Friday, March 31, 2023

"லாசரே, வெளியே வா"(அரு.11:43)

 "லாசரே, வெளியே வா"
(அரு.11:43)

"தாத்தா, இறந்த லாசரை இயேசு உயிர்ப்பித்த நிகழ்ச்சியை வாசிக்கும் போது 

நமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் இறைவனின் திட்டப்படி தான் நடக்கின்றது  என்பது உறுதியாகிறது."

"'தான் சர்வ வல்லமை வாய்ந்த இறைவனின் மகன் என்பதை மக்களுக்கு புரிய வைப்பதற்காக இயேசு செய்த புதுமைகளில் ஒன்று லாசரை உயிர்பித்தது.

லாசர் சுகம் இல்லாமல் படுத்ததிலிருந்து, இறந்து, உயிர்ப்பிக்கப்படும் வரை நடந்த எல்லா நிகழ்வுகளும் இயேசுவின் திட்டப்படி தான் நடந்தன.

இலாசர் சுகமில்லாமல் படுத்தவுடன் இயேசுவுக்குச் செய்தி அனுப்பப் படுகிறது.

அவர் நினைத்திருந்தால் இலாசருக்கு நோய் வராமலேயே தடுத்திருக்கலாம்.

ஒரு முறை இயேசுவிடம் சீடர்கள் பிறவிக் குருடன் ஒருவனைப் பற்றி,

"ராபி, இவன் குருடனாகப் பிறந்தது யார் செய்த பாவம்? இவன் செய்த பாவமா? இவன் பெற்றோர் செய்த பாவமா?" என்று  வினவினர்.

 இயேசு, "இவன் செய்த பாவமும் அன்று, இவன் பெற்றோர் செய்த பாவமும் அன்று. கடவுளுடைய செயல்கள் இவன் மட்டில் வெளிப்படும் பொருட்டே இப்படிப் பிறந்தான் என்று சொன்னார்.

அதேபோல லாசரின் சுகமின்மை கூட கடவுளின் மகிமையை வெளிப்படுத்துவதற்காகவே ஏற்பட்டது. 

அவனது சுகமின்மையைப் பற்றி கேள்விப்பட்டவுடன் இயேசு அவனைக் குணமாக்கவில்லை.

மாறாக  "இப்பிணி சாவில்வந்து முடியாது, கடவுளின் மகிமைக்காகவே இப்படி ஆயிற்று: இதனால் கடவுளுடைய மகன் மகிமை பெற வேண்டியிருக்கிறது" என்று சொன்னார்.

அதுமட்டுமல்ல செய்தி கிடைத்த ஊரிலேயே இரண்டு நாள் தங்கிவிட்டார்.

அதாவது லாசர் சாவதற்கு நேரம் கொடுத்தார்.

இரண்டு நாள் கழித்துதான் பெத்தானியாவுக்குப் புறப்பட்டார்.

அங்கு போகுமுன் லாசர் இறந்து அவனை அடக்கம் செய்து விட்டார்கள்.

"உங்களுக்கு விசுவாசம் உண்டாகும் என உங்கள்பொருட்டு, நான் அங்கு இல்லாமற்போனதுபற்றி மகிழ்கிறேன். வாருங்கள், அவனிடம் செல்வோம்".

என்று இயேசு சீடர்களிடம் கூறினார்.

அங்கு சென்ற பின் கல்லறையை  மூடியிருந்த கல்லை அகற்றச் சொல்லிவிட்டு, 

உரத்த குரலில், "லாசரே, வெளியே வா" என்றார்.

என்றதும் இறந்தவன் வெளியே வந்தான். 

அவனுடைய கை கால்கள் துணியால் சுற்றிக் கட்டுண்டிருந்தன.

 அப்போது இயேசு, "கட்டவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்" என்றார்.

நடந்ததை பார்த்தவர்கள் அவர் மீது விசுவாசம் கொண்டார்கள்.

அவர் சர்வத்தையும் படைத்த கடவுள்.

லாசரையும், அவனது சகோதரிகளையும்,

லாசர் உயிர்பெற்ற நிகழ்ச்சியைப் பார்த்த மக்களையும் படைத்தவர் அவர்தான்.

அனைவரையும் ஒவ்வொரு வினாடியும் பராமரித்து வருபவர் அவர்தான்."


"தாத்தா, இயேசு லாசரின் வாழ்வில் திட்டமிட்டது போல்தானே நமது வாழ்விலும் திட்டமிட்டிருப்பார்?"

"'நிச்சயமாக. அதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் பரிசுத்த ஆவியின் தூண்டுவதால் நற்செய்தியாளர் இந்த நிகழ்ச்சியை எழுதி வைத்துள்ளார்.

பைபிளை வாசிக்கும் போது கதை வாசிப்பதுபோல் வாசிக்கக் கூடாது.

ஒவ்வொரு இறைவாக்கையும் ஆழ்ந்த தியானத்தோடு,

அதை நமது வாழ்வாக்கும் நோக்கத்தோடு வாசிக்க வேண்டும்.

அப்படி வாழ்த்தால் நமது வாழ்க்கையைப் பற்றிய நமது கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும்.

"இதோ ஆண்டவருடைய அடிமை" என்று அன்னை மரியாள் கூறியது போல,

நாமும் நம்மை ஆண்டவருடைய அடிமைகளாக ஒப்படைத்துவிட்டு,

ஒவ்வொரு வினாடியும் அவருடைய தூண்டுதலின்படி வாழ்க்கையை வாழ்வோம்.

என்ன நடந்தாலும் அவருடைய சித்தப்படி நமது நன்மைக்காகவே நடக்கும்.

நோய் நொடிகள் வந்தாலும் அவற்றை ஆண்டவர் அவரது சீடர்களாகிய நாம் சுமப்பதற்காக அனுப்பிய சிலுவைகளாக ஏற்றுக் கொள்வோம்.

எந்த எதிர்மறை எண்ணமும் நம்மை இயேசுவிடமிருந்து பிரிக்காது.

மரணமே வந்தாலும் பயப்படாமல் ஏற்றுக் கொள்வோம்.

ஏனெனில் அதுதான் நமது நித்திய பேரின்ப வாழ்வுக்கான வாசல்."

"உண்மைதான், தாத்தா.
தாயின் இடுப்பில் அமர்ந்து கொண்டு பயணிக்கும் குழந்தை எதைப் பற்றியும் பயப்படாது.

நாமும் நம்மை படைத்தவரின் இடுப்பில் அமர்ந்து கொண்டுதான் பயணிக்கிறோம்.

இவ்வுலகில் வாழ்ந்தாலும், மறு உலகத்துக்கு சென்றாலும் அவரோடுதான் இருப்போம்.

வாழ்க்கையை பற்றிய கவலை இல்லாமல் இயேசுவின் சொற்படி நடப்போம்.

இருந்தாலும், இறந்தாலும் நாம் இறைவனின் கையில்."

லூர்து செல்வம்.

Thursday, March 30, 2023

"உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஒருவன் என் வார்த்தையைக் கடைப்பிடிப்பானாகில் என்றுமே சாகான்" என்றார்."(அரு.8:51)

"உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஒருவன் என் வார்த்தையைக் கடைப்பிடிப்பானாகில் என்றுமே சாகான்" என்றார்."(அரு.8:51)

"தாத்தா, இயேசுவின் வார்த்தையைக் கடைப்பிடிப்பவன் என்றுமே சாக மாட்டான் என்று இயேசு சொல்லியிருக்கிறாரே,

அன்னை மரியாள் முதல் அனைத்து புனிதர்களுமே இறந்து விட்டார்களே!"


"தம்பி, இறைவாக்கு ஆன்மீகத்தைச் சேர்ந்தது.

இறைவன் நம்மை ஆன்மாவோடும், உடலோடும் படைத்து இவ்வுலகத்தில் விட்டிருந்தாலும்,

அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது  உலகியல் வாழ்க்கையை அல்ல,

சிறந்த ஆன்மீக  வாழ்க்கையைத் தான்.

இறைவாக்கு நமது ஆன்மீக வாழ்க்கையைப் பற்றி மட்டுமே அறிவுரை கூறும்.

மனிதனுடைய உடலுக்கு வாழ்வும் ,  மரணமும் இருப்பது போலவே, 

அவனுடைய ஆன்மாவுக்கும்  வாழ்வும் உண்டு,  மரணமும் உண்டு.

உடலோடு ஆன்மா இருக்கும்போது உடல் வாழ்கிறது, ஆன்மா பிரியும்போது உடல் சாகிறது.

ஆன்மா தேவ இஸ்டப் பிரசாத நிலையில், அதாவது இறை உறவோடு இருக்கும்போது உயிர் வாழ்கிறது,

இஸ்டப் பிரசாதத்தை இழக்கும்போது அதாவது இறை உறவை இழக்கும்போது மரிக்கிறது.

சாவான பாவம்தான் ஆன்மா மரிக்க காரணமாகிறது.

ஒருவன் உடலளவில் உலகில் உயிர் வாழ்ந்தாலும்,  

சாவான பாவத்தோடு வாழ்ந்தால் ஆன்மீகத்தில் இறந்த ஆன்மாவோடுதான் வாழ்கிறான்.

செய்த பாவத்திற்காக மனஸ்தாபப்பட்டு,

நல்ல பாவசங்கீர்த்தனம் செய்யும் போது,

பாவம் மன்னிக்கப்படும், மரித்த ஆன்மா உயிர்பெறும், இறை உறவு திரும்பக் கிடைக்கும்.

இறைவனது வார்த்தைகளைக் கடைப் பிடித்து வாழ்பவன் வாழ்வில் சாவான பாவம் புகாது.

ஆன்மீக ரீதியாக அவன் சாகமாட்டான்.

உடல் ரீதியாக அவன் மரணமடைந்தாலும், 

ஆன்மீக ரீதியாக அவன் என்றென்றும் வாழ்வான்.

இதைத்தான் நிலை வாழ்வு என்கிறோம்."

"இறைவனுக்கும், நமக்கும் உள்ள உறவைத்தானே இறை உறவு என்கிறோம்."

"'ஆமா."

"இறைவன் மாறாதவர் ஆச்சே. இறை உறவு எப்படி மாறும்?"

"'இறைவன் மாறாதவர். அவரது உறவு, 

அதாவது, இறைவன் நம்மீது கொண்டுள்ள அன்பு

என்றென்றும் மாறாது.

ஆனால் சாவான பாவத்தினால் மனிதன்   இறைவனோடு கொண்டுள்ள உறவைத் தானாகவே நிறுத்தி விடுகிறான்.

பாவமன்னிப்பு பெறும்போது உறவு செயல் நிலைக்குத் திரும்புகிறது.

உறவை வெட்டுவதும், ஒட்டுவதும் மனிதன்தான். 

இறைவன் நிலையில் மாற்றம் இல்லை.

மனிதன் அன்பு செய்தாலும் சரி செய்யாவிட்டாலும் சரி இறைவன் மனிதனை அன்பு செய்து கொண்டேயிருக்கிறார்.

அன்பு அவரது இயல்பு. (Nature)

அவரால் அன்பு செய்யாமல் இருக்க முடியாது.''

" என்றென்றும் சாகாமல் வாழ வேண்டும் என்றால் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான், 

அன்பு செய்து கொண்டேயிருக்க வேண்டும், இறைவனையும் , அயலானையும்.

அன்பு செய்தால்
இவ்வுலகிலும் வாழ்வோம்,
மறுவுலகிலும் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Tuesday, March 28, 2023

"யாதொரு விக்கிரகத்தையேனும் உனக்கு நீ உண்டாக்கிக் கொள்ள வேண்டாம்." (யாத்.20:4)

யாதொரு விக்கிரகத்தையேனும் உனக்கு நீ உண்டாக்கிக் கொள்ள வேண்டாம்.


"ஹலோ, மிஸ்டர், பைபிள் வாசிக்கும் பழக்கம் உண்டா?"

'"பழக்கம்னா?"

"வழக்கம்."

"'இரண்டுக்கும் ஒரே அர்த்தம் தான்."

"பதில் சொல்லுங்க.
பைபிள் வாசிக்கும் வழக்கம் உண்டா?"

"'உங்களுக்கு மூச்சு விடும் வழக்கம் உண்டா?"

"இது என்ன சார் கேள்வி? 
மூச்சு விடுவது, வாழ்க்கை, வழக்கமல்ல."

"'பைபிளும் அப்படித்தான், சார். தலையைச் சுற்றி மூக்கைத் தொடாமல் நேரடியாகக் கேள்விக்கு வாருங்கள்."

"யாத்திராகமம், 20ஆம் அதிகாரம்
நான்காம் வசனத்தை வாசியுங்கள்."

"'மேலே வானத்திலும் கீழே பூமியிலும் பூமியின் கீழுள்ள தண்ணீரிலும் உள்ளவைகளுக்கு ஒப்பான ஓர் உருவத்தையேனும் யாதொரு விக்கிரகத்தையேனும் உனக்கு நீ உண்டாக்கிக் கொள்ள வேண்டாம்."

"வசனத்தின் பொருள் புரிகிறதா?"

"'புரிகிறது."

"புரிந்தும் நீங்கள், கத்தோலிக்கர்கள், ஏன் விக்கிரகங்களைச் செய்து கோவிலில் வைத்திருக்கிறீர்கள்?"

"'எங்கள் கோவில்களில் விக்கிரகங்களைச் செய்து வைத்திருப்பதாக உங்களுக்கு சொன்னது யார்?"

"நானே பார்த்திருக்கிறேனே."

"'அப்போ உங்கள் கண்களில் ஏதோ கோளாறு இருக்கிறது என்று அர்த்தம்.

என்னை நான்காவது வசனத்தை வாசிக்க சொன்னீர்களே, நீங்கள் இரண்டாவது, மூன்றாவது மற்றும் ஐந்தாவது வசனங்களை வாசியுங்கள்." 

"எகிப்து நாட்டிலிருந்தும் அடிமை வாழ்வினின்றும் உன்னை விடுவித்த ஆண்டவராகிய நாமே உன் கடவுள்.

நமக்கு முன்பாக வேறே தேவர்களை நீ கொண்டிராதிருப்பாயாக''

"அவைகளை வணங்கித் தொழவும் வேண்டாம்."

"'போதும். எந்த பொருளையும் அரைகுறையாக பார்த்துவிட்டு அதைப் பற்றி விமர்சனம் சொல்லலாமா?

உதாரணத்திற்கு நீங்கள் எங்கள் வீட்டிற்கு வந்து 

"உங்கள் மேசைக்கு கால்களே இல்லை"  
என்று சொன்னால் நான் உங்களை என்ன சொல்வேன்?"

"குருடன் என்பீர்கள்."

"'இப்போதும் அதையேதான் சொல்கிறேன்.

ஒரே உண்மை தான் நான்கு வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

நான்கு வசனங்களையும் ஒரே நேரத்தில் வாசித்தால் தான் முழு உண்மை தெரியும்.

ஒரு வசனத்தை மட்டும் வாசித்தால் முழு உண்மை தெரியாது.

நான்கு வசனங்களிலும் அடங்கியுள்ள ஒரு உண்மையை சொல்கிறேன்.

கடவுள் சொல்கிறார்.

"நானே உன் கடவுள்.

என்னை தவிர வேறு கடவுள்கள் உனக்கு இல்லை.

ஏதாவது ஒரு விக்கிரகத்தைச் செய்து, 

எனக்கு கொடுக்க வேண்டிய ஆராதனையை அதற்கு கொடுக்காதே''

இது யாத்திராகமம், 20:2,3,4,5 வசனங்களில் அடங்கியுள்ள முழுமையான உண்மை.

நம்மைப் படைத்த கடவுளை மட்டுமே நாம் ஆராதிக்க வேண்டும்.

அவருக்கு பதிலாக வேறொரு பொருளை கடவுளாக நினைத்து ஆராதிக்க கூடாது.

இப்பொழுது விக்கிரகம் என்ற வார்த்தைக்கு பொருள் கூறுங்கள் பார்ப்போம்."

"உண்மையான கடவுளுக்கு கொடுக்க வேண்டிய ஆராதனையை கொடுப்பதற்காக நாமே உண்டாக்கிய பொருள் தான் விக்கிரகம்."

"'பாவூர்சத்திரத்தில் காமராஜருடைய சிலை ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது.

 அது விக்கிரகமா?"

"இல்லை. காமராஜருடைய ஞாபகமாக வைக்கப்பட்டிருக்கிறது.

கடவுளுக்குக் கொடுக்க வேண்டிய ஆராதனையைக் கொடுப்பதற்காக அல்ல."

"'உங்களுடைய வீட்டில் உங்களின் தாத்தாவின் புகைப்படம் ப்ரேம் போட்டு வைக்கப்பட்டுள்ளது.

அது விக்கிரகமா?"

"இல்லை, அது எங்களின் தாத்தாவின் ஞாபகமாக மட்டுமே வைக்கப்பட்டுள்ளது."

"'எங்கள் கோவில்களில் புனிதர்களின் ஞாபகமாக வைக்கப்பட்டிருக்கும் சுரூபங்களை நீங்கள் ஏன் விக்கிரகம் என்று அழைக்கிறீர்கள்?"

