Monday, November 30, 2020

*நமது கட்டுப்பாட்டை மீறிய* *வாழ்க்கைஅனுபவங்கள்*

*நமது கட்டுப்பாட்டை மீறிய*
*வாழ்க்கை அனுபவங்கள்*

நாம் முழுமையான சுதந்திரத்தோடு செயல்படுவதற்கு உரிமையோடு இவ்வுலகில் பிறந்திருந்தாலும்

நம்முடைய அநேக வாழ்க்கை நிகழ்வுகளும், நமது அனுபவங்களும் நமது கட்டுப்பாட்டிற்குள் இல்லை என்பதுதான் உண்மை.

பத்து மாதங்கள் நமது தாயின் கருவறைச் சிறையில்

எவ்விதச் சுதந்தரமும் இன்றி அடைபட்டுக் கிடந்தோம்.

அதை விட்டு வெளியேறினால் தான் சுதந்தரக் காற்றை சுவாசிக்கலாம் என்று என்று எண்ணியபடி பத்தாவது மாதம் சிறையை விட்டு வெளியேறினோம்.

ஆனால் நம்மால் காற்றை மட்டும்தான் சுதந்திரமாக சுவாசிக்க முடிந்தது.

மிகக் கஷ்டப்பட்டு பெற்ற அடுத்த சுதந்தரம் அழுவதற்கு மட்டும்தான்.

எதாவது வேண்டுமென்றால் அதைக் கேட்கக்கூட நமது வாய்க்கு சுதந்திரம் இல்லை.

நல்ல வேளை அழுவதற்காவது சுதந்திரம் கிடைத்ததே என்ற என்ற திருப்தியோடு தாயின் அரவணைப்பில் வளர்ந்தோம்.

இன்று சிந்திக்கவும், பேசவும், செயல்படவும் முழுச் சுதந்திரம் இருப்பதாக எல்லோரும் சொல்லிக் கொள்கிறார்கள்.

  என்னவெல்லாமோ சிந்திக்கிறோம்.

ஆனால் சிந்தித்ததை எல்லாம் வெளியே சொல்லவோ,

அதை செயல்படுத்தவோ 

நமக்கு சுதந்திரம் இல்லை.

ஆசைப்பட உரிமை இருக்கிறது ஆனால் உரிமையை நடைமுறை படுத்த சுதந்திரம் இல்லை.

துடுப்பு இல்லாமல் கடலில் விடப்பட்ட படகு

எப்படி கடல் அலைகளாலும் ,வீசும் காற்று களாலும் அவை இஸ்டப்பட்ட இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறதோ

அதே போல்    நமது சூழ்நிலைதான் நமது அனுபவங்களைத்  தீர்மானிக்கிறது.

இப்படித்தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் நமது வாழ்வில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட முக்கிய நிலையில் நின்று கொண்டு கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தால் நமக்கு ஒரு உண்மை புரியும்.

நமது எதிர்கால ஆன்மீக நன்மை ஒன்றையே நோக்கமாகக் கொண்டு,

நாம் நமது ஆன்மீகப் பாதையில் சரியாக நடப்பற்காக,

ஆங்காங்கே brake போட்டு,

சில சமயங்களில் நமது விருப்பத்திற்கு மாறக.

நம்மை left, right என்று திருப்பி
வழிநடத்துபவர் நம்மை படைத்து பராமரித்து வரும் நமது கடவுளே என்ற உண்மை புரியும்.

நமது செயல் சுதந்திரத்தில் குறுக்கிடாமலேயே,

நாம் தப்பு செய்யும் போதும் அதை திருத்தி,

நமது தவறுகளிலிருந்தும் நன்மையை வரவழைத்து,

வாத்தியார் அடிக்கிறது மாதிரி அடித்து,

அம்மா அரவணைப்பது போல் அரவணைத்து

நமக்கு உள்ளே இருந்து செயல்பட்டுக் கொண்டிருப்பவர் அவர்தான்.

இதில் பிரமிக்க வைக்கும் விஷயம் என்னவென்றால்,

ஒரு சூழ்நிலையில் பலர் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை இருக்கும்,

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும்.

நம்மை வழி நடத்துவது போலவே அவர்களையும் அவர்தான் வழி நடத்துகிறார்.

ஒரே சூழ்நிலையில்  பலரை
வழி நடத்தும் போது

ஒரு முக்கியமான காரண காரிய (Cause and effect) தத்துவத்தை இறைவன் பயன்படுத்துகிறார்.

ஒரே காரணம் பலருக்கும் அவரவருக்கு வேண்டிய விளைவுகளை ஏற்படுத்தும் படி கடவுள் பார்த்துக்கொள்வார்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் நமக்கு தோல்வியை கொடுத்து Brake போட வேண்டும் என்பது இறைவன் திட்டம் என்று வைத்துக் கொள்வோம்.

அதே காரணம் இறைவனது திட்டத்தால் இன்னொருவருக்கு வெற்றியை கொடுக்கும்.

கருத்தைப் புரிய வைக்க ஒரு கற்பனை:

மண்பாண்டம் செய்பவர் ஒருவரும், துணி வெளுப்பதையே தொழிலாகக் கொண்ட ஒருவரும் அருகருகே வசித்து வரும் நண்பர்கள்.

தொழில் வெவ்வேறாயினும்
ஆன்மீகப்பயணம் ஒன்றே.

மண்பாண்டம் செய்பவர் செய்த மண்பாண்டங்களை வெயிலில் காயவைத்திருக்கிறார்.

இறைவன் திட்டப்படி,

குயவனுக்கு ஒரு brake போடவேண்டும்.

வண்ணானுக்கு உற்சாகம் கொடுக்க வேண்டும்.

இரண்டுமே அவரவர் ஆன்மீக  நன்மைக்குதான்.

கடவுள் என்ன செய்திருப்பார்?

ஒரு கற்பனைதான்.

ஏழு நாட்கள் மழையைக் கொடுத்திருப்பார்.

குயவனது  பானைகள் உடைந்திருக்கும்.

வண்ணானுக்கு வெளுக்க தண்ணீர் கிடைத்திருக்கும்.

ஆன்மீக வாழ்வை பொருத்தமட்டில்

தோல்வியும் நன்மைக்கே, வெற்றியும் நன்மைக்கே.

ஒரே கடவுள் கோடானுகோடி

மக்களை வழிநடத்தும் போது

ஒரே காரணம் ஒவ்வொருவர் வாழ்விலும் வித்தியாசமான விளைவுகளை ஏற்படுத்தி

ஒவ்வொருவர் வாழ்விலும்

நன்மையில் முடிய வேண்டும் என்றால்

அது சர்வ வல்லவர் ஆகிய கடவுளால் மட்டுமே முடியும்.

நமது அனுபவங்கள் நமது கட்டுப்பாட்டிற்குள் இல்லாவிட்டாலும்

அவை எல்லாம் நமது நித்திய நோக்கத்தை அடையவே இறைவனால்  தீர்மானிக்கப் படுகின்றன.

புனித அந்தோனியார் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்.

அவர் நிறைய புதுமைகள் செய்ததைக் கவனித்துக் கொண்டிருந்த அவர் சபைத் தலைவர் அவரிடம்,

"சுவாமி, இனிமேல் நீங்கள் ஒரு நாளைக்கு 13 புதுமைகளுக்கு  மேல் செய்யக்கூடாது " என்றார்.

அந்தோனியாரும், "அப்படியே செய்கிறேன், சுவாமி"  என்று கூறினார்.

தங்களுக்கு விருப்பம் உண்டோ இல்லையோ, சபைத் தலைவருக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

இது ஒவ்வொரு துறவியின் கடமை.

ஒரு நாள் மாலையில் அந்தோனியார் தெரு வழியே நடந்து போய்க் கொண்டிருந்தபோது,

ஒரு நான்கு மாடிக் கட்டிடத்தின் உச்சியிலிருந்து ஒருவன் கால் தடுமாறிக் கீழே விழுந்து சொண்டிருந்தான்.

தற்செயலாக அந்தோனியார் அதைப் பார்த்துவிட்டார்.

அவனைக் காப்பாற்ற எண்ணி கையை மேல் நோக்கி உயர்த்தினார்.

விழுந்து கொண்டிருந்தவன் அந்தரத்தில் நின்று விட்டான்.

அப்போதுதான் அந்தோனியாருக்கு ஞாபகத்திற்கு வந்தது,

அதுதான் அன்றைக்கு 13வது புதுமை.

அன்றைக்கு அவனைப் புதுமை செய்து கீழே கொண்டு வர முடியாது.

அந்தோனியாருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

கையைப் பிசைந்து கொண்டு நின்றார்.

மக்கள் கூட்டம் கூடிவிட்டது.

மக்கள் அந்தரத்தில் நின்று கொண்டிருந்தவனையும், அந்தோனியாரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தலைவரின் உத்தரவை மக்களிடம் சொல்லவும் முடியாது.

தற்செயலாக சபைத் தலைவர் அந்தப் பக்கம் வந்தார்.

மக்கள் கூட்டத்தையும், அந்தோனியாரையும் பார்த்தார்.

அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

"சுவாமி, என்ன விஷயம்?"

அந்தோனியார் மேலே கை காண்பித்து, விஷயத்தைச் சொன்னார்.

"அவர் தரையிறங்க இன்று புதுமை செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன்."

சபைத் தலைவருக்கு சிரிப்பு வந்தது.

"உங்கள் கீழ்ப்படிதலைப் பாராட்டுகிறேன்.

இன்றிலிருந்து  கோடி புதுமைகள் வேண்டுமானாலும் செய்யலாம்.

அதற்கு மேலேயும் செய்யலாம்.

உங்களுக்கு அனுமதி கொடுக்கிறேன்."

அந்தோணியார் முழங்கால் படியிட்டு   சபை தலைவரின்  காலை முத்தினார்.

பிறகு எழுந்து, வானத்தை அண்ணாந்து பார்த்து கையசைத்தார்.

அந்தரத்தில் நின்றவன் பத்திரமாகத் தரையிறங்கினான்.

அந்தோனியாருக்கு நன்றி சொன்னான்.

கூட்டத்தினர்,

"கோடி அற்புதர் வாழ்க" என்று வாழ்த்தினார்கள்.

அப்பெயர் இன்றும் தொடர்கிறது.

இறைவன் மீது பாரத்தை போட்டுவிட்டு சபைத் தலைவருக்கு கீழ்ப்படிந்தவர் புனித அந்தோனியார்.

நாம் நினைக்கிற படி  நடக்கிறதோ, இல்லையோ,

நமக்கு கிடைப்பது வெற்றியோ, தோல்வியோ

எல்லாவற்றையும் இறைவனது பாதத்தில் சமர்ப்பித்து விட்டு,

அவரது கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடந்தால்

நமக்கு விண்ணக வாழ்வு உறுதி.

லூர்து செல்வம்.

Saturday, November 28, 2020

*எல்லாம் இயேசுவே,எனக்கு எல்லாம் இயேசுவே* (தொடர்ச்சி)

http://lrdselvam.blogspot.com/2020/11/blog-post_97.html

*எல்லாம் இயேசுவே,
எனக்கு எல்லாம் இயேசுவே*
(தொடர்ச்சி)


இயேசு துவக்கமும், முடிவும் இன்றி, எப்போதும் நிகழ்காலத்திலேயே (Ever present) வாழ்ந்து கொண்டிருக்கும்
சர்வ ஞானம் உள்ள கடவுள்.

அனுபவம் (Experience) மனிதருக்கு மட்டுமே உரியது.

நாம்தான் புதுப்புது அனுபவங்களிலிருந்து புதுப்புது பாடங்களைக் கற்கிறோம்.

கற்கும் பாடங்கள் நமது ஞானத்தை அதிகரிக்கின்றன.

சர்வ ஞானத்தோடு நித்தியமும் 
வாழ்ந்து கொண்டிருக்கும் கடவுளுக்கு அதிகரிப்பதற்கு எதுவும் இல்லை.

There is nothing to add to His wisdom.

புதுப்புது அனுபவங்களிலிருந்து புதுப்புது பாடங்களைக் கற்றுக் கொண்டிருக்கும் நாம் 

சில சமயங்களில் தவறான பாடங்களைக் கற்றுக் கொள்ள நேரிடுகிறது.

உதாரணத்திற்கு, சிலர் துன்பங்களிலிருந்து கடவுளை நெருங்க கற்றுக் கொள்கின்றனர். (சரி)

சிலர் கடவுளை விட்டு விலக கற்றுக் கொள்கின்றனர். (தவறு)

இறைவன் அவருக்கே உரிய நித்தியத்திலிருந்து கொண்டே,

நம்மைப் பாவத்திலிருந்து மீட்பதற்காக 

நமக்கென்றே படைக்கப்பட்ட காலத்திற்குள் நுழைந்து,

அதாவது 

நம்மைப் போல் மனிதனாக பிறந்து,

 தன்னுடைய மனித அனுபவத்தின் மூலம் 

நாம் எப்படி நமது அனுபவங்களிலிருந்து பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நமக்கு போதித்தார்.

தேவ சுபாவத்தில் இயேசு நித்தியர்,

மனித சுபாவத்தில் நம்மைப்போலவே துவக்கமும் முடிவும் உள்ளவர்.

நமது கால கணக்குக்குப்படி முதலாம் ஆண்டு பிறந்து 33 ஆண்டுகள் நிறைவுற்ற போது மரித்தார்.

33 ஆண்டுகளும் தனது சாதனைகள் மூலம்,

 அதாவது அனுபவங்களின் மூலம் போதித்தார்.

 இவ்வுலக வாழ்நாளின் போது அவரது வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிகழ்வும் நமக்கு ஒரு பல்கலைக்கழகம்.

தான் போதித்தவற்றை நடந்து காட்டியதால்தான், அவரால்

 "நானே வழி" 

என்று கூற முடிந்தது.

 அவரது மனித அனுபவங்களை நமது அனுபவங்களாக மாற்றும் போது அவை நமக்கு "இறை அனுபவங்கள்."

நாம் ஏழையாக பிறந்து ஏழையாக வாழ்வது ஒரு மனித அனுபவம்.

ஆனால் "எளிய மனத்தோர் பேறுபெற்றோர்" என்ற அவரது சொற்படி 

நமது ஏழ்மையான வாழ்க்கையை நாமே தேர்ந்தெடுத்து 

இறைவனுக்காக ஏழையாக வாழ்வது நம்முடைய "இறை அனுபவம்."

துன்பங்களை வேறு வழியில்லாமல் அனுபவிப்பது மனித அனுபவம்.

ஆனால் அவர் எப்படி நமக்காக,

 நமது மீட்பிற்காக,

 துன்பங்களை அனுபவித்தாரோ,

 அதே போல அவருக்காகவே நமது துன்பங்களை நாம் ஏற்றுக் கொள்வது இறை அனுபவம்.

இயேசு நமது பாவங்களுக்கு பரிகாரமாக துன்பங்களை அவரே தேர்ந்தெடுத்தார்.

நமக்கு வரும் துன்பங்களை நம்முடைய பாவங்களுக்குப் பரிகாரமாக ஏற்றுக் கொள்ளும்போது,

அவை நமது மீட்பிற்கு உதவும் இறை அனுபவங்களாக மாறுகின்றன.

இத்தகைய இறை அனுபவங்கள் தான் நாம் இயேசுவைப் போல எப்படி நேசிப்பது, எப்படி வாழ்வது என்பதை செயல் மூலம் போதிக்கின்றன.

"தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு எவனிடமும் இல்லை."
.அரு.15:13)

இது இயேசுவின் போதனை. 

அவர் போதித்தபடியே தனது உயிரை நமக்காக பலியாக ஒப்புக் கொடுத்தது அவருடைய சாதனை.

இதேபோன்ற சாதனைகளை உலகத்தை ஆள்கின்ற உலக அரசுகளால் காண்பிக்க முடியுமா?

மற்ற மனிதர்களின் அனுபவங்களைப் பார்த்து,

 மனிதர் பயப்படுகின்ற,

 வேதனை நிறைந்த, 

தாங்கள் விரும்பாத ஆனால் தவிர்க்கமுடியாத அனுபவம் மரணம்.

நாம் பிறந்தது எவ்வளவு உறுதியோ அவ்வளவு உறுதி நமது மரணமும்.

தனது மரண அனுபவத்தின் மூலம் 

தன்னை விசுவசிப்பவர்களின் மரண பயத்தை அறவே நீக்கி இருப்பவர் நமது அரசர் இயேசு.

விசுவசியாதவர்களுக்கு மரணம் இன்னும் பயப்படுவதற்கு உரியதுதான்.


ஆனால் விசுவசிப்பவர்களுக்கு மரணம் விண்ணக வீட்டின் நுழைவாயில்.

இவ்வுலக துன்பங்களின் முடிவு, நித்திய பேரின்பத்தின் ஆரம்பம்.

" சாவு வீழ்ந்தது, வெற்றி கிடைத்தது. சாவே, உன் வெற்றி எங்கே? சாவே, உன் கொடுக்கு எங்கே?" (1 கொரிந்.15:55)


இயேசுவின் மரணமும், உயிர்ப்பும் நமது மரண பயத்தை நீக்கிவிட்டன.

"இன்றே நீ என்னோடு வான்வீட்டில் இருப்பாய்"
(லூக். 23:43)

இது மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்த நல்ல கள்ளனுக்கு இயேசு கொடுத்த வாக்குறுதி.

