"ஒரே அன்பும். ஒரே உள்ளமும், ஒரே மனமும் கொண்டிருங்கள்.''
(பிலிப்.2:2)
கோடிக்கணக்கான சதுர மைல்கள் பரந்த விண்வெளியில்
கோடிக்கணக்கான மைல்கள் இடைவெளியோடு,
பரந்து கிடக்கும் எண்ண முடியாத நட்சத்திரங்களும், அவற்றின் கோள்களும் தங்கள் தங்கள் பாதையில், ஒன்றோடு ஒன்று மோதாமல், வலம் வருவதற்குக் காரணம்
அவற்றைப் படைத்த இறைவன் படைத்த ஈர்ப்பு விசை (gravitational force) என்னும் இயற்கை விதிதான்.
அதே போல் தான் உலகில் வாழும் கோடிக்கணக்கான மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்ளாமல்,
உறவுடன் வாழ வேண்டும் என்பதற்காக இறைவன் கொடுத்த ஈர்ப்பு விசை தான் அன்பு.
அன்பு மயமான இறைவன் தனது பரிசுத்தமான அன்பை தான் படைத்த மனிதர்களோடு பகிர்ந்து கொண்டார்.
ஆனால் மனிதன்
தான் செய்த பாவத்தினால்
இறைவன் பகிர்ந்து கொண்ட அன்பைக் கழங்கப் படுத்தி,
அன்புக்கு எதிர்ப் பண்பான வெறுப்பு உணர்வையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டான்.
விளைவு?
இறைவனோடு உள்ள உறவை இழந்தான்.
சக மனிதர்களோடு சமாதானத்தை இழந்தான்.
ஒற்றுமையோடு வாழ வேண்டிய உலகைச் சண்டைக் காடாக மாற்றினான்.
பரிசுத்தமாய் வாழ வேண்டிய உலகைப் பாவக் காடாக மாற்றினான்.
பாவத்திலிருந்து மனிதனை மீட்டு, மீண்டும் அன்பின் ஆட்சியைக் கொண்டு வரவே,
இறைமகன் மனுமகனாய்ப் பிறந்து பாடுகள் பட்டு சிலுவையில் தன்னையே பலி கொடுத்தார்.
இறைவன் கொடுத்த அன்பினால் மனிதன்
அவரோடும், சக மனிதர்களோடும் உறவோடு வாழ வேண்டும் என்பதுதான்
அவருடைய ஆசை.
இறைவனின் இந்த ஆசையைத்தான் புனித சின்னப்பர் பிலிப்பியருக்கு எழுதிய மடலில்
"ஒரே அன்பும். ஒரே உள்ளமும், ஒரே மனமும் கொண்டிருங்கள்.''
என்ற வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த வார்த்தைகள் பிலிப்பியருக்கு மட்டுமல்ல, நமக்கும் சேர்த்துதான் கூறப்பட்டன.
வித்தியாசமான நாடுகளில்,
வித்தியாசமான சூழ்நிலைகளில்,
வித்தியாசமான கலாச்சாரங்களில்,
வித்தியாசமான குணநலன்களோடு மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருந்தாலும்
அவர்களை இறைவனால் படைக்கப்பட்ட ஒரே மனித குலமாக இணைக்க வேண்டியது
அவர்கள் உள்ளத்தில் இருக்க வேண்டிய ஒரே அன்புதான்.
இறைவன் அவர்களோடு பகிர்ந்து கொண்ட அன்புதான்
அவர்களை இறைவனோடும், ஒருவர் ஒருவரோடும் இணைக்க வேண்டும்.
இதைத்தான் இயேசுவும்
"எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நேசியுங்கள்,
உங்களை நீங்கள் நேசிப்பது போல உங்களது அயலானையும் நேசியுங்கள்."
என்ற கட்டளைகள் மூலம் நமக்குச் சொன்னார்.
நாம் இயேசுவின் அன்போடு, ஒருவர் ஒருவருடன் பரிவுடனும், இரக்கத்துடனும் வாழ வேண்டும்.
பரிவும், இரக்கமும் இறையன்பின் பிள்ளைகள்.
மனிதர்கள் கோடிக் கணக்காக வாழ்ந்தாலும் அன்பினால் அவர்கள் ஒரு மனத்தினராய் வாழ வேண்டும்.
அதாவது அனைவரது மனத்திலும் இறைவன் அருளிய ஒரே அன்புதான் இருக்க வேண்டும்.
அன்புதான் அவர்களை ஒரே மனுக்குலமாக வாழ வைக்கும்.
அன்பினால் இணைக்கப் பட்ட மனுக் குலத்தில் சண்டை, சச்சரவுகளுக்கு இடமில்லை.
பரிவும், இரக்கமும் உள்ள உள்ளங்களில்
சண்டை, சச்சரவுகளுக்குக் காரணமான வெறுப்பு உணர்வே தோன்றாது.
அன்புள்ள மனங்கள் என்றோடொன்று போட்டி போடாது.
அன்புள்ள மனங்களில், வீண் பெருமைக்கும் இடம் இல்லை.
அன்பு தாழ்ச்சி உள்ளது.
மற்றவர்களை உயர்ந்தவராகக் கருதும்.
அன்பு உள்ளவர்கள் தங்கள் நலத்தை விட பிறர் நலத்தையே
அதிகமாக விருப்புவார்கள்.
இயேசுவில் இருந்த மனநிலையே நம்மிடமும் இருக்க வேண்டும்.
சர்வ வல்லமை உள்ள இறைமகன் நம் மீது கொண்ட அன்பினால்
நம் நிலைக்கு இறங்கி வந்துதானே
நம்மை அவர் நிலைக்கு உயர்த்தினார்.
அவர் பரிசுத்தர்.
நாம் பாவிகள்.
பாவத்திலிருந்து நம்மை மீட்டு பரிசுத்தர்களாக மாற்றிக் கொண்டிருப்பவர் அவர் தானே.
மண்ணில் வாழும் நம்மை விண்ணில் வாழ வைக்கத்தானே
விண்ணின் மன்னர் மண்ணில் மனிதனாகப் பிறந்தார்.
கிறிஸ்தவர் என்றாலே கிறிஸ்துவாக வாழ்பவர்கள்தானே.
கிறிஸ்து நமக்காக வாழ்வது போல நாமும் அனைவருக்காகவும் வாழ்வோம்.
அதற்கு நம் மனதில் இருக்க வேண்டியது கிறிஸ்துவின் சுயநலம் இல்லாத அன்பு.
ஆளுக்கொரு மனம் இருந்தாலும்
இயேசுவின் அன்பினால் ஒரே மனத்தவராய் வாழ்வோம்.
லூர்து செல்வம்.