"அதை விக்கிரகம் என்று நான் அழைத்தது தப்புதான். ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் அவற்றுக்கு நீங்கள் மாலை போடுகிறீர்கள்.

வணக்கம் செலுத்துகிறீர்கள்.

அவற்றுக்கு முத்தம் கொடுக்கிறீர்கள்.

இதெல்லாம் தப்பு இல்லையா?"

"உங்கள் வீட்டில் வைத்திருக்கும் உங்களது தாத்தாவின் புகைப்படத்திற்கு இதையெல்லாம் நீங்கள் செய்வதில்லையா?

ஆராதனை இறைவனுக்கு மட்டுமே.

திவ்ய நற்கருணை மெய்யாகவே இறைவன்.

திவ்ய நற்கருணையை ஆராதிக்கிறோம்.

புனிதர்களுக்கு வணக்கம் மட்டுமே செலுத்தலாம்.

புனிதர்களின் சுருபங்களுக்கு வணக்கம் செலுத்துவதில்லை.

அவற்றைப் பார்த்து, அவை ஞாபகப்படுத்தும் புனிதர்களுக்கு வணக்கம் செலுத்துகிறோம்.

அந்தோனியார் சுரூபத்துக்கு மாலை போடும்போது அது ஞாபகப்படுத்தும் அந்தோனியாருக்கே மாலை போடுகிறோம்."

"சுருபம்தான் அந்தோனியார் என்று நினைத்து வணங்கினால்?" 

"'பாவம்.

ஆனால் சுரூபம், சுரூபம் மட்டுமே,
புனிதர் இல்லை என்று எல்லோருக்கும் தெரியும். 

நாங்கள் வணக்கம் செலுத்துவது சுருபங்களால் ஞாபகப்படுத்தப்படும் புனிதர்களுக்கே.

அநேகர் தங்களது phone களில் தங்களுக்கு விருப்பமானவர்களுடைய புகைப்படங்களை வைத்திருப்பார்கள்.

அவை புகைப்படங்கள்தான், ஆட்கள் அல்ல, என்று அவர்களுக்குத் தெரியும்.

அதேபோல் தான் எங்கள் கோவில்களில் நாங்கள் வைத்திருக்கும் சுருபங்கள்
 சுருபங்கள்தான் என்று எங்களுக்குத் தெரியும்.

எங்களுக்குத் தெரியும் என்பது உங்களுக்கும் தெரியும்.

ஆனால் கத்தோலிக்கர்களைக் குறை சொல்லிக் கொண்டிருப்பதில் உங்களுக்கு ஒரு ஆனந்தம்."

"ஆனால், இப்பொழுது எனக்குப் புரிகிறது.''

"'என்ன புரிகிறது?"

"கடவுளுக்கு மட்டுமே உரிய ஆராதனையை அவரால் படைக்கப் பட்ட. பொருட்களின் உருவங்களுக்கு கொடுப்பது மட்டுமே விக்கிரக ஆராதனை.

நீங்கள் கோவிலில் வைத்திருக்கும் சுரூபங்கள் அவற்றை ஆராதிப்பதற்காக அல்ல.

அவை ஞாபகப்படுத்தும் புனிதர்களை வணங்குவதற்காக மட்டுமே.

நீங்கள் திவ்ய நற்கருணையை ஆராதிக்கிறீர்கள்.

புனிதர்களை வணங்குகிறீர்கள்.

போதுமா?"

"'சகல புனிதர்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்."

லூர்து செல்வம்..

Monday, March 27, 2023

பட்டிமன்றமும், பைபிளும்.



பட்டிமன்றமும், பைபிளும்.

பட்டிமன்றம் ஒன்று நடந்து கொண்டிருந்தது.

விவாதத்திற்கான தலைப்பு:
கடவுள் இருக்கிறாரா?

இருக்கிறார் என்று ஒரு அணியும்,
இல்லை என்று ஒரு அணியும் பேச வேண்டும்.

என்ன பேசுகிறார்கள் என்று கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன்.

"கடவுள் இல்லை" அணியை சேர்ந்த ஒருவர் கையில் பைபிளுடன் மைக் முன்வந்து நின்று, எதிர் அணியினரை ஏளனமாகப் பார்த்தார்.

''கடவுள் இருக்கிறார்' அணியினர் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு பைபிள்  வைத்திருக்கிறார்கள்.

எதற்காக என்று தெரியவில்லை.

பைபிளை வாசிப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு கடவுள் இல்லை என்ற உண்மை புரிந்திருக்கும்.

பைபிள் கடவுள் இல்லை என்று சொல்கிறது என்று நான் சொன்னால் நம்ப மாட்டீர்கள்.

என்னை நம்ப வேண்டாம். பைபிளை நம்புங்கள்.

பழைய ஏற்பாட்டில் தாவீது அரசர் தனது திருப்பாடல்களில் "கடவுள் இல்லை'' என்று தெளிவாக சொல்கிறார்.

சந்தேகம் இருந்தால் பைபிளை திறந்து,  "திருப்பாடல்கள்14:1,  53:1" வசனங்களை வாசித்து பாருங்கள்.

இரண்டு வசனங்களும், "கடவுள் இல்லை" என்ற வார்த்தைகளோடு ஆரம்பிக்கின்றன.

புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவே 

"என்னை நோக்கி, "ஆண்டவரே, ஆண்டவரே" என்று சொல்பவனெல்லாம் விண்ணரசு சேரமாட்டான்."

என்று கூறியிருக்கிறார்.

அப்படி என்றால் அவர் ஆண்டவர் இல்லை என்று தானே அர்த்தம்.''

இன்னும் என்னவெல்லாமோ பேசி விட்டு அமர்ந்தார்.

எதிரணியில் ஒருவர் கையில் பைபிளுடன் மைக் முன்வந்து நின்றார்.

"எனக்கு முன் பேசிய நண்பர் தான் ஒரு அறிவிலி, 

பச்சையாகச் சொன்னால்,

 முட்டாள் என்பதை  எல்லோருக்கும் தெரியப்படுத்துவதற்காகவே பட்டிமன்றத்தில் கலந்து கொண்டார் என்று நினைக்கிறேன்.


 அவர் கூறியபடியே திரு பாடல் வசனங்கள் "கடவுள் இல்லை" என்று தான் ஆரம்பிக்கின்றன.

ஒருவன் மாட்டின் வாலை மட்டும் பார்த்துவிட்டு,

 "எங்கள் தோட்டத்தில் ஒரு மாடு நிற்கிறது.

 அதற்கு வால் மட்டுமே இருக்கிறது. உடலின் வேறு உறுப்புக்கள் எதுவும் இல்லை." 

என்று  சொன்னால் அவனை குருடன் என்று அழைப்பதா விழிகண்குருடன் என்று அழைப்பதா?

.‛கடவுள் இல்லை’ என அறிவிலிகள் தம் உள்ளத்தில் சொல்லிக் கொள்கின்றனர்; என்ற திருப்பாடல்கள் வசனத்தில் நண்பருக்கு முதல் இரண்டு வார்த்தைகள் மட்டுமே தெரிகின்றன.

அதை பார்த்தவுடன் கண்கள் குருடாகி விடுகின்றன.

கடவுள் இல்லை’ என அறிவிலிகள் தம் உள்ளத்தில் சொல்லிக் கொள்கின்றனர்.

ஆனால் நண்பர் ஒரு பெரிய அறிவிலி. அதனால் தான் சப்தமாகச் சொல்லிவிட்டார்.

இயேசு கடவுள். 

"என்னை நோக்கி, "ஆண்டவரே, ஆண்டவரே" என்று சொல்பவனெல்லாம் விண்ணரசு சேரமாட்டான். 

வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடப்பவனே சேருவான்."

வானகத்திலுள்ள தந்தையும், இயேசுவும் ஒரே கடவுள்தான்.

தந்தையின் விருப்பம் தான் இயேசுவின் விருப்பம்.

தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுகிறவன் இயேசுவின் விருப்பத்தையும் நிறைவேற்றுகிறான்.

 ஏனென்றால் இரண்டும் ஒரே விருப்பமே.

இறை அரசுக்குள் நுழைய வேண்டுமென்றால் இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.

இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றாமல் வெறுமனே அவரை "இறைவா இறைவா" என்று அழைத்து என்ன பயன்?


தன்னை ஆண்டவரே என்று அழைக்க வேண்டாம் என்று இயேசு சொல்லவில்லை.

தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால்

 மகனை "ஆண்டவரே ஆண்டவரே" என்று அழைத்துப் பயனில்லை.

இதை உணராமல் நண்பர் இயேசு ஆண்டவரே இல்லை என்கிறார்.

இப்போது அவரிடம் ஏன் என்று கேட்டால் அவர் என்ன சொல்வார்?

"நான் ஏற்கனவே என்னை அறிவிலி என்று நிரூபித்து விட்டேன்.

அறிவிலியிடம் எதிர்பார்க்க கூடாததை ஏன் எதிர்பார்க்கிறீர்கள் என்று நம்மிடம் கேட்பார்.

ஆகவே அவரை இதோடு விட்டு விடுவோம்."

பைபிளை வாசிப்பவர்கள் இருவகை.

ஒரு வகையினர் இறைவாவாக்கை வாசித்து அதன்படி வாழ வேண்டும் என்பதற்காக பைபிளை வாசிப்பார்கள்.

இன்னொரு வகையினர் தாங்கள் எப்படி வாழ வேண்டும் என்று முதலில் தாங்களே தீர்மானித்து விடுவார்கள். 

பிறகு தங்களது தீர்மானத்திற்கு ஆதரவாக பைபிளில் ஏதாவது இருக்கிறதா என்று தேடுவார்கள்.

பைபிள் வசனங்களுக்கு தங்களது தீர்மானத்திற்கு ஏற்ற அர்த்தத்தை அவர்களே கொடுத்துக் கொள்வார்கள்.

அவர்கள் தேடுவது இறைவாக்கை அல்ல, தங்களது வாக்கை.

சமீபத்தில்  திருப்பூர் சாலமோனின் காணொளி ஒன்று WhatsApp message ஆக வந்திருந்தது.

சாலமோனுக்கு கத்தோலிக்க விசுவாசம் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

அன்னை மரியாள் பக்தியை விரும்பாதவர் என்றும் அனைவருக்கும் தெரியும்.

அவர் எதற்காக அன்னை மரியாளைப் பற்றி காணொளி தயாரிக்கிறார்?

அன்னை மரியாளின் பெருமையைக் குறைப்பதாக நினைத்துக் கொண்டு,

 அதுவும் இயேசுவின் உதவியோடு.

அன்னை மரியாளைப் பற்றிக் குறைவான மதிப்பீடு கொண்டிருக்கும் அவர்,

 அவருடைய மதிப்பீட்டுக்கு பைபிளின் உதவியைத் தேடுகிறார்.

லூக்காஸ் நற்செய்தி 11ம் அதிகாரம் 27ம் வசனத்தில்,

இயேசு போதித்துக் கொண்டிருந்த கூட்டத்தில் ஒரு பெண் இயேசுவைப் பார்த்து,

 "உம்மைத் தாங்கிய வயிறும், நீர் பாலுண்ட உறுப்புகளும் பேறுபெற்றவையே" 
என்று குரலெடுத்துக் கூறினாள்.

அதற்கு இயேசு,

 "ஆயினும் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டுக் கடைப்பிடிப்பவர்கள் அதிலும் பேறுபெற்றவர்கள்" என்றார்.
(லூக். 11:28)

அவர்கள் மரியாளை விட பேறுபெற்றவர்களாம்.

தன் தாயை விடப் பேறுபெற்றவர்கள் என்ற அர்த்தத்தில் இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லவில்லை

ஏனெனில் அன்னை மரியாள் தனது வாழ்வின்  ஆரம்பம் முதல், இறுதிவரை கடவுளுடைய வார்த்தையைக் கேட்டுக் கடைப்பிடித்ததனால்தான் பேறுபெற்றவள்.

கத்தோலிக்கர்களாகிய நாம் அன்னை மரியாள் கடவுளின் தாய் என்பதால் மற்றப் புனிதர்களுக்குக் கொடுக்கும் வணக்கத்தைவிட அதிக வணக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

அது நண்பருக்குப் பொறுக்கவில்லை.

இயேசு கூறும் வார்த்தைகளின் பொருளைப் புரிந்து கொள்ளாமல்

அன்னை மரியாளை விடப் அதிகம்  பேறுபெற்றவர்களும் இருக்க முடியும் என்ற பொருளில் இயேசு கூறுவதாக மக்கள் நினைக்க வேண்டும் என்று காணொளி வெளியிட்டிருக்கிறார்.

உண்மையில் இயேசு  என்ன பொருளில் கூறினார்?

அனைவரும் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு, 

அதைக் கடைப்பிடித்து வாழ வேண்டும் என்ற பொருளில்தான் இயேசு அவ்வாறு கூறினார்.

அன்னை மரியாள் அதைத்தான் செய்து கொண்டிருந்தாள்.

மரியாளின் பக்தர்கள் அவளைப் பாக்கியவதி என்று சொன்னால் மட்டும் போதாது.

அவளைப் போலவே வாழ வேண்டும்.

தாயைப் போல வாழ்பவர்தான் பிள்ளை.

இன்னொரு சூழ்நிலையிலும் இயேசு இதே போல் சொன்னார்.


ஒரு நாள் இயேசு போதித்துத் கொண்டிருந்தபோது,

 ஒருவன் அவரை நோக்கி, "இதோ! உம் தாயும் சகோதரரும் உம்மோடு பேச வெளியே காத்துக்கொண்டிருக்கின்றனர்" என்றான்.

 இதைத் தம்மிடம் கூறியவனுக்கு அவர் மறுமொழியாக: "யார் என் தாய்? யார் என் சகோதரர்?" என்று சொல்லி,

 தம் சீடர்பக்கம் கையைக் காட்டி, "இதோ, என் தாயும் என் சகோதரரும்.

 வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடக்கிறவன் எவனோ அவனே என் சகோதரனும் சகோதரியும் தாயும் ஆவான்" என்றார்."
(மத்.12:46-50)

இந்த வசனத்தையும் நமது பிரிவினை சகோதரர்கள் இயேசுவின் அன்னைக்கு எதிராக பேச பயன்படுத்திக் கொள்வார்கள்.

இயேசு தனது தாயை மறுப்பதற்காக இப்படிச் சொல்ல வில்லை.

அவரது தந்தையின் விருப்பப்படி நடக்கிறவர்கள் அனைவரும் அவருக்குத் தாய் போன்றவர்கள் தான் என்று சொல்வதற்காகவே

அப்படிச் சொன்னார்.

எப்போது ஒருவன் தனது தந்தைக்கு பெருமை சேர்ப்பான்?

அவன் தனது தந்தையைப் போலவே வாழும் போது.

அவன் வாழ்வதை பார்த்தவர்கள் 
அவன் இன்னாருடைய மகன் என்று கூற வேண்டும்.

இயேசு எந்த சூழ்நிலையிலும் 
தனது தாயைப் பற்றி குறைத்து பேசவில்லை.

விண்ணகத் தந்தையின் விருப்பப்படி நடப்பதன் பெருமையை நமக்கு உணர்த்துகிறார்.


இயேசு அன்னை மரியாளின் மகன் மட்டுமல்ல, அவளைப் படைத்த கடவுளும் அவர்தான்.

சென்பப் பாவ மாசு இன்றி அவளைப் படைத்தவர் அவர்தான்.

அவளைத் தனது அருளால் நிரப்பியவர் அவர்தான்.

வாழ்நாள் முழுவதும் பாவமாசின்றி வாழ வரம் கொடுத்தவர் அவர்தான்.

அன்னை மரியாள் தனது முழுமையாக ஒத்துழைப்பை வழங்கினாள்.

நூற்றுக்கு நூறு அர்ப்பண வாழ்வு வாழ்ந்த தன் அன்னையை எப்படி அவர் குறை சொல்லுவார்?

எந்தவித காரணமும் இன்றி மரியாளைப் பிடிக்காத பிரிவினை சகோதரர்கள் 

அவளை குறை சொல்வதற்காகவே

 இறைவாக்கிற்கு  தங்கள் இஷ்டத்திற்கு   பொருளைக் கொடுக்கின்றார்கள். 

அன்னை மரியாள் என்றும் அருள் நிறைந்தவள்.

"அருள் நிறைந்த அன்னையே வாழ்க." 

லூர்து செல்வம்.

.

Friday, March 24, 2023

கிறிஸ்துவின் ஞான உடல்.

கிறிஸ்துவின் ஞான உடல்.


"ஹலோ, சார். வணக்கம்."

"'வணக்கம். உங்களை எங்கேயும் பார்த்ததாக ஞாபகம் இல்லையே."

"நான் உங்களைப் பார்த்திருக்கிறேன், ஆனால் பேசியதில்லை.

இன்று உங்களோடு பேசவேண்டும் போல் தோன்றியது.

நீங்கள் கத்தோலிக்கர்தானே?"

"'ஆமா. நீங்கள்?"

"CSI கிறிஸ்தவர். எதைப் பற்றி பேசவேண்டும் என்று நீங்கள் கேட்கவில்லையே?"

"'எதைப் பற்றி பேசவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதைப்பற்றி பேசுவோம்."

"மீட்பர் இயேசு உலகிற்கு வந்தது அவரது தாயின் வழியே என்பதை அனைத்து கிறிஸ்தவர்களும் ஏற்றுக் கொள்கிறோம்.

ஆனால் அதே தாயின் வழியே நாம் மீட்பரை அடையலாம் என்று நீங்கள் சொல்வதை  நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.

மீட்பரைப் பெற்றவள் அன்னை மரியாள்தான்.

ஆனால் மீட்புக்கும், அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இயேசு கிறிஸ்துவை விசுவசித்தால் மீட்பு அடைவோம்.

எதற்காக மரியாள்?

இயேசு உலகுக்கு வர அவளை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார்.

நாம் இயேசுவை ஏற்றுக் கொள்வதற்குக் கருவி எதற்கு?

மரியாள் வழியாக இயேசுவிடம் போகலாம் என்று பைபிளில் எங்கேயும் கூறப்படவில்லையே!''

"'இயேசு விண்ணகம் எய்து முன் தன் சீடர்களிடம் என்ன கூறினார்?"

" "உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்.

 விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான்."

"'இயேசு நற்செய்தியை அறிவிக்கத்தான் சொன்னார்.

எழுதி அறிவியுங்கள் என்று சொல்லவில்லை.

நற்செய்தியை எழுதியவர்கள் முதலில் போதித்தார்கள்.

அப்புறம்தான் எழுதினார்கள்.

போதித்த எல்லோருமே எழுதவில்லை. 

எழுதியவர்களும் போதித்ததை எல்லாம் எழுதவில்லை.     

முதல் முதல் எழுதப்பட்டது மாற்கு
 நற்செய்தி.

அது கி.பி.66ம் ஆண்டுக்குப் பின்தான் எழுதப்பட்டது.
(கி.பி.66-70)

மாற்கு இயேசுவின் பிறப்பு பற்றிய வரலாற்றை எழுதவில்லை,

ஆனால் போதித்திருப்பார்.

மத்தேயு நற்செய்தியும், லூக்காஸ் 
நற்செய்தியும் கி.பி.85 க்குப் பின் எழுதப்பட்டன. (கி.பி.85-90)

அருளப்பர் நற்செய்தி 
கி.பி 90க்குப்பின் எழுதப்பட்டது.
(கி.பி.90–110.)

அருளப்பரும் இயேசுவின் பிறப்பு பற்றிய வரலாற்றை எழுதவில்லை,

இயேசுவின் அப்போஸ்தலர்களில் நற்செய்தி எழுதியவர்கள் இருவர் மட்டுமே.

முதலில் போதனை, அப்புறம்தான் எழுத்து.

போதித்ததை எல்லாம் எழுதவில்லை என்பதற்கு அருளப்பருடைய வார்த்தைகளே ஆதாரம்.

"இந்நூலில் எழுதப்பெறாத வேறு பல அருங்குறிகளையும் இயேசு தம் சீடர்கள் கண்முன் செய்தார்."
(அரு.20: 30)

ஆகவே திருச்சபையின் போதனைக்கு பைபிள் மட்டுமே ஆதாரம் அல்ல.

பைபிளில் எழுதப்படாத 
திருச்சபையின் போதனையைத்தான் திருச்சபை பாரம்பரியம் என்று அழைக்கிறது.

பைபிளிலும், பாரம்பரியத்திலும் திருச்சபையின் போதனை இருக்கிறது.

நீங்கள் பைபிளை மட்டும் ஏற்றுக் கொள்கிறீர்கள்.

பாரம்பரியத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆகவே திருச்சபையின் போதனையை முழுவதும் உங்களுக்குப் புரிய வைக்க யாராலும் முடியாது."

"எதன் அடிப்படையில் நீங்கள் மாதாவும் மற்ற புனிதர்களும் உங்களுக்காக இயேசுவிடம் பரிந்து பேசுகிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள்?"

"'கிறிஸ்துவின் ஞான சரீரம் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா?"

"அதைப்பற்றி சொல்லுங்களேன்."

"'புனித சின்னப்பர் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தின் 12வது அதிகாரத்தை வாசியுங்கள்.


"உடல் ஒன்று, உறுப்புகள் பல: உடலின் உறுப்புகள் பலவகையாயினும், ஒரே உடலாய் உள்ளன: கிறிஸ்துவும் அவ்வாறே என்க."
(1கொரி12:12)


"நீங்களோ கிறிஸ்துவின் உடல்: ஒவ்வொருவரும் ஓர் உறுப்பு."
(1கொரி12:27)

நமது உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்பும் மற்ற உறுப்புகளுக்கு உதவியாக இருக்கிறது.

காலில் முள் தைத்து விட்டால் கண் பார்க்கிறது, கை முள்ளை எடுக்கிறது.

இதே போல் நமது உடலின் ஒவ்வொரு நிகழ்விலும் அதன் உறுப்புகள் ஒன்றுக்கொன்று உதவுகின்றன.

அதேபோல்தான் கிறிஸ்துவின் ஞான உடலைச் சேர்ந்த ஒவ்வொரு உறுப்பினரும் மற்றவர்களுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும், இருக்கிறோம்.

 நாம் செபிக்கும்போது நமக்காக மட்டுமா செபிக்கிறோம்?"

"மற்றவர்களுக்காகவும் செபிக்கிறோம்."

"' திருச்சபையில் ஞானஸ்நானம் பெற்ற அனைவருமே கிறிஸ்தவர்கள் தான், இருந்தாலும், இறந்தாலும்.

ஞானஸ்தானம் பெற்று இவ்வுலகில் வாழ்பவர்களும், இறந்து மறுவுலகம் சென்று விட்டவர்களும் கிறிஸ்தவர்களே.

மறுவுலகில் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும், மோட்சத்தில் இருந்தாலும் கிறிஸ்தவர்களே.

அதாவது கிறிஸ்துவின் ஞான உடலைச் சேர்ந்தவர்களே.

கிறிஸ்துவின் ஞான உடலைச் சேர்ந்த அனைவரும் ஒருவர் ஒருவர்க்கு உதவி செய்யலாம்."

"அதாவது, இறந்த கிறிஸ்தவர்களும் நமக்காக இறைவனிடம் செபிக்கலாம் என்கிறீர்கள், அப்படித்தானே?"

"'அப்படியே தான்."

"அதாவது மோட்சத்தில் வாழும் கிறிஸ்துவின் தாயும் நமக்காக செபிக்கலாம் என்கிறீர்கள், அப்படித்தானே?"

"'அப்படியே தான். கிறிஸ்துவின் தாய் மட்டுமல்ல, மோட்சத்தில் வாழும் மற்றவர்களும், உத்தரிக்கிற ஸ்தலத்தில் வாழ்பவர்களும் நமக்காக செபிக்கலாம்.

உத்தரிக்கிற ஸ்தலத்தில் வாழ்பவர்களுக்காக நாமும், மோட்சத்தில் உள்ளவர்களும் செபிக்கலாம்.

ஏனெனில் ஞானஸ்தானம் பெற்ற அனைவரும் கிறிஸ்துவின் ஞான உடலில் உறுப்புகள்."

"ஆனாலும் நீங்கள் மரியாளுக்கு,

 மற்றவர்களுக்குக் கொடுப்பதை விட,

 அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்.

அது ஏன்?"

"'அவள் இயேசுவின் தாய் என்பதால்.

இயேசு கடவுள்.

இயேசுவின் தாய் கடவுளின் தாய்.

 மரியாள் கடவுளின் தாய் என்பதால் அவளுக்கு மற்றவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

வேறு ஏதாவது கேட்க வேண்டுமா?"

"இன்றைக்கு இவ்வளவு போதும் என்று நினைக்கிறேன். 

நாளை சந்திப்போம்.

வணக்கம்."

"'வணக்கம்."

லூர்து செல்வம்.

Thursday, March 23, 2023

"என் அரசு இவ்வுலகைச் சார்ந்ததன்று. (அரு.18:36)

"என் அரசு இவ்வுலகைச் சார்ந்ததன்று. (அரு.18:36)

''தாத்தா, இயேசு நற்செய்திப் பணியை ஆரம்பிக்கும்போதே,

"காலம் நிறைவேறிற்று: கடவுளரசு நெருங்கிவிட்டது. மனந்திரும்பி, இந்நற்செய்தியை நம்புங்கள்" .(மாற்கு.1:15)

என்று சொல்லிதான் ஆரம்பித்தார்.

இந்த வார்த்தைகளின் மூலம் அவர் யூதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து மக்களுக்கும் அரசர் என்பதை நமக்குத் தெரிவிக்கிறார்.

பிலாத்து அவரிடம், "நீ யூதர்களின் அரசனோ ?" என்று கேட்கும்போது

ஏன் "என் அரசு இவ்வுலகைச் சார்ந்ததன்று?" என்று சொன்னார்."

"'உண்மையைத்தானே சொன்னார்.

அவர் இறைவன்.

இறையரசின் அரசர்.

 இவ்வுலகைச் சார்ந்த அரசர் அல்ல."

"தாத்தா, அவர் இறைவன்.

நாம் வாழும் இந்த உலகத்தை படைத்தவர் அவர் தானே.

அவர் படைத்த உலகிற்கு அவர் தானே அரசர்.

பிறகு ஏன் அவர் இவ்வுலகைச் சார்ந்த அரசர் அல்ல என்றார்?

நீங்கள் கட்டுகிற வீட்டுக்கு நீங்கள்தானே சொந்தக்காரர்.

அப்படியானால் அவர் படைத்த உலகத்திற்கு அவர் தானே அரசர்."

"'நீ சொல்லுவதும் முற்றிலும் சரி.
இயேசு சொல்வதும் சரி.

இந்த உலகம் அரசர் என்ற வார்த்தையை எந்த அர்த்தத்தில் புரிந்து கொள்கிறதோ 

அந்த அர்த்தத்தில் இயேசு இந்த உலகின் அரசர் அல்ல.

உனக்குத் தெரியும், மனிதன் உடலும் ஆத்மாவும் சேர்ந்தவன் என்று.

இந்த உலகின் மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட மனித உடல் இந்த உலகத்தைச் சேர்ந்தது.

மனித ஆன்மா உடலோடு சேர்ந்து வாழ்ந்தாலும் அது விண்ணுலக வாழ்விற்கென்று படைக்கப்பட்டது.

அதனால் தான் மனிதனின் மரணத்தின் போது அவனது உடலை மண்ணில் போட்டுவிட்டு ஆன்மா விண்ணுலகுக்குச் சென்று விடுகிறது.

இவ்வுலகில் மனிதனின் உடலும் வாழ்கிறது, ஆன்மாவும் வாழ்கிறது.

உடல் ஆன்மாவுக்காக வாழ வேண்டும்.

ஒருவனது உடல் 
ஆன்மாவுக்காக வாழ்ந்தால் அவன் வாழ்வது ஆன்மீக வாழ்வு.

ஆன்மா உடலுக்காக வாழ்ந்தால் 
அவன் வாழ்வது லௌகீக வாழ்வு.

நாம் ஆன்மீக வாழ்வு வாழவே கடவுள் நம்மைப் படைத்திருக்கிறார்.

ஆனால் இவ்வுலகில் வாழ்வோரில் அநேகர் ஆன்மீக வாழ்வை மறந்து, லௌகீக வாழ்வை மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் ஆன்மீக வாழ்வை மட்டுமே வாழ வேண்டும்.

அவர்களுடைய உடல் உலகில் வாழ்ந்தாலும் உலகிற்காக வாழக் கூடாது, 

ஆன்மாவிற்காக மட்டுமே வாழ வேண்டும்.

மனிதன் இவ்வுலகில் உலகைச் சார்ந்த இன்பங்களுக்காக மட்டும் வாழ்ந்தால் அவன் முற்றிலும் லௌகீக வாழ்வு வாழ்கிறான்.

விண்ணுலக பேரின்ப வாழ்வுக்காக மட்டும் இவ்வுலகில் வாழ்ந்தால் அவன் ஆன்மீக வாழ்வு வாழ்கிறான்.

ஆன்மீக வாழ்வு வாழ்பவனது உடல் ஆன்மாவுக்குக் கட்டுப்பட்டிருக்கும்.

லௌகீக வாழ்வு வாழ்பவனது ஆன்மா உடலுக்குக் கட்டுப்பட்டிருக்கும்.

இந்த உலகைச் சார்ந்த அரசு மனிதனுடைய லௌகீக வாழ்வின் நலனையே நோக்கமாகக் கொண்டிருக்கும்.

இறையரசு மனிதனுடைய ஆன்மீக வாழ்வின் நலனையே நோக்கமாகக் கொண்டிருக்கும்.

இயேசு உலகுக்கு வந்தது நமது
லௌகீக வாழ்வின் நலனுக்காகவா, ஆன்மீக வாழ்வின் நலனுக்காகவா?"

"ஆன்மீக வாழ்வின் நலனுக்காக மட்டுமே இயேசு உலகுக்கு வந்தார். 

அவர் நமது ஆன்மீகத்துக்கு மட்டுமே அரசர்.

அவருடைய அரசு இறையரசு.

ஆகவே தான் இயேசு பிலாத்துவிடம் , "என் அரசு இவ்வுலகைச் சார்ந்ததன்று" என்று சொன்னார்."

"'இப்போது உனது கேள்விக்குப் பதில் கிடைத்துவிட்டது.

ஆனால் இது சம்பந்தமாக நீ கேட்காத கேள்விகள் நிறைய இருக்கின்றன."

"தாத்தா, கொஞ்சம் பொறுங்கள். அவற்றில் ஒன்றை இப்போது கேட்டு விடுகிறேன்.

கிறிஸ்தவர்களாகிய நாம் இறையரசில்தான் வாழ வேண்டும்.
 
வாழ்கிறோமா?"

"'இந்த கேள்விக்குரிய பதிலை நீயும் நானும் சொல்ல முடியாது.

உன்னைப் பற்றி உனக்குத் தெரியும்,

 என்னைப் பற்றி எனக்குத் தெரியும்.

எல்லா கிறிஸ்தவர்களையும் பற்றி நமக்கு எப்படித் தெரியும்?

அவரவர்களின் வாழ்க்கையை பற்றி அவரவர்கள் தான் பரிசோதிக்க வேண்டும்.

இப்போ நான் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்.

ஞானஸ்நானம் பெற்றால் மட்டும் ஒருவன் மீட்பு அடைய முடியுமா?''

"ஞானஸ்நானம் பெற்றவுடனே இறந்தால் நேரே மோட்சத்திற்கு போய்விடலாம்.

அதற்குப் பிறகு இவ்வுலகில் வாழ்ந்தால் பாவம் செய்யாமல் வாழ்ந்தால் மீட்பு அடைய முடியும்."

"'மீட்பு அடைய விசுவாசம் மட்டும்
போதுமா?"

"கையில் சாப்பாடு இருந்தால் வயிறு நிறையாது.

 சாப்பிட்டால் மட்டுமே, நிறையும். 

விசுவசித்தால் மட்டும் போதாது,
விசுவாசத்தை வாழ வேண்டும்."

"'ஞாயிற்றுக்கிழமை பூசைக்கு போவதால் மட்டும் ஓய்வு நாள் கடமையை நிறைவேற்றுகிறோமா?"

"முழுப் பூசைக்கும் போனால் கடன் நிறைவேறும்.

உண்மையிலேயே பாவ மன்னிப்பு பெற்று,

குருவோடு இணைந்து திருப்பலியை ஒப்புப் கொடுத்து,

திருவிருந்து அருந்தி,

முழுப் பூசையும் நிறைவேறிய பின் வீட்டுக்குச் சென்று,

அன்றைய நாளை செபத்திலும், பிறருக்கு உதவி செய்வதிலும் செலவழித்தால்

ஓய்வு நாளுக்கான முழுப் பலனும் கிடைக்கும்."

,"'ஞாயிற்றுக்கிழமை பூசைக்கு போகாமல் சொந்த வேலைக்கு போனால்?"

"அப்படிப் போகின்றவன் ஆன்மீக வாழ்வு வாழவில்லை. 

லௌகீக வாழ்வு வாழ்கிறான்.

அவன் இறையரசைச் சேர்ந்தவன் அல்ல."

"'ஞானஸ்நானம் பெற்றிருக்கிறானே!"

" கல்லூரியில் admission போடுவதால் மட்டும் Degree Certificate கிடைத்து விடுமா?"

"'ஒருவன் கோவில் கட்ட முழு தொகையையும் நன்கொடையாகக் கொடுத்து விடுகிறான்.

மனைவியும் பிள்ளைகளும், கோவிலுக்கு போவதைத் தடுக்கவில்லை.

ஆனால் அவன் மட்டும் கோவிலுக்கும் போகவில்லை, தேவத் திரவிய அனுமானங்களையும் பெறவில்லை.

அவன் கதி?"

"அதோ கதிதான். அவரவர் சாப்பிட்டால்தான் அவரவர் வயிறு நிறையும்.''

"'இறைவன் விண்ணுலகில் வாழ்கிறார்.

இறையரசு எங்கு இருக்கும்?"

"இறைவன் எங்கும் வாழ்கிறார். நமது உள்ளங்களிலும் வாழ்கிறார்.

"விண்ணுலகில் வாழும் எங்கள் தந்தையே, உமது அரசு வருக." 

என்று இந்த உலகத்திலிருந்து தான் வேண்டுகின்றோம்.

வேண்டுகின்றவர்களுடைய உள்ளங்களில் இறையரசு இருக்கிறது.

"கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்:" (மத்.6:33)

இவ்வுலகில் வாழும் நாம் தான் தேட வேண்டும்.

ஆகவே இவ்வுலகிலும் இறையரசு இருக்கிறது.

இறையரசு இவ்வுலக அரசை போல புவியியல் எல்கைகளுக்கு கட்டுப்பட்டது அல்ல.

எந்த புவியியல் பகுதியில் வாழ்ந்தாலும்,

எந்த உலக அரசரின் கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்தாலும்

நாம் இறைவனுக்காக வாழும்போது இறையரசில்தான் வாழ்கிறோம்."

"'துறவற மடத்தில் வாழும் ஒருவர் 
அங்குள்ள வசதிகளுக்காக மட்டும் வாழ்ந்தால்?"

"அவர் இறையரசில் வாழவில்லை."

"'அநேகர் கடவுளை வியாபார பொருளாக மாற்றி வாழ்கின்றார்கள், தெரியுமா?"

"தெரியும். பிரியும் காணிக்கைகளுக்காக மட்டும் இறைவனைப் பற்றி போதிப்பவர்கள் 

கடவுளை வியாபார பொருளாக மாற்றி வாழ்கின்றார்கள்.

ஆனால் கடவுளை அவரது மகிமைக்காக மட்டும் போதிப்பவர்கள்,

பிரியும் காணிக்கையை கடவுளுக்காக செலவழிப்பார்கள்.

சுய வசதிக்காக செலவழிக்க மாட்டார்கள்.

அவர்கள் இறையரசில் வாழ்கிறார்கள்."

"'இறையரசில் இறைவனுக்காக மட்டும் வாழ்வோம்.

நமது எல்லா நலன்களையும் அவரே கவனித்துக் கொள்வார்."

லூர்து செல்வம்.

Wednesday, March 22, 2023

சிலுவையின் இரகசியங்கள்.

சிலுவையின் இரகசியங்கள்.

"தாத்தா, கடவுள் அளவில்லாதவர் தானே"

"'ஆமா. அதில் என்ன சந்தேகம்?"

"அளவில்லாதவர் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பலன் 
அளவில்லாததாகத் தானே இருக்கும்?"

"'ஆமா."

"உங்களுக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுகிறது.

உங்களுடைய பென்சிலை விற்றாலும் ஒரு இலட்சம் ரூபாய் கிடைக்கும், உங்களுடைய TVயை விற்றாலும்
ஒரு இலட்சம் ரூபாய் கிடைக்கும் என்றிருந்தால் நீங்கள் எதை விற்பீர்கள்?"

"'பென்சிலைத்தான் விற்பேன்."

"இயேசு நமக்காக மனிதனாகப் பிறந்து, நமக்காக மரணம் அடைய தீர்மானித்து விட்டார்.

அவர் எத்தகைய மரணம் அடைந்தாலும் அதன் பலன் அளவில்லாததாகத் தானே இருக்கும்?

அவர் ஏன் குறைந்த வேதனை உள்ள மரணத்தைத் தேர்ந்தெடுக்காமல்

வேதனை மிகுந்த சிலுவை மரணத்தைத் 
தேர்ந்தெடுத்தார்?"

"'உன்னுடைய அப்பா உன்னுடைய அம்மாவுக்கு பிறந்தநாள் பரிசாக ஒரு சேலை எடுத்துக் கொடுக்க தீர்மானித்து விட்டார்.

சேலை எடுக்க ஜவுளிக்குப் போய்விட்டார்கள்.

எதை எடுத்தாலும் ஆயிரம் ரூபாய் என்று விளம்பரம் போட்டிருக்கிறார்கள். 

உன்னுடைய அப்பா சாதாரண நூல் சேலை எடுத்துக் கொடுப்பாரா, பட்டுச்சேலை எடுத்துக் கொடுப்பாரா?"

" பட்டுச்சேலையைத்தான் எடுத்துக் கொடுப்பார். அது தான் அதிக கவர்ச்சியாக இருக்கும்."

"'கடவுள் மனிதன்பால் கொண்ட அளவற்ற அன்பின் காரணமாகவே மனிதனாகப் பிறந்து பாடுகள் பட்டு மரித்தார். 

தனது அன்பின் அளவை மனிதனுக்கு வெளிப்படுத்தவே மிக அதிகமான வேதனை வாய்ந்த சிலுவை மரணத்தைத் தேர்ந்தெடுத்தார்."

"சிலுவை மரணம் மிக அதிகமான வேதனை வாய்ந்த மரணம் என்பது உண்மைதான்.

வேறு காரணங்களும் இருந்திருக்கலாம் அல்லவா?"

"'பேரப்புள்ள, கடவுள் எதைச் செய்தாலும் இதற்காகத்தான் செய்கிறேன் என்று நம்மிடம் சொல்லிவிட்டுச் செய்ய மாட்டார்.

ஆனாலும் அவரது பண்பின் அடிப்படையில் நாமாகவே சில காரணங்களை யூகித்துக் கொள்ளலாம்.

பாவத்திற்கான நரக தண்டனையிலிருந்து நம்மைக் காப்பாற்றவே இயேசு நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்து நமது பாவங்களை மன்னிக்கத் தீர்மானித்தார்.

இயேசு உலகில் வாழ்ந்த காலத்தில் உலக அரசு குற்றம் செய்பவர்களுக்கு அளித்து வந்த மிகப்பெரிய தண்டனை சிலுவை மரணம்.

ஆன்மீக ரீதியாக மிகப்பெரிய தண்டனை நரகம்.

உலக ரீதியாக மிகப்பெரிய தண்டனை சிலுவை மரணம்.

ஆன்மீக ரீதியாக மிகப்பெரிய தண்டனையிலிருந்து நம்மைக் காப்பாற்ற,

உலக ரீதியாக மிகப்பெரிய தண்டனையாகிய சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டார்.

ஆன்மீக ரீதியாக நரக தண்டனை அளவிட முடியாத வேதனை வாய்ந்தது.

ஆனால் இயேசுவின் சிலுவை மரணத்தின் மூலம் கிடைக்கும் மீட்பு அளவிட  முடியாத  நித்திய பேரின்பத்தைத் தரக்கூடியது."

"தாத்தா, ஒரு காலத்தில் சிலுவை அவமானத்தின் சின்னம்.

இயேசு அதில் மரித்து மகிமை அடைந்ததால் அது மகிமையின் சின்னமாக மாறிவிட்டது.

ஒரு காலத்தில் ஒருவனுக்கு நிறைய துன்பங்கள் வந்தால் 
அதைப் பார்ப்போர்,

"இவன் என்ன பாவம் செய்தானோ!" என்பர்.

இப்போது ஒருவனுக்கு நிறைய துன்பங்கள் வந்தால் சிலுவை பக்தர்கள்,

"நீ பாக்கியசாலி, கடவுள் எதைக் கொண்டு உலகத்தை மீட்டாரோ அதை அவரே உன்னோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

நீ கடவுளுக்கு மிகவும் பிரியமானவன்" என்பார்கள்.

உலகில் உள்ள எல்லா துன்பங்களையும் சிலுவைகளாக மாற்றுவதற்கே இயேசு தான் மரணமடைய சிலுவையைத் தேர்ந்தெடுத்தார்."

"'இயேசு உண்மையிலேயே அவரை மிகவும் நேசிப்பவர்களுக்கு சிலுவையைப் பரிசாகக் கொடுக்கிறார்.

 பிரான்சிஸ் அசிசி, சுவாமி பியோ போன்ற புனிதர்களுக்குத் தனது ஐந்து காயங்களையும் பரிசாகக் கொடுத்தார்.

இப்போதும் ஐந்து காய வரம் பெற்ற சிலர் உலகில் வாழ்கிறார்கள்."

"கிறிஸ்தவனுக்கு அடையாளமே 
சிலுவை அடையாளம் தான்.

கிறிஸ்தவன் ஞானஸ்நானத்தில் பெற்ற சிலுவை அடையாளத்திலிருந்தான் தனது ஆன்மீக வாழ்வை ஆரம்பிக்கிறான்.

ஆயிரக்கணக்கான சிலுவைகளின் படை சூழ ஆன்மீக வாழ்க்கையைத் தொடர்கிறான்.

சிலுவை அடையாளம் வரைந்து அவஸ்தைப் பூசுதல் பெற்ற பின் விண்ணக வாழ்வுக்குள் நுழைகிறான்.

மண்ணுக்குள் நுழையும் அவனது உடல்கூட சிலுவையைச் சுமந்து கொண்டு தான் செல்கிறது.

எங்கும் சிலுவை. எதிலும் சிலுவை.

சிலுவைதான் கிறிஸ்தவனின் வாழ்க்கை.

சிலுவையைச் சுமந்து கொண்டுதான் இயேசுவின் பின் செல்கிறோம்.

ஆண்டவர் நடந்த சிலுவைப்பாதை வழி நடப்போம்.

அதுவே விண்ணக மகிமைக்கான பாதை.

லூர்து செல்வம்.

Tuesday, March 21, 2023

"இரசம் தீர்ந்துவிட்டது"


"இரசம் தீர்ந்துவிட்டது"


"தாத்தா, சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த இயேசு தனது அன்னையை ஏன் "பெண்ணே" என்று அழைத்தார் என்பதற்கான விளக்கத்தை நேற்று நான் உங்களிடம் கேட்டேன்.".

"'இன்று கானாவூர் திருமணத்தின் போது இயேசு தன் அன்னையை ஏன் அவ்வாறு அழைத்தார் என்று கேட்கப் போகிறாய். சரியா?"

"அப்போ இரவு முழுவதும் தூங்காமல் அதைப்பற்றி தான் நினைத்து கொண்டிருந்தீர்களோ?"

"'உண்மைதான். "எனது பேரன் கேட்டால் நான் அதற்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று சொல்லித் தாருங்கள், அம்மா." என்று அம்மாவிடம் தான் கேட்டுக் கொண்டிருந்தேன்.

இருவருமே மனதில் தோன்றுகிற கருத்துக்களை பரிமாறிக் கொள்வோம்.


நான்கு நற்செய்தியாளர்களில்
கானாவூர்த் திருமணத்தைப் பற்றி யார் யாரெல்லாம் எழுதியிருக்கிறார்கள்?"

"அருளப்பர் மட்டுமே எழுதியிருக்கிறார்."

"'அவர் நற்செய்தி நூலை எழுதியதன் நோக்கம் என்ன?"

"அதை அவரே கூறியிருக்கிறாரே.

"இயேசு கடவுளின் மகனாகிய மெசியா என்று நீங்கள் விசுவசிக்கும்படியும், 

விசுவசித்து அவர் பெயரால் வாழ்வு பெறும்படியும் இந்நூலிலுள்ளவை எழுதப்பெற்றுள்ளன."(அரு.20:31)

"'அப்படியானால் அவர் எழுதிய ஒவ்வொரு எழுத்தும் அதையே காண்பித்துக் கொண்டிருக்கும்.

கானாவூர் திருமணத்தைப் பற்றி அவர் எழுதியதன் நோக்கம் அதுவாகத்தான் இருக்கும்."

"அதாவது திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்த இயேசுதான்
மெசியா என்று அந்த நிகழ்ச்சியை வாசிப்பவர்கள் ஒவ்வொருவரும் விசுவசிக்க வேண்டும்.

அப்படியானால் திருமணம் நடைபெற்றது, 

அன்னை மரியாள் அங்கே இருந்தது, 

இயேசுவும் அவரது சீடர்களும் திருமணத்திற்கு அழைக்கப்பட்டது,

இரசம் பற்றாக்குறை ஆனது,

அன்னை மரியாள் இயேசுவிடம் அதைப் பற்றி சொன்னது,

இயேசு அவளுக்குச் சொன்ன பதில்,

தண்ணீர் ரசமாக மாற்றப்பட்டது 

ஆகிய அனைத்தும்

 இயேசுவை மெசியா என்று நாம் விசுவசிப்பதற்காக இறைவனால் தீட்டப்பட்ட நித்திய காலத்திட்டங்கள்.

சரியா, தாத்தா?"

"'இவற்றை மனதில் வைத்துக் கொண்டுதான் கானாவூர்த் திருமண பற்றிய ஒவ்வொரு உண்மையையும் நாம் அணுக வேண்டும்.

திருமணத்தின் பெண்ணும், மாப்பிள்ளையும் மாதாவுக்கு இரத்த உறவினர்களாகத்தான் 
இருந்திருக்க வேண்டும்.

ஆகவே தான் அன்னை மரியாள் முதலிலேயே திருமண வீட்டிற்கு வந்து விட்டாள்.

உறவினர் என்பதால்தான் பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த இயேசுவையும் அவருடைய சீடர்களையும் திருமணத்திற்கு அழைத்திருக்க வேண்டும்.

அங்கு நிகழும் நிகழ்ச்சிகள் மூலம் இயேசுதான் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மெசியாவாகிய இறைமகன் என்பதை எல்லோரும் உணர வேண்டும்."

"இறைவன் திட்டப்படி திராட்சை ரசம் பற்றாக் குறை ஆகிவிட்டது,

மரியாள் தன் மகனிடம்,

"இரசம் தீர்ந்துவிட்டது" என்று மட்டும் கூறுகிறாள்.

அதற்கு இயேசு, "பெண்ணே! அதை ஏன் என்னிடம் கூறுகிறீர்? எனது நேரம் இன்னும் வரவில்லை" என்றார்.

இந்த வசனத்தில் வரும் "பெண்ணே" என்ற வார்த்தைதான் அநேகருடைய மனதை உறுத்திக் கொண்டிருக்கிறது.

 இயேசு ஏன் உறவினர்களுடைய திருமண வீட்டில் வைத்து தன் தாயை "பெண்ணே" என்று அழைத்தார்?

"இதற்கான பதில் இயேசு இறைமகன் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

அன்னை மரியாள்தான் மனுக் குலத்தின் முதல் பெண்ணை ஏமாற்றிய சாத்தானின் தலையை நசுக்குவதற்காக,

 தந்தை இறைவனின் திட்டப்படி பிறந்த பெண்.

இது மரியாளுக்குத் தெரியும். 

 இயேசு பிறந்து 2000 ஆண்டுகளுக்கு பிறகு நற்செய்தி நூலை வாசிக்கும் நமக்குத் தெரிய வேண்டாமா?

 மரியாளைப் பொறுத்தமட்டில் இயேசு அவளது மகன்.

30 ஆண்டுகளாக அவளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்த போது அவளை எப்படி அழைத்திருப்பார் என்று நமக்குத் தெரியாது.

ஆனால் அவளுக்குத் தெரியும்.

தன்மகன் ஏன் தன்னை "பெண்ணே" என்று ஏன் அழைத்தார் என்று அவளுக்குத் தெரியும்.

ஆனால் திருமண வீட்டிற்கு வந்திருக்கும் மற்றவர்களுக்கு?"

"'திருமண வீட்டில் இயேசுவோடு இருந்தவர்கள் அவருடைய சீடர்கள்.

அவர் தான் மெசியா என்று அவர்கள் விசுவசித்தார்கள்.

அவர் மேல் அவர்கள் கொண்ட விசுவாசத்தை இயேசுவின் வார்த்தைகள் உறுதிப்படுத்தியிருக்கும்.

கானாவூர் திருமணம் பற்றிய நிகழ்ச்சியை எழுதிய அருளப்பர்,

அதாவது, 'இயேசுவின் தாயை தனது தாயாக ஏற்றுக் கொண்ட அருளப்பர்,

அன்னையின் மீது மிகுந்த பாசம் உள்ள அருளப்பர்,

இயேசுவை இறைமகன் என்று மக்கள் ஏற்றுக் கொள்வதற்காக எழுதப்பட்ட நற்செய்தி நூலில்,

அவரை மனு மகனாகப் பெற்ற அன்னையின் பெருமையைப் பற்றி எழுத வேண்டாமா?

அதற்காகத்தான் இயேசுவின் பொது வாழ்வின் ஆரம்பத்தில் நடந்த கானாவூர் திருமணத்தில்

 மாதாவின் வேண்டுதலால்

 இறைமகன் தண்ணீரைத் திராட்சை ரசமாக்கிய நிகழ்ச்சியைப் பற்றி எழுதியிருக்கிறார்.

இயேசு தண்ணீரைத் திராட்சை ரசமாக்கியது,

அவரது நேரம் வந்தபோது திராட்சை ரசத்தை அவரது இரத்தமாக்கி,

சீடர்களுக்குச் சாப்பிடக் கொடுத்ததற்கு முன் அடையாளம்.

"எனது நேரம்'' என்று இயேசு
குறிப்பிட்டது அவருடைய பாடுகளுக்கான நேரத்தைத் தான்.

அவரது பாடுகள் புனித வியாழன் அன்று ஆரம்பித்து விட்டன.

புனித வியாழன் அன்று திராட்சை ரசத்தை தனது ரத்தமாக மாற்றி தனது சீடர்களுக்கு உணவாகக் கொடுத்தார்.

புனித வெள்ளியன்று அவர் சிந்தியது அவரது உடலில் ஓடிய இரத்தத்தை.

புனித வியாழன் அன்று தனது சீடர்களுக்கு உணவாகக் கொடுத்தது அதே இரத்தத்தைத் தான்.

திராட்சை ரசத்தைத்தான் தனது சொந்த இரத்தமாக மாற்றி சீடர்களுக்கு உணவாகக் கொடுத்தார்.

தண்ணீரை ரசமாக மாற்றியது இயேசுதான்.

ரசத்தை ரத்தமாகவே மாற்றியதும் இயேசு தான்.

முதல் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தது அன்னை மரியாள்.

அன்னையின் வேண்டுதலால்தான் தண்ணீரை இயேசு ரசமாக்கினார் என்று குறிப்பிட்டதன் மூலம்

அவரது பாடுகளிலும், மரணத்திலும் அன்னை மரியாளுக்கு இருந்த பங்கை அருளப்பர் நமக்குத் தெளிவு படுத்துகிறார்."

"வேறொரு முக்கியமான உண்மையை நமக்கு வெளிப்படுத்தவே அருளப்பர் கானாவூர் திருமணம் பற்றிய நிகழ்ச்சியை எழுதியிருப்பார் என்று எண்ணுகிறேன்."


"'என்ன உண்மை?"

''அன்னை மரியாள் " ரசம் தீர்ந்து விட்டது" என்று கூறியபோது இயேசு கூறிய பதிலை மேலெழுந்தவாரியாகப் பார்த்தால்

இயேசு தாய் சொன்னதை செய்ய மாட்டாரோ என்பது போல் நமக்குத் தோன்றும்.

ஆனால் மரியாளுக்கு அப்படித் தோன்றவில்லை.

அவள் பணியாட்களிடம், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்றாள்.

இயேசுவும் கற்சாடிகளைத் தண்ணீரால் நிரப்பச் சொல்லி,

தண்ணீரை ரசமாக்கிவிட்டார்.

இப்போது ஒரு உண்மை தெரிகிறது.

மரியாளின் வேண்டுதலால் ஆகாதது எதுவுமில்லை.

தாய் சொன்னதை மகன் கட்டாயம் செய்வார்.

இயேசு தனது ரத்தத்தை சிந்தி நமக்காக ஈட்டிய மீட்பை நாம் அடைய

பாடுகளின் போது அவரோடு இருந்த அவரது தாயின் மன்றாட்டு நமக்கு உதவும்

என்ற உண்மை கானாவூர்த் திருமண நிகழ்ச்சி மூலம் நமக்குத் தெரிகிறது.

மீட்பர் உலகிற்கு வந்தது அவரது தாயின் வழியே.

அதே தாயின் வழியே நாம் மீட்பரை அடையலாம்."

சாத்தானின் தலையை நசுக்கிய அன்னையே,

சாத்தானின் பிடியில் நாங்கள் விழாமல்,

உமது திருமகனின் பாதம் அடைய 

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

லூர்து செல்வம்.

Sunday, March 19, 2023

சாத்தானின் தலையை நசுக்கிய பெண்.

சாத்தானின் தலையை நசுக்கிய பெண்.

"தாத்தா, நமது பிரிவினை சகோதரர்கள் அன்னை மரியாளை ஒரு பெண்ணாகத்தான் பார்க்கிறார்களேயொழிய இறைவனின் தாயாகப் பார்ப்பதில்லை.

அதனால்தான் இறைவனின் தாய்க்கு நாம் கொடுக்கும் மரியாதையை கொடுக்க மறுக்கிறார்கள்.

அவர்கள் தங்கள் செயலுக்கு இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது தனது அன்னையை நோக்கி கூறிய வார்த்தைகளைக் காரணமாகக் காண்பிக்கின்றார்கள்,"

"'எந்த வார்த்தைகளை?"

"இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது அன்னை மரியாள் சிலுவை அடியில் நின்று கொண்டிருந்தாள்.

அவள் அருகில் அருளப்பரும் நின்று கொண்டிருந்தார்.


இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு, 

தம் தாயை நோக்கி, "பெண்ணே, இதோ! உம் மகன்" என்றார்
(Woman, behold your son.” )

இயேசு ஏன் தனது தாயை , "பெண்ணே," என்று சொன்னார்?"

"'இயேசு சொன்ன அதே வார்த்தையைத் தான் அவரது விண்ணக தந்தையும் சொன்னார் என்பது உனக்குத் தெரியுமா?"

"எப்போது?"

"'ஆதாமும் ஏவாளும் முதல் முதல் வாழ்ந்த இன்ப வனத்தில் வைத்து.

தந்தை இறைவன் நமது முதல் தாயை பாவத்தில் விழ வைத்த சாத்தானை நோக்கி,


"உனக்கும் பெண்ணுக்கும், 

உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே 

பகையை உண்டாக்குவோம்:

 அவள் உன் தலையை நசுக்குவாள்:

 நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய்" என்றார். 

யார் யாருக்கு எல்லாம் பகையை உண்டாக்குவோம் என்று தந்தை சொல்கிறார்?"


"உனக்கும் பெண்ணுக்கும் 

அதாவது சாத்தானுக்கும், இயேசுவின் தாய்க்கும்.


அடுத்து,


"உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே "


அதாவது சாத்தானின் வித்தாகிய பாவத்திற்கும், அன்னை மரியாளின் வித்தாகிய இயேசுவுக்கும்,'' இடையே
பகையை உண்டாக்குவோம் என்று தந்தை சொல்கிறார்."

"'இப்போது கொஞ்சம் கூர்ந்து கவனி.

கடவுள் முதலில் மனிதனை
ஆணும், பெண்ணுமாகப் படைத்தார்."

யாரும் யாருமாகப் படைத்தார்?"

"ஆணும், பெண்ணுமாகப் படைத்தார்."

"'உன் பெயர் என்ன?"

"இப்போது எதற்கு என் பெயரை கேட்கிறீர்கள்? அதற்கும் பெண்ணுக்கும் என்ன சம்பந்தம்?"

"'கேட்டதற்குப் பதில் சொல்."

"டேவிட்"

"உனது அம்மா உன்னை பெற்றார்களா அல்லது டேவிட்டைப் பெற்றார்களா?"

"இரண்டும் ஒன்றுதானே, தாத்தா."

"'உனக்கு எப்போது டேவிட் என்று பெயரிட்டார்கள்?"

"பிறந்த பிறகு."

"'அதாவது பிறக்கும் போது உனக்கு பெயரே இல்லை.

நீ குழந்தையாக பிறந்தாய். அவ்வளவுதான்."

"புரிவது போல் தோன்றுகிறது, ஆனால் முழுவதும் புரியவில்லை."

"'கடவுள் மனிதனைப் படைத்த பின் பெண்ணைப் படைத்தார்.

"கடவுள் களிமண்ணால் மனிதனை உருவாக்கி, 
அவன் முகத்தில் உயிர் மூச்சை ஊதவே,
 மனிதன் உயிருள்ளவன் ஆனான்.

ஆண்டவராகிய கடவுள் ஆதியிலே ஓர் இன்ப வனத்தை நட்டிருந்தார். 

தாம் உருவாக்கின மனிதனை அதிலே வைத்தார்."
(ஆதி.2:7,8)

பின்னர் ஆண்டவராகிய கடவுள் ஆதாமிடமிருந்து எடுத்த விலாவெலும்பை ஒரு பெண்ணாகச் செய்து, அந்தப் பெண்ணை ஆதாமிடம் அழைத்துக் கொண்டு வந்தார்
(ஆதி.2:22)

கடவுள் மனிதனைப் படைக்கும் போது பாவ, மாசு மறு இன்றி படைத்தார்.

அதேபோல பெண்ணைப் படைக்கும்போதும் பாவ, மாசு மறு இன்றி படைத்தார்.

தான் படைத்த பெண் பாவம் செய்ய காரணமாக இருந்த சாத்தானின் தலையை நசுக்க,

 இன்னொரு பெண்ணைப் படைக்க கடவுள் ஆதியிலிருந்தே திட்டமிட்டார்.

அந்தப் பெண்தான் இயேசுவின் தாயாகிய மரியாள்.

"உனக்கும் பெண்ணுக்கும் பகையை உண்டாக்குவோம்:

அவள் உன் தலையை நசுக்குவாள்:

நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய்.

(அதாவது, உனது முயற்சி முயற்சியாகவே இருக்கும்,
வெற்றி கிட்டாது.)

அன்னை மரியாளை பாவத்தில் வீழ்த்த சாத்தானால் என்றுமே முடியாது.

சாத்தானால் பாவத்தில் வீழ்த்தப்பட்ட ஆதாம் ஏவாளின் பாவம் சென்மப் பாவமாக அவர்களுடைய  சந்ததியினரிடையே தொடரும்.

ஆனால் அன்னை மரியாள் மட்டும் தந்தை இறைவனின் விசேஷ வரத்தினால் சென்ப பாவ மாசு இன்றி உற்பவித்தாள்.

"அவள் உன் தலையை நசுக்குவாள்." என்று கூறியது தந்தை இறைவன்.

அவரது வாக்கு பொய்க்குமா?

மரியாளின் மாசற்ற தன்மையை மறுப்பவர்கள் கடவுளை பொய்யர் என்று கூறுகிறார்கள்,

 அதாவது,

 அவர்களுடைய கூற்று தேவதூசணம், மிகப்பெரிய பாவம்.

இப்போது சொல்லு இயேசு மரியாளை 'பெண்ணே' என்று என்ன பொருளில் கூறினார்?"

"சாத்தானின் தலையை நசுக்கிய பெண்ணே" என்ற பொருளில்தான் கூறினார்.

இப்போது எனது பெயரைக் கேட்டதன் பொருள் புரிகிறது.

நான் குழந்தையாக பிறந்தது போல,

 மரியாள் பெண்ணாக பிறந்தார்.
அதாவது சாத்தானின் தலையை நசுக்கிய பெண்ணாக பிறந்தார்.

பிறந்த பின்பு தான் அவரது பெற்றோர் அவருக்கு மரியாள் என்று பெயரிட்டார்கள்.

இயேசு உற்பவித்த பின்பு தான் அவர் அவரின் தாயானாள்.

அவரின் தாயாக ஆவதற்கு முன்பே கடவுளின் விசேச அருளால் சாத்தானை வென்றுவிட்டாள். 

உற்பவிக்கும் போது மரியாளை அருளால் நிரப்பியது அவள் வயிற்றில் மனிதனாய் உற்பவிக்கவிருந்த இறைமகன்தான்."

"அதாவது, தனது சிலுவை மரணத்தின் பயனை முன்கூட்டியே தன் அன்னைக்கு அளித்தார்.

ஆனாலும் இன்னும் கொஞ்சம் புரியாமல் இருக்கிறதே!"

"' என்ன புரியவில்லை."

"தான் இறக்கும் தருவாயில் அருளப்பரிடம் தன் அன்னை ஒப்புவிக்கும்போது ஏன் "பெண்ணே" என்று அழைக்க வேண்டும்? தாயே என்று அழைத்திருக்கலாமே!"

"'இயேசுவின் ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் ஒரு பொருள் இருக்கும்.

தனது திருச்சபையை உலகெங்கும் பரப்பும் பொறுப்பை யார் வசம் இயேசு ஒப்படைத்தார்?"

"தனது சீடர்கள் வசம்."

"'இயேசுவின் சிலுவை அடியில் எத்தனை சீடர்கள் நின்றார்கள்?"

"அருளப்பர் மட்டுமே." 

"'இயேசு தனது அன்னையைத் திருச்சபையின் அன்னையாக திருச்சபைக்கு ஒப்படைக்கிறார்.

திருச்சபை சார்பாக அங்கு நின்றது அருளப்பர் மட்டுமே.

தனது அன்னையை அருளப்பருக்கு மட்டுமல்ல

 எல்லா சீடர்களுக்கும்,  

அவர்களால் மனம்திருப்ப படப்போகிற எல்லா மக்களுக்கும் 

அதாவது அனைத்து திருச்சபைக்கும் அன்னையாக நியமிக்கிறார்."

"என் கேள்வி அது அல்ல. ஏன் பெண்ணே என்றார்?"

"'திருச்சபையின் நோக்கம் என்ன? எதற்காக அதை உலகெங்கும் பரப்ப சொன்னார்?"

"மனித குலத்தை பாவத்திலிருந்து மீட்பதற்காக."

"'அதையே வேறு விதமாகச் சொல்லு.''

''சாத்தானின் அடிமைத்தனத்திலிருந்து மனித குலத்தை மீட்பதற்காக."

"'Correct. அதற்காகத்தான் முற்றிலும் இறைவனின் அடிமையாக வாழ்ந்த,

சாத்தானின் அடிமையாக வாழ்ந்திராத, 

அதாவது சாத்தானின் தலையை நசுக்கிய 

தனது அன்னையின் வசம் தான் நிறுவிய திருச்சபையை ஒப்படைக்கிறார்.

அன்னை மரியாளுக்கு மனித குலத்தின் ஆன்மீக வரலாறு தெரியும்.

அதன் அடிப்படையில் தான் இயேசு தன் அன்னையை "பெண்ணே'' என்று அழைத்தார்.

"உலக மீட்பராகிய எனது தாயே, 

சிலுவை மரணத்தால் நான் ஈட்டிய மீட்பை உற்பவித்த நாளிலிருந்து அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் நீங்கள்.

சாத்தானின் தலையை நசுக்கி விட்ட,

பாவ மாசற்ற உங்கள் வசம் என் திருச்சபையை ஒப்படைக்கிறேன். 

நீங்கள் பாவ மாசு இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பது போல,

உங்களிடம் நான் ஒப்படைத்திருக்கும் எனது பிள்ளைகளும்

பாவம் இல்லாமல் வாழ அவர்களை வழிநடத்துங்கள்.

எனது தாயாகிய நீங்கள் எனது ஞான உடலாகிய திருச்சபைக்கும் தாய்."

இவ்வளவு பொருள் "பெண்ணே" என்று அழைத்ததில் அடங்கியிருக்கிறது."

" அடேங்கப்பா! இதெல்லாம் மாதாவுக்குப் புரிந்திருக்குமா?"

"'டேய் பொடியா, முப்பது ஆண்டுகள் மரியாளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தவர் இறைமகன் என்பதை மறந்து விடாதே.

நம்முடனேயே தனது பண்புகளைப் பகிர்ந்து கொண்ட கடவுள்,

தனது அன்னையுடன் தனது ஞானத்தைப் பகிர்ந்து கொண்டிருக்க மாட்டாரா?

அவள் ஞானம் நிறைந்த கன்னிகை."

"சாத்தானின் தலையை நசுக்கிய அன்னையே,

உமது பிள்ளைகளாகிய எங்களையும் சாத்தானிடமிருந்து காப்பாற்றும்."

லூர்து செல்வம்.

.

"பிரம்பால் அடிக்கத் தயங்குகிறவன் தன் பிள்ளையைப் பகைக்கிறான்."(நீதி.13:24)

"பிரம்பால் அடிக்கத் தயங்குகிறவன் தன் பிள்ளையைப் பகைக்கிறான்."
(நீதி.13:24)

''தாத்தா, நீங்கள் பணிபுரியும் காலத்தில் வகுப்புக்கு பிரம்புடன் சென்றதுண்டா?"

"'ஒரு கையில் புத்தகம், இன்னொரு கையில் பிரம்பு.

எனது 36 ஆண்டுகால தோழர்கள் இவர்கள்.

நான் பாட போதனைக்காக வகுப்பிற்குள் போகும் போது என்னோடு வந்து விடுவார்கள்.

என்னுடைய மாணவர்களோடும் மிகவும் பழக்கமானவர்கள்.

மண்வெட்டியை உபயோகிக்கத் தெரியாதவன் விவசாயி அல்ல.
 
பிரம்பை உபயோகிக்கத் தெரியாதவர் ஆசிரியர் அல்ல.

ஆசிரியரின் பிரம்பை விரும்பாத மாணவன்,

போலீசின் லத்தி சார்ஜை விரும்புகிறான்."

"உங்களது பிரம்பைப் பார்த்து மாணவர்கள்  பயப்படுவார்களா?"

"'சுகம் இல்லாத குழந்தை டாக்டரது ஊசியைப் பார்த்து பயப்படுவது போல.

ஆனாலும் அதன் அவசியம் அவர்களுக்கு புரியும்.

என்னிடம் பிரம்படி பட்டதற்காக பிற்காலத்தில் நன்றி கூறியவர்கள் ஏராளம்."

"பிள்ளையும் படிக்க வேண்டாம், பிரம்படி படவும் வேண்டாம்,
பிள்ளையென்றிருந்தால் போதும் 
பெற்றவள் நான் களிக்க "

என்று ஒரு தாய் பாடுவதை நான் கேட்டிருக்கிறேன்."

"'அம்மா நீ பாடிய பாட்டால்,
 இன்று நான் நிற்கிறேன்
தூக்குமேடையில், இப்போ
என்ன பாட்டுப் பாடப் போற?"

என்று பதிலுக்குப் பிள்ளை பாடியதைக் கேட்கவில்லை?" 

"இப்போது கேட்டு விட்டேன்.

கடவுளும் ஒரு ஆசிரியர் என்று நினைக்கிறேன்.

எப்போதும், எங்கும் கையில் பிரம்போடு தான் நிற்கிறார்.

பிரம்பு நாம் செய்த பாவங்களுக்காக நம்மைத் தண்டிப்பதற்காக அல்ல,

அவை பாவம் என்பதை உணர்த்தி நம்மை திருத்துவதற்காக.

உடலில் காய்ச்சல் இருந்தால் டாக்டர் அதை ஊசி போட்டு குணமாக்குகிறார்.

அதேபோல் தான் நமது ஆன்மாவின் பாவம் என்ற காய்ச்சல் இருக்கும்போது 

துன்பம் என்ற பிரம்பால் நம்மை திருத்தி 

பாவத்திற்காக வருத்தப்பட வைத்து நம்மை அதிலிருந்து குணமாக்குகிறார்.

துன்பம் என்ற பிரம்புக்கு இயேசு வைத்திருக்கும் பெயர் சிலுவை.

உலக ஆசிரியர் பிரம்பால் மாணவனை மட்டும் தான் அடிப்பார். 

ஆனால் இயேசு என்னும் விண்ணக ஆசிரியர் நாம் செய்த பாவங்களிலிருந்து நம்மை திருத்துவதற்காக தன்னைத்தானே முதலில் அடித்துக் கொண்டார்.

அடித்துக்கொண்டது மட்டுமல்ல,

தனது மாணவர்கள் வெற்றி பெற தன் உயிரையே கொடுத்தவர் நமது விண்ணக ஆசிரியர் இயேசு மட்டுமே.

இயேசுவுக்கு அடி கொடுத்த சிலுவை, நமது மீட்பின் ஆயுதம்.

அவர் பட்ட அடிகளை நாம் பார்க்கும் போது,

நாமும் அவரைப்போல் அடிபட ஆசைப்பட வேண்டும்.

அடிகள் நமக்கு ஆசீர்வாதங்கள்,

ஏனெனில் ஒவ்வொரு அடியும் ஒரு பாவத்திலிருந்து நமக்கு விடுதலை வாங்கித் தரும்.

அடிகள் படுவோர் பாக்கியவான்கள், 

ஏனெனில் அவர்கள் பாவங்களிலிருந்து மீட்புப் பெறுவார்கள்.


ஆகவே தான் நமக்குச் சிலுவைகள் வரும்போது அவற்றை சுமப்பதற்கு வேண்டிய சக்தியை ஆண்டவரிடம் கேட்க வேண்டுமே தவிர,

அவற்றிலிருந்து விடுதலை பெற வேண்டக் கூடாது."

"'அவர் கொடுத்து, நாம் ஏற்றுக் கொள்ளும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு மதிப்பெண் போட்டு வைத்திருப்பார்.

அடிகளால் நாம் பெறும் மதிப்பெண்கள் நமது இறுதி வெற்றிக்கு மிகவும் பக்கபலமாய் நிற்கும்.

இவ்வுலகில் எத்தனை அடிகள் அடித்தாலும் மறுவுலகில் தனது அரவணைப்பில் நம்மை வைத்திருக்கப் போகும் ஒரே ஆசிரியர்  நம் ஆண்டவர் மட்டும்தான்.

ஆசை தீர அடிபடுவோம் நம் ஆண்டவர் கையால்.

பேரானந்த வாழ்வுக்குள் நுழைந்திடுவோம் அதே கையால்.

அடிகளுக்கு முடிவுண்டு,
நிலை வாழ்வுக்கு முடிவில்லை."

லூர்து செல்வம்.

Saturday, March 18, 2023

"செசாரைத் தவிர வேறு அரசர் எங்களுக்கில்லை"(அரு. 19:15)

"செசாரைத் தவிர வேறு அரசர் எங்களுக்கில்லை"
(அரு. 19:15)


 "தாத்தா, யூத சமய தலைமைக்குருக்கள் தங்களது சமயத்துக்கு விசுவாசமானவர்களா,

 அல்லது,

 தங்களை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்த மன்னனுக்கு விசுவாசமானவர்களா?"

"'அவர்கள் யாருக்கும் விசுவாசமானவர்கள் அல்ல.


தாங்கள் வகித்த பதவியை
தங்களது சுயநலத்திற்காக
 பயன்படுத்திக் கொண்டவர்கள்.

அவர்கள் தலைமைக் குருக்களாக வாழ்ந்தபோது
 
திருச்சட்டத்தின் பெயரால் சாதாரண மக்களை அடிமைப் படுத்தி தாங்கள் ஆடம்பரமாக வாழ்ந்தார்கள்.

மக்கள் அனைவரும் இயேசுவின் பக்கம் சேர்ந்து விட்டால் தங்களது ஆடம்பர வாழ்க்கை பறி போய்விடுமோ  என்ற பயத்தில் தான் அவர்கள் இயேசுவைக் கொல்லவே தீர்மானித்தார்கள்.

பிலாத்து இயேசுவுக்கு மரணத் தீர்ப்பிடுவதற்காகத்தான் அவனிடம் தாங்கள் செசாரின் ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள்.

நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை இயேசு வாழ்ந்து காண்பித்தார்.

நாம் எப்படி வாழ கூடாது என்பதை தலைமை குருக்கள் வாழ்ந்து காண்பித்தார்கள்."

"ஆக அவர்களும் நமக்கு ஆசிரியர்கள் தான்.

தாத்தா, நாம் என்னென்ன செய்யக்கூடாது என்று யூத மதத் தலைவர்களிடமிருந்து கற்றுக் கொள்கிறோம் என்பதை பற்றி கொஞ்சம் பார்ப்போமா?"

"'இயேசு நற்செய்தி அறிவிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே 

பரிசேயர்கள், மறை நூல் அறிஞர்கள், தலைமைக் குருக்கள் ஆகிய யூத மத தலைவர்கள்

இயேசுவுக்கு எதிராக கிழம்பி விட்டார்கள்.

அதன் விளைவு தான் இயேசுவின் கைது, 
விசாரணை, 
மரணத் தீர்ப்பு, 
சிலுவை மரணம்.

அவர்கள் நமக்கு கற்பிக்கும் முதல் பாடம் நாம் முழுக்க முழுக்க இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான்."

"வகுப்பில் பாடங்களைச் சரியாகக் கவனிக்காமலும்,
பாடங்களைப் படிக்காமலும்,
தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களைப் பார்த்து,

மற்ற மாணவர்கள் பாடங்களைக் கவனித்து படிக்க வேண்டும் என்ற பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.

அதே போல் தான் இதுவும்.

சாதாரண மக்கள் இயேசுவைப் பின் சென்று, அவரது நற்செய்தியைக் கேட்டு நடந்தது போல, நாமும் நடக்க வேண்டும்."

"'யூத மத தலைவர்கள் சட்டம் கற்றவர்கள்.

ஆனால் சட்டத்தின் எழுத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தார்கள், 

ஆனால் எந்த நோக்கத்திற்காக சட்டம் இயற்றப்பட்டதோ அதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.

'ஓய்வு நாளில் கடின வேலை செய்யக்கூடாது,

இறைவன் பணிக்காக அதை அர்ப்பணிக்க வேண்டும்'

என்பது சட்டம்.

அவர்கள் ஓய்வு நாளில் வேலை செய்யக்கூடாது என்பதை மட்டுமே அனுசரித்தார்கள்.

பிறர் நலப் பணி செய்யும்போது  இறைபணிதான்  செய்கிறோம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.  

ஆகவே தான் ஓய்வு நாளில் இயேசு நோயாளிகளைக் குணமாக்குவதை அவர்கள் எதிர்த்தார்கள்.

நாம் எப்போது யூத மத தலைவர்களைப் போல் ஓய்வு நாளில் நடந்து கொள்கிறோம் என்பதைப் பற்றி சொல் பார்ப்போம்."

"ஞாயிற்றுக்கிழமைகளில் நாம் திருப்பலியில் கலந்து கொள்ள வேண்டும் என்பது திருச்சபையின் சட்டம்.

அதன் நோக்கம் என்ன?

இயேசு எந்த நோக்கத்தோடு தன்னைத்தானே சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்தாரோ,

அதே நோக்கத்தோடு தான் நாம் ஞாயிற்றுக்கிழமை திருப்பலியை ஒப்புக்கொடுக்க வேண்டும்.

கல்வாரி மலையில் எந்த இயேசு பலியானாரோ அதே இயேசுவைத்தான் நாமும் திருப்பலியில் ஒப்புக்கொள்கிறோம்.

நாம் பாவ மன்னிப்பு பெறுதல்,

அதனால் இறைவனோடும் நமது அயலானோடும் சமாதான வாழ்வு வாழ்தல்,

பலிப் பொருளை உணவாக உண்ணுதல்

ஆகிய திருப்பலியின் நோக்கங்களை எந்த அளவு நாம் நிறைவேற்றுகிறோம் என்பதை பற்றி நாம் நம்மை தானே பரிசோதனை செய்தால்,

இயேசு எதிர்பார்க்கும் அளவுக்கு நாம் நிறைவேற்றவில்லை என்பதுதான் பதிலாகக் கிடைக்கும்.

திருப்பலியின் ஆரம்பத்தில் மக்களோடு மக்களாக பாவங்களை மன்னிக்கும் படி இறைவனிடம் வேண்டுகிறோம்.

ஆனால் நம்மில் எத்தனை பேர் திருப்பலி ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே நமது ஆன்மாவைப் பரிசோதனை செய்து தேவைப்பட்டால் பாவ சங்கீர்த்தனம் செய்கிறோம்?

நம்மில் எத்தனை பேர் திருப்பலியின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை 

 திருப்பலியில் கலந்து கொள்கிறோம்?

சமாதான மன்றாட்டின் போது நமக்கு அருகில் இருப்பவர்களோடு சமாதானம் செய்து கொள்கிறோம்.

ஆனால் உண்மையிலேயே நாம் யாரோடு சமாதானம் செய்து கொள்ள வேண்டுமோ அவர்களோடு செய்து கொள்கிறோமா?

சில கணவன் மனைவியர் குடும்ப காரணங்களுக்காக வீட்டில் சண்டை போடுவார்கள்.

அதே சண்டையோடு கோவிலுக்கும் வருவார்கள்.

சமாதானத்தின் தேவனை பலியாக ஒப்புக்கொடுத்து, அவரையே உணவாக உண்பார்கள்.

பூசை முடிந்து வீட்டுக்கு போய் வழக்கம்போல் சண்டை போடுவார்கள்.

தாங்கள் செய்வது இயேசுவுக்கு பிடிக்காது என்று அவர்கள் மனதில் படுவதில்லை.

அதாவது திருப்பலியால் அவர்கள் வாழ்வில் எந்தவித மாற்றமும் ஏற்படுவதில்லை.

நம்மில் எத்தனை பேர் ஓய்வு நாளில் திருப்பலி முடிந்த பின் நாம் சமாதானம் செய்ய வேண்டிய அயலானின் வீட்டுக்குப் போகிறோம்?

திரும்பலி, 
அடுத்து வீட்டில் தூக்கம்,
அடுத்து மதிய உணவு,
அடுத்து TV ,
நேரம் கிடைக்கும் போது அரட்டை,
இரவில் தூக்கம் 

என்று Time Table போட்டு அதன்படி நடக்கும் கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள்.

ஒரு வீட்டில் ஒரு சிறு பையன் அப்பாவிடம்,

"அப்பா, Sunday என்றாலே சண்டை போடுவதற்கு உரிய நாளா?" என்று கேட்டானாம்.

ஓய்வு நாளை இப்படி அனுசரிப்பவர்கள் 

யூத மத தலைவர்களின் சீடர்கள்,

இயேசுவின் சீடர்கள் அல்ல."

"'பிலாத்து இயேசுவை விசாரிதித்துக் கொண்டிருந்தபோது

யூத மத தலைமைக் குருக்கள் 

"செசாரைத் தவிர வேறு அரசர் எங்களுக்கில்லை"

என்றார்கள்.

நாமும் எப்போதாவது அப்படி நடந்து கொள்கிறோமா?"


"தாத்தா, ஒரே நேரத்தில் செல்வத்துக்கும், இறைவனுக்கும் சேவை செய்ய முடியாது என்று இயேசு சொல்லியிருக்கிறார்.

நம்மில் எத்தனை பேர் நாங்கள் இறைவனுக்கு மட்டுமே சேவை செய்கிறோம்,

கொஞ்சம் கூட செல்வத்துக்காக உழைப்பதில்லை 

என்று மனதைத் தொட்டு சொல்ல முடியும்?

"கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்: இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்."
(மத். 6:33)

உலக காரியங்களை முற்றிலும் இறைவன் கையில் ஒப்படைத்துவிட்டு,

ஆன்மீக வாழ்வை மட்டும் வாழ்கிறோமா என்று நாமே சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

100% அப்படி வாழ்பவர்கள் எங்காவது துறவற மடங்களில் இருப்பார்கள்."

"'ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் 
நாமும் யூத மத தலைமை குருக்களைப் போல் தான் வாழ்வது போல் தெரிகிறது.

இயேசுவின் சிலுவை மரணத்திற்கு காரணம் நாம் தான் என்பதும் புரிகிறது.

மனம் திரும்புவோம். 

இயேசுவுக்காக மட்டுமே வாழ்வோம்.

நம்மை அவர் அரசாள வேண்டும்.

அவர் மட்டுமே அரசாள வேண்டும்.

இயேசுவே நமது அரசர்,

லூர்து செல்வம்.

Thursday, March 16, 2023

மரித்தவுடனே விண்ணக வாழ்வு.

மரித்தவுடனே விண்ணக வாழ்வு.

"தாத்தா, இயேசு கி.பி.33, ஏப்ரல் 3ஆம் தேதி, வெள்ளிக் கிழமை மாலை 3 மணிக்கு மனித குல மீட்புக்காக தன்னையே சிலுவையில் பலி கொடுத்தார்.

 மரித்த வினாடியே மனித குலத்திற்கு மீட்பு கிடைத்திருக்க வேண்டும் அல்லவா?"

"'உறுதியாக.   "தந்தையே, உமது கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்"

என்று சொன்ன வினாடியே மனித குலம் பாவத்திலிருந்து மீட்கப்பட்டது.

அவரது ஆன்மா இவ்வுலக வாழ்வை விட்டு விண்ணக வாழ்வுக்குள் நுழைந்தவுடனே,

அதுவரைப் பாதாளத்தில் விண்ணக வாழ்வுக்காகக் காத்துக் கொண்டிருந்த பரிசுத்தர்கள்  அனைவரும் அவரோடு விண்ணக வாழ்வுக்குள் நுழைந்தார்கள்."

"அதாவது இயேசுவின் வளர்ப்பு தந்தை சூசையப்பரும் அந்த வினாடி தான் விண்ணக வாழ்வுக்குள் நுழைந்தார்.

 அந்த வினாடியிலிருந்து தான் விண்ணகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் திரியேக கடவுளை நேருக்கு நேர் பார்த்து பேரின்ப வாழ்வு வாழ ஆரம்பித்தார்கள்.

அந்த வகையில் பார்த்தால் அவர்களை விட நாம் தான் பாக்கியசாலிகள்.

நாம் உத்தரிக்கிற ஸ்தலத்தில் செய்ய வேண்டிய உத்தரிப்பை இவ்வுலகிலேயே செய்து முடித்து விட்டால்

இறந்த வினாடியே விண்ணகம் சென்று விடலாமே!

உத்தரிப்பு முழுவதையும் இவ்வுலகிலேயே செய்து முடிப்பது தான் கஷ்டம்."

"'கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் நீ நினைக்கிற அளவுக்கு அது அவ்வளவு கஷ்டமில்லை.

நம் வாழ்நாளில் நாம் சந்திக்கும் எல்லா கஷ்டங்களையும்

 நாம் செய்கிற பாவங்களுக்குப் பரிகாரமாக 

கடவுளுக்கு ஒப்புக்கொடுத்துக் கொண்டேயிருந்தால் 

உத்தரிப்பும் நடந்து கொண்டேயிருக்கும்.

புனிதர்கள் அப்படித்தான் செய்து கொண்டிருந்தார்கள்."

"ஆனால் நாம் தான் கஷ்டப்பட சம்மதிக்க மாட்டோமே!

ஒரு சிறு தலைவலி வந்தால் கூட உடனே மாத்திரையைப் போட்டு விடுவோமே!

நமக்கு வரும் நோய் நொடிகள் நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்யும் ஆசீர்வாதங்கள் என்று நாமே சொல்கிறோம்.

ஆனால் அந்த ஆசீர்வாதத்தை நாம் தான் ஏற்றுக் கொள்வதில்லையே!"

"'ஆனால் இயேசு தனது வாழ்நாளில் சந்தித்த ஒவ்வொரு கஷ்டத்தையும் அனைத்து மனுக்குல மக்களின் பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக்கொடுத்துக் கொண்டேயிருந்தார்.

அதனால் தான் அனைத்து மக்களுக்கும் மீட்புக் கிடைத்தது.

அதை ஏற்றுக் கொள்பவர்கள் அதற்குரிய பயனை அனுபவிப்பார்கள்.

ஏற்றுக்கொள்ளாதவர்களின் இழப்புக்கு அவர்கள் தான் பொறுப்பு.

பரிமாறப்பட்ட உணவை உண்பவர்களுக்கு வயிறு நிறையும்.

உண்ண விருப்பம் இல்லாதவர்கள் பட்டினி கிடக்க வேண்டியது தான்."

"சில பிரிவினை சபையினர் இயேசு நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்துவிட்டார், 

நாம் எத்தனை பாவங்கள் செய்தாலும் 

இயேசுவை விசுவசித்தால் போதும்,

நேராக விண்ணகம் சென்று விடலாம் என்று நம்புகிறார்கள்."

"'இது "நான் பரீட்சைக்கு fees கட்டிவிட்டேன், ஆகவே பரீட்சை எழுதாமலேயே வெற்றி அடைந்து விடுவேன்" என்று சொல்வது போலிருக்கிறது.''

"சாதாரண மக்களும் செய்யக்கூடிய சிறு சிறு பரிகாரச் செயல்களைப் பற்றி கொஞ்சம் பார்ப்போமா?"

"'ஏன் கொஞ்சம் பார்க்க வேண்டும்? இயன்ற அளவு பார்ப்போமே.

 சிறு சிறு பரிகாரச் செயல்கள், அதாவது சிறுவர்களும் செய்யக் கூடியவை.

நான் ஒன்று கூறுவேன், அடுத்து நீ ஒன்று கூற வேண்டும். அப்படியே தொடர்ந்து."

"சரி தாத்தா. ஆரம்பியுங்கள்."

"'காலையில் 5.30க்கு எழ வேண்டும். இன்னும் தூங்க வேண்டும் போல் இருக்கிறது. ஆனால் அந்த ஆசையை அடக்கி, தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே  எழுந்து உட்கார்வோம்."

"உடனே அம்மாவிடம் Tea கேட்க வேண்டும் போல் தோன்றுகிறது.
ஆசையை அடக்கி காலை செபம் சொல்லிவிட்டு, பல் தேய்த்து விட்டு Tea கேட்போம்."

"'பகலில் நாம் சந்திக்கவிருக்கும் கஷ்டங்களை எல்லாம் காலையிலேயே கடவுளுக்குப் பாவப் பரிகாரமாக ஒப்புக் கொடுப்போம்."

"காலை உணவு எப்படி இருந்தாலும் குறை சொல்லாமல் சாப்பிடுவோம்."

"'பள்ளிக்கூடத்தில் யாரிடமும் யாரைப் பற்றியும் குறை கூற மாட்டோம்."

"ஆசிரியர் தரும் அடிகளை பாவ பரிகாரமாக இயேசுவுக்கு ஒப்புக் கொடுப்போம்.''

"'திருப்பலியின் போது கண்களை பீடத்திலேயே வைத்திருப்போம்."

"வழிபாட்டு நேரத்தில் பராக்குக்கு இடம் கொடுக்க மாட்டோம்."

"'திருப்பலியை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக் கொடுப்போம்."

"கோவிலுக்குப் போகும் போது Cell phone ஐக் கொண்டு போக மாட்டோம்."

"'இவை ஒவ்வொன்றும் ஒரு தவ முயற்சி. நமது பாவங்களுக்குப் பரிகாரமாக அவற்றை ஆண்டவருக்கு ஒப்பு கொடுக்கலாம்.

தினமும் இப்படி  ஆயிரக்கணக்கான தவ முயற்சிகள் செய்யலாம்.

நமது உத்தரிக்கிற ஸ்தல வேதனையை அவை குறைக்கும்.

துறவிகளைப் போல கடினமான தவ முயற்சிகளைச் செய்ய சாதாரண மக்களால்  முடியாமலிருக்கலாம்.

ஆனால் சிறு சிறு தவ முயற்சிகளை சிறுவர்களும் செய்யலாம்.

துறவற சபையினர் கற்பு, கீழ்ப்படிதல், தரித்திரம் ஆகிய வார்த்தைப் பாடுகளைக் கொடுத்து,

வாழ்நாள் முழுவதும் பரிகார வாழ்வு வாழ்கிறார்கள்.

 அத்தகைய வாழ்க்கை இயேசுவுக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால் அவரும் அப்படித்தான் வாழ்ந்தார்.

எல்லா மக்களாலும் அத்தகைய வாழ்வு வாழ்வது முடியாது.

முடியாதவர்கள் தங்களால் இயன்ற தவ முயற்சிகளைச் செய்து பாவப் பரிகாரமாக இறைவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.

யார் யாருக்கு எவ்வளவு முடியும் என்று இயேசுவுக்குத் தெரியும்.

நம்மால் இயன்ற பாவப் பரிகாரச் செயல்கள் செய்யும்போது நமது பாவங்களின் எண்ணிக்கை குறையும்.

ஆண்டவரிடமிருந்து அருள் வரத்து அதிகமாகும்.

இறைவனோடு நமது உறவும் நெருக்கமாகும்.

நாம் மரணமடையும்போது பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்றால்,

பாவங்களை அகற்றுவோம் பரிகாரத்தை அதிகரிப்போம்.

பரிசுத்தமாய் வாழ்ந்து,
பரிசுத்தமாய் இறைவனடி சேர்வோம்.

லூர்து செல்வம்.

Wednesday, March 15, 2023

பாடுகளின்போதும் இயேசு செய்த நன்மைகள்.

பாடுகளின்போதும் இயேசு செய்த நன்மைகள்.


இயேசு நல்லவர்
எப்போதும் நல்லவர்.

 பாடுகள் பட்டு கொண்டிருந்த போதும் அவரால் நன்மைகள் செய்யாமல் இருக்க முடியவில்லை.

கெத்சமனி தோட்டத்தில் அவரைத் தலைமை குருவின் ஆட்கள் கைது செய்த போது சீடர்களுள் ஒருவர் தலைமைக்குருவின் ஊழியனைத் தாக்கி அவனுடைய வலக்காதைத் துண்டித்தார்.

ஆனால் இயேசு வெட்டப்பட்ட காதை திரும்பவும் அது இருந்த இடத்திலேயே ஒட்டி வைத்து விட்டார்.

அப்போதும் கைது செய்தவர்களுக்கு மனம் இளகவில்லை.

தலைமைக்குருக்கள் பிலாத்துவிடம் இயேசுவை அழைத்துச் சென்று 

அவரைப் பற்றி பல குற்றச்சாட்டுக்களைக் கூறினாலும்,

அவனால் அவரிடம் எந்தக் குற்றத்தையும் காண முடியவில்லை.

அவர்கள் "கலிலேயா தொடங்கி இவ்விடம்வரை, யூதேயா எங்கும் இவ்ன போதித்து மக்கிளிடையே கிளர்ச்சிசெய்கிறான் " என்று சொன்னவுடன்,

கலிலேயாவை ஆண்டு வந்த ஏரோதுவிடம் அவரை அனுப்பினான்.

அவனாலும் அவரிடம் எந்தக் குற்றத்தையும் காண முடியவில்லை.

அவன் அவரை அவமானப்படுத்தி, திரும்பவும் பிலாத்துவிடமே அனுப்பிவிட்டான். 

இயேசு தான் பட்ட அவமானத்திற்குப் பதிலாக அவர்கள் இருவருக்கும் நட்பைப் பரிசாகக் கொடுத்தார்.

"அதுவரை ஒருவரோடொருவர் பகைமைகொண்டிருந்த ஏரோதும் பிலாத்தும் அன்றே நண்பராயினர்."
(லூக்.23:12)

"உனக்குத் தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்" என்ற அவரது போதனையைச் செயலில் காட்டினார்.

பிலாத்துவின் மனைவி 
 கிலவுதியா ப்ரோக்யூலா ஒரு ரோமானிய இளவரசி.

குற்றம் எதுவும் செய்யாத இயேசுவை பிலாத்து மரணத் தீர்ப்பிடுவதற்காக விசாரித்துக் கொண்டிருந்தபோதே 

அவர் அவனது மனைவியின் உள்ளத்தில் விசுவாச விதையை விதைத்தார்.

அவள் பிலாத்துவிடம் ஆளனுப்பி,

 "அந்நீதிமானின் காரியத்தில் நீர் தலையிட வேண்டாம். ஏனெனில், அவர்பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன்" என்று கூறினாள். (மத்.27:19)

இயேசு விதைத்த விசுவாச விதை முளைத்து பலன் தர ஆரம்பித்தது.

இயேசுவின் மரணத்திற்குப் பின் அவள் கிறிஸ்தவளாக மாறினாள்.

புனித சின்னப்பர் நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்தபோது அவரிடம் ஞானஸ்நானம் பெற்றாள்.


"குளிர்காலம் தொடங்குமுன் காலம் தாழ்த்தாமல் வந்து விடும். ஐபூலு, பூதே, லீனு, 'கிலவுதியாள்,' மற்றுமுள்ள சகோதரர் அனைவரும் உமக்கு வாழ்த்துக் கூறுகின்றனர். ஆண்டவர் உம்மோடிருப்பாராக. இறை அருள் உங்களோடிருப்பதாக.''
(2 திமோ.4:21)
என்ற இறைவசனம் இதை உறுதிப்படுத்துகிறது.

அவருக்கு மரணத் தீர்ப்பிட்ட பிலாத்துவையும் அவர் கைவிடவில்லை.

அவர் ரோமை அரசால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவராக மாறி வேத சாட்சியாக மரித்தார்.

பாடுகளின் போது தனக்கு எதிராக செயல்பட்டவர்கள் அனைவரையும் இயேசு மன்னித்து விட்டார் என்பதற்கு பிலாத்துவின் வாழ்க்கையின் இறுதி ஒரு சான்று.


"மாசற்ற இரத்தத்தைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன்" (மத்.27:4)

என்று இயேசுவை காட்டிக் கொடுத்த யூதாஸ் தனது பாவத்தை ஏற்றுக் கொண்டான். 

காட்டிக் கொடுப்பதற்காக அவன் பெற்ற வெள்ளி காசுகளை வீசி எறிந்து விட்டான்.

ஆனாலும் இயேசுவிடம் நேராக வராமல் தற்கொலை செய்து கொண்டான்.

அவன் தற்கொலை செய்து கொண்டது பாவம்.

ஆனாலும் அவனது கழுத்தை சுருக்கு கயிறு இறுக்கி அவனுக்கு வந்த மரணத்தின் இறுதி வினாடியில் இயேசுவின் இரக்கம் அவனது உள்ளத்தைத் தொட்டு மனதைத் திருப்பியிருக்கும் என்பது அடியேனது நம்பிக்கை.


"தந்தையே, இவர்களை மன்னியும்: ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்ற தன் அன்பு மகனின் மன்றாட்டை தந்தை கேட்காமல் இருந்திருப்பாரா?

அன்பின் மிகுதியால்தானே தன் மகனையே பாடுகள் பட்டு மரிக்க உலகிற்கு அனுப்பினார்!

தன்னைச் சிலுவையில் அறைந்த வீரர்களுக்கு அவர் தனது அன்னை தனக்காகத் தயாரித்த , உடைகளை எல்லாம் பரிசாகக் கொடுத்தாரே!

தங்களது நோய்கள் குணமாவதற்காக அவரது உடையை தொடுவதற்கு எத்தனை ஆயிரம் பேர் அவர் பின்னாலே சென்றார்கள்!

அந்த உடைகளை வீரர்கள் தாங்களே தங்களுக்குள் பங்கு வைத்துக் கொண்டாலும் இயேசுவின் அனுமதி இன்றி அதை செய்திருக்க முடியுமா?

அவருடைய அனுமதி இன்றி அவரை யாரும் தொட்டிருக்க முடியாது.

அவருடைய அனுமதி இன்றி யாரும் அவரைக் கைது செய்திருக்க முடியாது.

அவருடைய அனுமதி இன்றி யாரும் அவரை அடித்திருக்கவோ, அவமானப்படுத்தியிருக்கவோ முடியாது.

அவருடைய அனுமதி இன்றி யாரும் அவரைச் சிலுவையில் அறைந்திருக்க முடியாது.

எல்லா விதமான அவமானங்களுக்கும் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக அவர் தன்னையே கையளித்தார்.

சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் போது தன்னோடு சிலுவையில் அறையப்பட்டிருந்த நல்ல கள்ளனை மன்னித்து ஏற்றுக் கொண்டார்.

நூற்றுவர் தலைவன் அவரது விலாவை ஈட்டியால் குத்திய போது தனது ரத்தத்தால் குத்தியவனது கண்ணுக்குப் பார்வை அளித்து நன்மை செய்தார்.

பாடுகளின் போது அவரது உடல் அடி மேல் அடி வாங்கிக் கொண்டிருந்தாலும் 

அவரது உள்ளம் அடித்தவர்களுக்காக இரங்கிக் கொண்டிருந்தது.

இயேசுவின் பாடுகளைப் பற்றி தியானித்துக் கொண்டிருக்கும் நாம் இயேசுவாக வாழ உறுதியெடுப்போம்.

"உம்மை அடித்தவர்களையும் ஆசீர்வதித்துக் கொண்டிருந்த

 இரக்கம் மிகுந்த இயேசுவின் திரு இருதயமே

 எங்கள் மேல் இரக்கமாக இரும்."

லூர்து செல்வம்.

Tuesday, March 14, 2023

மீட்பின் திட்டம். (தொடர்ச்சி)2

மீட்பின் திட்டம். (தொடர்ச்சி)2


"'நேற்று நான் கேட்ட கேள்வி ஞாபகத்தில் இருக்கிறதா?"

"அன்பினால் உந்தப்பட்டு வாழ்ந்த இயேசுவைப் போல்

 நாமும் அன்பினால் உந்தப்பட்டு வாழ்கிறோமா?" என்று கேட்டீர்கள்.

நாமும் அன்பினால் உந்தப்பட்டு தான் வாழ்கிறோம்.

ஆனால் இயேசுவைப் போல் வாழ்கிறோம் என்று சொல்ல இயலாது."

"'நீ சொல்வதைப் பார்த்தால் 

"குடும்பத்தில் தான் வாழ்கிறோம்

 ஆனால் குடும்பமாக வாழ்கிறோம் என்று சொல்ல முடியாது"

என்று சொல்வது போல் இருக்கிறது."


"உண்மைதான், தாத்தா.

இயேசு அன்பின் நற்செய்தியைப் போதித்தது மட்டுமல்ல அதை அவரே வாழ்ந்து காட்டினார்.

"ஏழைகள் பாக்கியவான்கள்"

என்று போதித்தது மட்டுமல்ல, அவரே ஏழையாக வாழ்ந்தார்.

வேறு வழி இல்லாமல் ஏழையாக வாழ வில்லை,

சர்வத்தையும் படைத்தவர் அவர், அனைத்துக்கும் உரிமையானவர் அவர்,

அவர் நினைத்திருந்தால் 
எல்லா வாழ்க்கை வசதிகளையும் கொண்ட குடும்பத்தில்,

அனைத்து நவீன வசதிகளையும் உள்ள அரண்மனையில் பிறந்து வளர்ந்திருக்கலாம்.

அப்படி வளர்ந்திருந்தால் "ஏழைகள் பாக்கியவான்கள்" என்று அவரால் போதித்திருக்க முடியாது.

கிறிஸ்தவர்கள் என்று நம்மையே அழைத்துக் கொள்ளும் நாம்

 எந்த அளவுக்கு கிறிஸ்துவைப் போல் உலகப் பொருட்களின் மீது பற்று அற்றவர்களாக வாழ்கிறோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நித்திய காலமாக திட்டமிட்டு, மனிதனாகப் பிறப்பதற்கு ஒரு மாட்டுத் தொழுவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

அவரைப் பெற்றெடுத்த அன்னை கோவிலில் வளர்ந்த ஒரு ஏழைப் பெண்மணி

தன்னை வளர்ப்பதற்காக அவர் தேர்ந்தெடுத்த சூசையப்பர் ஒரு ஏழைத் தச்சுத் தொழிலாளி.

நம்மை இயேசு போதித்த ஏழ்மை விஷயத்தில் அவரோடு கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்ப்போமா.

நமக்கு ஏழ்மையைப் பற்றி செயல் மூலம் போதிப்பதற்காக,

 நசரேத்தூரில் சூசையப்பருக்குச்
சொந்த வீடு இருந்தும்,

90 மைல் தொலைவில் இருந்த பெத்லகேமிற்கு,

அவரை நடத்தியே கூட்டி வந்திருக்கிறார் இயேசு.