அவன் பயப்படத் தேவையில்லை, எனெனில் மரித்த அன்றே அவன் இயேசுவுடன் விண்ணகத்தில் இருப்பான்.

நமது மரண பயத்தை நீக்கவே இயேசு இவ்வாறு கூறியிருக்கிறார்.

இயேசுவை விசுவசித்து விசுவாச வாழ்வில் ஒழுங்காக வாழ்பவன் மரணத்திற்கு அஞ்ச வேண்டியதில்லை.

ஏனெனில் அதன் வழியே விண்ணுலகம் சென்று விடுவான்.

" சாவு வீழ்ந்தது, வெற்றி கிடைத்தது. சாவே, உன் வெற்றி எங்கே? சாவே, உன் கொடுக்கு எங்கே?"

 நமது சாவு அனுபவத்தையே, 
 தன் அனுபவம் ஆக்கி, 

 நமது நிலை வாழ்வுக்கு வழியாக இயேசு மாற்றி விட்டார். 

நமது வாழ்வின் ஒவ்வொரு அனுபவத்தையும் இறை அனுபவமாக மாற்றவும்,

அதன் மூலம் நம்மோடு
 நிலை வாழ்வையும், அன்பையும் 

நம்மோடு பகிர்ந்து கொள்ளவும் அவரால் முடியும்.

உணவு உண்பது ஒரு சாதாரண மனித அனுபவம்.

இயேசு தன்னையே நமக்கு உணவாகத் தந்து அதை இறை அனுபவமாக மாற்றி விட்டார்.


"எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று தாரும்"

  என்று இறைத் தந்தையிடம் நாம் வேண்டும் போது திவ்ய நற்கருணை உணவும் அதில் அடங்கி இருக்கிறது.

பட்டினி கிடப்பது ஒரு மனித அனுபவம்.

40 நாட்கள் இயேசு பட்டினி இருந்ததின் மூலம் 

நமது பாவங்களுக்கு பரிகாரமாக பட்டினி இருப்பதை இறை அனுபவமாக மாற்றிவிட்டார்.

மனித அனுபவத்தில் நாம் நமது நண்பர்களாலும் உறவினர்களாலும் கைவிடப்பட்டு தனியே தத்தளிக்கும் அனுபவங்கள் உண்டு.

அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் நம்மோடு இயேசு இருக்கிறார் என்பதையே நமக்கு உணர்த்த அவரும் இத்தகைய அனுபவத்தில் பங்கேற்றிருக்கிறார்.

அவரது மூன்று வருட பொது வாழ்வின் போது அவரது நற்செய்தியை கேட்கவும் அவர் கையால் குணம் பெறவும் மக்கள் கூட்டம் அவரை சுற்றி எப்பொழுதும் இருந்து கொண்டே இருந்தது. அவர் சென்ற இடமெல்லாம் சென்றது.

ஆனால் பரிசேயர்களால் கைது செய்யப்பட்டு   

விசாரணை என்ற பெயரால் அவமானப்படுத்தப்பட்டு கொண்டிருந்தபோது

  அவருடைய சீடர்களும் அவரோடு இல்லை.

 அவரது வாயிலிருந்து நற்செய்தியைக் கேட்டவர்களும் அவரோடு இல்லை.

 அவரால் சுகம் பெற்றவர்களும் அவரோடு இல்லை.

எல்லா அவமானங்களையும் தனியாகவே தாங்கிக் கொண்டார்.

எல்லாம் நமக்காகவே.

கிறிஸ்மஸ் கொண்டாட புது உடை வாங்க பணம் இல்லையே என்று கவலைப்படுகிறோம்.

இயேசு நமக்காக, நமது பாவங்களுக்கு பரிகாரமாக, சிலுவையில் தொங்கும்போது அவருடைய உடலில் துணி ஏதும் இல்லை. 

அதற்காக அவர் கவலைப்பட்டது இல்லை. 

நமக்கு dress வாங்க முடியாவிட்டால் அதையும் ஆண்டவருக்கு காணிக்கையாக ஒப்புக் கொடுத்து விடுவோம்.


உடை இல்லாத யாருக்காவது நாம் புது உடை வாங்கிக் கொடுத்தால் அதை இயேசு மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வார்.

சிலுவையில் தொங்கி கொண்டிருந்தபோது நமது தாகத்திலும்கூட அவர் பங்கேற்று கொண்டார்.

இயேசு, "தாகமாயிருக்கிறது" என்றார்." (அரு. 19:28)

சுருக்கமாக சொல்லப்போனால் இயேசு நமக்காக மனிதனாக வாழ்ந்ததின் மூலம் 

இறைவனுக்காக வாழும் நமது வாழ்வையும் இறை அனுபவமாக மாற்றி விட்டார்.

இறைவனது மகிமைக்காக நாம் எதைச் செய்தாலும் அது இறை அனுபவம் தான்.

நமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் இயேசுவின் பங்கு இருக்கிறது.

இதை நாம் ஏற்றுக் கொண்டால்

 நமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் இயேசுவின் மகிமைக்காக ஏற்றுக்கொண்டு

 அவருக்கு காணிக்கையாக ஒப்புக் கொடுப்போம்.


நமது ஒவ்வொரு அனுபவத்தையும் இறை அனுபவமாக மாற்றி 

அதற்குரிய பரிசை இறையரசில் பெறுவோம்.


லூர்து செல்வம்.

"*எல்லாம் இயேசுவே,எனக்கு எல்லாம் இயேசுவே*"

http://lrdselvam.blogspot.com/2020/11/blog-post_28.html


"*எல்லாம் இயேசுவே,
எனக்கு எல்லாம் இயேசுவே*"



கோயிலும், சினிமா தியேட்டரும் அருகருகே உள்ளன.

சாயங்காலம் 6.30க்கு கோவிலில் திருப்பலி, தியேட்டரில் படம்.

சாயங்காலம் 5.45 மணிக்கு மக்கள் ரோடு வழியே சாரை சாரையாக நடந்து போகின்றனர்.

திருப்பலிக்கு போகிறவர்களும் சினிமாவிற்கு போகின்ற அவர்களும் கலந்து ரோடு வழியாக நடந்தே செல்கின்றனர்.

அவர்களுடைய நடையை
 வைத்தே யார் எங்கே போகின்றார்கள் என்பதை கண்டுபிடித்துக் கொள்ளலாம்.

வேகமாக, ஓட்டமும் நடையுமாகப் போகின்றவர்கள் சினிமாவுக்குப் போகின்றனர்.

சாதாரணமாகப் போகின்றவர்கள் திருப்பலிக்குப்
போகின்றனர்.

முழுப் படத்தையும் பார்த்து விட வேண்டுமென்று படப் பிரியர்களிடம் இருக்கும் ஆவல்,

முழுத் திருப்பலியிலும் கலந்து கொள்ள வேண்டிய
 நம்மவரிடம் இல்லை.

உலகியல் காரியங்களில் உலகோருக்கு இருக்கும் ஆர்வம்

ஆன்மீக காரியங்களில் ஆன்மீக வாதிகளிடம் இல்லை. 

ஞாயிறு திருப்பலி காணாமல் வியாபாரம் செய்யச் சென்றால் ஒரு இலட்சம் இலாபம் வரும் என்று யாராவது சொன்னால்,

திருப்பலியை மட்டுமல்ல, ஆண்டவரையே விட்டுவிட ரெடியாக இருக்கும் ஆட்கள் நிறைய இருக்கிறார்கள்.

கொள்கை அளவில் இயேசுவை மீட்பராக ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது.

இயேசுவை என்று வாழ்கிறோமோ,

 அன்றுதான் நாம் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட தகுதி உள்ளவர்கள் ஆவோம்.

உண்மையான விசுவாசி சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் கிறிஸ்தவனாக
வாழ்வான்.

உலகத்தவர்கள் வாயளவில், யாரைத் தலைவராத ஏற்றுக் கொண்டாலும்,

சிந்தனையிலும், செயலிலும் தங்களைத் தாங்களே தலைவராக ஏற்றுக் கொண்டு,

தங்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வாயளவுத் தலைவர்கள் தலையில் அணியும் குல்லா மாதிரி.

அப்பப்போ மாற்றிக் கொள்வார்கள்.

தங்களை மட்டும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.


நாம் கிறிஸ்துவையே நமது அரசராக ஏற்றுக் கொண்டிருக்கிறோம், நமது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும்.

அப்படியானால் நாம் வாழவேண்டியது கிறிஸ்துவுக்காக மட்டும் தான், இம்மியளவுகூட நமக்காக அல்ல.

நமது வாழ்க்கை அனுபவங்கள் கிறிஸ்துவின் வாழ்க்கை அனுபவங்களாக இருக்க வேண்டும்.

நமது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் நாம் கிறிஸ்துவாக வாழ வேண்டும்.

கிறிஸ்து நமது அரசர்.


ஆனால் அவரது அரசு இவ்வுலகைச் சார்ந்ததன்று.

இன்றைய ஜனநாயகத்திலும்கூட
அரசு என்றவுடன் நினைவுக்கு வருவது என்ன?

சட்டங்களை இயற்ற ஒரு சட்டமன்றம், (Legislature)

அவற்றை அமுல்படுத்த ஒரு அரசு இயந்திரம், (Executive)

சட்டங்களை மீறுபவர்களைத் தண்டிக்க நீதிமன்றம். (Judiciary)

உலக அரசில் முக்கியத்துவம் பெறுவது சட்டம், ஒழுங்கு.

ஆனால் இயேசுவின் இறையரசில் முக்கியத்துவம் பெறுவது அன்பு, அன்பு மட்டுமே.

மீட்பு அன்பிற்குக் கிடைக்கும் பரிசு.

இயேசுவின் அரசில் அன்பு மட்டும்தான் சட்டம்.

இயேசுவின் அன்பு மன்னிக்கும்,
தீர்ப்பிடாது.

"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே." (அரு.3:17)

"நான் உலகிற்குத் தீர்ப்பிட வரவில்லை, உலகை மீட்கவே வந்தேன்." (அரு. 12:47)

இயேசுவின் அரசில் வாழும் நாம் அன்பு செய்வதிலும், மன்னிப்பதிலும் இயேசுவாக வாழ வேண்டும்.

இயேசு இறைவன், அளவில்லாமல் அன்பு செய்பவர்.

நம்மால் அவரைப்போல் அளவில்லாமல் அன்பு செய்ய முடியாது.

ஆனால் நமது அன்பிற்கும், மன்னிப்புக்கும் நாம் எல்கை போடாமல் வாழலாமே.

நமது வாழ்வின் ஒவ்வொரு அனுபவமும் அன்பின் அனுபவமாக மட்டுமே இருக்க வேண்டும்.

 தேவைப்படுவோருக்கு உதவி செய்வது,

கஷ்டப்படுபவர்களுக்கு ஆறுதல் கூறுவது,

வெற்றி பெற்றவரைப் பாராட்டுவது,

தவறு செய்பவர்களை மன்னிப்பது 

போன்றவை நமது வாழ்வின் அனுபவங்களாக இருக்கவேண்டும்.

அன்பே உருவான நமது இயேசு ஆண்டவரின் வாழ்நாள் அனுபவங்கள் எல்லாம் அன்பின் அனுபவங்களே.

அவை நமது வாழ்விலும் நிகழும் போது நாம் இயேசுவாக வாழ்கிறோம் என்று மகிழ்ச்சியோடு கூறலாம்.

இவையெல்லாம் நமது விண்ணக பயணத்தின் போது நமக்கு ஏற்படும் ஆன்மீக அனுபவங்கள்.

இத்தகைய அனுபவங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நமது விண்ணக வாழ்வின் நித்திய அனுபவம் பேரின்ப மயமாக இருக்கும்.


இவ்வுலக அரசர்கள்,

 ஜனநாயகத்தில் ஆள்பவர்கள்,

 நம்மை நேரடியாக ஆள்வதில்லை.

 தாங்கள் இயற்றும் சட்டங்களின் மூலமாக ஆள்கின்றார்கள்.

 உண்மையில் தனிப்பட்ட முறையில் நாம் ஒவ்வொருவரும் யார் என்று நம்மை ஆள்பவர்களுக்குத் தெரியாது.

 அவர்கள் ஆளக்கூடிய நாட்டில் நாம் வாழ்வதால்தான் நம்மை ஆள்வதாகக் கூறுகிறோம்.


 ஆனால் நம்மை நேரடியாக அறிந்து அவர்கள் ஆள்வது இல்லை.


ஆனால் நமது அரசர் இயேசு சட்டங்களின் மூலம் நம்மை ஆள்வதில்லை.

 தானே நேரடியாக நம்மை ஆள்கிறார்.

ஆன்மீக வாழ்வின் சட்டம் அன்பு ஒன்றுதான் என்று ஏற்றுக் கொள்கிறோம்.

அதே சமயத்தில் அந்த அன்பு இயேசுதான் என்பதையும் ஏற்றுக் கொள்கிறோம்.

அதாவது இயேசு என்னும் அன்பு நமது வாழ்வில் சட்டம்.

ஆகவேதான் இயேசு நம்மை நேரடியாக ஆள்வதாக கூறுகிறோம்.


அரண்மனையில் தனியாக அமர்ந்து கொண்டு அல்ல,

நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் அமர்ந்து கொண்டு,

நம்மில் வாழ்வதன் மூலம் நம்மை ஆள்கிறார்.

அவர் நம்மில் வாழ்வதும், ஆள்வதும் ஒரே செயல்தான்.

அவர்தான் நமது வாழ்க்கை. 

Jesus is our life.

அவர்தான் நமது வாழ்க்கைப் பாதை.

Jesus is our way.

அவர்தான் நமக்கு எல்லாம்.

Jesus is our all.

"எல்லாம் இயேசுவே,

எனக்கு எல்லாம் இயேசுவே"

என்ற பாடல் வரிகள் நமது காதில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.


இயேசு அரசரை உலக அரசர்களோடு ஒப்பிட முடியாது.

அவர் தனித்துவமானவர்.
He is unique.

உலக அரசர்கள் வேறு, அவர்கள் ஆளும் நாடு வேறு.

அவர்கள் ஆள்வதற்காக ஆட்சியைக் கைப்பற்றியவர்கள்.


ஆனால் இயேசு தான் ஆளவேண்டிய குடிமக்களை அவரே படைத்தார்.

அவர்களை முழுச் சுதந்தரத்தோடு படைத்தார்.

அதாவது, அவரை அரசராக ஏற்றுக் கொள்வதற்கான முழுச்சுதந்தரத்தையும் அவரால் படைக்கப்பட்ட மக்களிடமே விட்டு விட்டார்.

சர்வவல்லவரான கடவுளையே நாம் நம்மை ஆளும் அரசராக ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

உலக அரசர்கள் தங்களால் 
கைப்பற்றப்பட்ட மக்களை அடக்கி ஆள்கின்றார்கள்.

இயேசு அரசரோ நம்மை அவரது சொந்த சகோதர, சகோதரிகளாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

அவரை அரசராக ஏற்றுக்கொண்ட நாம் எல்லோரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

நாம் அதிகாரத்தினால் இணைக்கப்பட்டவர்கள் அல்ல, அன்பினால் இணைக்கப் பட்டவர்கள்.

சர்வ வல்லவராகிய நம் அரசர் நம்மோடு மட்டுமல்ல , நாமாகவே வாழ்கிறார்.

நாமாக வாழ்வதற்காக கடவுளாகிய அவர் நம்மைப் போல் மனிதனாகப் பிறந்தது மட்டுமல்ல,

தன்னையே நமக்கு உணவாகத் தந்து, நம்மோடு ஒன்றித்து வாழ்கிறார்.

 அவரையே நமது ஆன்மீக உணவாக நாம் உண்பதால் 

அவரது உணர்வுகளும், நமது உணர்வுகளும் ஒன்றித்து விட்டன.

அவரையே உணவாக உட்கொள்ளும் நாம் ஒவ்வொருவரும் அவருடைய உணர்வுகளோடுதான் ஆன்மீக வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நமது ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் இவ்வுணர்வு வெளிப்பட வேண்டும்.

சுயநலம் கருதாமல் அனைவரையும் நேசிக்க வேண்டும்.

இயேசுவைப் போலவே நமக்கு வரும் துன்பங்களை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

Thursday, November 26, 2020

*கசப்பான மருந்து.*

http://lrdselvam.blogspot.com/2020/11/blog-post_26.html




        *கசப்பான மருந்து.*



" என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள் எங்கு திருப் பாடல் ஆசிரியர் கூறுகின்றாரே

அதன் பொருள் என்னவென்று எனக்கு விளங்கவே இல்லை.

யாருக்காவது நன்றி கூற வேண்டும் அவர் நமக்கு ஏதாவது நன்மை செய்திருக்க வேண்டும்.


நன்று என்று சொல்லிலிருந்து பிறந்ததுதான் நன்றி.

நடப்பது நன்றானால் தானாகவே நன்றி வரும்."


"கரெக்ட்.

என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள்.

அதாவது 

என்ன நேர்ந்தாலும் நன்றுதான்.

அதாவது

நமக்கு தீயது எதுவும் நடக்க முடியாது.

நல்லது மட்டும்தான் நடக்க முடியும்.

