(தொடர்ச்சி)
''தாத்தா, இயேசுவால் இனி சிலுவையைச் சுமக்க முடியாது.
ஏனெனில் அவர் மரித்து உயிர்த்து விண்ணகத்தில் மகிமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
விண்ணக வாழ்வில் யாராலும் துன்பங்களை அனுபவிக்க முடியாது.
பூமியில் அவர் விட்டுச் சென்ற சிலுவைப் பாதை தொடர்கிறது.
அதில் இயேசுவுக்கு ஏதாவது பங்கு உண்டா?"
"'பின்வரும் உரையாடல் யாருக்கும் யாருக்கும் நடந்தது?
"சவுலே, சவுலே, நீ என்னைத் துன்புறுத்துவதேன்?" என்ற குரலைக் கேட்டார்.
5 "ஆண்டவரே, நீர் யார்?" என்றார்.
6 அதற்கு ஆண்டவர், "நீ துன்புறுத்தும் இயேசுதான் நான்."
"இயேசுவுக்கும் சவுலுக்கும் இடையில் நடந்தது."
"'எப்போது?"
''சவுல் கிறிஸ்தவர்களை கைது செய்ய தமஸ்கு நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது நடந்தது."
"'இயேசு எங்கிருந்து பேசினார்?"
"விண்ணகத்திலிருந்து."
"'விண்ணகத்தில் துன்பமே கிடையாதே,
ஆனால் இயேசு ஏன்
"சவுலே, சவுலே, நீ என்னைத் துன்புறுத்துவதேன்?"
என்று ஏன் கேட்டார்?"
"சவுல் துன்புறுத்தியது கிறிஸ்தவர்களை.
"நீ துன்புறுத்தும் இயேசுதான் நான்."
கிறிஸ்தவர்களை துன்புறுத்துபவர்கள் இயேசுவையே துன்புறுத்துகிறார்கள்.
கிறிஸ்தவர்களை உறுப்பினர்களாக கொண்ட கத்தோலிக்க திருச்சபை கிறிஸ்துவின் ஞான சரீரம்.
கத்தோலிக்க திருச்சபையை துன்புறுத்துபவர்கள் கிறிஸ்துவின் ஞான உடலையே துன்புறுத்துகிறார்கள்.
ஆகவே தான் இயேசு சவுலை நோக்கி,
"நீ என்னைத் துன்புறுத்துவதேன்?"
என்று கேட்டார்.
இயேசுவின் சகோதரர்களுக்கு யார் என்ன செய்தாலும் அதை இயேசுவுக்கு செய்கிறார்கள்.
நன்மைகள் செய்தால் அவற்றை இயேசுவுக்குச் செய்கிறார்கள் அதற்குரிய சம்பாவனையைப் பெறுவார்கள்.
தீமைகள் செய்தால் அவற்றையும் இயேசுவுக்கே செய்கிறார்கள்,
அதற்குரிய விளைவை அனுபவிப்பார்கள்.
பூமியில் இயேசு பாடுகள் பட்டபோது பட்ட வேதனைகளை இப்போது விண்ணகத்தில் வாழும் இயேசுவால் அனுபவிக்க முடியாது.
ஆனாலும் நாம் சிலுவைகளை சுமக்கும் போது அவர் நம்மோடு சுமக்கிறார்.
அதனால் சிலுவையின் பாரம் நமக்குத் தெரியாது.
ஆனால் பலன் கிடைக்கும்.
''இயேசு சிலுவையைச் சுமந்து கொண்டு போனபோது அதன் பாரத்தைத் தாங்க முடியாமல் மூன்று முறை கீழே விழுந்தார்."
"'உண்மையில் அது மரச் சிலுவையின் பாரத்தால் என்று கூறுவதை விட,
நமது பாவங்களின் பாரத்தால் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.
நமது பாவச் சுமையை அவரே சுமந்து,
கீழே விழுந்ததின் மூலம் நாம் அடிக்கடி பாவம் செய்வதற்காக பரிகாரம் செய்தார்.
ஒவ்வொரு முறை அவர் கீழே விழும் போதும்
அவரை நடத்திச் சென்ற வீரர்கள்
அவரைக் காலால் உதைத்தும், சாட்டைகளால் அடித்தும் எழுப்பினார்கள்.
அந்த உதைகளும், அடிகளும் நமது பாவங்கள் கொடுத்தது.
அதாவது நமது பாவங்களால் நாம் கொடுத்தது.
நம்மை படைத்தவரையே நம்மை அடித்து உதைக்க செய்த,
நமது பாவங்களுக்காக நாம் கண்ணீர் விட்டு மனஸ்தாபப்பட வேண்டாமா?
நாம் மனஸ்தாபப்பட்டு பாவ மன்னிப்புப் பெற வேண்டும் என்பதற்காகத்தான் திரும்பத் திரும்ப கீழே விழுந்தார்.
நமது பாவங்களை மன்னித்து நம்மை பரிசுத்த நிலைக்கு கொண்டு வரவே இயேசுவின் சிலுவைப்பாதை இன்னும் தொடர்கிறது."
"நீங்கள் சொல்வதை வைத்து பார்த்தால் சிலுவைப்பாதை விண்ணக பேரின்ப வாழ்க்கையை நோக்கி நாம் நடப்பதற்காக போடப்பட்ட ஒரு பாதையாக அல்லவா தெரிகிறது."
"'தெரிவது என்ன, உண்மையே அதுதான்.
ஒரு முழு செபமாலை சொல்வதே ஒரு சிலுவைப் பாதை தான்.
மகிழ்ச்சியிலே பிறந்து, துக்கத்தின் வழியே, மகிமைக்குள் நுழைகிறோம்.
இயேசு பிறந்தது மகிழ்ச்சி.
இறந்தது துக்கம்.
உயிர்த்தது மகிமை.
இயேசுவின் வாழ்க்கை என்னும் சிலுவை பாதையில்
ஆரம்பம் மகிழ்ச்சி,
நோக்கம் மகிமை,
வழி சிலுவை."
"மற்றவர்களால் நமக்கு வரும் சிலுவையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வோம்.
நமது சிலுவைப் பாதையில் இயேசுவும் நம்மோடு வருவதால்
சிலுவையின் பாரம் நமக்குத் தெரியாது.
நமக்காக காத்திருக்கும் விண்ணக மகிமையை நினைத்தால் சிலுவையின் பாரம் மறைந்துவிடும்.
எல்லா புனிதர்களும் தங்களுக்கு வந்த சிலுவையை மகிழ்ச்சியோடு தான் சுமந்தார்கள்.
நாமும் அவர்களைப் பின்பற்றுவோம்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment