Monday, August 31, 2020
பைபிள் வழி நிலை வாழ்வு.
Sunday, August 30, 2020
இறை நம்பிக்கை இல்லாத அறிவியலில் முழு உண்மை இருக்க முடியாது.
Saturday, August 29, 2020
நம்மையே இறைவனுக்குக் கொடுப்பதே உண்மையான செபம்.
நம்மையே இறைவனுக்குக் கொடுப்பதே உண்மையான செபம்.
*************************************
செபம் என்று சொன்னாலே நமக்கு நினைவுக்கு வருவது
"கேளுங்கள், கொடுக்கப்படும்"
என்ற நமது ஆண்டவரின் வார்த்தைகள் தான்.
Bank என்று சொன்னவுடன் Loan வாங்குவது நினைவுக்கு வருவது போல.
காரணம், நமக்கு கொடுப்பதில் உள்ள ஆர்வத்தை விட, பெறுவதில் அதிக ஆர்வம் இருப்பது தான்.
இறைவன் தன் சாயலில் நம்மைப் படைத்ததன் நோக்கம் நாம் பண்புகளில் அவரைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
அவர் அன்பு மயமானவர். அன்பின் ஒரு முக்கிய குணம் தன்னிடம் இருப்பதை அன்பு செய்யப்படுபவர்களுக்குக் கொடுப்பது.
தன்னைத் தருவதற்காகவே அவர் நம்மைப் படைத்தார்.
நமக்கு உடலையும், ஆன்மாவையும், அது செய்ய வேண்டிய அன்பையும் தந்தவர் அவர்.
தனது அன்பின் மூலம் தன்னையே நமக்குத் தந்தார்.
அதேபோல நாமும் நம்மையே அவருக்குக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
அன்பின் குணமே அது தானே.
நம்மையே இறைவனுக்கு முழுவதும் கொடுக்கும்போது நான் அவரோடு ஒன்றிக்கிறோம்.
இறைவனோடு நாம் ஒன்றிப்பது தான் செபம்.
இறைவனோடு ஒன்றித்து வாழ்வதுதான் செப வாழ்வு.
செபத்தில் கேட்பதற்கும் இடம் இருக்கிறது.
இறைவனிடம் அன்பைக் கேட்க வேண்டும்,
அருளைக் கேட்கவேண்டும்,
அவரோடு நாம் எப்போதும் ஒன்றித்திருக்க உதவ வரம் கேட்க வேண்டும்.
இறைவனோடு ஒன்றித்திருக்க நமக்கு உதவுவதற்காகதான்
தினமும் சொல்லக்கூடிய சில செபங்களை திருச்சபை நமக்குத் தந்திருக்கிறது.
'
திருச்சிலுவை அடையாளம், விசுவாசப்பிரமாணம்,
கர்த்தர் கற்பித்த செபம்,
மங்கள வார்த்தை செபம்,
செபமாலை.
நம்மைப் படைத்த தந்தையையும், இரட்சித்த இறை மகனையும், அர்ச்சிக்கின்ற பரிசுத்த ஆவியையும் மனதில் நினைத்து
திருச்சிலுவை அடையாளம் வரைகிறோம்.
இந்த செபத்தினால் பரிசுத்த தம திரித்துவத்தோடு ஒன்றிக்கிறோம்.
குறிப்பாக நமக்காக சிலுவையில் மரித்த இயேசுவோடு ஒன்றிக்கிறோம்.
ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்கும் போதும்,
மற்ற செபங்களைச் சொல்லும் முன்னும்,
ஏதாவது வேலையை ஆரம்பிக்கும் முன்னும்
திருச்சிலுவை அடையாளம் வரைவதால்
நாம் வாழும் நாளையும்,
நாம் செபங்களையும் வேலைகளையும் தமதிரித்துவத்தோடு ஒன்றிக்கிறோம்.
தமதிரித்துவத்தோடு ஒன்றித்து ஒரு வேலையை ஆரம்பித்தால்
அந்த வேலை முழுவதும் தமதிரித்துவ தேவன் நமமோடிருப்பார்.
விசுவாசப்பிரமாணம் சொல்லும் போது ஒவ்வொரு விசுவாச சத்தியத்தையும் மனதில் தியானிக்க வேண்டும்.
இது நமது விசுவாசம் வளர உதவியாக இருக்கும்.
அதேபோன்றுதான் மற்ற செபங்களை சொல்லும் போதும்
மனப்பாடம் ஒப்பிப்பது போல சொல்லாமல்
சொல்லும் வார்த்தைகளை மனதில் இருத்தி தியான உணர்வோடு சொல்ல வேண்டும்.
நாம் எதை சொல்லுகிறோமோ அதில் நமது மனம் இருக்க வேண்டும்.
நாம் சொல்வதில் நமது மனம் ஒன்றித்திருப்பதைவிட கேட்பதில் அதிகம் ஒன்றித்திருக்கும்.
நமக்குப் பிடித்தமான பேச்சாளர்கள் பேசும்போது நாம் அவர்களுடைய பேச்சில் ஒன்றித்துக் கேட்கிறோம் அல்லவா?
தியானப் பிரசங்கங்களின்போது குருவானவர் நமக்கு தரும் இறை
வார்த்தைகளில் ஒன்றித்து
கேட்கும் அனுபவம் நம் எல்லோருக்கும் இருக்கும்.
படித்துக்கொண்டு இருந்த காலங்களில்
மூன்று நாள் தியானம் இருக்கும்.
மூன்றாவது நாள் காலையில் சுவாமியார் நரகத்தைப் பற்றி தியானம் கொடுப்பார்.
பிற்பகலில் எல்லா மாணவர்களும் பாவ சங்கீர்த்தனம் செய்ய வரிசையில் நிற்பார்கள்.
நரகத்தினுடைய effect!
சுவாமியார் பேசும்போது இந்த effect இருக்கிறதே, நம் ஆண்டவரே நம்மோடு பேசினால் எப்படி இருக்கும்?
அவருடைய மூன்று ஆண்டு நற்செய்தி வாழ்வின்போது அவர் சொல்வதைக் கேட்க எப்போதும் ஆயிரக்கணக்கானோர் அவரை பின்தொடர்ந்து கொண்டே இருப்பர்.
அதே ஆண்டவர் இப்போதும் நம்மோடு
நற்செய்தி வாசிக்கும்போது பேசுகிறார்.
வாசிப்பது நாமாக இருந்தாலும் பேசுபவர் அவரே.
நமது சிந்தனை எங்கு இருக்கிறதோ அங்கேதான் நாம் இருக்கிறோம்.
நற்செய்தி வாசிக்கும்போது நமது சிந்தனை இயேசுவின் வார்த்தைகளில் மட்டும் இருக்க வேண்டும்.
வாசிக்க ஆரம்பிக்கு முன் இயேசுவையே நமது மனக்கண் முன் கொண்டு வர வேண்டும்.
இயேசுவோடு தான் உரையாடப் போகிறோம்.
உரையாடலில் கருத்துப் பரிமாற்றம் இருக்க வேண்டும்.
சொற்பொழிவின் போது சொற்பொழிவு ஆற்றுபவர் மட்டும் பேசுகிறார். நாம் அமைதியாக கேட்கிறோம்.
உரையாடலில் இருவருடைய கருத்துக்களும் இடம் மாறிக்கொள்ளும்.
இயேசுவோடு உரையாடும்போது அவருடைய எண்ணங்கள் நம்மிடம் வரும், நம்முடைய எண்ணங்கள் அவரிடம் செல்ல வேண்டும்.
Our Conversation with Jesus must be a two way process.
இயேசுவோடு கருத்து பரிமாறும்போது நமது உள்ளம் இயேசுவின் உள்ளத்தோடு ஒன்றிக்கும்.
.வாசிப்பு Reading
தியானம் Reflection
எதிர் விளைவு Reaction
ஒன்றிப்பு .union
நமது உள்ளம் இயேசுவோடு முற்றிலுமாக ஒன்றிக்க நான்கு படிகள் ஏறவேண்டும்.
முதல்படி வாசிப்பு:
இயேசுவின் வாயிலிருந்து வந்த நற்செய்தியை வாசிக்க வேண்டும்.
கதை வாசிப்பதற்கும்
நற்செய்தியை வாசிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
தண்ணீர் குடிப்பதற்கும்
juice குடிப்பதற்கும் இடையில் உள்ள
வித்தியாசம்.
தண்ணீரை வாய்க்குள் ஊற்றி விழுங்கி விடுவோம்.
juice ஐ Sip செய்து நாவில் படரவிட்டு ருசியை முழுவதும் அனுபவித்து கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குவோம்.
அதேபோல் கதையை வேகமாக வாசிப்போம்.
இயேசுவின் வார்த்தைகளை நிறுத்தி மெதுவாக மனது முழுவதும் படரவிட்டு வாசிக்க வேண்டும்.
அப்போதுதான் இறைவார்த்தை மனதில் ஆழ பதியும்.
நான் இறை வார்த்தையை வாசிக்கும் போது நம்மிடம் இயேசு பேசுகிறார்.
அவர் பேசுவதை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
நிறுத்தி வாசித்தால்தான் கூர்ந்து கவனிக்க முடியும்.
ஒரே வசனத்தைத் திரும்ப திரும்ப வாசிக்கலாம்.
பாட்டு இனிமையாய் இருந்தால் திரும்ப திரும்ப படிப்பதில்லை?
தியானம் Reflection
தியானம் என்றால் ஆழ்ந்த சிந்தனை.
நாம் வாசிக்கும் ஒவ்வொரு வார்த்தையின் மேலும் நமது சிந்தனை பதியவேண்டும்.
சிந்திக்கும் போது நாம் வாசிக்கும் வசனத்தின் பொருளும் நமது மனதில் பதியும்.
இயேசு நமக்கு என்ன கருத்தை சொல்ல விரும்புகிறாரோ அதுதான் வசனத்தின் பொருள்.
உதாரணத்திற்கு:
"எளிய மனத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில் விண்ணரசு அவர்களுடையது."
இந்த வசனத்தை சிந்தனையோடு வாசிக்கும்போது நமது மனதுக்கு தோன்றும் பொருள்:
"இந்த உலகத்தின் செல்வங்கள் மீது பற்று இல்லாதவர்கள் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
'ஏனெனில் அவர்கள் விண்ணரசில் நுழைந்து இறைவனோடு ஒன்றிப்பார்கள்.'
பொருளுணர்ந்து வாசிக்கும்போது நமக்குள் ஏற்படுவது
எதிர் விளைவு Reaction:
ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர் விளைவு உண்டு.
Every action has a reaction.
எதிர் விளைவை ஏற்படுத்தினால்தான் செயல் அதன் பயனை அடைகிறது.
செயலினால் ஏற்பட்ட எதிர் விளைவு
செயலாக மாறி அடுத்த எதிர்விளைவை ஏற்படுத்தும்..
இப்படியே சங்கிலித் தொடர் போல செயலும் எதிர் விளைவும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
நமது வாழ்வின் ஒவ்வொரு செயலும்
ஏதாவது ஒரு செயலில் எதிர்விளைவாக தான் இருக்கும்.
நாம் வாசிக்கும் இறைவசனம் நம் மனதில் ஏதாவது ஒரு எதிர்விளைவை ஏற்படுத்த வேண்டும்.
ஏற்படுத்தினால்தான் அந்த வசனத்தை நாம் சிந்தனையோடு வாசித்திருக்கிறோம்.
எந்த எதிர் விளைவையும் ஏற்படுத்தாத விட்டால் நாம் வாசித்தாலும் வாசிக்கவில்லை என்று ஆகிவிடும்.
சாப்பிட்டும் பசி ஆறாவிட்டால் சாப்பிட்டு என்ன பயன்?
மருந்து குணமாக்கா விட்டால் மருந்தினால் என்ன பயன்?
"எளிய மனத்தோர் பேறுபெற்றோர்" என்று வாசிக்கும்போது
"நான் எளிய மனத்தினனா?
நான் உலக பொருட்கள் மீது பற்று வைத்திருக்கிறேனா?
அந்தப் பற்று எனது இறையன்புக்கு இடையூறாக இருக்கிறதா?
அந்தப் பற்றைக் கைவிட நான் என்ன செய்ய வேண்டும்?"
என்பன போன்ற வினாக்கள் நம் மததில் எழவேண்டும்.
அவற்றிற்கான பதிலையும் நாம் காண வேண்டும்.
அந்தப் பதில் அது சம்பந்தமான நமது அடுத்த செயலுக்குக் காரணமாக இருக்கும்.
அந்த வசனத்தின் இன்னொரு எதிர்விளைவு,
இயேசு எந்த அளவுக்கு எளிய மனத்தினராக வாழ்ந்தார் என்று தியானிக்கத் தூண்டும்.
இயேசு பிறந்த நேரத்திலிருந்து அவர் கல்லறையில் அடக்கம் பண்ணப்படும் வரை அவரது வாழ்வை ஒரு தடவை நோக்குவோம்.
ஏழையாகப் பிறந்து, ஏழையாக வாழ்ந்து, ஏழையாக மரித்தவர் நம் ஆண்டவர்.
30 வயது வரை உழைத்துச் சாப்பிட்டார்.
மூன்று ஆண்டுகள் நற்செய்தி போதக காலத்தில் மற்றவர்கள் கொடுத்ததை சாப்பிட்டார்.
பாடுகளுக்கு முந்திய நாள் தன்னையே தன் சீடர்களுக்கு, யூதாஸ் உட்பட, உணவாகக் கொடுத்து விட்டார்.
பாடுகளின் போது தனது ரத்தத்தை எல்லாம் சிந்தி விட்டார்.
சிலுவையில் தொங்கும்போது அவரிடம், அவரது உடை உட்பட, ஒன்றுமே இல்லை.
கல்லறைக்குச் செல்லுமுன் அவர் அடைக்கலம் புகுந்த ஒரே இடம் அவரது தாயின் மடி.
இது அவர் நமக்கு கற்பிக்கும் பாடம்.
"பிள்ளைகளே,
எதை மறந்தாலும் என் தாயின் மடியை மறக்காதீர்கள்.
நான் பிறந்தவுடன் இருந்த இடமும் அதுதான்,
இறந்த பின் இருந்த இடமும் அதுதான்.
நீங்கள் வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டிய இடமும் அதுதான்"
என்ற உருக்கமான பாடத்தை நமக்குக் கற்பிக்கிறார்.
ஒரு இறை வசனம் நம்மில் ஏற்படுத்தும் எதிர் விளைவுகள் நமது வாழ்க்கையே மாற்றி அமைக்க போதுமானவை,
அதாவது,
ஒழுங்காக வாசித்து, ஒழுங்காக தியானித்தால்.
ஒன்றிப்பு .union:
வசனத்தைச் சரியாக முறையில் வாசித்து,
ஒழுங்கான முறையில் தியானித்து,
சரியாக எதிர் விளைவுகளை சந்தித்தால்
அடுத்து வருவது முழுமையான ஒன்றிப்பு. (perfect union)
முழுமையான ஒன்றிப்பின்போது வார்த்தைகளே தேவையில்லை.
இறைவன் நமக்குள்ளும்,
நாம் இறைவனுக்குள்ளும் இருக்கும் முழுமையாக ஒன்றிப்பு நிலை.
இந்நிலையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
இறைவன் நம்முள் இருக்கும் உணர்வு மட்டும் இருக்கும்.
வேறு எதுவும்,
நம்மை சுற்றியுள்ள உலகம் உட்பட,
நமக்குத் தெரியாது.
இங்கு உரையாடல் இருக்காது,
உறவு மட்டுமே இருக்கும்.
இயேசுவின் பண்புகளை முற்றிலும் கிரகித்து அவராகவே நாம் மாறிக்கொண்டிருப்போம்.
இப்போது வாழ்வது நாம் அல்ல, இயேசுவே நம்மில் வாழ்கிறார்.
இதுதான் முழுமையான செபம்.
விண்ணுலக வாழ்வின் முன் ருசிப்பு.
Pretaste of our life In Heaven.
இயேசுவை ருசித்து செபிப்போம்.
அவரே நம் உணவு.
லூர்து செல்வம்.