நல்லது நடந்தால் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம்.

என்ன நேர்ந்தாலும் அது நன்மையாகவே இருக்குமாகையால்

 நாம் என்ன நேர்ந்தாலும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம்."


"எதை வைத்து என்ன நேர்ந்தாலும் அது நன்மையாகவே இருக்கும் என்று கூறுகிறீர்கள்?"

"கடவுள்தான் உலகைப் படைத்தார்.

அவரே தாம் படைத்த எல்லாவற்றையும் நோக்கியபோது  
 அவை எல்லாமே மிகவும் நன்றாய் இருந்தன. 
( ஆதி.1:31)

"அப்போ பாவமும் நல்லதா?"

"பாவத்தைக் கடவுள் படைக்கவில்லை.

அது மனிதனுடைய product.


இறைவனால் நேர்வது எல்லாம் நல்லதே. ஆக இறைவனால் நமக்கு என்ன நேர்ந்தாலும் நாம் அவருக்கு நன்றி கூற வேண்டும்."

"அப்போ கொரோனா வைரஸ் வந்து உயிர்களை அள்ளிக் கொண்டு போகிறதே, அதற்கும் நன்றி கூற வேண்டுமா?"

"ஆமா."

"தெருவில் நின்று இதை 
சப்தமாகச் சொன்னால் அடிபடாமல் திரும்ப மாட்டீர்கள்.

என்னிடத்தில் சொல்வதுபோல் வேறு யாரிடமும் சொல்லி விடாதீர்கள்."

" அதுதான் திருப்பாடல் ஆசிரியர் ஏற்கனவே சொல்லிவிட்டாரே."

"அவர் 'கொரோனா வந்தாலும்' என்றா சொன்னார்?"

"என்ன நேர்ந்தாலும் என்பதில் அதுவும் அடக்கம்தானே!"

"நீங்கள் என்னதான் சொல்ல வருகிறீர்கள?"

" கொரோனா நம்மைப் போல் சுதந்திரமாக சிந்தித்து செயல்படும் ஒரு பிராணி அல்ல.

உண்மையில் அது ஒரு உயிரில்லாத வைரஸ்.

இறைவன் அனுமதியின்றி உலகிற்குள் அதுவாக வராது.

தன்னுடைய படைப்புகளுக்கு ஏதாவது நன்மைக்காக அன்றி இறைவன் எதையும் அனுமதிக்க மாட்டார்.

நாம் இறைவன் மீது வைத்திருக்கும் அசையாத விசுவாசத்தின் அடிப்படையில் தான் அவரது செயல்பாடுகளை நோக்க வேண்டும்.

அவரது நோக்கம் நமது நன்மைக்காகத்தான் என்பதை நாம் முழுமையாக விசுவாசித்தால் அவரது செயல்பாடுகளை எதிர்க்கேள்வி இன்றி ஏற்றுக் கொள்வோம்.

உங்களுக்கு விவசாயம் தெரியும் தானே?"

" தெரியுமா? நான் முழுநேர விவசாயி."

"கலப்பை, மண்வெட்டி, அரிவாள், களை கொத்தி ஆகியவற்றை பார்த்திருக்கிறீர்களா?"

"அவை இன்றி விவசாயமே செய்ய முடியாதே!

 ஆசிரியருக்கு புத்தகங்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு
இவை எனக்கு!"

"பூமித்தாயின் உடம்பில் கிணறு தோண்டுவீர். அது விடும் கண்ணீரைக் கொண்டு விபசாயம் செய்வீர்.

கலப்பை, மண்வெட்டி, அரிவாள், களை கொத்தி ஆகியவை பூமித்தாயின் உடம்பைக் காயப்படுத்தும் கருவிகள்....."


"சார் பொறுங்க. அவற்றைப் பயன்படுத்தி ஒன்றுக்கு நூறு உணவுப் பொருள் உற்பத்தி செய்வேன். அதைக் கொண்டுதான் மனுக்குலம்
 வாழ்கிறது"

"அதே மனுக்குலத்தின் நன்மைக்காகத்தான்  

 வைரஸ் உட்பட எல்லா எல்லா துன்பங்களையும் இறைவன் அனுமதிக்கிறார்.

டாக்டர் ஊசி குத்தும்போது வலிக்கத்தான் செய்யும்.

காய்ச்சல் குணமான உடனே மகிழ்ச்சி ஏற்படுமே!"

" நாம் அனுபவத்திலிருந்து பாடம் எதுவும் கற்றுக் கொள்கிறோம்.

காய்ச்சல் வரும்போது டாக்டரிடம் போகிறோம். அவர் ஊசி போடுகிறார்.

வலிக்கிறது. வலியைத் தாங்கிக்கொள்கிறோம்.

காய்ச்சல் சுகமாகிறது. ஆகவே காய்ச்சல் வந்தால் ஊசி போட்டால் சுகமாகும் என்ற அனுபவம் கிடைக்கிறது.

ஆனால் துன்பம் வருவது என்ன நன்மைக்கு என்று நமக்குத் தெரிவதில்லை.

ஆகவே அனுபவம் எதுவும் கிடைப்பதில்லை. நாமும் பாடம் எதுவும் கற்றுக் கொள்வதில்லை.

இப்போ உலகிற்குள் கொரோனா வந்தது என்ன நன்மைக்காக என்று நமக்குத் தெரிந்தால்தானே நாம் நன்றி கூறமுடியும்!"

"கடவுள் நம்மைப் படைத்து ஒவ்வொரு வினாடியும் பராமரித்து வருகிறார்.

அவர் நம் பொருட்டு செய்கின்ற அல்லது அனுமதிக்கின்ற ஒவ்வொரு காரியமும் நம்மைப் பராமரிப்பதின் ஒரு பகுதிதான்.

அடுத்த வினாடி என்ன நடக்கும் என்று நமக்குத் தெரியாது.

ஆனால் கடவுளுக்கு நமது முக்காலமும் தெரியும். ஏனெனில எல்லாம் அவர் திட்டப்படிதான் நடக்கின்றது."

"பாவம் கூடவா?"

"அவர் அனுமதிக்காவிட்டால் நம்மால் பாவம் கூட செய்ய முடியாது. அதனால்தான் அவரை ஆதிகாரணர் (Primary causy) என்கிறோம்."

"நீங்கள் சொல்வது புரியவில்லை. ஆசிரியர் மாணவனுக்கு வீட்டிற்குச் செல்ல அனுமதி கொடுத்த பின்,

அவன் வீட்டிற்குச் சென்றதை எப்படி தப்பு என்று சொல்லலாம்?"

"Gate ல watchman நிற்கிறான். அவனது அனுமதி இல்லாமல் உள்ளே நுழைய முடியாது.

ஆனால் நீங்கள் அவன் முன்னாலேயே, அவனிடம் கேட்காமலேயே உள்ளே போகிறீர்கள். அவன் உங்களைத் தடுக்கவில்லை. 

He has not given you active permission, by saying "Go.''

But he has given you passive
permission by not stopping you from going.

கடவுள் மனிதனுக்கு பரிபூரண சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறார்.

நாம் நமது பரிபூரண சுதந்திரத்தைப் பயன்படுத்தி அவருடைய கட்டளைக்கு கீழ்படிய வேண்டும்.

நமது பரிபூரண சுதந்திரத்தைப் 
 பயன்படுத்தி பாவம் செய்யும்போது அவர் தடுப்பதில்லை.  

செய்யவிடாமல் தடுத்திருந்தால் சுதந்தரம் என்ற வார்த்தைக்கே பொருள் இல்லையே!

நாம் நமது பரிபூரண சுதந்திரத்தைச் 

சுதந்திரத்தோடு

 அதைத் தந்த இறைவனிடமே ஒப்படைத்துவிட்டு அவரது அடிமையாக மாறி விட வேண்டும்.

இதைத்தான் அன்னை மரியாள் செய்தாள்.

அப்பா நம்மிடம் மாதத் துவக்கத்தில் செலவிற்காக 10000 ரூபாய் தருவதாக வைத்துக் கொள்வோம்.

 ரூபாயை வாங்கிக்கொண்டு இஸ்டம் போல் செலவழிக்கவும் செய்யலாம்.

அல்லது ரூபாயை அப்பாவிடமே கொடுத்துவிட்டு,

"எனக்காக நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும்போது நீங்களே.
எனக்காக செலவழியுங்கள்."
என்று சொல்லவும் செய்யலாம்.

நமது முதல் பெற்றோர் தங்கள் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி 

இறைவனது கட்டளையை மீறினார்கள்.

 இறைவன் அதை தடுக்கவில்லை.

இதைத்தான் "அவர் அனுமதிக்காவிட்டால் நம்மால் பாவம் கூட செய்ய முடியாது" என்று சொன்னேன்."

''எதற்கு இந்த வேண்டாத வேலை. 

பாவமே செய்யமுடியாத அளவிற்கு நம்மை படைத்திருந்தால்

 அவர் நமக்காக நம்மைப் போல் பிறந்து, பாடுகள் பட்டிருக்க வேண்டாமே!"

"உன்னைப் படைக்கும்போது இதை அவரிடம் சொல்லியிருக்கலாமே!"

"அப்போதுதான் நானே இல்லையே!"

"அப்போ பேசாம வாயைப் பொத்து. 

எதைப்பற்றியாவது பேசிக்கொண்டிருக்கும்போது திசை திருப்பாமல் இருக்க வேண்டும்.

நாம் பேச ஆரம்பித்தது 

இறைவனுக்கு நன்றி கூறவேண்டிய அவசியத்தையும் இறை பராமரிப்பையும் பற்றி."


"சரி, சரி. நான் இனிமேல் குறிக்கிட மாட்டேன். சொல்ல வந்ததை மட்டும் சொல்லவும்."

"கொரோனா போன்ற துன்பங்கள் வருவதற்கும் ஏன் நன்றி கூற வேண்டும் என்று கேட்டீர்கள்.

நாம் நன்றி கூற வேண்டியது இறைவன் நம்மையே படைத்து பராமரித்து வருவதற்காகத்தான்.

நாம் படைக்கப்பட்டது படைக்கப்பட்ட பின் தான் நமக்குத் தெரியும்.

படைக்கப்பட்டதன் நோக்கமும் 
கடவுள் நமக்கு இலவச அன்பளிப்பாகத் தந்த விசுவாசத்தின் மூலம் அவரே நமக்கு தெரியப்படுத்திய பின்தான் தெரியும். 

நமது நோக்கத்தை எப்படி அடைவது என்று நமக்குத் தெரியாது.

அதையும் விசுவாசத்தில் அடிப்படையில்தான் ஆண்டவர் நமக்கு தெரிவித்திருக்கிறார்.

விண்ணக ராஜ்யமாகிய நமது நோக்கத்தை அடைய என்னென்ன செய்ய வேண்டும் என்பதை நமது ஆண்டவராகிய இயேசு நமக்கு அறிவித்திருக்கிறார்.

நாம் ஒரு புதிய ஊருக்குப் போகும்போது நமக்கு வழி தெரிந்தால் மட்டும் போதாது.

நம்மோடு இடத்தை நன்கு அறிந்த ஒரு வழிகாட்டியும் (Guide) வர வேண்டும்.

வழிகாட்டியாகவும் இயேசுவே நம்மோடு வருகிறார்.

அவர் நமது ஆன்மீக வழிகாட்டி, ஆகையால் நமது விசுவாச கண்ணால் மட்டுமே அவரை உணர முடியும்.

நமது வழிகாட்டியாக இருந்து நம்மை வழி நடத்தி செல்வதையே நாம் இறை பராமரிப்பு என்கிறோம்.

இறைவன் எப்போதும் 
நம்முடனேயே இருப்பதால், நம் வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் அவரே நம்மை மராமரித்து வழிநடத்துகிறார்.

நாம் தற்செயல்கள் நிகழ்ச்சிகள் என்று நினைப்பவை கூட 
நம்மை பராமரிப்பதற்காக இறைவன் திட்டத்தினால் நடப்பவைதான். 

நமக்கு வரும் நோய் நொடிகளும், நாம் விரும்பாத நிகழ்வுகளும், நாம் சந்திக்கும் தோல்விகளும்கூட நமது பராமரிப்பை சார்ந்த நிகழ்வுகளே.

எல்லாம் நன்மைக்கே என்ற விசுவாச உணர்வோடு நடப்பவற்றை எல்லாம் 

நாம் இறைவனுக்காக ஏற்றுக்கொள்வதுதான் அவரது பராமரிப்பை ஏற்றுக் கொள்வதாகும்.

 மனுக்குலம் தவறான பாதையில் செல்லும் போது அதை திருத்தி நல்வழி படுத்துவதற்காக இறைவன் பேரிடர்களை அனுமதிக்கிறார்.

மனுக்குலம் தன் தவறுகளை ஆராய்ந்து பார்த்து கண்டுபிடித்து அவைகளைத் திருத்த வேண்டுமே தவிர பேரிடர்களைக் குறை சொல்லிக் கொண்டிருக்க கூடாது.

வைரஸினால் லட்சக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம்,

 ஆனால் போர்களினால் பாதிக்கப்பட்டோர் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள்.

அரசுகள் விஞ்ஞானத்தை அழிவுப்பாதைக்கு பயன்படுத்துவதை விட்டுவிட்டு

 ஆக்கபூர்வமான செயல்களுக்காகப் பயன்படுத்தினால் மனுக்குலம் வளமாக வாழும்.

நாடுகள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை விட்டு விட்டு, ஒற்றுமையாக வாழ ஆரம்பித்தால் கொரோனா காணாமல் போய்விடும்.    

நாம் குணம் அடைவதற்காக மருந்து தரும் மருத்துவருக்கு நாம் நன்றி கூற வேண்டாமா?

மனுக்குலத்திற்கு வரும் இடர்கள், அது திருந்துவதற்காக இறைவன் தரும் மருந்துதான்.

அதற்காக இறைவனுக்கு நன்றி கூற வேண்டாமா?"


"இப்போ புரிந்துகொண்டேன்.

 கசப்பான மருந்து தான். இருந்தாலும் மருத்துவருக்கு நன்றி கூற வேண்டியது நமது கடமை."

லூர்து செல்வம்.

Wednesday, November 25, 2020

*இனிமையான வேலை.*(தொடர்ச்சி)

*இனிமையான வேலை.*
(தொடர்ச்சி)


"ஹலோ! சார். வணக்கம்."

"வணக்கம். வாங்க. உட்காருங்க."

"உலகிலேயே மிக இனிமையான வேலை எது?

 என்று நீங்களே கேள்வி  கேட்டுக்கொண்டு 

"நேசிப்பது, அன்பு செய்வது."

நீங்களே பதிலும் சொல்லி இருக்கிறீர்கள்.

 எப்போதாவது யாரையாவது நேசித்திருக்கிறீர்களா?"

"ஏன் இந்த சந்தேகம்?"

"யாரையாவது நேசித்திருந்தால் அப்படி சொல்லியிருக்க மாட்டீர்கள்.

நான் ஒரு பெண்ணை காதலித்து விட்டு அவளை திருமணம் செய்ய நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்."


"ஹலோ! நீங்கள் பட்டபாடு உங்களுக்குத்தான் தெரியும் இதில் அதிசயம் என்ன இருக்கிறது?"


"நான் எனது பெற்றோரை மிகவும் நேசிக்கிறேன்.

 இப்பொழுது என்னுடைய மனைவியிடமிருந்து அவர்களை காப்பாற்ற 

நான் படும் பாடு எனக்கு மட்டுமே தெரியும்!"

"அதற்கு நான் என்ன செய்ய முடியும்?"

"நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது. 

நேசிப்பதால் ஏற்படும் கஷ்டங்களை 

நேசிப்பவர்களால்தான்   புரிந்து கொள்ள முடியும்."

"நேசிப்பதால் கஷ்டங்கள் வராது என்று நான் ஒருபோதும் சொன்னதில்லையே!

 நேசிப்பது எளியது, இனிமையானது என்று மட்டும் தானே சொன்னேன்."

"கஷ்டங்கள் எப்படி சார் இனிமையாக இருக்க முடியும்?"


"ஈன்ற பொழுதில் பெரிது உவக்கும்" என்ற சொற்றொடரை எங்கேயாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?"

"வள்ளுவர் சொன்னது."

"பொருள்?"

"முழுக் குரளுக்கும் பொருள் சொல்கிறேன்.

தாய் தனது குழந்தையைப் பெறும்போது பெற்ற இன்பத்தை விட 

அவனை சான்றோன் என்று மற்றவர்கள் சொல்லும்போது அதிக இன்பம் அடைவாள்." 

"முதல் பாதியைச் சொல்லுங்கள்."

"தாய் தனது குழந்தையை பெறும்போது பெற்ற இன்பத்தை விட "

"பேருகால வேதனையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?"

"எனது  மனைவி பட்ட வேதனையை நான் என் கண்ணாலேயே பார்த்திருக்கிறேன்."

"வள்ளுவர் என்ன சொன்னார்?"

"தாய் தனது குழந்தையை பெறும்போது பெற்ற இன்பத்தை விட."

"நீங்கள் உங்கள் மனைவி குழந்தை பெறும்போது வேதனைப் பட்டதாக சொல்கிறீர்கள்.

 ஆனால் வள்ளுவர் குழந்தையை பெறும்போது தாய் இன்பம்  அடைவதாக சொல்கிறார். வள்ளுவர் சொல்வது பொய்யா?"

