Monday, March 6, 2023

இயேசு ஒப்புக்கொடுத்த பரிகாரப் பலி. (தொடர்ச்சி)2

இயேசு ஒப்புக்கொடுத்த பரிகாரப் பலி. (தொடர்ச்சி)2

"இயேசு எதிரிகளால் கைது செய்யப்பட தன்னையே கையளித்தது எத்தகைய பாவங்களுக்கு பரிகாரமாக?"

"'உலகெங்கிலும் எத்தனையோ குற்றமற்றவர்கள்  

சட்டத்தின் பெயரால்

 சட்டத்திற்கு எதிராக 


கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு துன்பப்படுத்தப்படுவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.

கைது செய்பவர்கள் செய்வது பாவம்.

கைது செய்யப்படுபவர்கள் ஐயோப் பாவம்!

இயேசு நாள்தோறும் கோயிலில் அவர்களோடு இருந்தும் அவர்கள் அவர்மேல் கைவைக்கவில்லை.

அவர் தன்னையே கையளிக்க நித்திய காலமாக திட்டமிட்டிருந்த நேரத்தில் அவரைக் கைது செய்ய வந்தார்கள்.

உலகத்தில் நடைபெறும் சட்ட விரோத கைதுகளுக்கு பரிகாரமாக இயேசு தனது விரோதிகளால் தான் கைது செய்யப்பட அனுமதித்தார்."

"தாத்தா, ஒரு பொடி சந்தேகம். அவர்களுடைய பாவத்திற்கு இயேசு பரிகாரம் செய்துவிட்டார்.

ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் தங்களுடைய பாவங்களுக்கு வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டால்தானே அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படும்.

யாரும் மன்னிப்புக் கேட்டிருப்பது போல் தெரியவில்லையே!"

"'அது எப்படி உனக்கு தெரியும்? 

யாரும் உன்னிடம் சொல்லி விட்டோ, பத்திரிகைகளுக்குச் செய்தி கொடுத்து விட்டோ மன்னிப்பு கேட்க மாட்டார்கள்.

பரிகாரம் செய்தவர் மன்னிக்க எப்போதுமே தயார்.

கைது செய்யப்பட்ட இயேசு தலைமைக்குருக்களிடமும், தலைமைச் சங்கத்தாரிடமும் அழைத்துச் செல்லப்பட்டார்.

 அவர்கள் இயேசுவைச் சாவுக்குக் கையளிக்கும்படி தீர்மானித்து விட்டு

பிறகு அதற்கான சான்றுகளைத்
தேடிக் கொண்டிருந்தார்கள்.

தண்டனையைத் தீர்மானித்து விட்டு குற்றத்தைத் தேடி அலைந்தார்கள்!

ஆனால் எதுவுமே கிடைக்கவில்லை.

ஆகவே பொய்ச் சான்றுகளை தயாரித்துக் கொண்டிருந்தார்கள்.

இன்று நீதி உலகில் நடைபெற்றுக் கொண்டிருப்பதும் இத்தகைய பாவங்கள் தான்.

பொய் வழக்கு, பொய் சாட்சி போன்ற எண்ணிறந்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்யவே இயேசு தனக்கு எதிராக பொய் வழக்குப் போடப்பட தன்னையே கையளித்தார்.

அவருக்கு மரண தண்டனை கொடுப்பதற்காக அவரை பிலாத்துவிடம் அழைத்துச் சென்றார்கள்.

பிலாத்துவாலும் அவரிடம் எந்த குற்றத்தையும் காண முடியவில்லை.

இயேசுவுக்கு மரணத் தீர்ப்பு வழங்க அவனுக்கு விருப்பமில்லை. 

ஆகவே, "அவரைத் தண்டித்து விடுதலைசெய்து விடலாம்" என்றான்.

ஆனால் யூத மத தலைவர்கள் அவருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள்.

தீர்ப்பு வழங்கப்படுமுன் இயேசு இரண்டு வித தண்டனைகளை அனுபவித்தார்.

முதலில் கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டார்.

அடுத்து தலையில் முள்முடி சூட்டப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்.

கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டபோது உடலில் உள்ள அத்தனை உறுப்புகளும் அடி வாங்கின.

இதன் மூலம் உடல் உறுப்புகள் மூலம் மனிதன் செய்த அனைத்துப் பாவங்களுக்கும் பரிகாரம் செய்தார்.

முள்ளால் முடி பின்னி அதை அவரது தலையில் வைத்து அடித்தார்கள்.

முட்கள் தலையில் உள்ள அத்தனை உறுப்புகளையும் வேதனைக்கு உட்படுத்தின.

மூளையால் செய்த பாவங்கள்,

கண்களால் செய்த பாவங்கள்,

காதுகளால் செய்த பாவங்கள்,

மூக்கால் செய்த பாவங்கள்,

வாயால் செய்த பாவங்கள்

ஆகிய அனைத்துப் பாவங்களுக்கும் பரிகாரம் செய்தார்.

நல்லவர்கள் கெட்டவர்களால் அவமானப்படுத்தப்படும் பாவங்களுக்குப் பரிகாரமாக,

யூதர்கள் அவருக்குச் செய்த அத்தனை அவமானங்களையும் ஏற்றுக் கொண்டார்."

"ஆக உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து உறுப்புகளையும் பயன்படுத்தி மனிதன் செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்து விட்டார்."

"'அவசரப்படாதே, பாடுகள் இன்னும் முடியவில்லை.

"நீங்கள் தீர்ப்புக்குள்ளாகாதபடி தீர்ப்பிடாதீர்கள்.

எந்தத் தீர்ப்பு இடுகிறீர்களோ அந்தத் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். எந்த அளவையால் அளப்பீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்."

இது இயேசுவின் போதனை.

யாரைப் பற்றியும் தீர்ப்பு கூற நமக்கு எந்த உரிமையும் இல்லை.

ஒருவனைப் பார்த்தவுடன் "இவன் இப்படிப்பட்டவன்" என்று தீர்ப்பு கூறுவதும்,

"இவனுக்கு என்னென்ன தண்டனைகள் கொடுக்கலாம்" என்று தீர்ப்பு கூறுவதும்

மனிதர்களிடையே சர்வ சாதாரணமான நிகழ்ச்சிகள் ஆகிவிட்டன.


அனேக சமயங்களில் 
நீதிமன்றங்களிலும் நியாயமான தீர்ப்புகள் வழங்கப்படுவதில்லை.

இதனால் குற்றம் செய்யாதவர்கள் தண்டிக்கப்படுவதும்,

குற்றவாளிகள் விடுவிக்கப்படுவதும் சர்வ சாதாரணமாகிவிட்டன.

உலகில் தீர்ப்பு சம்பந்தமாக செய்யப்படுகின்ற அத்தனை பாவங்களுக்கும் பரிகாரமாக,

மாசு மருவற்ற இயேசு செய்யாத குற்றங்களுக்காக மரணத் தீர்ப்பிடப்பட்டதை ஏற்றுக் கொண்டார்.

பிறரைப் பற்றி தவறான தீர்ப்பு கூறும் பழக்கம் உள்ளவர்களும்,

நீதிமன்றங்களில் தவறான தீர்ப்பு கூறும் பழக்கம் உள்ளவர்களும்

தங்கள் பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்."

"தான் மரணம் அடைய ஏன் சிலுவையை இயேசு தேர்ந்து கொண்டார்?" 

"'ஏனெனில் அந்தக் காலத்தில் சிலுவைதான் குற்றவாளிகளின் தண்டனைக் கருவியாக இருந்தது.

பரிகாரம் செய்வதற்காக நமது பாவங்களை அவரே சுமந்தபடியினால் 

அதிலே தான் மரித்து தண்டனைக் கருவியை பரிகாரக் கருவியாக மாற்றினார்.

நாம் எவற்றையெல்லாம் பாவத்திற்கு பரிகாரமாக ஏற்றுக் கொள்கிறோமோ அவற்றை எல்லாம் இயேசு சிலுவை என்று அழைத்தார்."

