இறைப் பிரசன்னத்தில் வாழ்வதுதான் செப வாழ்வு.
(தொடர்ச்சி)
"நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது." (அரு.15:5)
"உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.''
என்று சொன்ன இயேசு,
"நான் திராட்சைச் செடி, நீங்கள் அதன் கொடிகள்.'' என்றும் சொல்கிறார்.
தந்தையின் பண்புகளை மக்களும் பெற்றிருப்பர்,
செடியில் இருக்கும் சத்துக்களைக் கொடிகளும் பெற்றிருக்கும்.
செடி வேர்கள் மூலமாக நிலத்திலிருந்து சத்துக்களை எடுத்து கொடிகள் மூலமாக கனிகளுக்கு அனுப்பும்.
கொடிகளில்தான் திராட்சை காய்த்துப் பழுக்கும்.
இறைமகன் இயேசு தனது சீடர்களின் மூலமாகத்தான், அதாவது, நமது மூலமாகத்தான் தனது மீட்புச் செய்தியை உலகெங்கும் அறிவிக்கிறார்.
அவர் நம்முள்ளும், நாம் அவருள்ளும் இருந்தால் தான் நற் செய்தி அறிவிப்பு நடக்கும்.
நமது வாழ்வு = நற் செய்தி அறிவிப்பு.
வாழ்வு சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றின் கணம்.
சிந்தனையில் ஆரம்பத்து சொல் வழியாக செயலில் இறங்குவது தான் நற் செய்தி அறிவிப்பு வாழ்வு.
சிந்தனை என்றால் தியானம், எண்ணிப் பார்த்தல்.
தியானம் இன்றி ஆன்மீக வாழ்வு இல்லை.
துவக்க நிலையில் உள்ள ஆன்மீக வாழ்வுக்கு சாதாரண தியானம் போதும்.
ஆனால் ஆழமான ஆன்மீக வாழ்வுக்கு ஆழ்நிலைத் தியானம் (Contemplation) அவசியம்.
ஆழ்நிலைத் தியானம் தியானம் என்றால்?
கடலில் குளிப்பவர்கள் கடலில் இறங்கினால் போதும்.
ஆனால் முத்து எடுக்க விரும்புபவர்கள் கடலின் ஆழத்துக்கு மூழ்க வேண்டும்.
அப்படியே ஆழமான விசுவாசத்தின் அடிப்படையில் வாழ விரும்புவர்கள் ஆழ்நிலைத் தியானத்தில் இறங்க வேண்டும்.
சாதாரண தியானத்தில் ஏதாவது ஒரு ஆன்மீக நிகழ்வை நினைப்போம்.
ஆனால் ஆழ்நிலைத் தியானத்தில் நம்மில் வாழும் அனைத்துக்கும் ஆதி காரணரான மூவொரு தேவனை உற்று நோக்க வேண்டும்.
நமது எண்ணம் ஒரு புள்ளியில் குவிய வேண்டும்.
அந்தப் புள்ளி பரிசுத்த தம திரித்துவக் கடவுளாக இருக்க வேண்டும்.
நமது சிந்தனை இறைவனில் நூற்றுக்கு நூறு குவிந்து விட்டால் நமது மனதில் திரி ஏக கடவுள் மட்டும் இருப்பார்.
அவரைத் தவிர வேறு எந்த எண்ணமும் துளி கூட இருக்காது.
ஐம்புலன்கள் அனைத்தும் ஆண்டவரில் குவிந்திருக்கும்.
நமது கண்களுக்கு புறத்தில் உள்ள எதுவும் தெரியாது.
நமது காதுகளுக்கு வேறு யார் பேசினாலும் கேட்காது.
வாய்க்கு வேறு எந்த ஒரு வேலையையும் இல்லை.
உடலில் தொடுதல் உணர்வே இருக்காது.
யாரும் நம்மை அடித்தால் கூட அதை உணர மாட்டோம்.
கடவுள், கடவுள், கடவுள் மட்டும் தான் நம்மில் இருப்பார்.
நமது சிந்தனை முழுவதிலும் தம திரித்துவக் கடவுள் மட்டும் வாழ்வார்.
நித்திய காலமும் தன்னை அறிந்து சிந்திக்கிற தந்தை,
நித்திய காலமும் தந்தையின் சிந்தனையில் பிறக்கிற வார்த்தை, மகன்,
தந்தையும் மகனும் நித்திய காலமும் செய்கிற அன்பு
ஆகிய கடவுள் கடவுள் நம்மில் நிறைந்து வாழும்போது நமது ஐம்புலன்களுக்கு கடவுள் மட்டுமே தெரியும்.
நமது அகத்தில் மட்டுமல்ல புறத்திலும் முழுமையாக கடவுள் நிறைந்திருப்பார்.
எந்தப் பொருள் கண்ணில் பட்டாலும் அதில் கடவுள் தான் தெரிவார்.
யார் கண்ணில் பட்டாலும் அவரிலும் கடவுள் தான் தெரிவார்.
உலகின் ஒவ்வொரு பொருளிலும் ஆளிலும் கடவுள் தெரிவதால் நம்மால் எல்லா பொருட்களையும்,
பிராணிகளையும், மனிதர்களையும் நேசிக்க மட்டுமே முடியும்.
இறைவனையும், அவரால் படைக்கப் பட்டவர்களையும்
நேசித்து வாழ்வதே செபவாழ்வு.
ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆழ் நிலைத் தியானத்தில் ஈடுபட்டால்
உலகப் பொருட்களை அநாவசியமாக அழிக்க மாட்டோம்,
யாரையும் பகைக்க மாட்டோம்,
யாருக்கும் தீங்கு செய்ய மாட்டோம்.
புனித பிரான்சிஸ் அசிசி மிருகங்களையும், பறவைகளையும் கூட சகோதர, சகோதரிகளாகக் கருதினார்.
இயேசு தன்னை முத்தமிட்டு காட்டிக் கொடுத்த யூதாசைக் கூட "நண்பனே" என்று தான் அழைத்தார்.
நமது உள்ளத்தில் மட்டுமல்ல உலகிலும் இறைவன் நிறைந்திருப்பதால்
படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களையும் இறைவனுள், இறைவன் மூலமாகவே பார்ப்போம்.
இறைவன் மூலமாகவே பார்ப்பதால் படைப்புகளிலுள்ள நன்மைகள் அனைத்தும் நமக்குத் தெரியும்.
அனைத்தையும் இறைவனில் இறைவனுக்காக நேசிப்போம்.
அன்பு மயமானவர் நம்மையும் அன்பு மயமானவர்களாக மாற்றி விடுவார்.
இனி அன்பு, அன்பு, அன்பு மட்டுமே நமது எல்லாமாக இருக்கும்.
அன்பு தான் செபம்.
நாமே செபமாக மாறிவிடுவோம்.
அதில் தானே பேரின்பம் இருக்கிறது.
செப வாழ்வு வாழும் போது விண்ணக வாழ்வை மண்ணகத்திலேயே ஆரம்பித்து விடுவோம்.
லூர்து செல்வம்.