"வள்ளுவர் கூறுவதும் உண்மை. நான் கூறுவதும் உண்மை."

"அப்படியானால் வேதனையில் இன்பம் இருக்கிறது. ஒத்துக் கொள்கிறீர்களா?"

"என்ன சொல்ல வருகிறீர்கள்?"

"கடவுள் தனது அளவற்ற அன்பின் காரணமாக நம்மை படைத்தார்.

தன்னை அன்பு செய்யவும்,

 அதன் பயனாக தன்னோடு நித்திய பேரின்பத்தில் பங்கு கொள்ளவும் நம்மை படைத்தார்.

ஆனால் நாம் அவரை மறந்து அவருக்கு விரோதமாக பாவம் செய்தோம்.

நம்மை பாவத்திலிருந்து மீட்பதற்காக அவரே மனிதனாக பிறந்து, பாடுகள் பட்டு, நமக்காக மரித்து நமது பாவத்திற்கான பரிகாரத்தைச் செய்தார்."

"நானும் அதைத்தானே சொல்கிறேன். 

அவர் பட்ட பாடுகளுக்கும், வேதனைகளுக்கும் ,
அவரது மரணத்துக்கும் காரணமானது அவருடைய அன்பு தானே!

அன்பு செய்கிறவர்கள் படும்பாடு எனக்கு மட்டும்தான் தெரியும்."

" சொல்லி முடிக்கும் முன் இடையில் பாயக் கூடாது.

இயேசு துன்பங்களை அவராக ஏற்றுக் கொண்டாரா?

 அல்லது வேறு வழியில்லாமல் பட்டாரா?"

"அவராக ஏற்றுக் கொண்டார்."

"எதற்காக  அவராக ஏற்றுக் கொண்டார்?"

"நமக்கு நித்திய பேரின்பத்தை பெற்றுத்தர."

"உங்கள்  மனைவி ஏன் பேறுகால வேதனையை ஏற்றுக்கொண்டார்கள்?"

".குழந்தை என்ற இன்பத்தை பெற."

"அதாவது இன்பத்தைப் பெற வேதனை.

அதாவது வேதனை இல்லாவிட்டால் இன்பம் இல்லை.

அதாவது வேதனைப்  பட்டால் இன்பம் கிடைக்கும்.

அதாவது வேதனை தான் இன்பம்.


அதாவது அன்பின் நிமித்தம் படும் வேதனை தான் இன்பம்.

Very simple logic."

".இப்போ புரிகிறது."


"என்ன புரிகிறது?"

"இறைவன் மீது கொண்டுள்ள அன்பிற்காக நாம் என்ன துன்பப் பட்டாலும் அது இன்பம் தான்."

"Correct. நமது சிந்தனை, சொல், செயல் அனைத்திலும் இறை அன்பு இருந்தால் 

நமது அன்பை செயல்படுத்தும்போது 

என்ன துன்பங்கள் வந்தாலும்

 அவை நமக்கு நித்திய பேரின்பத்தை ஈட்டித் தருவதால்

 அவற்றை ஆசீர்வாதமாக மகிழ்ச்சியோடு  ஏற்றுக் கொள்வோம்.

It is a blessing to suffer for the love of God."

"உண்மைதான்.  அன்பின் நிமித்தம் நாம் படும் கஷ்டங்கள் கஷ்டங்களாகவே தெரியாது.

எனது மனைவி சுத்தமான மஞ்சள் பாறைக் கருவாட்டிற்கு ஆசைப்பட்டாள்.

அதற்காக 25 + 25 கி.மீ சைக்கிளிலேயே போய் வாங்கிவந்தேன்."

"Very good. இயேசுவின் மீது கொண்ட அன்பின் காரணமாக எத்தனை மறைசாட்சிகள் மகிழ்ச்சியுடன் தங்களது இரத்தத்தைச் சிந்தி உயிரையும் கொடுத்திருக்கிறார்கள்! 

அன்பு இனிமையானது. 

அதன் இனிமையை சுவைப்பதற்காக 

எவ்வளவு கசப்பான அனுபவங்களையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்பவர்கள்தான்

 இறைவனை உண்மையாகவே அன்பு செய்கிறவர்கள்."

"ஒரு சிறு சந்தேகம்.

 பணத்தை நேசிப்பவர்களும் அதை ஈட்டுவதற்காக என்ன சங்கடம் வந்தாலும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறார்களே.

 பணம் வந்ததும் அதை எண்ணி பார்ப்பதிலேயே இன்பம் காண்கிறார்களே.


அவர்கள் வாழும் வசதியான வாழ்க்கையிலும் இன்பம் காண்கிறார்களே.

 அவர்களைப் பொறுத்தமட்டிலும் கூட வேதனை என்பது இன்பம் தானே."

"உண்மைதான். 

பாலைவனத்தில் நடப்பவன் தண்ணீரைக் கண்டு மகிழ்வதற்கும்,

 கானல் நீரைக் கண்டு மகிழ்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

தண்ணீர் உண்மையான நீர்.
 தாகம் தணிக்க உதவும்.

கானல் நீர் தண்ணீரைப் போல் தோன்றும், ஆனால் தண்ணீர் அல்ல.

ஆன்மீக இன்பம்தான் உண்மையான இன்பம். ஏனெனில் அது நிரந்தரமானது.

உலக இன்பம் நிரந்தரமானது அல்ல. உலக சிற்றின்பத்தின்   எதிர்கால விளைவு நிரந்தர துன்பம்.

  ஆன்மீகத்தில் பேரின்பத்தை அடைவதற்காக இவ்வுலகில் துன்பப்படுகிறோம்.

ஆனால் உலகியலில் நித்திய பேரிடரை அடைவதற்காக இவ்வுலகில் சிற்றின்பத்தை அனுபவிக்கிறார்கள்.


நிரந்தரமில்லாத துன்பத்திலிருந்து நிரந்தரமான பேரின்பம் பிறப்பது ஆன்மீகம்.


நிரந்தரமில்லாத சிற்றின்பத்தில் இருந்து நிரந்தரமான பெரும் துன்பம் பிறப்பது லௌகீகம்.


முடிவில்லாத காலம்  இன்பம் அனுபவிக்க வாழ்நாள் முழுவதும் துன்பப் படலாம்.

 ஆனால்

முடிவில்லாத காலம்  துன்பம் அனுபவிக்க வாழ்நாள் முழுவதும் இன்பம் அனுபவித்து என்ன பயன்?"

"அன்பு செயல் வடிவம் பெற வேண்டும் என்றால் அது மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது தானே முடியும்?

கையில் பணம் இல்லாதவர்களை விட நிறைய பணம் வைத்திருப்பவர்கள் தானே பிறருக்கு தாராளமாக உதவி செய்ய முடியும்.


ஒரு கோவில் கட்டுவதாக இருந்தால் கூட பணம் வைத்திருப்பவர்கள் தானே நிறைய கொடுக்கிறார்கள்.

முழுமையான ஆன்மீகவாதிகள் பணத்தைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். அவர்களால் மற்றவர்களுக்கு எப்படி உதவ முடியும்?"

"கடவுள் அளவைப் (Quantity) பார்ப்பதில்லை.

தரத்தைப் (Quality) பார்க்கிறார்.

உலகப் பார்வையில் அதிகமாகக் கொடுப்போர் பாராட்டுக்கு உரியவர்கள்.


ஆனால் கடவுள் பார்வையில் உதவி செய்பவர்களிடம் உள்ள அன்பின் அளவுதான் உதவியின் தரத்தைத் தீர்மானிக்கிறது.

நம்மால் இயன்ற அளவு மிகுந்த அன்போடு செய்யும் உதவிதான் இறைவனின் பாராட்டுக்கு உரியது.

அள்ளி அள்ளி காணிக்கை போட்ட பணக்காரர்களைப் பாராட்டாமல்,

 பக்தி மிகுதியால்    இரண்டு செப்பு காசு காணிக்கை போட்ட  ஏழை விதவையைத்தான் இயேசு பாராட்டினார்."

"இயேசு நாம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது நம்முடைய *அன்புச் செயல்களை* தான்.

அன்புச் செயல்களால் மட்டுமே உண்மையான மகிழ்ச்சியைத் தரமுடியும்.

ஏனெனில் அன்பு இனியது.

அன்பிற்காகப் படும் பாடுகளும் இனிமையானவையே."

லூர்து செல்வம்.

Tuesday, November 24, 2020

* இனிமையான வேலை.*

http://lrdselvam.blogspot.com/2020/11/blog-post_24.html


     *இனிமையான வேலை.*


"Sir, தினமும் School க்கு எப்படிப் போறீங்க?"

"சைக்கிளில்."

"எப்போ புறப்படுவிங்க?"

"காலை 7.30க்கு."

"எத்தனை மணிக்கு School ல இருப்பீங்க?"

"8 மணிக்கு."


" சார் , திருநெல்வேலிக்கு ஒரு டிக்கட்."

"25 ரூபாய்."

"எத்தனை மணிக்கு திருநெல்வேலிக்குப் போய்ச் சேர்வோம்?"

"இப்போ மணி என்ன?"

"10."

" 11.30க்குப் போயிடுவோம்."


"ஹலோ! இந்த bus ல போகவேண்டாம்."

"ஏன்?"

"இதுல போனா ஒன்றரை மணி நேரம் ஆகும். அடுத்து Express வருகிறது. அது one hour ல போயிடும்."

"சரி, அப்போ அதிலேயே போவோம்."


எந்த பயணத்தை ஆரம்பித்தாலும்

எத்தனை மணிக்கு புறப்படுவோம்?

எவ்வளவு நேரம் பிரயாணம்?

 எப்போ இறங்குவோம்?

என்ற மூன்று கேள்விகளுக்கும் விலை தெரிஞ்சுதான் ஆரம்பிப்போம்.

 பேருந்தோ, புகை வண்டியோ, ஆகாய விமானமோ 

ஏறிய பின் பிரயாண நேரம் அதிகமானால்,

" தெரியாத்தனமா இதிலே ஏறி விட்டோமே,

 நன்றாக விசாரித்துவிட்டு ஏறியிருக்கலாம்"

 என்று நமக்கு நாமே புத்திமதி சொல்லிக் கொள்வோம்.

இது மண்ணக வாழ்வில் பிரயாணம்.

நமது விண்ணகப் பயணம் பற்றிய அணுகுமுறை எதிர்மாறானது.   

நமது பிறப்பின்போது நமது விண்ணகப் பயணம் ஆரம்பிக்கின்றது.

குழந்தை பிறந்தவுடன் அதைப் பார்க்கச் செல்லும் ஒருவர் அதன் தந்தையிடம்,

"குழந்தை எப்போது போய்ச் சேரும்?"

 என்று கேட்டால் அடிபடாமல் திரும்ப மாட்டார்!

அமெரிக்காவில் flight ஏறும் ஒருவர்,

"எப்போது இந்தியாவுக்கு போய் சேருவோம்?"

என்று கேட்டால் பதில் கூறுவார்கள்.

உலகத்தில் பயணத்தை ஆரம்பித்த ஒருவரிடம் போய்,

"விண்ணகத்திற்கு எப்போது போய்ச் சேருவீர்கள்?"

 என்று கேட்டால் அவருக்கு மட்டும் ஏன் கோபம் வருகிறது?

இறை ஞானம் உள்ளவர்க்குக் கோபம் வராது, ஆனால், பதிலும் தெரியாது.

நாம் உலகில் பிறந்திருப்பது விண்ணை நோக்கி பயணிப்பதற்காகத்தான் என்பதை அறிந்த பிறகு

  நமது முழு கவனமும் விண்ணக பயணத்தில் தான் இருக்க வேண்டும்

 அதாவது

 நமது ஆன்மீக வாழ்க்கையில் தான் இருக்க வேண்டும்.

ஆனால் அநேகருக்கு ஆன்மீகம் ஒரு side business!

அவர்களது main business உலக வாழ்க்கை.

"உலகில் வாழ்வதற்காக பிறந்திருக்கிறோம்.

 நீண்ட நாள் வாழவேண்டும்.

 வாழ்க்கையை வளமாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டும்.

நிம்மதியாக வாழ இரண்டு காரியங்கள் தேவை. 

பொருள், அருள்.


பொருள் main business. லிருந்து கிடைக்கிறது. அதாவது உலக வாழ்க்கையிலிருந்து கிடைக்கிறது.

அருள் side businessலிருந்து கிடைக்கிறது. அதாவது ஆன்மீக வாழ்க்கையிலிருந்து கிடைக்கிறது.

பொருளோடும் அருளோடும் நீண்டநாள் வாழ்ந்து விட்டு ஒருநாள் உலகைவிட்டு போய்விடுவோம்."

இவ்வளவுதான் அவர்களது நம்பிக்கை.

உலக வாழ்க்கையை செழிப்போடும், நிம்மதியோடும் வாழ்வதற்கு 

ஆன்மீக வாழ்க்கை உதவியாக இருக்க வேண்டும் 

என்பது அவர்களது கொள்கை.

அதாவது அவருடைய ஆன்மா உடலுக்கு உதவியாக இருக்க வேண்டும்.

உடல் தனது வசதியான வாழ்க்கைக்காக உலகை ஆன்மாவை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆன்மாவுக்கு தான் உதவியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆன்மா உடலில் இருந்தால்தான் உலக வாழ்க்கை வாழ முடியும். 

ஆன்மா உடலில் இருக்க வேண்டும், ஆனால் ஆன்மீக வாழ்க்கை தேவை இல்லை.

 ஆகவே அவர்கள் ஆன்மீகம் உலக வாழ்த்கைக்கு இடைஞ்சலாக இருப்பதாக நினைத்தால் 

அதை தியாகம் செய்துவிட்டு உலக வாழ்க்கையை மட்டும் வாழ ஆரம்பித்துவிடுவார்கள்.

மறு உலகைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை.

அப்படியே கொஞ்சம் கவலை இருந்தாலும் 

அதை இவ்வுலகை விட்டு போகும் கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்பது அவர்களது எண்ணம்.

யாரும் தங்களை வாழ்த்தினால் கூட 

"நீண்ட நாள் வாழ்க" என்றுதான் வாழ்த்த வேண்டும் என்பது அவர்களுடைய ஆசை.

ஆகவேதான் அப்படிப்பட்டவர்கள் மரணத்தை நினைத்தாலே பயப்படுகிறார்கள்.

ஒருவர் இந்தியாவிலிருந்து புறப்பட்டு அமெரிக்காவிற்குப் போகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

 அவர் புறப்படும் போது அவரை எப்படி வாழ்த்துவோம்?

" பத்திரமாக பயணித்து, அமெரிக்காவில் பத்திரமாக இறங்க வாழ்த்துகிறேன்."

 என்றுதானே வாழ்த்துவோம். 

"நீண்ட நாள் Flight லேயே இருங்கள்"
 என்றா வாழ்த்துவோம்?

ஆக பிரயாணத்தை விட அதன் முடிவுதான் முக்கியமானது.

வாழ்க்கையைவிட மரணமே முக்கியமானது.

பிரயாணத்தில் ஆயிரம் சங்கடங்கள் வந்தாலும் நாம் பத்திரமாக ஊருக்கு போய் சேர்வதே முக்கியம்.

அதேபோல்தான் வாழ்க்கையில் எத்தனை சங்கடங்கள் வந்தாலும்

 மரிக்கும்போது அமைதியாக, விண்ணகத்திற்குள் நுழையப் போகிறோம் என்ற மகிழ்ச்சியோடு மரிக்க வேண்டும்.

இறைவன் உலகத்தை மனிதனுக்காகப் படைத்தார்.

 மனிதனை உலகத்திற்காக படைக்கவில்லை.


 மனிதனை விண்ணக வாழ்விற்காக மட்டுமே மண்ணகத்தில் படைத்தார்.

ஆன்மா விண்ணிற்கு உரியது, உடல் மண்ணிற்கு உரியது.

இவ்வுலகில் நாம் வாழும் வாழ்க்கை விண்ணை நோக்கிய ஆன்மீகப் பயணம்.

நமது ஆன்மாவின் பயணத்திற்கு வாகனமாக செயல்படுவது மட்டும்தான் உடலின் வேலை. 


நான் ஆன்மீக வாழ்வு வாழ்வதற்காக மட்டுமே உலகில் இறைவனால் படைக்கப் பட்டிருக்கிறோம்.

உலகில் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பது முக்கியம் அல்ல.

நமது ஆன்மீக வாழ்வை எவ்வாறு வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம்.

நாம் வாழும் ஒவ்வொரு வினாடியும் ஆன்மாவிற்காக மட்டுமே வாழ்கிறோம்.


ஆன்மீக வாழ்வு என்றாலே இறைவனுக்காக வாழும் வாழ்வு.

உலக வாழ்வு வாழ்வோர் வசதிகளோடு வாழ்வதற்கு உதவியான பொருளை ஈட்டுவதிலேயே குறியாக இருப்பது போல,

ஆன்மீக வாழ்வு வாழ்வோர் சமாதானத்தோடு வாழத் தேவையான இறையருளை ஈட்டுவதிலேயே குறியாக இருக்க வேண்டும்.

உலக வாழ்வு வாழ்வோர் தேடும் பொருளை உலகம் தருகிறது.

ஆன்மீக வாழ்வு வாழ்வோர் தேடும் அருளை இறைவன் தருகிறார்.

உலக வாழ்வு நிரந்தரமற்றதாகையால் நாம் எவ்வளவுதான் பொருள் ஈட்டினாலும் நிரந்தரமாக அனுபவிக்க முடியாது.

உலகை விட்டுப் போகும்போது அதை இழந்துவிட்டுதான் போக வேண்டும்.


ஆனால் ஆன்மீக வாழ்வு நிரந்தரமானது. ஆகவே நாம் ஈட்டும் அருளும் நிரந்தரமானது.

இவ்வுலகை விட்டுப் போகும்போதும் நாம் ஈட்டிய அருள் நம்முடன் தான் வரும்.

அது மட்டுமல்ல, இவ்வுலகில் இருக்கும்போதுதான் நமது நிரந்தரமாக அனுபவிப்பதற்குத் தேவையான அருளை ஈட்ட முடியும்.

விண்ணகம் சென்றபின் நாம் உலகில் ஈட்டிய அருளைத்தான் நிரந்தரமாக அனுபவிக்க முடியும்.

விண்ணுலகில் நாம் அதிகப்படியான அருளை ஈட்டவும் முடியாது, ஈட்டிய அருளை இழக்கவும் முடியாது.

எவ்வளவு ஈட்டினோமோ அவ்வளவையும் முழுமையாக நித்திய காலம் அனுபவிக்க முடியும்.

ஆகவே இவ்வுலகில் நமது ஆன்மீக வாழ்வின் குறிக்கோள் எவ்வளவு அதிகமான அருளை ஈட்ட முடியுமோ, அவ்வளவு அருளை ஈட்ட வேண்டும்.

உண்மையில் உலகப் பொருளை ஈட்டுவதை விட இறையருளை ஈட்டுவது மிக மிக எளிது.

சர்க்கஸ் விளையாட்டில் 

"கரணம் தப்பினால் மரணம் "
என்பார்கள்.

மனசாட்சியை அடமானம் வைத்துவிட்டு, பொய், களவு, ஏமாற்று வேலைகள் தெரிந்தோர் தான் மிகுதியான பொருள் ஈட்ட முடியும்.


நமது ஏமாற்று வேலையில் கொஞ்சம் அசந்தால் கூட ஈட்டிய பொருளை இழந்து, பிச்சை எடுக்க வரவேண்டியிருக்கும்.

இது மற்றவர்கள் அனுபவத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

ஆனால் அருளை ஈட்டுவது மிக எளிதானது மட்டுமல்ல, மிகவும் இனிமையானதும் கூட.

உலகிலேயே மிக இனிமையான வேலை எது?

நேசிப்பது, அன்பு செய்வது.

பிறந்தவுடன் நாம் செய்த முதல் வேலை அது தானே!

அம்மாதான் நமது உலகம், அன்பு செய்வது மட்டுமே நமது வேலை.


ஆன்மீக வாழ்வில் இறைவன் மட்டுமே நமது உலகம்.

 அவரை அன்பு செய்வது மட்டுமே நமது வேலை.

"சொன்னதைச் செய்வேன்,
செய்ததைச் சொல்வேன், 
வேரொன்றும் தெரியாது"

என்ற பாடல் வரிகள் ஆன்மீக வாழ்விற்கு முற்றிலும் பொருந்தும்,

"இறைவா நீர் சொன்னதைச் செய்வேன்,

நான் செய்வதை உம்மிடம் சொல்வேன்,

 வேறொன்று தெரியாது,

அன்பு செய்யச் சொன்னீர்.
அதை மட்டுமே செய்கிறேன்.

இவ்வுலகில் எனக்கு வேறு எதுவுமே தெரியாது."

இதுதான் முழுமையாக ஆன்மீக வாழ்வு.

இறைவன் என்ன சொன்னார்?

"என்னை நேசி,
 உன் அயலானையும் நேசி."

நமது சிந்தனை சொல் செயல் அனைத்திலும் அன்பு மட்டும் இருந்தாலே போதும். அருள்வளம் நம்மீது பொழியும்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

Monday, November 23, 2020

* குணமாக்க வேண்டியது கண்களை.*

http://lrdselvam.blogspot.com/2020/11/blog-post_23.html

* குணமாக்க வேண்டியது கண்களை.*


."இயேசு வாழ்ந்த காலத்தில் Camera இருந்ததா?"

"தெரியாதது மாதிரி கேட்கிறீங்க. ஏதாவது கேட்க வேண்டியிருந்தால் நேரடியாகவே கேளுங்க. ஏன் சுற்றி வளைக்கணும்?"

"சரி. நேரடியாகவே விசயத்துக்கு வருகிறேன்.

நீங்க வீட்டில் வைத்திருக்கிற
இயேசுவின் படம், மாதா படம். புனிதர்களின் படம் - இவை எல்லாம் உண்மையில் அவர்களுடைய படங்கள் அல்ல.

அவர்கள் காலத்தில் Camera இருந்ததில்லை. இவை அவர்களுடைய photos அல்ல

இப்படங்களை வரைந்தவர்கள் அவர்களைப் பார்த்ததும் இல்லை.


இந்தப் படங்களில் உள்ள முகங்கள் ஒன்று கற்பனை முகங்கள். அல்லது model களுடைய முகங்கள்.

நீங்கள் இயேசு என்று நினைத்துக்கொண்டு யார் யாருக்கோ மாலை போடுகிறீர்கள், முத்தம் கொடுக்கிறீர்கள்.

இது சரியா?"


"அன்னைத் தெரசா படமும் வீட்டில் வைத்திருக்கிறேன். அதற்கும் மாலை போடுகிறேன். அதாவது சரியா?"

"மொத்தத்துக்கு படமோ, சுரூபமோ கூடாது என்கிறேன்."

"படமோ, சுரூபமோ கூடாது என்று முதலிலேயே சொல்லி இருக்க வேண்டியதுதானே!

எதுக்காக முகத்துக்காக பத்து நிமிடம் செலவழித்தீர்கள்."

"காலண்டர்களில் இயேசுவின் படத்தையோ, மாதாவின் படத்தையோ ஏன் போட கூடாது என்பதற்காக காரணத்தை போதகர் ஒருவர் சொன்ன வீடியோ பார்த்தேன். 

அதை வைத்து கேள்வி கேட்டேன்."

"திருமண ஆசை இல்லாதவன் திருமணம் வேண்டாம் என்று சொல்லிவிட வேண்டும்.

 அதை விட்டுவிட்டு, இப்படிப்பட்ட பெண் வேண்டாம் அப்படிப்பட்ட பெண் வேண்டாம் என்று கதை அளந்து கொண்டு இருக்கக் கூடாது.

இப்போ ஒரே கேள்வியாக கேளுங்கள் பார்ப்போம்."

"ஏன் படங்களையும் சுரூபங்களையும் வைத்திருக்கிறீர்கள்?"

"இங்கே பாருங்கள் என் கையில் ஒரு கதைப் புத்தகம் இருக்கிறது.

அதை தரையில் போடுகிறேன். 

உங்கள் கையில் இருக்கும் புத்தகத்தையும் போடுங்கள்."

"ஹலோ சார், என் கையில் இருப்பது பைபிள். அதை மரியாதையோடு கையாள வேண்டும்."

"உங்கள் கையில் இருப்பது பைபிள் என்று யார் சொன்னா?"

"இதோ பாருங்கள். Holy Bible என்று எழுதியிருப்பது தெரிகிறதா?"

"எழுதியிருப்பது தெரிகிறது.

என் புத்தகத்தில் 'பிரதாப முதலியார் சரித்திரம்' என்று எழுதியிருகிறது.

உங்கள் புத்தகத்தில் Holy Bible என்று எழுதியிருகிறது.

ஆனால் இரண்டும் பேப்பரும், எழுத்துக்களும் உள்ள புத்தகங்கள்தானே."

"இப்படி மரியாதை இல்லாமல் பேசாதீர்கள். பைபிள் மரியாதைக்கு உரியது."

"பைபிள் என்றால் இறைவாக்கு.

இறைவாக்கிற்கு உருவம் கிடையாது. 

உங்கள் கையில் இருப்பது உருவத்தை உடைய புத்தகம்.

அதுவும் என் கதைப் புத்தகத்தைப் போன்றே உருவத்தை உடைய புத்தகம்!

உருவம் இல்லாத இறைவனுக்கு உருவத்தைக் கொடுப்பது தப்பு என்றால் 

உருவம் இல்லாத இறைவாக்கிற்கு உருவம் கொடுப்பது எப்படி?"

"இறை வாக்கிற்கு எழுத்துவடிவம் கொடுத்திருப்பது தப்பு என்கிறீர்களா?"

"நான் தப்பு என்று சொல்லவில்லை. சரி, மிகவும் சரி. 

சுருபம் பற்றி உங்களது நிலை தவறு என்பதை சுட்டிக் காண்பிக்கவே இதைச் சொன்னேன்."

"அது வேறு இது வேறு. 

அது ஆள் பற்றியது,

இது எண்ணம் பற்றியது
 
இரண்டையும் ஒப்பிட முடியாது."

"அது வேறு இது வேறு தான்.

ஆனால் அடிப்படை ஒன்றுதான்.

உருவம் இல்லாததற்கு உருவம் கொடுப்பது.

மனிதன் உருவம் உள்ளவன். எண்ணங்கள் உருவமற்றவை.

தன்னிடமுள்ள உருவமற்ற எண்ணத்தை மற்றவரோடு பகிர வேண்டும் என்றால் அதற்கு உருவம் கொடுத்தாக வேண்டும்.

அன்னை மரியாள் வாழும் போது அவளுக்கு உருவம் இருந்தது.

அதே போல் தான் இயேசு வாழும்போது அவருக்கு உருவம் இருந்தது.

இப்போது அவர்கள் வாழ்வது விண்ணகத்தில்.

பூமியில் அவர்களது உருவம் நடமாட வில்லை.

அவர்களைப் பற்றியே நாம் நினைக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு நாம் உருவம் கொடுத்தாக வேண்டும்.

மனதில் எண்ணங்களை நினைக்கலாம் ஆனால் ஆட்களை நினைக்கும் போது அவர்களது முகம் இல்லாமல் நினைக்க முடியாது.

மனிதனது identity அவனது 
முகம்தான்"

"தாராளமாக சுரூபங்களைச் செய்து கொள்ளுங்கள்."

"ஹலோ அதற்கு உங்கள் அனுமதி ஒன்றும் தேவையில்லை.

படத்தையும் உருவத்தையும் எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்துகிறோம்"

"யாருடைய முகத்தையோ இயேசுவின் முகம் என்று கூறி வணங்குவதுதான் பயன்படுத்தவேண்டிய முறையோ?"

"அதற்குறிய விளக்கத்தைக் கேளுங்கள் சொல்கிறேன்."

"சொல்லுங்கள்."

" இயேசுவின் திரு இருதயப் படம், 

நல்ல ஆயன் படம்,

சிறுவர்களை அரவணைத்துக் கொள்ளும் படம்,

இரவு உணவு (last Supper)படம்,

பாடுகளின் போது உள்ள படம்,

சிலுவையில் தொங்கும்போது உள்ள படம்

இவ்வாறு பல நிலைகளில் உள்ள இயேசுவின் படங்களில் வெவ்வேறான முகங்கள் கொடுத்து படங்கள் வரையப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு நிலையிலும் இயேசுவிடம் இருக்கும் உணர்வுகளை முகம் பிரதிபலிக்கும்.  

 திரு இருதய படத்தில் அன்பு பொங்கி வடியும்.

நல்ல ஆயன் படத்தில் ஆடு மெய்ப்பவருடைய முகபாவம் இருக்கும்.

பாடுகளின்போது உடல் வேதனைகளை முகம் பிரதிபலிக்கும்.


சிலுவையில் தொங்கும்போது உச்சக்கட்ட வேதனையை முகம் பிரதிபலிக்கும்.

  படத்தின் மூலம் நமக்கு ஏற்படும் பக்தி உணர்வு முகத்தில் தெரியும் உணர்வுகளை பொறுத்தது.

ஒரு நண்பர் அழுதார் என்ற செய்தியைக் கேட்கும்போது நமக்குள் உண்டாகும் உணர்வுகளுக்கும் 

அழுவதை நேரில் பார்க்கும்போது உண்டாகும் உணர்வுகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. 

உறவினர் ஒருவர் மரித்தார் என்று கேள்விப்படும்போது வருத்தம் வரும் 

ஆனால் மரணப் படுக்கை அருகே நாம் நின்றால் மனம் பொங்கி, அடக்க முடியாத அழுகை வரும்.

நிறைவை அடைந்தவர்களுக்கு படங்களின் உதவி தேவைப் படாமல் இருக்கலாம்.


ஆனால் எங்களைப் போல சாதாரணமானவர்களுக்கு உணர்வுபூர்வமாக ஜெபிக்க படங்களின் உதவி தேவை.

விசுவாசிகளில் பெரும்பாலோர் சாதாரண மக்கள். Theology யில் பட்டம் பெற்று வந்தவர்கள் அல்ல.

படங்கள் மனதை ஒருநிலைப் படுத்தி செபிக்க உதவியாய் இருக்கும்.

அவர்களுக்கு தெரியும் இது இயேசுவின் படம், இயேசு அல்ல என்று.

உங்கள் cell phoneல் உங்கள் பேத்தியின் படத்தை வைத்துக் கொஞ்சிக் கொண்டிருப்பதில்லை!

அது படம் தான் என்று உமக்குத் தெரியாது?

அதே போல் தான்."

"கரெக்ட். ஆனால் என் பேத்தியின் படத்தை வைத்துதான் கொஞ்சிக் கொண்டிருப்பேன்.

ஏதாவது ஒரு குழந்தையை என் பேத்தி என்று நினைத்து கொஞ்சிக் கொண்டிருக்க மாட்டேன்."

"கரெக்ட். இயேசுவையோ, மாதாவையோ படம் வரையவர்கள் பார்த்திருக்கவில்லை.

வரைவது கற்பனையிலிருந்து அல்லது ஏதாவது model ஐப் பார்த்துதான்.

ஆனால் படத்தைப் பார்ப்பவர்களுக்கு படம் மட்டும் தான் தெரியுமேயொழிய model ஐத் தெரியாது.

இயேசுவின் படத்தையோ, சுரூபத்தையோ பார்ப்பவன் இயேசுவைப் பற்றி மட்டும் நினைப்பானேயொழிய model ஐப் பற்றி நினைக்கமாட்டான்.

ஒரு செயலின் தன்மையைத் தீர்மானைப்பது மனம்தானேயொழிய செயல் அல்ல.

பாடுட்ட சுருபத்தில் இயேசு தொங்கும் நிலையையும் முகத்தையும் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தால்

 நமது பாவங்களுக்காக உத்தம மனல்தாபம் பொங்கி வரும்.

பாவங்களுக்காக உத்தம மனல்தாபம் பட்டவர்களுக்கு மட்டுமே இந்த அனுபவம் புரியும்.

மற்றவர்களுக்குப் புரியாது.

ஜெபமாலை சொல்லும் போது பாடுபட்ட சுருபத்தை கையில் பிடித்திருப்பது

 இயேசுவைப்பற்றி தியானிப்பதற்காக மட்டுமே,

 அந்த முகம் யாரைப் போல் இருக்கிறது என்பதை ஆராய்ச்சி செய்வதற்காக அல்ல.

மாதாவிற்கு அவள் காட்சி கொடுத்ததின் அடிப்படையில் நாம் பல பெயர்கள் வைத்திருக்கிறோம்.


அவள் காட்சி கொடுத்ததை நினைவூட்டும் ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு முகபாவங்கள் இருக்கும்.


எத்தனை முகபாவங்கள் இருந்தாலும், நமது சிந்தனையில் இருப்பது மாதா மட்டுமே.

பக்தி உணர்வை மனதில் வைத்து பார்ப்பவர்களுக்கு மட்டுமே இது புரியும்.

ஆராய்ச்சி மட்டுமே செய்து கொண்டிருப்பவர்களுக்கு இது புரியாது.

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர் களுக்கும் பாமர மக்களுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்தவர்கள்,

இதையும் புரிந்து கொள்வார்கள்.

பரிசேயர் செய்தது சட்ட ஆராய்ச்சிகளை மட்டுமே.

பாமர மக்கள் கண்டது பக்தி பரவசத்தை மட்டுமே.

பரிசேயர் பைபிளைக் கரைத்துக் குடித்தவர்கள். என்ன பயன்?

 இயேசு தான் அதன் கதா நாயகன் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லையே!"


"இயேசுவின் முகம் கிரேக்க கடவுளான Zeus முகத்தை ஒட்டி வரையப் பட்டிருப்பதாகச் சொல்கிறார்களே!"

"ஜெகன் தானே சொன்னார்,

நான் Zeus முகத்தைப் பார்த்தது இல்லை.

ஒரு ஆங்கில பெண்மணிக்கு தமிழ்நாட்டு சிநேகிதி ஒருத்தி ஒரு டாலர் வைத்த Chain ஒன்றை பரிசாக கொடுத்தாளாம்.


அவள் அதை கழுத்தில் எப்பொழுதும் அணிந்திருப்பாளாம்.

மற்ற ஆங்கில பெண்மணிகள் அதை பாராட்டுவார்களாம்.

மற்றொரு தமிழ் நாட்டுக்காரி இங்கிலாந்து சென்றபோது இந்த பெண்மணியின் கழுத்தில் தொங்கிய Chain ஐப் பார்த்து சிரித்தாளாம்.

ஏன் என்று கேட்ட போது இவள் சொன்னாளாம்,

"இது எங்கள் ஊர் பெண் குழந்தைகள் இடுப்பில் அணியும் அரைஞாண் கொடி" என்றாளாம்.  

அதற்கு அந்த ஆங்கில பெண்மணி,

"கழுத்தில் அணிந்தால் Chain,

இடுப்பில் அணிந்தால் அரைஞாண் .

கையில் அணிந்தால் bracelet,

காலில் அணிந்தால் கொலுசு.

எங்கே அணிந்தாலும் அது தங்கம்."

என்றாளாம்.

தமிழ் நாட்டுக் காரி வாயைப் பொத்திக் கொண்டாளாம்.


நீங்கள் என்ன செய்யப்போகிறீர்களாம்?"

"இயேசுவின் முகத்தை நினைத்து பார்த்தால் அது இயேசுவின் முகம்.

நீங்கள் இயேசுவை மனதில் தியானித்துக் கொண்டு பார்க்கும் போது இயேசுவின் படத்தில் உள்ளது இயேசுவின் முகம்தான்.

ஜெகன் zeus முகத்தை நினைத்துக் கொண்டு பார்ப்பதால் அவருக்கு அது zeus.

Understood."

 "ஒரு நாள் வகுப்பில் பாடத்தை நடத்தி முடித்தவுடன் ஒரு பையனை எழுப்பிவிட்டு, 

'Understand?' என்றேன்.

அவன் desk க்கு கீழே குனிந்து பார்த்தான்.

'என்னடே பார்க்கிற?' என்றேன்.

அவன் 'desk க்குக் கீழே எப்படி நிற்பது' என்று பார்க்கிறேன் என்றான்!

புரிகிறதா?"

".நன்றாகவே புரிகிறது."

"சிலருக்கு எதைப் பார்த்தாலும் மஞ்சளாகத் தெரியுமாம். 

அவர்கள் குணமாக்க வேண்டியது பொருளை அல்ல.
 தங்கள் கண்களை."

லூர்து செல்வம்.

Sunday, November 22, 2020

*********பரலோகத் தாய்**********

http://lrdselvam.blogspot.com/2020/11/blog-post_22.html




*********பரலோகத் தாய்**********


"ஏன் சார், இயேசுவின் தாய் பரலோகத்தில் இருப்பதாக பைபிளில் வசன ஆதாரமும் இல்லை என்று சில பேர் சொல்கிறார்களே.

நீங்கள் எதை வைத்து மரியாளை விண்ணக , மண்ணக அரசி என்று கூறுகிறீர்கள்?"

"நான் வாய்மொழியாக பேசியதை எல்லாம் எழுதி பைபிளில் சேருங்கள், என்று இயேசு சொன்னதாக வசன ஆதாரம் இருக்கிறதா?"

"இல்லை. ஆனால் "போதியுங்கள்" என்று இருக்கிறதே.

வாய்வழியாக மட்டும் போதியுங்கள் என்று இயேசு சொல்லவில்லையே.

எப்படி வேண்டுமென்றாலும் போதிக்கலாமே!

எழுதக் கூடாது என்று இயேசு சொல்லவில்லையே!"

"Correct.

"என்னை நோக்கி, "ஆண்டவரே, ஆண்டவரே" என்று சொல்பவனெல்லாம் விண்ணரசு சேரமாட்டான். 

வானகத்திலுள்ள என் 
தந்தையின் விருப்பப்படி நடப்பவனே சேருவான்."
(மத். 7:21)

"தந்தையின் விருப்பப்படி நடப்பவனே விண்ணகம் சேருவான்"

என்று இயேசு சொல்லியிருக்கிறாரே.

அதற்கு என்ன அர்த்தம்?"

தந்தையின் விருப்பப்படி நடப்பவன் பரலோகம் சேருவான்"

என்றுதான் அர்த்தம்."

"மரியாள் தந்தையின் விருப்பப்படி நடந்தாளா?"


"நடந்தாள்."

"அப்படியானால் பரலோகத்திற்குப் போயிருப்பாளா?"

"இயேசுவின் வாக்குப்படி பார்த்தால் கட்டாயம் போயிருப்பாள்."
.
" கட்டாயம் போயிருப்பாள் என்பதற்கு வசன ஆதாரம்?" 


"அதற்கு தனியாக ஆதாரம் வேண்டுமா?

"தந்தையின் விருப்பப்படி நடப்பவனே விண்ணகம் சேருவான்"

 என்ற இயேசுவின் வாக்குதான் ஆதாரம்."
.
"நீங்கள் தந்தையின் விருப்பப்படி நடந்தால் பரலோகத்திற்கு போவீர்களா?"

"கட்டாயம் போவேன். "

"அப்போ புனிதர்கள்? அதாவது தந்தையின் விருப்பப்படி இவ்வுலகில் வாழ்ந்தவர்கள்? 

"கட்டாயம் போயிருப்பார்கள்."

"வசன ஆதாரம்?"

"என்ன சார், திரும்பத் திரும்ப அதையே கேட்கிறீர்கள் ஒரு முறை சொன்னால் போதாதா?"

"அப்போ நமது தாய் பரலோகத்தில் இருக்கிறார்.

ஏற்று கொள்கிறாய்."

"மரியா நமது தாய் என்பதற்கு என்ன ஆதாரம்?"

"விண்ணகத் தந்தையை ஏற்றுக் கொள்கிறாயா?"

"ஏற்றுக்கொள்கிறேன்."

"இயேசு தந்தையின் மகன் என்பதை ஏற்றுக் கொள்கிறாயா?"

"ஏற்றுக்கொள்கிறேன்."

"நமது தந்தையின் மகன் நமக்கு யார்?"

 "சகோதரன்."

  " மரியாள் யார்?"

" இயேசுவின் தாய்."

 "நமது சகோதரனின் தாய் நமக்கு யார்?"

 "தாய்."

 So, மரியாளை நமது தாய் என்று ஏற்றுக் கொள்கிறாய்!"

"ஏற்றுக்கொள்கிறேன்."

"வேறு ஆதாரம் வேண்டுமா?"

"இதுவே போதும், சார். ஆனால் மரியாளை மண்ணக விண்ணக அரசி என்று எப்படிக் கூறலாம்?"


" மண்ணக விண்ணக அரசர் யார்?"

"நம் ஆண்டவராகிய இயேசு."

"இயேசுவின் தாய் யார்?"


"மரியாள்."

"அரசரின் தாய் யார்?"

"அரசி."

"மண்ணக விண்ணக அரசர் இயேசு. அப்போ அவரது தாயாகிய மரியாள்?"


மண்ணக விண்ணக அரசி."

"அப்போ பதிலை தெரிந்து வைத்துக் கொண்டுதான் கேள்வி கேட்கிறீர்கள். 

நீங்கள் வாத்தியார் வேலைக்கு லாயக்கு."

"அப்போ, அடுத்த கேள்வி.

 இறைவன் நித்திய காலமாக இருக்கிறார்.

மரியாள் உலகில் பிறந்த மனுஷி.

 அவளை எப்படி இறைவனின் தாய் என்று சொல்லலாம்?"

" உங்கள் மகன் என்ன வேலை பார்க்கிறார்?''

"கலெக்டர்."

"உங்களை கலெக்டரின் அப்பா என்று சொல்லலாமா?"

 "தாராளமாக சொல்லலாம்.

 என் மகன் கலெக்டர்.
 நான் அவனுக்கு அப்பா தானே!"

"இயேசுவை இறைவன் என்று ஏற்றுக் கொள்கிறீர்களா."
.
 "ஏற்றுக்கொள்கிறேன்."

''இறைவன் இயேசுவின் தாயை இறைவனின் தாய் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?"

"தவறு இல்லை. மரியாள் ஆன்ம சரீரத்தோடு விண்ணகம் எய்தினாள் என்பதற்கு பைபிளில் ஆதாரம் இருக்கிறதா?''

"பைபிளுக்கு எது ஆதாரமோ அதுவே இதற்கும் ஆதாரம்?"

"புரியவில்லை."

"இயேசு பிறக்கும் போது பழைய ஏற்பாடு இருந்தது 

ஆனால் புதிய ஏற்பாடு எப்போது வந்தது?"

" இயேசு விண்ணகம் எய்திய பின் அவருடைய சீடர்களால் எழுதப்பட்டது."

" அதாவது சீடர்களால் எழுதப்படும் வரை புதிய ஏற்பாடு இல்லை.

 இயேசு மனிதனாக பிறந்ததிலிருந்து நற்செய்தியாளர்கள் புதிய ஏற்பாட்டை எழுதும் வரை திருச்சபை இருந்ததா? இல்லையா?"

"இருந்தது."

"எதை நம்பி இருந்தது?"

"இயேசுவின் வாய்மொழி போதனையையும், அவரது சீடர்களின் வாய்மொழி போதனையையும் நம்பி இருந்தது."

" இயேசுவின் வாய்மொழி போதனையை சீடர்கள் பின்பற்றினார்களா?"

"பின்பற்றினார்கள்."


"சீடர்களின் போதனையை ஆதி திருச்சபையினர் பின்பற்றினார்களா?

அல்லது உங்களது போதனைக்கு பைபிள் ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டார்களா?"

"அப்பொழுது முழுமையாக பைபிள் இல்லையே!"

"அதாவது

 பைபிள் இல்லாத காலத்திலும் திருச்சபை இருந்தது.

 அதாவது 

திருச்சபை முற்றிலுமாக பைபிளை நம்பியிருக்கவில்லை.

 அதாவது

இயேசுவின் சீடர்களில் வாய்மொழி போதனையை நம்பி இருந்தது.

சீடர்கள்தான் தாங்கள் வாய்மொழியாக போதித்த போதனைகளுக்கு எழுத்து வடிவம் கொடுத்தார்கள்.

இயேசு பிறந்ததிலிருந்து புதிய ஏற்பாடு பிறக்கும் வரை இருந்ததும்,

புதிய ஏற்பாட்டை எழுதியதும்,

 தொடர்ந்து இருக்கின்றதும்

திருச்சபையின் பாரம்பரியம்
 என்று அழைக்கப்படுகிறது.

திருச்சபையின் பாரம்பரியத்திலிருந்து பிறந்ததுதான் பைபிள்.

பைபிளில் இருந்து பாரம்பரியம் பிறக்கவில்லை.

பாரம்பரியத்தை நம்புகிறவர்கள் பைபிளையும் சேர்த்துதான் நம்புகிறார்கள்.

ஆகவே திருச்சபையின் போதனைகளுக்கு ஆதாரம் பாரம்பரியமும் அதற்குள் அடங்கிய பைபிளும்தான்.

 மரியாள் ஆன்ம சரீரத்தோடு விண்ணகம் எய்தியமைக்கு பாரம்பரியத்தில் முழுமையான ஆதாரம் இருக்கிறது.


பாரம்பரியத்தை நம்பாதவர்களிடம் அதைக் கூறி என்ன பயன்?"

"நான் பாரம்பரியத்தை நம்புகிறேன். என்னிடம் கூறலாம்."

"அப்போஸ்தலர்களுக்குத் தாயாகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர் அன்னைமரியாள்.

புனித அருளப்பரின் பாதுகாப்பில் இருந்தார்.

மரியாள் மரிக்கும் போது தோமையாரைத் தவிர மற்ற எல்லா அப்போஸ்தலர்களும் உடன் இருந்தார்கள்.


அடக்கம் முடிந்தபின்புதான் தோமையார் வந்து சேர்ந்தார்.

கல்லறையைத் திறந்து மாதாவைப் பார்த்தாக வேண்டும் என்பதில் தோமையார் பிடிவாதமாக இருந்தார்.

அவரைத் திருப்திப் படுத்துவதற்காகக் கல்லறையைத் திறந்தார்கள்.

மாதாவின் திருவுடலைக் காணவில்லை.

மாதாவின் திருவுடல் ஆன்மாவுடன் விண்ணகம் எடுத்துக் கொள்ளப்பட்டது என்பதை உணர்ந்தார்கள், நம்பினார்கள்.

அப்போஸ்தலர்கள் காலம் தொட்டே, 

அவர்களுடைய போதனையால்,

 மாதா பக்தி வளர ஆரம்பித்தது.

இது பாரம்பரியத்திலுள்ள உண்மை."

"இதை ஏன் அப்போஸ்தலர்கள் நற்செய்தி நூல்களிலோ, மடல்களிலோ ஏன் குறிப்பிடவில்லை?"

"புதிய ஏற்பாட்டு நூல்கள் இயேசுவின் போதனையை மையமாக வைத்து எழுதப்பட்டன.

நற்செய்தியை அறிவிப்பதுதான் அவற்றின் நோக்கம்.

அதைக்கூட முழுமையாக எழுத முடியவில்லை என்று அருளப்பரே கூறுகிறார்.

"இயேசு செய்தவை வேறு பல உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுத வேண்டிய நூல்களை உலகமே கொள்ளாது என்று கருதுகிறேன்."
(அரு. 21:25)

மாதா பக்தியும் சரி, புனிதர்கள் பக்தியும் சரியே இயேசுவின் நற்செய்திக்கு செயல்வடிவம் கொடுப்பவைதான்.

உன்னைப்போல் உன் அயலானையும் நேசி என்பது நற்செய்தி.

இறை அன்னையையும் புனிதர்களையும் நாம் நேசிப்பது இந்த கட்டளைப்படிதான்.

" உன் அயலானை உயிரோடு இருக்கும்போது நேசி இறந்தவுடன் மறந்துவிடு" என்று இயேசு எங்கும் சொல்லவில்லை.

உண்மையில் புனிதர்கள் இவ்வுலகிற்கு இறந்தாலும், இன்னும் விண்ணில் இறைவனோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆகவே அவர்களை நேசிப்பதும்

நேசத்திற்கு செயல்வடிவம் கொடுப்பதும் நற்செய்தி போதனைக்கு எதிரானவை அல்ல,

 மாறாக நற்செய்திக்கு செயல்வடிவம் கொடுப்பவை. 

 அதாவது நற்செய்தியை வாழ்வாக்குகிறோம்.

 வாழ்வதற்குத் தானே நற்செய்தி நமக்குப் போதிக்கப்பட்டது."

"இயேசுவின் தாய் பரலோகத்தில் இல்லை என்று ஒரு போதகர் சொல்லுகிறாரே, அதற்கு உங்கள் பதில் என்ன?"

 "அவர் கேட்கவில்லை, பதில் சொல்ல. 

அவரே சொல்லுகிறார், உறுதியாக சொல்கிறார்.

நாம் சொல்வது அவருக்குப் புரியாது. 

நாம் திருச்சபையின் பாரம்பரியத்தை நம்புகிறோம். அவர் நம்பவில்லை.

வாய்பாட்டை நம்பாதவர்களுக்கு கணக்கு எப்படி புரியும்?

நமது பாரம்பரியப்படி நமது அன்னை ஆன்ம சரீரத்தோடு விண்ணகத்தில் இருக்கிறார்.

அதை நாம் விசுவசிக்கிறோம். நமது விசுவாசப்படி நாம் வாழ்வோம்."

லூர்து செல்வம்.

Saturday, November 21, 2020

*கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே.*(அரு.3:17)

http://lrdselvam.blogspot.com/2020/11/317.html


*கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே.*
(அரு.3:17)



இறைவனின் எல்லா பண்புகளும் அளவற்றவை

அன்பும் அளவில்லாதது. நீதியும் அளவில்லாதது.

அன்பு நிபந்தனை இன்றி நேசிக்கின்றது.

நீதி எது சரி, எது தவறு என்பதைத் தீர்மானிக்கிறது.

இறை நீதி மனித நீதியைப் போன்றதன்று.

மனித நீதி மனித நியதிப்படி எது சரி, எது தவறு என்று தீர்ப்பு சொல்கிறது. 

இறை நீதிக்கு எது சரி, எது தவறு என்று தெரியும். ஆனால் தீர்ப்பிடாது.

மனித புரிதல்படி, தீர்ப்பு குற்றவாளியைத் தண்டிக்கும்.

நிரபராதியை விடுவிக்கும்.

இறைநீதி தண்டனைத் தீர்ப்பிடாது.

குற்றவாளியை பரிகாரம் செய்யச் சொல்லும்.

அன்புடன் சேர்ந்து பரிகாரம் செய்த குற்றவாளியை மன்னிக்கும்.
 
மன்னிக்கப்படும் போது குற்றத்திலிருந்து விடுதலை கிடைக்கிறது.

விடுதலை என்ற சொல்லை ஆன்மீகத்தில் இரட்சண்யம், மீட்பு என்று சொல்கிறோம்.

இறைவனுடைய அகராதியில் தண்டனை என்ற சொல்லுக்கே இடமில்லை.

ஏனெனில் தண்டனை அன்பிற்கு எதிரானது.

எனவே தண்டனையிலிருந்து விடுதலை என்ற பேச்சுக்கே இடமில்லை.

இறைவன் நம்மைப் பாவத்திலிருந்து மீட்கிறார்.

பாவத்தின் விளைவை நமக்குப் புரிய வைப்பதற்காகத்தான் நமது அகராதிப்படி தண்டனை என்ற சொல்லை இயேசு பயன்படுத்துகிறார்.

மனித அனுபவத்தின் படி பேசினால்தானே நமக்கு புரியும்.

'பின்னர், இடப்பக்கம் உள்ளோரை நோக்கி, "சபிக்கப்பட்டவர்களே, என்னை விட்டு அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடுசெய்துள்ள முடிவில்லா நெருப்புக்குள் செல்லுங்கள்."

பாவத்தின் விளைவை நமக்கு புரிய வைப்பதற்காகத்தான் நமது அனுபவத்திலுள்ள தீர்ப்பு, தண்டனை என்ற சொற்களை இயேசு பயன்படுத்துகிறார்.


நிக்கொதேமு ஒரு பரிசேயர். ஆனால், நல்லவர், இயேசுவின் மேல் மரியாதை உள்ளவர்.

அவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து,

 "ராபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை அறிவோம்"

என்கிறார்.


இயேசு இறைமகன் என்ற உண்மை அவருக்குத் தெரியாது.

 'இறையருள் பெற்ற போதகர்' என்று மட்டும் தெரியும்.

இயேசு "எவனும் மேலிருந்து பிறந்தாலன்றி, கடவுளுடைய அரசைக் காணமுடியாது"

என்று ஞானஸ்நானம் ஆகிய ஆன்மீகப் பிறப்பைப் பற்றி என்று கூறியது நிக்கொதேமுக்குப் புரியவில்லை.

அதனால்தான் "ஒருவன் வயதானபின் எப்படிப் பிறக்கமுடியும்?" என்று கேட்கிறார்.

இயேசு நீரினாலும் ஆவியினாலும் பெறக்கூடிய ஞானஸ்நானத்தைப் பற்றி கூறிய பின்,

"வானகத்திலிருந்து இறங்கி வந்தவரேயன்றி வேறெவரும் வானகத்திற்கு ஏறிச்சென்றதில்லை. அப்படி வந்தவர் வானகத்திலிருக்கும் மனுமகனே."

என்று தன்னை அறிமுகப்படுத்துகிறார்.


தன்னில் விசுவாசங்கொள்ளும் அனைவரும் முடிவில்லா வாழ்வைப் பெறுவர் என்பதைக் கூறிவிட்டு
..

"மோயீசன் பாலைவனத்தில் பாம்பை உயர்த்தியதுபோல மனுமகனும் உயர்த்தப்படவேண்டும்." என்ற வார்த்தைகளால் தான் சிலுவை மரணம் அடையவிருக்கும் உண்மையை குறிப்பிடுகிறார்.


"தம் மகனில் விசுவாசங் கொள்ளும் எவரும் அழியாமல், முடிவில்லா வாழ்வைப் பெறும்பொருட்டு அந்த ஒரேபேறான மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்."

என்ற வார்த்தைகளால் 
தான் இறைமகன் என்ற இறை உண்மையையும் கூறுகிறார். 

பின் தான் உலகிற்கு தந்தையால் அனுப்பப்பட்டதன் நோக்கத்தை கூறுகிறார்.

"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே." 

அதாவது

 "தான் உலகிற்கு வந்தது

 மனுக்குலத்தை மீட்கவே,

 அதற்கு தீர்ப்பு அளிக்க அல்ல"

என்கிறார்.

நமது மொழிப்படி 

 ஒருவன் குற்றவாளியா 

அல்லது 

நிரபராதியா 

என்று நீதிபதி சொல்வதையே தீர்ப்பு என்கிறோம்.

இயேசுவுக்கு நாம் பாவிகள் என்று தெரியும்.

அதை நம்மிடம் சொல்வதற்காக மனிதன் ஆகவில்லை.

அதாவது நாம் பாவிகள் என்று தீர்ப்புக் கூற இறைமகன் மனிதன் ஆகவில்லை.

தீர்ப்புக்கு அடுத்த படி நமது அனுபவத்தில் தண்டனையே.

தண்டனை கொடுப்பதற்காக மனிதனாக பிறந்து இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

இயேசு நாம் பாவிகள் என்று தீர்ப்பு கூறவோ, தண்டிக்கவோ விண்ணிலிருந்து இறங்கி வரவில்லை.

நாம் செய்ய வேண்டிய பரிகாரத்தை தானே செய்து நமக்கு மன்னிப்பு தருவதற்காகத் தான் மனிதனாகப் பிறந்தார்.

தன்னில் விசுவாசங்கொள்பவன் தீர்ப்புக்கு ஆளாவதில்லை என்று கூறிவிட்டு,

"விசுவாசங்கொள்ளாதவனோ ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டான்."

என்று சொன்னதன் பொருள்:

"விசுவாசங்கொள்ளாதவன் தனக்குத்தானே தீர்ப்பிட்டுக்
 கொள்கிறான்."

எப்படி?

"ஒளி உலகத்திற்கு வந்துள்ளது: மனிதர்களோ ஒளியைவிட இருளையே விரும்பினர்: ஏனெனில், அவர்களுடைய செயல்கள் தீயனவாயிருந்தன.

20 பொல்லாது செய்பவன் எவனும் ஒளியை வெறுக்கிறான். தன் செயல்கள் தவறானவை என்று வெளியாகாதபடி அவன் ஒளியிடம் வருவதில்லை.

21 உண்மைக்கேற்ப நடப்பவனோ, தன் செயல்கள் கடவுளோடு ஒன்றித்துச் செய்தவையாக வெளிப்படும்படி ஒளியிடம் வருகிறான்."
(அரு. 3:19-21)

விளக்கம்:

"இறை மகனில் விசுவாசங்கொள்ளாதவர்

உலகத்திற்கு வந்த ஒளியை விரும்பாதவர், இருளையே விரும்புகின்றனர்.

அவர்கள் ஒளியிடம் வருவதில்லை."

இறைமகனை விசுவசிக்காதோர்
ஒளியிடம் வருவதில்லை.

அதாவது அவர்களே, தாங்களாகவே ஒளியிடம் வருவதில்லை.

அப்படி என்றென்றும் வராததுதான் அவர்களுக்கு நரக நிலை

நரக நிலைக்கு அவர்களை இயேசு அனுப்பவில்லை. அவர்களாக போய் விடுகிறார்கள்.

தாங்களாகவே இறைவனை பிரிந்து வாழ்வது தான் நரகம்.


விசுவசித்து உண்மைக்கேற்ப நடப்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள்.

அதாவது விசுவசித்து அதன்படி நடப்பவர்கள் நித்தியத்திற்கும் இறைவனோடு வாழ்வார்கள்.
இது மோட்ச நிலை.

 இறைவன் தன்னையே "ஒளி" என்று குறிப்பிடுகிறார்.

சுருக்கமாக இயேசு தீர்ப்பிடுவதுமில்லை தண்டிப்பதும் இல்லை.

இந்த உண்மையை இயேசு 
நிக்கொதேமுவிடம் கூறுகிறார்.

அதன் மூலம் நம்மிடமும் கூறுகிறார்.

தண்டிக்கவே முடியாத அளவிற்கு நம்மை அன்பு செய்கிற இறைவனைப் புரிந்து கொண்டவர்கள் பாவமே செய்ய மாட்டார்கள்.

''மகனே, உன்னைப் படைத்த எனக்கு உன்னை அன்பு செய்யவும், மன்னிக்கவும் மட்டும்தான் தெரியும்.

தீர்ப்பிடவோ, தண்டிக்கவோ தெரியாது.

நீ பாவம் செய்யும்போது நீயாகவே என்னை விட்டு பிரிந்து செல்கிறாய்.

 நானே உனக்குத் தந்த சுதந்திரத்தில் நான் தலையிடுவது இல்லை.

பிரிந்து சென்ற உனது வரவுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறேன்.

உனக்காக நான் விடுக்கும் அழைப்பே எனது அருள்.

எனது அருளை ஏற்று உன் பாவத்திற்காக மனம் வருந்தி என்னிடம் திரும்பி வா.

உன்னை அழைத்துச் செல்லவே உன் உருவத்தை எடுத்து, பூலோகத்திற்கு வந்திருக்கிறேன்.

 நீ செய்யவேண்டிய பாவப் பரிகாரத்தை நானே என் உயிரைக் கொடுத்து செய்திருக்கிறேன். 

வா, என்னைத்தேடி என்னிடம் வா.

நித்தியத்திற்கும் என் அரவணைப்பில் உன்னை வைத்திருப்பேன்."

 என்று நம்மை இயேசு அழைக்கிறார்.

அழைப்பை ஏற்று அவரிடம் செல்வோம்.

லூர்து செல்வம்.

Friday, November 20, 2020

*அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே*(லூக். 1:28)(தொடர்ச்சி)

http://lrdselvam.blogspot.com/2020/11/128_20.html


*அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே*
(லூக். 1:28)
(தொடர்ச்சி).



நாம் அன்னை மரியாளின் செல்லப் பிள்ளைகள்.

நாம் எதற்காக படைக்கப்பட்டிருக்கிறோம் என்பது நம் அன்னைக்கு நன்கு தெரியும்.

நாம் நமது நோக்கத்தை அடைய நமக்கு உதவி செய்வதே நம் அன்பு அன்னையின் தலையாய பணி.

அதற்காகவே நம் அன்னை தன்னுடைய மைந்தனிடம் நமக்காக பரிந்து பேசிக் கொண்டிருக்கிறாள்.

இறைவனின் அன்னையாக தன்னுடைய கடமைகளை செவ்வனே நிறைவேற்றிய மரியாள்

 இன்று திருச்சபையின் அன்னையாக தன்னுடைய கடமைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறாள்.

ஆதித் திருச்சபையில் அப்போஸ்தலர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர் நம் அன்னையே.

இன்று அப்போஸ்தலர்களின் வாரிசுகளுக்கு வழிகாட்டியாக இருப்பவள் அவள்தான்.

நம்மையும் வழி நடத்துபவள் அவள்தான்.


அம்மா உணவு தயாரித்து dining table மேல் சாப்பாட்டை வைப்பதால் மட்டும்
நமது வயிறு நிறைந்துவிடாது. 

 அம்மா தயாரித்த உணவை சாப்பிட்டால்தான் நமது வயிறு நிறையும்.

ஆசிரியர் நமக்கு பாடம் நடத்துவதால் மட்டும் அறிவு வந்துவிடாது.

நாம் படித்தால் மட்டுமே நமது அறிவு வளரும்.

அது போலவே நாம் எந்த அளவுக்கு அன்னையின் வழி நடத்துதல்படி நடக்கிறோமோ அந்த அளவுக்கு அவளுடைய உதவி பயன் தரும்.

நம் மக்கள் எல்லோரிடமும் மாதா பக்தி மிகுதியாக இருக்கிறது.

பக்தி என்றால் அன்பு, பாசம்.

அம்மாவை நேசித்தால் மட்டும் போதாது 

அவளது நற்குணங்களை 
நம்மவை ஆக்கி,

அவளைப் போலவே வாழ வேண்டும்.

இறைவன் தன் அன்னைக்கு அருள் வரங்களைக் கொடுத்தது போலவே நமக்கும் தருகிறார்.

 அவை நம் வாழ்வில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றன?


தெருவழியே போகும் ஒருவரைக் கூப்பிடுகிறோம்.

அவர் திரும்பி பார்த்தால் நமது குரல் அவரிடம் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திரும்பி நம்மிடம் வந்தால் நல்ல
மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால் அவர் திரும்பியே பார்க்காவிட்டால் நமது குரலை அவர் மதிக்கவில்லை என்று அர்த்தம்.

அதேபோல்தான் இறைவன் நமக்கு அருளும் அவரது அருளை ஏற்று 

அவரிடம் சென்றால் நாம் அருளுடன் ஒத்துழைக்கிறோம்.

 அதைப் பொருட்படுத்தாமல் போன போக்கிலேயே போனால் நாம் ஒத்துழைக்கவில்லை.

இலையில் வைத்த சோற்றை உண்டபின் அடுத்து சோறு வரும்.

வைத்ததைச் சாப்பிடாமல் இருந்தால்?

வரும் அருளை பயன்படுத்தினால் அருள் வெள்ளம் தொடர்ந்து வரும்.

வந்ததையே பயன்படுத்தாவிட்டால்?

நமது அன்னை இறையருளை முழுமையாக பயன்படுத்தியது போல

 நாமும் நமது வாழ்வில் பயன்படுத்தினால்தான் நாம் அன்னையைப் போல் வாழ்கிறோம் என்று பொருள்.

அன்னையின் திருத்தலங்களுக்குச் சென்று வருவதால் மட்டும் அன்னை வழி நடக்கவில்லை.

அன்னையைப்போல இறை அருளோடு ஒத்துழைத்து வாழும் போதுதான் அன்னை வழி நடக்கிறோம்.

ஒரு தந்தைக்கு ஐந்து பிள்ளைகள் என்று வைத்துக் கொள்வோம்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தேவைகள் இருக்கும்.

அவரவருக்கு என்ன தேவையோ அதையே தந்தை கொடுப்பார்.

கல்லூரியில் படிக்கும் பிள்ளைக்கு வாங்கிக் கொடுக்கும் அதே புத்தகங்களை முதல் வகுப்பில் படிக்கும் பிள்ளைக்கு கொடுக்க மாட்டார்.


அதேபோல்தான் நமது விண்ணகத் தந்தையும் யார் யாருக்கு என்னென்ன வரம் வேண்டுமோ அவரவருக்கு அந்தந்த அருள் வரத்தைக் கொடுப்பார். 

இறைவன் கொடுத்த வரத்தோடு ஒத்துழைத்தால் போதுமானது,

இயேசு உடலால் பட்ட வேதனைகளை போலவே மரியாள் உள்ளத்தில் வியாகுலங்களை அனுபவித்தாள்.

அவளது வியாகுலங்களைத் தாங்கிக்கொள்ள நிறைவான அருள் தேவைப்பட்டது.

 நமது சிலுவையை சுமக்க நமக்கு எவ்வளவு அருள் வேண்டுமோ அவ்வளவு நமக்குத் தரப்படும்.

தரப்படுவதோடு ஒத்துழைத்தால் சிலுவையைச் சுமக்க இலேசாக இருக்கும்.

 ஒத்துழைக்காவிட்டால் சுமக்க முடியாத அளவிற்கு கனமாக தெரியும்.


நிறைவு (Perfection) எதில் அடங்கி இருக்கிறது?

இறைவனது சித்தத்தை முழுமையாக நிறைவேற்றுவதில் நிறைவு அடங்கி இருக்கிறது.

இறைவன் தரும் அருளுக்கு முழுமையான ஒத்துழைப்பைக் கொடுத்தால் நாம் அவரது சித்தத்தை முழுமையாக நிறைவேற்றுகிறோம். 

நாம் ஒவ்வொருவரும் தனித்துவம் வாய்ந்தவர்கள்.
Each of us is unique.

உலகில் வாழ்ந்த, வாழ்கிற, வாழப்போகிற கோடிக்கணக்கான மக்களில் 

 ஒருவரை போல் இன்னொருவர் இருக்க முடியாது.

உலகில் உள்ள அனைவரும் இறைவனது உள்ளத்தில் நித்திய காலமாக எண்ணமாக (idea) இருந்தோம்.

ஒவ்வொருவரும் எப்போது, எங்கு, எந்த சூழ்நிலையில் பிறக்க வேண்டும் என்று நித்திய காலமாக இறைவன் திட்டமிட்டிருக்கிறார்.

அவரது திட்டப்படி தான் பிறக்கிறோம், வளர்கிறோம்.

அவருடைய மீட்புத் திட்டத்தில் மரியாளைப் போலவே நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உண்டு.

நாம் நம் அன்னையைப் பின்பற்றி வாழ்ந்தால் .
.
நமது மீட்புக்காக மட்டுமல்ல, உலகு அனைத்தின் மீட்புக்காகவும் 

நாம் ஆற்ற வேண்டிய பணியை ஆற்றிய பெருமை பெறுவோம்.

இயேசுவை வளர்க்கும்போது அன்னையிடம் இருந்த அதே மனநிலை, மனோபாவம், குணங்கள் எல்லாம் நம்மிடமும் இருக்கும்.


 இவை நம்மை மட்டுமல்ல, நம்மை சுற்றி இருப்போரையும்
இறைவனுக்கு பிடித்தபடி ஆன்மீகத்தில் வளரச் செய்யும்.    

நம் அன்னையின் குணங்கள் அதிகமதிகமாய் இறைவனது அருளை ஈட்டும் சக்தி வாய்ந்தவை.

அன்னையின் ஆன்மா இறைவன் தனது அருள் விதைகளை விதைக்கத் தகுந்த பக்குவமான, வளமான நிலம் போன்றது.

வளமான நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகள் ஒன்றுக்கு நூறு பலன் தருவது போல 

அன்னையின் ஆன்மாவில் விதைக்கப்பட்ட அருள் விதைகளும் ஒன்றுக்கு நூறாய் இறையருளை ஈர்த்துக் (attract) கொண்டே இருக்கும். 

அதே போல் தான் அன்னையைப் போல் வாழும் அனைவரும் தங்களுக்கும் மற்றவர்களுக்கும் தேவையான அருள் வரங்களை இறைவனிடமிருந்து பெற்றுக் கொண்டே இருப்பார்கள்.