"புரியவில்லை."

"'தண்டனைக் கருவியாகிய சிலுவையைப் பாவப் பரிகாரக் 
கருவியாக மாற்றினார்.

உலகில் நாம் குற்றவாளிகளைத் தண்டிக்க அவர்களுக்கு ஏதாவது துன்பத்தைக் கொடுக்கிறோம்.

இயேசுவின் சிலுவை மரணத்திற்குப் பின்

 நாம் அனுபவிக்கும் துன்பங்கள் எல்லாம் சிலுவைகளாக மாறிவிட்டன,

 அதாவது,

 அவற்றை நமது பாவங்களுக்கு பரிகாரமாக ஏற்றுக்கொள்ளும் போது.

அதனால் தான் இயேசு 

"தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்சொல்லாதவன் என் சீடனாயிருக்க முடியாது."
(லூக்.14:27)

என்று சொன்னார்.

இயேசுவின் சீடனாக வாழ விரும்பும் எவரும் தனக்கு வரும் துன்பங்களைத் தனது பாவங்களுக்குப் பரிகாரமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பாவப் பரிகாரமாக ஏற்றுக் கொள்ளாமல் முணு முணுத்துக் கொண்டு துன்பத்தை அனுபவிப்பனுக்கு அது சிலுவை அல்ல, வெறும் துன்பம் தான்.

நமது வாழ்வில் இயல்பாக வரும் துன்பங்களைச் சிலுவைகளாக மாற்றி நாம் இயேசுவைப் பின்பற்ற வேண்டும்.

நமது தவ முயற்சிகளும் நமது சிலுவைகள் தான்."

"தாத்தா இயேசு ஏன் தான் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னால் தனது ஆடைகளை களைய அனுமதித்தார்?"

"இயேசுவைச் சிலுவையில்
 அறையும் முன் அவரது உடைகளை களைந்து நிர்வாணமாக்கினார்கள்.

இது அவரை அவமானப்படுத்துவதற்காக அவர்கள் செய்தது.

ஆனாலும் அவரது அனுமதி இன்றி அவர்களால் அதைச் செய்திருக்க முடியாது.

அவர் அனுமதித்ததால்தான் அவரைக் கைது செய்யவே முடிந்தது.

ஆடைகளை களைய ஏன் அனுமதித்தார்?

 அதில் ஒரு ஆன்மீகப் பொருள் இருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது.

நமது முதல் பெற்றோரைக் கடவுள் பரிசுத்தமாகப் படைத்தார்.

பரிசுத்தமான நிலையில் அவர்கள் நிர்வாணமாக இருந்தார்கள்.

பாவம் செய்தவுடன் நிர்வாணம் அவர்களுக்கு வெட்கத்தைக் கொடுத்தது.

அவர்களே செய்த இலை உடைகளை அணிந்து கொண்டார்கள்.

இயேசுவின் சிலுவை மரணம் பாவத்தில் விழுந்து கிடக்கும் மனிதர்களை அதிலிருந்து விடுவித்து 

நமது முதல் பெற்றோரை எந்த பரிசுத்தமான நிலையில் கடவுள் படைத்தாரோ 

அந்த பரிசுத்த நிலைக்கு மனிதனை கொண்டு வரும். 

அதற்கு அடையாளமாகத்தான் பாவத்தின் காரணமாக நமது முதல் பெற்றோரால் மனித வாழ்வில் புகுத்தப்பட்ட  உடையை எதிரிகள் களைந்ததை ஏற்றுக் கொண்டார். 

அது நமது முதல் பெற்றோர் நிர்வாணமாக இருக்கும் போது அனுபவித்த பரிசுத்தத் தனத்தைத் தனது சிலுவை மரணம் மீட்டுத் தரும் என்பதற்கு அடையாளம்.

அதைத்தான் பாவத்திலிருந்து மீட்பு என்கிறோம்.

பாவத்திலிருந்து மீட்கப்படும்போது பரிசுத்தமாகிறோம்.

மனிதன் படைக்கப்பட்ட போது இருந்த நிலையை அடைகிறோம்."

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment