Friday, October 15, 2021

வில்லன்கள் கற்பிக்கும் பாடம்.

வில்லன்கள் கற்பிக்கும் பாடம்.

ஒருமுறை குடிகாரன் ஒருவன் அளவுக்கு மீறி குடித்து விட்டு தரையில் உருண்டு கொண்டிருந்தான்.

இரக்கப்பட்டு அவனை பார்க்க சென்றவர்களுக்கு அவன் கூறிய ஒரே புத்திமதி,

"என்னைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள். அளவுக்கு மீறி குடித்தால் என் கதிதான் உங்களுக்கும்."

நல்லவர்களிடமிருந்து  மட்டுமல்ல கெட்டவர்களிடமிருந்தும் நாம் பாடம் கற்றுக் கொள்ளலாம் என்பதற்கு

 இந்த குடிகாரன் மட்டுமல்ல 

நம் ஆண்டவரின் மரணத்திற்கு காரணமான பரிசேயர்களும், சதுசேயர்களும்,  மறைநூல் அறிஞர்களும் கூட நல்ல உதாரணம்.

பரிசேயர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய  பாடங்கள் நிறைய இருக்கின்றன.

இயேசு பலமுறை தொடர்ந்து அவர்களுடைய பாவங்களை சுட்டிக் காண்பித்து கொண்டேயிருந்தார்.

அவர்களோ மனம் திரும்புவதற்குப் பதில் தங்களது தவறுகளைச் சுட்டிக் காண்பித்து, தங்களைத் திருத்த விரும்பியவரையே கொல்ல விரும்புகிறார்கள்.

நாம் தவறாக நடக்கும் போது நமக்கு புத்திமதி சொல்கின்றவர்கள் விசயத்தில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம்?

பரிசேயர்கள் போல நடந்து கொள்கின்றோமா?

இயேசு அவர்களுக்கு புத்திமதிதான் சொன்னார்.

ஆனால் அவர்களோ இயேசுவுக்கு விரோதமாக நடந்து கொண்டார்கள்.

புத்திமதி சொன்னவருக்கு எதிராக நடந்து கொள்பவர்கள் தங்களிடம் எந்த குறையும் இல்லை என்று நினைத்துக் கொள்வது வழக்கம்.

 தங்கள் குறைகளை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக புத்திமதி சொல்லுபவர் மேலே கோபம் கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.

நம்மிடம் இந்த குணம் இருக்கிறதா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கிறிஸ்தவர்கள் என்ற முறையில் நமக்கு புத்திமதி சொல்கிறவர்கள் இயேசுவின் இடத்தில் இருந்து நம்மை வழிநடத்தும் பங்கு குருக்கள் தான்.

நமது குற்றம் குறைகளை சுட்டிக் காண்பித்து சரியான பாதையில் 
நடக்கும்படி நமக்கு வழிகாட்டும் கடமை அவர்களுக்கு உண்டு.

இது இயேசு அவர்களுக்கு அளித்த கடமை.

ஒவ்வொரு ஞாயிறும் நாம் திருப்பலிக்கு செல்லும்போதும் பிரசங்க நேரத்தில் குருவானவர்  நம்முடைய குறைகளை சுற்றிக் காண்பித்து, அவற்றை நாம் திருத்திக் கொள்ளும் வழி புத்திமதியும் கூறுவார்.

அவர் கூறும் புத்திமதியை நாம் தாழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கின்றோமா, 

அல்லது அவரைப் பற்றி தவறாக பேசி பொதுமக்களிடையே அவரது பெயரை கெடுக்க முயல்கின்றோமா?

 தங்கள் பங்கு குருவானவரைப் பற்றி பொதுமக்களிடையே தவறாக பேசுபவர்களை  நாம் கண்கூடாக பார்க்கிறோம்.

இவர்கள் பரிசேயர்கள்  ரகத்தை சேர்ந்தவர்கள். 

நம்மிடம் திருந்த வேண்டிய  குணம் இருந்தால் திருத்திக் கொள்ள வேண்டும்.

ஆசிரியர் கண்டித்தவற்காக அவரை குறை சொல்லிக்கொண்டு திரியும் மாணவர்களால் வாழ்க்கையில் முன்னேற முடியாது.

தங்களைத் திருத்த முயலும் பெற்றோரை குறை சொல்லிக்கொண்டு திரியும் பிள்ளைகளாலும் வாழ்க்கையில் முன்னேற முடியாது.

அதே போல் தான் தங்களுக்கு புத்திமதி கூறும் பங்குக் குருவை குறை சொல்லிக்கொண்டு திரியும் கிறிஸ்தவர்களாலும் ஆன்மீக வாழ்வில் முன்னேற முடியாது.

பரிசேயர்கள் இயேசுவின் மீது குற்றம் சாட்டுவதற்கு அவர்களது சம்ய சட்டங்களையே பயன்படுத்தி கொண்டார்கள்.

விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணொருத்தியை இயேசுவின் முன்னால் நிறுத்தி,

"இப்படிப்பட்டவர்களைக் கல்லாலெறிந்து கொல்லவேண்டுமென்பது மோயீசன் நமக்குக் கொடுத்த சட்டம். நீர் என்ன சொல்லுகிறீர் ?" என்றனர்.

இயேசு இரக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் என்பது அவர்களுக்கு தெரியும்.

 அவரிடம் குற்றம் கண்டு பிடிப்பதற்காகவே இந்த கேள்வியை கேட்டார்கள்.

கொல்லக்கூடாது என்று சொன்னால் அவர் சட்டத்தை மதிக்கவில்லை என்று குற்றம் சாட்டலாம்.

கொல்லுங்கள் என்று சொன்னால் 
அவருக்கு இரக்கம் இல்லை என்று குற்றம் சாட்டலாம்.

ஆனால் இயேசுவோ அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக,

"உங்களுள் பாவமில்லாதவன் முதலில் அவள்மேல் கல் எறியட்டும்" என்றார்.

அவர்களுள் பாவம் இல்லாதவன் யாருமே இல்லை என்பது அவருக்கு தெரியும். 

இயேசு  இரக்கத்திற்கு பாதகம் இல்லாமல் சட்டத்தைப் பின்பற்றினார்.

இறைவன் அளவற்ற விதமாய் அன்புள்ளவர், நீதியுள்ளவர்.

பாவம் செய்தவர்கள் நாம்.

நீதியின்படி நாம் செய்யவேண்டிய பரிகாரத்தை இறைவனின் அளவற்ற அன்பின் காரணமாக அவரே செய்து நம்மை மீட்டார்.

நீதிக்கு பாதகமில்லாமல் அன்பு செய்கிறார்.

நாம் படும் துன்பங்களுக்கு பாவ பரிகாரப் பலனைப் பெற்றுத் தந்தது இயேசு செய்த பாவப் பரிகாரம் தான்.

பரிசேயர்கள் சட்டத்தின் எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

ஆனால் இயேசு சட்டத்தில் இருக்க வேண்டிய அன்புக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

இயேசுவும் இரண்டு கட்டளைகளை கொடுத்தார். ஆனால் அவை இரண்டும் அன்பின் கட்டளைகள்.

இறைவனை அன்பு செய்யுங்கள்.

உங்கள் அயலானையும் அன்பு செய்யுங்கள்.

இயேசுவின் கட்டளைகள் 100% அன்பால் ஆனவை.

நாம் அன்பு செய்யவே அழைக்கப்பட்டிருக்கிறோம்.

அன்பின் பிள்ளைகள்தான் இரக்கமும் மன்னிப்பும்.

பரிசேயர்கள் எதற்கெடுத்தாலும் சட்டத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

 அவர்களிடம் கொஞ்சமாவது அன்பு இருந்திருந்தால் இயேசுவை பாடுகள் படுத்தி கொல்ல வேண்டும் என்று எண்ணியிருப்பார்களா?

இந்த விசயத்தில் பரிசேயர்கள் நமக்கு கற்றுத் தரும் பாடம்:

"எங்களைப்போல் சட்டத்தை பற்றியே பேசிக் கொண்டிருக்க வேண்டாம்.

 அன்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

 குற்றம் செய்தவர்களை அன்பால் திருத்துங்கள்.

 எங்களிடம் வெறுப்பு இருந்தது.

 ஆகவே குற்றமே செய்யாத இயேசுவைக் கொலை செய்தோம்.

அன்பின் காரணமாக அவர் எங்களையே மன்னித்தார்.

இயேசுவிடமிருந்து உங்களைத் துன்புறுத்துபவர்களையும் மன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள்."

இயேசுவை கொல்வதில் 
பரிசேயர்களுக்கு துணை நின்றவர்கள் மறைநூல் அறிஞர்கள்.

அதாவது ஆதியாகமம் முதல் பழைய ஏற்பாட்டின் கடைசி நூல் வரை அனைத்து நூல்களையும் கற்றுத் தேர்ந்து, கரைத்துக் குடித்தவர்கள்.

பழைய ஏற்பாட்டு நூல்களில்தான் இயேசுவின் வருகை பற்றி முன் அறிவிக்கப்பட்டிருந்தது.

அவரைப் பற்றி இறைவாக்கினர் கூறிய அனைத்தையும் அவர்கள் கற்றுத் தேர்ந்தவர்கள்தான்.

ஆனால் என்ன பயன்?

மறை நூல்களைக் கற்றுத்தேர்ந்த மறைநூல் அறிஞர்களுக்கு நூல்கள் முன்னறிவித்த இயேசுவை அடையாளம் காண முடியவில்லை.

மறை நூல் அறிவால் அவர்களுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை.

ஏன்?

 மறைநூலில்உள்ள செய்திகளுக்கு எப்படி அர்த்தம் கொடுக்க வேண்டுமோ அப்படிக் கொடுக்காமல்,

 தங்கள் இஷ்டப்படி பொருள் கொடுத்தது தான் காரணம். 

அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் என்ன?

Cover to Cover மறை நூலை வாசித்தால் மட்டும் போதாது.

இன்றைய காலகட்டத்தில் மறை நூலுக்கு உண்மையான பொருள் கொடுக்கக்கூடிய உரிமை உள்ளது இயேசு கிறிஸ்துவால் நிறுவப்பட்ட கத்தோலிக்க திருச்சபை மட்டுமே.

மறை நூலை மட்டும் எடுத்துக்கொண்டு கத்தோலிக்க திருச்சபையை விட்டு வெளியேறியவர்கள்

 மறை  நூல் செய்திகளுக்கு தங்கள் இஷ்டம் போல் பொருள் கொடுக்கும்போது 

அவர்கள் பரிசேயர்கள் காலத்தில் வாழ்ந்த மறைநூல் அறிஞர்களை விட மோசமானவர்கள் ஆகிவிடுகிறார்கள். 

பரிசேயர்கள் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள்,

 இவர்களும் அதைத்தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதில் உள்ள பரிதாபம் என்னவென்றால் 

கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்தவர்களும் திருச்சபையை விட்டு வெளியேறியவர்களின் நற்செய்தி கூட்டங்களுக்கு சென்று

 அவர்கள் கூறுவதை நம்புவதுதான்.

நமக்கு நற்செய்தியை பற்றி விளக்கம் கூற கத்தோலிக்க திருச்சபையில் குருக்கள் இருக்கிறார்கள்.

நாம் நாட வேண்டியது அவர்களை மட்டும்தான், திருச்சபையை விட்டு வெளியேறிவர்களை அல்ல.

நம்மவர்கள் பரிசேயர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய முக்கியமான பாடம் இது.

கத்தோலிக்க குருக்களின் உதவியோடு மறைநூலை வாசிப்போம்.

நித்திய காலமும் பயன் பெறுவோம்.


லூர்து செல்வம்.

No comments:

Post a Comment