இயேசுவின் மீட்புத் திட்டத்தில் மரியாளைப் போல பங்கெடுப்பவர்களாய் மாறுவார்கள்.

இயேசுவைப் போலவே பாடுபடவும், மரிக்கவும் தயாராக இருப்பார்கள்  


நாம் எல்லோரும் கிறிஸ்துவின் ஞான உடலின் உறுப்புக்கள்.

உடலின் ஒவ்வொரு உறுப்பும் மற்ற உறுப்புகளோடு பிரிக்க முடியாத தொடர்பு உள்ளது.

ஒரு உறுப்பு பெரும் நன்மையால் அனைத்து உறுப்புகளும்
 பயன்பெறுகின்றன.

ஒரு உறுப்பு பாதிப்பு அடையும்போது எல்லா உறுப்புகளும் பாதிப்பு அடைகின்றன.

அன்னை மரியின் அருள் வரங்களாலும், அவளைப் பின்பற்றி வாழ்ந்த புனிதர்களின் அருள் வரங்களாலும் நாம் அனைவரும் பயன் பெறுகிறோம்.

 அன்னையையும் புனிதர்களையும் எவ்வளவுக்கு எவ்வளவு நெருங்கி வாழ்கின்றோமோ

 அவ்வளவுக்கு அவ்வளவு அவர்களிடமிருந்து நாம் பெரும் ஆன்மீக பலனும் அதிகரிக்கும். 

நாம் பெறும் அருள் வரங்களால் நம்மைச் சுற்றியிருப்போரும் பயன் பெறுவர்.

அதனால் தான் நல்லவர்களோடு நட்போடு வாழ்பவர்கள் நல்லவர்களாக மாறுகிறார்கள்.

தீயவர்களோடு நட்போடு வாழ்பவர்கள் தீயவர்களாக மாறுகிறார்கள்.

நாம் நமக்கு வரும் அருள் வரங்களைத் தேக்கி வைக்கும் குளங்கள் அல்ல,

அவற்றை மற்றவர்களுக்கும் எடுத்துச் செல்லும் வாய்க்கால்கள்.

நமக்கு இறைவன் தரும் அருள் வரங்களைப் பயன்படுத்தி

 நல்லன செய்யும்போது,

 அவற்றைப் பார்ப்போரும் இயல்பாகவே நல்லதை நினைத்து, நல்லதை செய்வார்கள்.

 நம்முள் இருக்கும் இறைவனது அருள்வரம் நம்மை சுற்றியுள்ளோருக்கும் பயன் கொடுக்கும்.

இறையருள் நம்முள் செயல் படும்போது நமது சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றில் இறைவனது பிரசன்னம் இருக்கும்.

இறைவனை மற்றவர்களுக்கு அறிவிக்கும் அவரது பிரதிநிதிகளாகவும் கருவிகளாகவும் நாம் மாறுவோம்.

நாம் விண்ணகம் செல்லும் போது தனியாக செல்வதில்லை. நமது நல்ல செயல்களால் பயன்பெறுவோரும் நம்முடன் வருவர்.

நட்சத்திரம் தனது கோள்களுடன் விண்வெளியில் பயணிப்பது போல

 நாமும் நமது அருள் உறவினர்களோடு விண்ணகத்தில் நுழைவோம்.

நமக்குள் இருந்து பிரகாசிக்கும் இறையருள் ஒளியில் 

நமது குடும்பத்தினரும், நண்பர்களும், சமூகத்தினரும் விண்ணகம் நோக்கி நம்மோடு பயணிப்பர்.   

இயேசுவைப் பெற்றவள் மரியாள் மட்டும்தான்,

 ஆனால் அவளோடு அவளைச் சுற்றியிருந்த பெண்களும் இயேசுவின் சீடத்திகளாக மாறினர். 

அவர்கள் தான் இயேசு சிலுவையில் தொங்கும் போது அவரைப்பார்த்து அழுதுகொண்டு நின்றார்கள்.


"கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்தொடர்ந்து அவருக்குப் பணிவிடை புரிந்த பெண்கள் பலர் அங்கே இருந்தனர். தொலைவில் நின்றே பார்த்துக்கொண்டு இருந்தனர்.

 அவர்களுள் மதலென் மரியாளும், யாகப்பர், சூசை ஆகியவர்களின் தாயான மரியாளும், செபெதேயுவின் மக்களின் தாயும் இருந்தனர்."
(மத்.27:55,56)

நாமும் நமது அன்னையைப் பின்பற்றி நம்மோடு விண்ணகம் செல்ல 

இறை அருளின் உதவியால் ஆட்களைச் சேர்ப்போம்.

நாம் வணங்கும் புனிதர்கள் யாவரும் தங்களது வாழ்நாளில் நமது அன்னையைப் பின்பற்றியவர்களே.

நாமும் நமது அன்னையைப் பின்பற்றுவோம், புனிதர்களாக மாறுவோம்.

லூர்து செல்வம்.

Thursday, November 19, 2020

*அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே*(லூக். 1:28)

http://lrdselvam.blogspot.com/2020/11/128.html


*அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே*
(லூக். 1:28)



நாம் புத்தியுள்ள மனிதர்கள்.

 புத்தியுள்ளவர்கள் எதைச் செய்தாலும் அதற்கு ஒரு நோக்கம் இருக்கும்.

நமது நோக்கம் நிறைவேறுகிறதா நிறைவேறவில்லையா என்பது வேறு விஷயம்.

ஆனால் நோக்கமின்றி எதையும் செய்ய மாட்டோம்.

ஏனெனில் நாம் இறைவனின் சாயலில் படைக்கப்பட்டவர்கள்.

நோக்கத்தோடு செயல்படும் குணமும் நமக்கு இறைவனிடமிருந்து கிடைத்தது தான்.

இறைவன் உலகையும் உலகில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும், வாழும் ஒவ்வொரு பிராணியையும் ஒரு நோக்கத்தோடுதான் படைத்தார்.

மனிதனைக் தவிர எல்லா உயிருள்ள, உயிரற்ற பொருள்களும் இறைவனது நோக்கப்படி செயல்படுகின்றன.

 அவை இறைவனின் நோக்கத்திற்கு எதிராக செயல்பட முடியாது.

 ஏனெனில் அவற்றுக்கு இறைவன் புத்தியையோ சுதந்திரத்தையோ கொடுக்கவில்லை.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களும் அவற்றை வலம் வரும் கோள்களும் இயற்கை விதிப்படி இயங்கி வருகின்றன. 

இயற்கை விதிகளுக்கு மாறாக அவற்றால் இயங்க முடியாது.

பரிபூரண சுதந்திரத்தோடு நித்திய காலமாய் வாழும் இறைவன் மனிதனை மட்டும் தன் சாயலில் படைத்தார்.

தன்னுடைய எல்லாம் பண்புகளையும் மனிதனோடு பகிர்ந்து கொண்டார்.

அவற்றில் மிக முக்கியமான பண்பு பரிபூரண சுதந்திரம். (Free will) 

ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடுதான் கடவுள் மனிதனைப் படைத்தார்.

மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கத்தை அவனுடைய பரிபூரண சுதந்திரத்தைப் பயன்படுத்தி அடைய வேண்டும்.

மனித சுதந்திரத்திற்குள் இறைவன் குறுக்கிட மாட்டார்.

அவர் மனிதனை படைத்த நோக்கம்:

 அவரை அறிந்து,

 அவரை நேசித்து

 அவருக்காக வாழ்ந்து,

 அவரோடு நித்திய காலமாக இணைந்து வாழ வேண்டும்.

We should know Him,

 love Him,

 serve Him

and

live in union with Him for all eternity.

ஆனால் இறைவனது உதவி இன்றி அவரது நோக்கப்படி மனிதனால் வாழ முடியாது.

ஆனாலும் இறைவன் தனது உதவியைத் தாராளமாக அளித்துக் கொண்டிருக்கிறார்.

மனிதன் தன் சுதந்திரத்தை சரியாக பயன்படுத்தவும் இறைவனது நோக்கப்படி வாழவும் இலவசமாக சகல உதவிகளையும் அளித்துக் கொண்டிருக்கிறார்.

அவர் அளிக்கும் உதவியை அருள் (Grace) என்கிறோம்.

இறையருளின் உதவியைக் கொண்டுதான் 

நாம் நமது சுதந்திரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும்,

 அவரை அறிய வேண்டும்,

 அவரை நேசிக்க வேண்டும்,

 அவருக்காக வாழ வேண்டும்,

 நித்தியத்திற்கும் அவரோடு இணைந்து வாழ வேண்டும்.

இறைவன் தரும் அருளை பயன்படுத்தாதபோதுதான் நாம் பாவம் செய்ய நேர்கிறது.

இறையருளை பயன்படுத்துவோர் பாவமாசின்றி வாழ்வர்.

எந்த அளவிற்கு இறையருளை பயன்படுத்துகிறோமோ அந்த அளவிற்கு நமது பாவ மாசற்ற தன்மையும் இருக்கும்.

இறைவன் மரியாளை படைத்ததன் நோக்கம் 

 அவர் மனித உரு எடுக்கும்போது அவள் அவரது அன்னையாகச் செயல்பட வேண்டும் என்பதுதான். 

இறைத்தூதர் மரியாளிடம் மங்கள வார்த்தை சொன்னபோது

அவள் அவளுடைய முழு சுதந்திரத்தைப் பயன்படுத்தி

 இறை மகனுக்கு மனித சுபாவத்தில் தாயாக இருக்க சம்மதம் தெரிவித்தார்.

 முழு மன சம்மதத்துடன் தன் சுதந்திரத்தையே இறைவனுக்கு காணிக்கையாக சமர்ப்பித்துவிட்டு அவரது அடிமையாக மாறினார்.

"இதோ! ஆண்டவருடைய அடிமை. உமது வாத்தையின்படியே எனக்கு ஆகட்டும்" 



மரியாள் சம்மதிப்பாள் என்று இறைவனுக்கு நித்திய காலமாகவே தெரியுமாகையால் 

அவள் ஜென்ம பாவமாசின்றி உற்பவித்த வேண்டும் என்றும்,

 அவள் அருள் நிறைந்தவளாய் இருக்க வேண்டும் என்றும்

 இறைவன் நித்திய காலமாகவே தீர்மானித்து விட்டார்.

ஆகவேதான் அவள் தன் தாயின் வயிற்றில் உற்பவிக்கும் போதே
ஜென்மப் பாவமாசின்றி, 

 அருள் நிறைந்தவளாய் உற்பவித்தாள்.

ஆகவேதான் கபிரியேல் இறைத்தூதர் மரியாளை 

"அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே " 


என்று வாழ்த்தினார்.

ஆண்டவரது அருளோடு மரியாள் முழுமனதோடு ஒத்துழைத்ததால்

   அவள் வாழ்நாள் முழுவதும் பாவமாசின்றி 

 முழுமையான பரிசுத்தத்ததனத்தோடு வாழ்ந்தாள்.

நமது அன்னை இறைவன் சித்தத்தையே தன் சித்தமாக ஏற்றுக்கொண்டு,

இறைவன் அவளுக்கு அளித்திருந்த நிறைவான அருளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வாழ்ந்தாள்.

ஆண்டவரது அன்னையாக வாழ வேண்டும் என்று அவளுக்கு கொடுக்கப்பட்டிருந்த அழைப்புக்கு (vocation) ஏற்றவாறு

 தன் வாழ்நாள் முழுவதும் முழுமையான இறை அருளோடு வாழ்ந்தாள்.

ஆண்டவரது அன்னையாக வாழ்ந்ததால் மட்டுமல்ல ,

அவரது மிகச் சிறந்த சீடத்தியாக
(most perfect disciple) வாழ்ந்தாள்.



இயேசு செய்தி அறிவித்துக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் ஒரு பெண் அவரை நோக்கி,

" உம்மைத் தாங்கிய வயிறு பேறுபெற்றது" என்று சொன்னபோது,

இயேசு,

"ஆயினும் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டுக் கடைப்பிடிப்பவர்கள் அதிலும் பேறுபெற்றவர்கள்"

என்றார்.

அன்னை மரியாள் மற்ற எல்லோரையும் விட மிகச் சிறப்பாக கடவுளுடைய வார்த்தையைக் கேட்டுக் கடைப்பிடித்தாள்.


அன்னை இயேசுவின் தாயாக இருக்க சம்மதித்ததே கடவுளுடைய வார்த்தையைக் கேட்டுக் கடைப்பிடிப்பதற்காகத்தான்.

மரியாள் தனது தாயாக இருந்ததை விட,

இறை சித்தப்படி வாழ்ந்ததைத்தான் பெருமையாக பேசுகிறார் இறைமகன். 


 "கடவுளுடைய வார்த்தையைக் கேட்டுக் கடைப்பிடித்ததால்தான் என் அன்னை பேறுபெற்றவர்கள்" என்பது இயேசுவின் கருத்து.

மரியாள் தனது தாயாக இருந்ததை இயேசு குறைத்துப் பேசவில்லை.

அவளுடைய முழுமையான சீடத்துவ வாழ்க்கையை பெருமையாக பேசுகிறார்.


இறைமகன் தனது அன்னையை நமக்கு முன்மாதிரிகையாகத் தந்திருக்கிறார்.

இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது தனது அன்னையிடம் ஒப்படைத்தது அருளப்பரை மட்டுமல்ல,

 தன்னுடைய மற்ற சீடர்களையும் நம்மையும்தான். 

ஆகவே மரியாள் இயேசுவுக்கு மட்டுமல்ல 

அவரது ஞான உடலாகிய திருச்சபைக்கும் தாய்.


மாதா நமது தாய் மட்டுமல்ல நமது பாதுகாவலியும் முன்மாதிரியும் அவள்தான்.

தாயை போல் பிள்ளை.

அன்னை மரியாளிடம் இருந்த அத்தனை குணங்களும் நம்மிடமும் இருக்க வேண்டும். 

அவளுடைய அர்ப்பண வாழ்வு,
தாழ்ச்சி, 
இயேசுவின் மேல் அவளுக்கு இருந்த அளவுகடந்த அன்பு, சிலுவைகள் நிறைந்த வாழ்வு, இறைச்சித்தத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிதல் 
போன்ற எல்லா நற்பண்புகளும் அவருடைய பிள்ளைகளாகிய நம்மிடமும் இருக்க வேண்டும்.

நாம் இந்த பண்புகளோடு வாழ்ந்தால்தான்,

"அருள் நிறைந்த மரியே வாழ்க." என்று வாழ்த்த நமக்குத் தகுதி இருக்கும்.

 நமது அன்னையை நாம் போற்ற வேண்டும்.

அவளிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

அவளைப் பிரதிபலிக்க வேண்டும்.

அன்னையைப் பிரதிபலிப்பவன் தான் அவளது பிள்ளை என்று அழைக்கப்பட தகுதி உள்ளவன்.

இறைவனுடைய படைப்புகளில் மிக மேலான படைப்பு அன்னை மரியாள்தான்.

மனிதர்களில் "அருள் நிறைந்து" வாழ்ந்தவள் அவள் ஒருவர் தான்.


"உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்" (மத். 5:48)

என்ற நமது ஆண்டவரின் அறிவுரைக்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவர் அன்னை மட்டுமே.

நாமும் அப்படியே வாழ வேண்டுமென்றால் அதற்காக நம் அன்னையின் ஜெப உதவியை நாட வேண்டும்.

நாம் தினமும் ஜெபமாலை சொல்வது அதற்காகத்தான்.

 அன்னையின் உதவியோடு நாம் நிறைவை நோக்கி பயணிக்க வேண்டும்.

இயேசுவையே வளர்த்தவள் அவள்தான்.

நாமும் அவளது கரங்களில் வளர்ந்தால்தான் இயேசுவைப்போல் மாற முடியும்.

நாம் யாருடன் அதிகம் பழகுகிறோமோ அவர்களின் பண்பு நம்மையும் பற்றிக் கொள்ளும்.

நமது அன்னையின் பண்புகளை தியானித்துக் கொண்டு,

 அவளோடு பிள்ளைக்கு உரிய பாசத்தோடு நெருங்கி வாழ்ந்தால் 

அவளது பண்பு நலன்கள் நம்மை அறியாமலே நம்மைப் பற்றிக்கொள்ளும்.

 பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்.

அருளால் நிறைந்தவளின் பாதுகாப்பில் நாம் இருந்தால்

நமக்குள்ளும் அருள் வெள்ளம் பாய்ந்து கொண்டிருக்கும்.

ஆற்றங்கரையில் உள்ள மரங்களுக்கு தாராளமாக தண்ணீர் கிடைப்பது போல 

அருள்நிறை அன்னையின் அரவணைப்பில் நாம் இருந்தால் நமக்கும் அருள்வளம் தாராளமாக கிடைக்கும்.

நாமும் ஆன்மீகத்தில் செழித்து வளர்வோம்.

பிள்ளைகளாகிய நம்மீது அளவற்ற பாசம் கொண்டவள் நமது அன்னை.

கோழி தன் குஞ்சுகளைக் கவனித்துக் கொண்டிருப்பது போல 

நம்மை இரவும் பகலும் கவனித்துக் கொண்டிருப்பவள் நமது அன்னை.

(தொடரும்)

லூர்து செல்வம்.