மாட்டுத் தொழுவத்தில் பிறந்த ஏழைப் பாலகனின் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் நமது 
ஆடம்பரத்தைப் பார்த்தவர்கள் 

கிறிஸ்தவர்கள் ஒரு ஏழையைப் பின்பற்றுவர்கள் என்று சொல்லவே மாட்டார்கள்.

இனிப்பே சாப்பிடாத ஒருவர் நமது வீட்டுக்கு விருந்தாளியாக வந்தால்

அவர் சாப்பிடுவதற்கு இனிப்புப் பண்டங்களை மட்டும் நாம் கொடுத்தால் 

அவர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்?

தன்னை அவமானப்படுத்துவதற்கு என்றே தனக்குப் பிடிக்காததைத் தந்திருப்பதாக நினைக்க மாட்டார்?

"ஏழைகள் பாக்கியவான்கள்" என்று கூறிய இயேசுவைப் பார்த்து,

"இல்லை ஆண்டவரே, ஆடம்பரமாக வாழ்பவர்கள்தான் பாக்கியவான்கள்"

என்று நாம் கூறினால் அவர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்?

நமது ஆடம்பரமான வாழ்க்கை மூலம் இயேசுவைப் பார்த்து அப்படித்தான் சொல்கிறோம்.

வாழ்க்கையில் ஆடம்பரத்தைக் குறைப்போம்.

எளிமையாக வாழ்ந்த இயேசுவின் சீடர்களாக நாம் வாழ நாமும் எளிமையாக வாழ்வோம்.

அப்போதுதான் நாம் இயேசுவின் சீடர்கள்."

"இயேசு மனிதனாகப் பிறந்ததன் நோக்கமே நமது பாவங்களை மன்னிப்பதுதான்.

இயேசு சென்றவிடமெல்லாம் 
நோயாளிகளுக்கு விசுவாசத்தைப் பரிசாக அளித்து,

அவர்களது பாவங்களை மன்னித்து,

நோய்களைக் குணமாக்கினார்.

சாகும் தருவாயில் கூட தனது பாடுகளுக்குக் காரணமானவர்களை மன்னிக்கும்படி தந்தையிடம் வேண்டினார்.

நல்ல கள்ளன் செய்த பாவங்களை மன்னித்து அன்றே அவனை விண்ணகத்திற்கு அழைத்துச் சென்றார்.

தவக்காலத்தில் இயேசுவின் பாடுகளைப் பற்றி தியானிக்கும் நாம் நமது பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கிறோம்.

நமக்கு விரோதமாக குற்றம் செய்தவர்களை நாம் மன்னிக்கின்றோமா?"

"'பேரப் புள்ள, "எங்களுக்கு எதிராக குற்றம் செய்தவர்களை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் பாவங்களை மன்னியும்."

என்றுதான் நாம் தினமும் தந்தையிடம் செபிக்கிறோம்.

அதாவது,

"எங்களுக்கு எதிராகக் குற்றம்   செய்தவர்களை நாங்கள் மன்னியாதது போல 

எங்கள் பாவங்களை 
மன்னியாதேயும்."

என்பதுதான் நமது செபத்தின் பொருள்.

குடும்பங்களிலும் சரி, சமூகத்திலும் சரி ஏற்படும் அநேக பிரச்சனைகளுக்குக் காரணம் 

நாம் ஒருவரை ஒருவர் மன்னித்து ஏற்றுக் கொள்ளாதது தான்.

குடும்ப அங்கத்தினர்கள், பெற்றோர்களும் சரி பிள்ளைகளும் சரி,
 குடும்ப சமாதானத்திற்கு முதல் இடம் கொடுக்க வேண்டும்.

குற்றம் குறைகளை பார்ப்பதற்கு முதலிடம் கொடுப்பதால் தான் குடும்பங்கள் உடைகின்றன.

ஒருவரையொருவர் மன்னித்து ஏற்றுக் கொண்டு வாழ்ந்தால் அன்பு வளரும், குற்றங்கள் காணாமல் போகும்.

மன்னிப்பு இல்லாத இடத்தில் அன்பு இருக்காது.

அன்பு இல்லாத இடத்தில் சமாதானம் இருக்காது.

பிறர் நமக்கு எதிராக செய்கிற குற்றங்களை அவர்கள் கேட்காமலேயே அவர்களை மன்னித்து ஏற்றுக் கொண்டால்

 அதே குற்றங்களை திரும்பவும் செய்ய மாட்டார்கள்.

பிறரை மன்னிக்க முடியாதவனால் கிறிஸ்தவனாக வாழ முடியாது.

உலகில் குற்றம் குறைகள் முற்றிலும் இல்லாமல் யாராலும் இருக்க முடியாது.

ஒருவரை ஒருவர் மன்னித்து ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இருந்தால் 

வாழ்வில் சமாதானம் நிலவும்."

"ஒவ்வொரு இரவும் படுக்கப் போவதற்கு முன் தங்கள் குற்றங்களைத் தாங்களே பரிசோதித்துப் பார்ப்பவர்கள் 

பிறருடைய குற்றங்களை பெருசு படுத்த மாட்டார்கள்."


"'இயேசு நம் மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்தமையால் விண்ணில் இருந்து மண்ணுக்கு இறங்கி வந்து நமக்காக வாழ்ந்தார்.

இயேசுவின் பால் நாம் கொண்டிருக்கும் அன்பு அவரோடு நித்தியமாய் வாழ விண்ணுக்கு  நம்மை அழைத்துச் செல்ல வேண்டுமென்றால் 

நாம் அவருக்காக வாழ்வோம். அவரது போதனைப்படி வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Sunday, March 12, 2023

மீட்பின் திட்டம்,

மீட்பின் திட்டம்,

"தாத்தா, கடவுள் சர்வ வல்லவர் தானே!"

"'சர்வ வல்லவர் மட்டுமல்ல. அவருடைய எல்லா பண்புகளிலும் அளவில்லாதவர்.

அளவற்ற அன்பு,

அளவற்ற நீதி

 அளவற்ற ஞானம்,

 அளவற்ற சுதந்திரம்.

உள்ளவர் கடவுள்."

"Thank you, தாத்தா. அவருடைய அளவற்ற சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இப்பொழுது உங்களிடம் ஒரு கேள்வி கேட்கப் போகிறேன்.

அவர் நித்தியராகையால் அவரது பண்புகளும் நித்தியமானவை.

அதாவது அவரது எல்லா பண்புகளும் ஆரம்பமே இல்லாத காலத்திலிருந்தே அவரிடம் உள்ளன. 

அவர் நித்திய காலத்திலிருந்து தனது திட்டங்களைத் தீட்டுகிறார்.

உலகத்தைப் படைக்க வேண்டும், அதில் தனது சாயலில் மனிதனைப் படைக்க வேண்டும் என்பது அவரது நித்திய காலத் திட்டம்.

அவரால் படைக்கப்படவிருக்கும் மனிதன் பாவம் செய்வான் என்பது அவருக்கு நித்திய காலமாகவே தெரியும்.

மனிதனை அவனுடைய பாவத்திலிருந்து மீட்க வேண்டும் என்பதும் அவரது நித்திய காலத் திட்டமே.

இங்கேதான் நான் கேட்க வேண்டிய கேள்வி நுழைகிறது."

"கேள்."

"இப்படித்தான் திட்டம் போட வேண்டும் என்று அவரை யாரும் கட்டாயப்படுத்த முடியாதல்லவா?"

"' முடியாது.

ஆனால் அவரைக் கட்டாயப்படுத்த நித்திய காலமாக அவரோடு யாரும் இல்லையே?

அவர் மட்டும்தான் நித்தியர்."

"அது தெரியும். அவர் எப்படி வேண்டுமானாலும் அவரது விருப்பப்படி திட்டங்கள் தீட்டியிருக்கலாம்.

மனிதனை பாவத்திலிருந்து மீட்க 

அவரே மனிதனாகப் பிறந்து, பாடுகள் பட்டு,  சிலுவையில்  மரிக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லையே.

துவக்கமும், முடிவும் இல்லாத கடவுள் ஏன் துவக்கமும் முடிவும் உள்ள மனிதனாகப் பிறக்க ஆசைப்பட வேண்டும்?

அளவற்ற வல்லமை உள்ள கடவுள் ஏன் மனித பலகீனங்களை ஏற்றுக்கொள்ள ஆசைப்பட வேண்டும்?

துன்பமே பட முடியாத கடவுள் ஏன் வேதனைகள் நிறைந்த பாடுகள் பட ஆசைப்பட வேண்டும்?

"உண்டாகுக" என்று சொன்னவுடன் உலகம் உண்டாயிற்று.

"மன்னித்தேன்" என்று சொன்னால் போதுமே, பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்குமே!

எதற்காக மனிதனால் அடிபட்டு, மிதிபட்டு, கொல்லப்பட்டு 

பாவப் பரிகாரம் செய்ய ஆசைப்பட வேண்டும்?

அதுதான் எனக்கு விளங்கவில்லை."

"'தம்பி, அவரது சுதந்திரமான செயல்பாட்டைக் கேள்வி கேட்க நமக்கு எந்த உரிமையும் இல்லை."

"தாத்தா நான் கடவுளிடம் கேள்வி கேட்கவில்லை.

கேட்க ஆசைப்பட்டாலும் என்னால் முடியாது.

நான் கேள்வி கேட்பது உங்களிடம்.

உங்களாலும் கடவுள் ஏன் அப்படி திட்டமிட்டார்  என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முடியாது.

பதில் சொல்ல முடியாவிட்டாலும் உங்களது கருத்துக்களைக் கூறலாம்."

"'இறைவனது சுதந்திரமான செயல்பாடு பற்றி கேள்வி கேட்க நமக்கு உரிமை இல்லை என்று நீயே கூறிவிட்டாய்.

இறைவன் தன்னைப் பற்றி என்ன வெளிப்படுத்துகிறாரோ அதைப்பற்றி மட்டும்தான் நம்மால் அறிய முடியும்.

அவர் வெளிப்படுத்தாததைப் பற்றி நாம் எப்படி கருத்து கூற முடியும்?"

"தாத்தா, நான் ஒரு ஒப்புமை கூறுகிறேன்.

ஒரு பையன் ஒரு பெண்ணை அவனாகவே காதலித்து, கல்யாணம் செய்கிறான்.

அவன் ஏன் காதலித்தான் என்பது யாருக்கும் தெரியாது.

அவனாகவே சொன்னால்தான் தெரியும்.

அவன் சொல்லாவிட்டாலும் ஊரில் அவனுக்கு தெரிந்தவர்கள் தங்கள் கருத்துக்களை ஒருவரோடு ஒருவர் பரிமாறி கொள்கிறார்கள் அல்லவா?

அதேபோல உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்."

"'உனது நண்பர்களில் யாருக்காவது பிறந்தநாள் பரிசு வாங்கி கொடுத்திருக்கிறாயா?"

"கொடுத்திருக்கிறேன்."

"'எந்த அடிப்படையில் பரிசு வாங்குவாய்?" 


"எனது நண்பனாகையால் அவனது ரசனைகள் எனக்குப் புரியும்.

அதன் அடிப்படையில் வாங்குவேன்."

"'நம்மைப் படைத்த கடவுளுக்கு நமது ரசனைகள் புரியுமா? புரியாதா?"

"கட்டாயம் புரியும். ஏனென்றால் அவர் நம்மை அவருடைய சாயலில் படைத்து,

 அவருடைய பண்புகளையும் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.

 என்னென்ன பண்பு உள்ளவர்களுக்கு என்னென்ன ரசனை உண்டு என்பது அவருக்குத் தெரியும்."

"'அவர் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ள   பண்புகளில் ஒன்றைக் கூறுங்கள்? "

"அன்பு. அவர் அன்பு மயமானவர். 
நம்மை அவரது சாயலில் படைக்கத் திட்டமிடும்போது 

அவருடைய அன்பை நம்மோடு பகிர்ந்து கொள்ளத் திட்டமிட்டார்."

"'ஒவ்வொரு பண்புக்கும் ஒரு குணம் இருக்கும்.

அப்படியானால் கடவுளுடைய அன்புக்கும் ஒரு குணம்  இருக்கும்.

அது என்ன குணம் என்று நீ நினைக்கிறாய்?"

"தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு எவனிடமும் இல்லை."
(அரு.15:13)

என்று இயேசுவே கூறியிருக்கிறார்."

"'அதாவது,
தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுக்க விருப்பம் இல்லாத அன்பு அன்பே இல்லை.

நம்மோடு கடவுள் தனது அன்பை பகிர்ந்து கொண்ட போது அன்புடன் அதனுடைய குணத்தையும் சேர்த்து தான் பகிர்ந்து கொண்டார்.

ஆகவே கடவுளுடைய சாயலைக் கொண்டுள்ள அனைத்து மனிதர்களுக்கும் இந்த குணம் கட்டாயம் இருக்கும்.

அதனால்தான் நமது பெற்றோர் நமக்காகவே வாழ்கிறார்கள்,

நமக்காக தங்கள் உயிரையே தியாகம் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

தன் நண்பன் ஏதாவது ஒரு ஆபத்தில் மாட்டிக் கொள்ளும்போது 

அவனைக் கைவிட்டு விட்டு வந்துவிடும் நபரை நண்பன் என்று அழைக்க முடியாது.

அன்பின் இந்தப் பண்பைக் கூறிய இயேசு இறைமகன்.

இயேசுவே கூறுகிறார்,

"தம் மகனில் விசுவாசங் கொள்ளும் எவரும் அழியாமல், முடிவில்லா வாழ்வைப் பெறும்பொருட்டு அந்த ஒரேபேறான மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்."
(அரு.3:16)

கடவுள் அன்பு மயமானவராக இருப்பதால்  அதற்கு இணங்க மனிதனுக்காக தனது உயிரையே கொடுத்து அவனை மீட்க விரும்பினார்.

ஆனால் கடவுளால் தனது உயிரைக் கொடுக்க முடியாது.

ஆகவே உயிரைக் கொடுக்க முடியாத தேவ சுபாவத்தோடு,

உயிரைக் கொடுக்க முடியக் கூடிய மனித சுபாவத்தையும் சேர்த்துக் கொண்டார்.

அப்படி சேர்த்துக் கொண்டபின்

உலக வாழ்க்கையின் போது

கடவுளால் கஷ்டப்பட முடியும், மனித சுபாவத்தில்.

கடவுளால் அழ முடியும், மனித சுபாவத்தில்.

கடவுளால் மரணம் அடைய முடியும், மனித பாவத்தில்.

கடவுளின் அன்பு தான் அவரை மனிதனாகப் பிறந்து பாடுபட்டு மரிக்கத் தூண்டியது."

"தாத்தா, நான் உங்கள் கருத்துக்களைத் தான் கேட்டேன்.

நீங்கள் கடவுள் கூறியதைக் கூறிக் கொண்டிருக்கிறீர்கள்."

"'தாத்தா உன் வீட்டுக்கு வந்து தண்ணீர் கேட்கிறேன் என்று வைத்துக்கொள்.

தருவாயா? தர மாட்டாயா?"

"கட்டாயம் தருவேன்."

"'எந்தத் தண்ணீரை?" 

"தினமும் அம்மா காலையில் நல்ல தண்ணீர் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து விடுவார்கள்."

"'நான் தண்ணீர் கேட்டது உன்னிடம்.

 நீ அம்மா எடுத்து வந்த தண்ணீரை தருகிறாய்."

"நான் அம்மாவோடு தானே இருக்கிறேன்."

"'கரெக்ட். நீ கேட்டது என்னுடைய கருத்துக்களைத் தான்.

ஆனால் நான் கடவுளோடு தானே இருக்கிறேன்.

அவருடைய கருத்துக்கள் தான் என்னுடைய கருத்துக்கள்."

"சரி. கடவுள் நினைத்திருந்தால் மனிதனாக பிறக்காமலேயே ஒரே வார்த்தையில் மனித பாவங்கள் அனைத்தையும் மன்னித்திருக்கலாம்.

ஆனால் கடவுள் தனது அன்பின் தன்மையை நமக்கு வெளிப்படுத்த திட்டமிட்டார்.

தனது அன்பின் ஆழத்தை நமக்கு தெரியப்படுத்தவே அவர் தன்னுடைய அன்பினால் உந்தப்பட்டு மனிதனாகப் பிறந்தார்.

இதுதான் உங்கள் கருத்து, சரியா?"

"'சரி. ஆனால் நாம் அதைத் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது.

தனது சாயலில் நம்மைப் படைத்த கடவுளைத் திருப்தி படுத்த 

அவரது சாயல் நமது வாழ்விலும் பிரதிபலிக்கும்படி வாழ வேண்டும்.

வாழ்கிறோமா?

அன்பினால் உந்தப்பட்டு வாழ்ந்த இயேசுவைப் போல்

 நாமும் அன்பினால் உந்தப்பட்டு வாழ்கிறோமா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்."

(தொடரும்)

லூர்து செல்வம்,