(லூக். 10:5)
இயேசு எழுபத்திரண்டு வீடர்களை இருவர் இருவராக நற்செய்தி அறிவிக்க அனுப்பும்போது அவர்களுக்கு கூறிய அறிவுரை :
" நீங்கள் எந்த வீட்டுக்குப் போனாலும், முதலில், "இவ்வீட்டுக்குச் சமாதானம்" என்று வாழ்த்துங்கள்."
இந்த அறிவுரையிலேயே மிகப்பெரிய, மிக முக்கியமான நற்செய்தி அடங்கி இருக்கிறது.
கிறிஸ்து பிறந்த அன்று விண்ணகத் தந்தை வானதூதர்கள் மூலமாக உலகத்திற்கு அளித்த முதல் நற்செய்தியும் இதுதான்.
"உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக.
உலகிலே நல்மனதோர்க்குச் சமாதானம் உண்டாகுக! "
(லூக்.2:14)
இயேசு உலகிற்கு வந்ததன் நோக்கமும் இதில் அடங்கி இருக்கிறது.
சமாதானம் என்றால் என்ன?
நல்ல உறவோடு இருக்கும் இரண்டு மனிதர்களுக்கு இடையில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு உறவு கெட்டிருந்தால்,
கெட்டுப்போன உறவை சரிசெய்து திரும்பவும் பழைய நிலைக்கு கொண்டுவரும்போது இருக்கும் நிலை சமாதானம் எனப்படுகிறது.
இறைமகன் மனிதனாக பிறந்தநாளில் விண்ணகத்திலிருந்து சமாதானத்தின் வாழ்த்து வரக் காரணம் என்ன?
இறைவன் நமது நமது முதல் பெற்றோரை படைத்தபோது இறைவனுக்கும் மனிதருக்கும்
இடையில் உறவு நன்றாக இருந்தது.
மனிதன் பாவம் செய்து இறைவனோடு கொண்டிருந்த உறவை முறித்துக் கொண்டான்.
ஆனாலும் இறைவன் மாறாதவர்.
அவருக்கு மனிதன் மீது இருந்த அன்பிலும், உறவிலும் எந்தவித மாற்றமும் இல்லை.
மாறியது மனிதன் மட்டும் தான்.
மனிதன் இறைவனோடு கொண்டிருந்த உறவை புதுப்பிக்க வேண்டும் என்று இறைவன் எண்ணினார்.
அதற்காக அவன் தான் செய்த பாவத்திற்கு பரிகாரம் செய்ய வேண்டும்.
இறைவன் அளவில்லாதவர். மனிதன் அளவுள்ளவன்.
அளவுள்ள மனிதனால் அளவில்லாத கடளுக்கு ஏற்ற பரிகாரம் செய்ய முடியாது.
ஆகவே அளவில்லாத கடவுள் மனிதனாக பிறந்து அந்த பரிகாரத்தை செய்ய தீர்மானித்தார்.
அதற்காகவே இறைமகன் மனிதனாக பிறந்தார்.
இறை மனித உறவில் சமாதானம் ஏற்பட கடவுள் மனிதராக பிறந்ததால் அன்று விண்ணவர் சமாதானத்தின் கீதம் பாடினார்கள்.
இயேசு தனது பாடுகளின் மூலமாகவும் மரணத்தின் மூலமாகவும் நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்து
நாம் இழந்த இறை உறவை மீட்டுத் தந்தார்.
அவர் மீட்டுத் தந்த சமாதானத்தை நாம் ஏற்றுக் கொள்வதோடு, அதை இழக்காமல் பாதுகாக்க வேண்டும்.
இயேசுவின் நற்செய்தியே சமாதானத்தின் செய்தி தான்.
நாம் காண்போரிடம்
' உங்களுக்குச் சமாதானம்" என்று சொல்லும்போது
''இயேசு மீட்டுத் தந்த சமாதானத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று அவர்களுக்கு அறிவிக்கிறோம்.
அதாவது இயேசு தந்த சமாதானத்தின் நற்செய்தியை அவர்களுக்கு கொடுக்கிறோம்.
நல்ல மனது உள்ளவர்களிடம்தான்
சமாதானம் தங்கும்.
நாம் ஞானஸ்நானம் பெறும்போது நமது பாவங்கள் நீக்கப்பட்டதால் அப்போது கிறிஸ்துவின் சமாதானத்தை பெற்றுக்கொண்டோம்.
பெற்ற சமாதானத்தை இழக்காமல் இருக்க வேண்டுமென்றால் மறுபடி பாவம் செய்யக்கூடாது.
பாவம் செய்ய நேரிட்டால் பாவசங்கீர்த்தனம் என்னும் தேவ திரவிய அனுமானம் மூலம் பாவமன்னிப்பு பெற்றுக் கொள்ள வேண்டும்.
சமாதானத்தின் தேவனை அடிக்கடி நமது ஆன்மீக உணவாக உட்கொள்ள வேண்டும்.
நண்பர் ஒருவர்,
"சமாதானம் வடமொழி வார்த்தை ஆயிற்றே, அதை ஏன் பயன்படுத்துகிறீர்கள்?
அதற்கு பதிலாக அமைதி என்ற தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தலாமே"
என்று கேட்டார்.
வடநாட்டு கோதுமையை சாப்பிடுவது,
மேல்நாட்டு நாகரீக உடை அணிவது,
மேல்நாட்டு கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்துவது ஆகியவற்றில் அவருக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.
சமாதானம் மட்டும் பிடிக்கவில்லை.
சரி, அது அவர் இஷ்டம்.
நான் சமாதானம் என்ற வார்த்தையை விரும்புவதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
அந்த வார்த்தையில் ஒரு பொருள் நயம் இருக்கிறது.
சமம் + தானம் = சமாதானம், அதாவது சம இடம்.
கடவுள் பரிசுத்தர், மனிதனைப் படைக்கும் போது
பரிசுத்தமானவனாக படைத்தார்.
பரிசுத்தத் தனத்திற்கும், பரிசுத்தத் தனத்திற்கும் இடையில் நல்ல சுமுகமான உறவு இருந்தது.
மனிதன் பாவம் செய்து தன்னுடைய பரிசுத்தத் தனத்தை இழந்த வினாடியே உறவு முறிந்தது.
பாவத்தில் விழுந்த மனிதனை இறைவன் அதிலிருந்து தூக்கிவிட நினைத்தார்.
விழுந்துகிடந்த மனிதனை தூக்கி விடுவதற்காக உன்னதத்தில் இருந்த கடவுள் மனித நிலைக்கு இறங்கி வந்தார்.
பாவம் தவிர, மற்ற தன்மைகளில்
மனித நிலைக்குத் தன்னை தாழ்த்தினார்.
உன்னதர் இறங்கி வந்து,
மனிதனோடு சம நிலைக்கு வந்து அவனைப் பாவத்திலிருந்து தூக்கிவிட்டார்.
துவக்கமும் முடிவும் இல்லாத கடவுள், பிறப்பும், இறப்பும் உள்ள மனித உரு எடுத்தார்.
கஷ்டப்பட முடியாத கடவுள் மனிதனாகி கஷ்டங்களை ஏற்றுக்கொண்டார்.
பயப்படவே முடியாத கடவுள்
கெத்சமனி தோட்டத்தில் தான் படவிருக்கும் பாடுகளை நினைத்து,
உடலில் இரத்த வியர்வை வியர்க்கும் அளவிற்குப் பயந்தார்.
இப்படியாக பாவம் தவிர மற்ற எல்லா பலகீனங்களிலும் மனிதனுக்கு சமமாக ஆக்கிக்கொண்டு நமக்கு தந்ததே சமாதானம்.
இதுதான் சமாதானம் என்ற வார்த்தையின் பொருள் நயம்.
மனிதனை விண்ணகத்திற்கு ஏற்றிவிட உன்னதர் மண்ணகத்திற்கு இறங்கி வந்தார்.
இப்போதுகூட அளவில்லாத சர்வவல்லமையுள்ள இயேசு,
அளவுள்ள நமது நாக்கில் உணவாக வரவேண்டும் என்பதற்காக
அளவுள்ள அப்ப ரச குணங்களில் தனது முழு உடலோடும், ஆன்மாவோடும் இருக்கிறாரே!
இயேசுவின் சமாதானத்திலிருந்து நாம் ஒரு ஆன்மீக பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
எல்லோரும் சமாதானமாய் வாழ்வோம்.
உலகில் தங்களைக் தாங்களே பெரியவர்கள் என்று தற்பெருமையாக எண்ணுபவர்கள் யாரும் சமாதானமாக வாழ முடியாது.
தாய் கூட குழந்தையின் அளவுக்கு குனிந்தால் தானே அதை கையில் எடுக்க முடியும்!
மேடைமேல் இன்று lecture அடிக்கும் ஆசிரியர்களை விட
மாணவர்களோடு மாணவர்களாய் உட்கார்ந்து சொல்லிக் கொடுப்பவர்கள்தான்
அதிக வெற்றி பெறுவார்கள்.
தொழிலாளிகளோடு தொழிலாளியாகப் பழகும் முதலாளிதான்
தொழிலாளியின் அன்பையும், உழைப்பையும் அதிகம் பெறுவான்.
நோயாளியை தொட பயப்படும் மருத்துவரால் அவனை குணமாக்க முடியாது.
தாழ்ச்சிதான் புண்ணியங்களின் அரசி
"இருதயத்தில் தாழ்ச்சியும், சாந்தமும் உள்ள இயேசுவே , எங்கள் மேல் இரக்கமாயிரும்."
லூர்து செல்வம்.