மோடு தான் இருக்கிறார்.

நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இருக்கிறார்.

நாம் அவரைப் பற்றித் தியானிக்கும் போது அவரும் தன் எண்ணங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். 

என்னோடு பகிர்ந்து கொண்ட  எண்ணங்களை உன்னோடு நான் பகிர்ந்து கொள்கிறேன்.

இயேசு சிலுவையில் பாடுகள் பட்டது எதற்காக?"

"நமது மீட்புக்காக."

"'இயேசு, பாடுகள், மீட்பு, நாம்  ஆகியவை நமது மீட்போடு தொடர்புடைய வார்த்தைகள்.

இவற்றோடு தனது தாயையும் தொடர்பு படுத்த இயேசு விரும்பினார். 

அவர் பட்ட பாடுகளின் பலனை நாம் அனுபவிக்க,

தான் பாடுகள் படுவதற்கென்றே தன்னைப் பெற்றெடுத்த தன் அன்னை,

நமது அன்னையாகத் தொடர வேண்டும் என்று இயேசு விரும்பினார். 

அதற்காக நமது சார்பில் அருளப்பரை நிறுத்தி அவரின் அன்னையாக தனது அன்னையை இயேசு நியமித்தார். 

அருளப்பர் நமது சார்பில் அன்னை மரியாளை தாயாக ஏற்றுக் கொண்டார்.

அது முதல் உலகம் முடியும் வரை இயேசுவின் பாடுகளின் பலனை அனுபவிக்க விரும்பும் அனைவரின் தாயாக மரியாள் விளங்குகிறாள்."

"நீங்கள் சொல்வதைப் பார்த்தால் மாதா பக்தியின் நோக்கம் இயேசு அனுபவித்த பாடுகளின் பலனை நாம் அனுபவிப்பது மட்டுமே எனத் தோன்றுகிறது."

"'மாதா பக்தர்கள் உலகைச் சார்ந்த உதவிகளைக் கேட்பதை நிறுத்திவிட்டு 

இயேசுவின் அன்னையாக மட்டும் அவளைத் தியானித்தால்,

மாதா வியாகுல மாதாவாக மட்டுமே நமது மனதில் தனது மகனோடு குடியிருப்பாள்.

நமது மனதில் தோன்றும் எண்ணங்கள் எல்லாம் இயேசுவின் பாடுகள் பற்றியனவாகவே இருக்கும்.

நாமும் வாழ்நாள் முழுவதும் நமது சிலுவையைச் சுமந்து கொண்டு இயேசுவைப் பின்தொடர்ந்து கொண்டேயிருப்போம்.

நமது வாழ்க்கையே சிலுவைப் பாதையாக மாறிவிடும். 

அதற்காகத்தான் தன் அன்னையை தான் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது நமது அன்னையாக இயேசு தந்தார்."

''அதாவது அன்னை மரியாளைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் சிலுவையில் நமக்காகத் தொங்கும் இயேசுதான் ஞாபகத்துக்கு வருவார் என்று சொல்கிறீர்கள்.

பெத்லகேமில் மாட்டுக் குடிலில் பாலன் இயேசு படுத்திருந்தது ஞாபகத்திற்கு வராதா?

பன்னிரண்டு வயதில் ஆலயத்தில் போதகர்களோடு மூன்று நாட்கள் பேசிக்கொண்டிருந்தது ஞாபகத்துக்கு வராதா?

30 ஆண்டுகள் மாதாவுக்கும் சூசையப்பதற்கும் கீழ்ப் படிந்து நடந்தது ஞாபகத்திற்கு வராதா?"

"'வரும். அவையெல்லாம் வாழ்க்கை என்னும் சிலுவை பாதையில் அன்னை மரியாளும்,
மகன் இயேசுவும் சந்தித்த அனுபவங்கள்.

அந்த அனுபவங்களோடு அவர்கள் நடந்த சிலுவைப்பாதை கல்வாரி மலையில்தான் முழுமை அடைகிறது.

நாமும் அன்னை மரியாளோடு நடந்தால் கல்வாரிக்குத்தான் வந்திருப்போம். 

அன்னை மரியாளின் கல்வாரிப் பயணம் இன்னும் நமது வாழ்வில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அன்னை மரியாள் கடவுளால் படைக்கப்பட்டது தச்சன் இயேசுவை வளர்ப்பதற்கு அல்ல.

உலகின் மீட்பர் இயேசுவை பெற்று, கல்வாரி மலைக்கு அவரோடு தொடர்வதற்கும்,

 அங்கிருந்து நமது வாழ்வில் பாடுகள் பட்ட தன் மகனோடு நடப்பதற்கும்.

இயேசுவின் பாடுகள் பற்றி அன்னையோடு பேசாமல்,

குழந்தைப் பேறு பெறுவதற்கும்,

நல்ல வேலை கிடைத்து வாழ்க்கையில் வெற்றி நடை போடுவதற்கும்,

உடல் நோய்கள் குணமாவதற்கும் மட்டும் அன்னையோடு பேசிக்கொண்டு காலத்தை ஓட்டுபவர்கள்

 உண்மையான மாதா பக்தர்கள் அல்ல.

மீட்பின் பாதையில் அன்னையின் துணையை நாடுபவர்கள் மட்டுமே உண்மையான அன்னையின் பக்தர்கள்.

உலகைச் சார்ந்த நன்மைகளை பெறுவதற்காக மட்டும் அன்னையின் திருத்தலங்களுக்கு சென்று வருபவர்கள்,

அதற்காக மட்டும் ஆயிரக்கணக்கில் காணிக்கை போடுபவர்கள்,

அன்னையோடு சிலுவைப் பாதையில் நடக்காவிட்டால்,

அவர்களது நிலையற்ற வாழ்வை கொண்டு, நிலைவாழ்வை ஈட்ட முடியாது."

"அதாவது வாழ்க்கையில் துன்பங்கள் வரும்போது அவற்றிலிருந்து விடுதலை பெற அன்னையை நாடாமல்,

அவற்றை நமது சிலுவையாக மாற்ற அன்னையின் உதவியைத் தேட வேண்டும்.

இவ்வுலகில் சிலுவை 
மறுவுலகில் மகிமை 

 என்ற நம்பிக்கையோடு வாழ்பவர்கள் தான் உண்மையான மாதா பக்தர்கள்."

"'தாயின் துணையுடன் மகிமையின் வாழ்வு நோக்கி சிலுவைப் பாதையில் நடப்போம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment