"அவ்வேளையில் என்ன சொல்ல வேண்டுமென்று பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குக் கற்பிப்பார்." (லூக்.12:12)
"செபக்கூடங்களுக்கும், ஆள்வோர்முன்னும் அதிகாரிகள்முன்னும், உங்களைக் கூட்டிக்கொண்டு போகும்போது,
' எப்படிப் பதில் சொல்வது,
என்ன பதில் அளிப்பது,
என்ன பேசுவது என்று கவலைப்பட வேண்டாம்.
12 ஏனெனில், அவ்வேளையில் என்ன சொல்ல வேண்டுமென்று
-
பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குக் கற்பிப்பார்."
இயேசு தன்னுடைய அப்போஸ்தலர்களுக்கு கூறிய வார்த்தைகள் இவை.
அவர்கள் நற்செய்தி அறிவிக்கிற காலத்தில் அக்காலத்திய மன்னர்கள் அவர்களை கைது செய்து கேள்விகள் கேட்கும்போது அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி இயேசு அவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.
தான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் அவரே நடந்து காண்பித்தார்.
யூதமத குருக்கள் அவரை கைது செய்து பிலாத்துவின் முன்னும் ஏரோதுவின் முன்னும் நிறுத்தியபோது அவர் நடந்துகொண்ட விதம் அப்போஸ்தலர்களுக்கு ஒரு முன்மாதிரிகை.
அவர்கள் படுத்திய அவமானங்களை பொறுமையுடன் தாங்கிக் கொண்டார்.
சில கேள்விகளுக்கு பதில் கூறாமல் மௌனமாக இருந்தார்.
சில கேள்விகளுக்கு பொறுமையாக சுருக்கமாக, பதில் சொன்னார்.
அவரை அடிக்கும் போதும், உதைக்கும் போதும்,
அவர்மேல் தூங்கும் போதும்,
சிலுவையில் அறையும் போதும் தடுக்கவே இல்லை.
அதுபோலவே அப்போஸ்தலர்களும் நடந்து கொள்ள வேண்டும் இன்று இயேசு விரும்பினார்.
இதே புத்திமதி அப்போஸ்தலர் களுக்கு நேர்ந்தது போல் நமக்கும் நேர்ந்தால் பொருந்தும்.
ஆனால் எல்லா கிறிஸ்தவர்களுக்கும் அப்போஸ்தலர்களுக்கு நேர்ந்தது போல் நேரும் என கூற முடியாது.
நாம் நல்ல கிறிஸ்தவர்களாக வாழும்போது நம்மை ஆள்பவர்கள் நம்மைக் கைது செய்து இப்படி நடத்துவார்களா என்று நமக்குத் தெரியாது.
அப்படியானால் இந்த இறைவாக்கு நமது சாதாரண வாழ்வில் பயன்படாதா?
பயன்படும்.
இது போல நடந்து கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்கள் எல்லோருக்குமே கிடைக்கும்.
அரசு நம்மை கைது செய்துதான் நாம் இப்படி நடந்துகொள்ள சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
எப்படி நடந்து கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்களை கொடுக்க அரசுதான் தேவை என்ற அவசியம் இல்லை.
நமது உறவினர்களும், நமக்கு தெரிந்தவர்களும்,
சுருக்கமாக
நம்மை.அடுத்திருப்பவர்களே போதும்.
யாரையும் தீர்ப்பிடவோ, யாரைப்பற்றியும் கெடுத்து பேசவோ
யாருக்கும் அதிகாரம் இல்லை.
ஆனாலும் இல்லாத அதிகாரத்தை எடுத்து பயன்படுத்துவோர் நாட்டில் நிறைய பேர் இருக்கின்றார்கள்.
அவர்களிடம் நடந்து கொள்வதற்கு இயேசுவின் புத்திமதி உதவியாக இருக்கும்.
யாரும் யார் முன்னாலும் அவமானப்பட விரும்ப மாட்டார்கள்.
நாம் செய்யாததை மற்றவர்களிடம் சொல்லி நம்மை அவமானப்படுத்துவோர் நம்மிடையே இருக்கிறார்கள்.
அப்படி அவமானப்பட நேரும்போது அதையே பதிலுக்கு பதில் செய்யாமல் நாம் பொறுமையுடன் தாங்கிக் கொள்ளும் போது இயேசுவையே பின்பற்றுகிறோம்.
கேரளாவில் நடந்த மரியா குட்டி கொலை வழக்கில் சங். சுவாமி பெனடிக்ட் ஓனாம்குலம்
(Rev. Fr. Benedict Onamkulam)
தனக்கு நீதிமன்றத்தில் மரணத் தீர்ப்பு வழங்கப்பட்ட போதும் கூட
பாவ சங்கீர்த்தன ரகசியத்தை வெளியிடாமல் காப்பாற்றி ,
அதனால் ஏற்பட்ட அவமானத்தைத்
தாங்கிக்கொண்டார்.
நேரடி சாட்சிகள் இல்லாததால் மேல் முறையீட்டின் போது அவர் விடுவிக்கப்பட்டாலும்
அதற்குப்பின் அவரது வாழ்நாள் முழுவதுமே பாவசங்கீர்த்தனம் ரகசியத்தை வெளியிடவில்லை.
நீதிமன்றத்தில் அவர் விடுவிக்கப்பட்டாலும் அதற்குப் பின்னும் அவரை கொலைகாரர் என்று எண்ணிக்கொண்டு அவரது உறவினர்கள் கூட அவரை ஒதுக்கி விட்டார்கள்.
34 ஆண்டு அவமான வாழ்க்கைக்கு பின்னால் மரியா குட்டியின் மரணத்திற்கு காரணமாக இருந்த டாக்டரின் மனைவி
தனது கணவர் தனது பாவத்தை சுவாமியிடம் பாவசங்கீர்த்தனத்தில் வெளியிட்டுவிட்ட படியால்தான்
சுவாமி அந்த ரகசியத்தை வெளியிடாமல்
நீதிமன்ற தீர்ப்பையும்
மக்கள் கொடுத்த அவமானத்தையும் தாங்கிக் கொண்டார் என்று
பொதுவில் ஒப்புக்கொண்டாள்.
டாக்டரின் மனைவி அவரது கணவர் பாவசங்கீர்த்தனம் செய்த விஷயத்தை உலகிற்கு அவளாக அறிவித்த பின்புதான்
அதைப்பற்றிய உண்மை உலகத்திற்கு தெரியும்.
அதுவரை உலகம் சுவாமியை குற்றவாளி என்றே நினைத்துக் கொண்டிருந்தது.
ஆண்டவருக்காக அவமானங்களை தாங்கிக் கொள்கிறவர்கள் புனிதர்கள்.
பிரர் நம்மை கெடுத்துப் பேசும் போதுதான் அவமானம் ஏற்பட வேண்டிய அவசியமில்லை.
சில சமயங்களில் நாமே நமது அவமானத்திற்கு காரணம் ஆகிவிடுவோம்.
நமது அறிவு குறைவின் காரணமாக நமக்கு நமது வாழ்வின் முயற்சிகளில் தோல்வி ஏற்படும் போது
வெற்றி பெற்றோர் முன்னிலையில் நிற்க அவமானமாக இருக்கும்.
ஏனெனில் வெற்றி பெற்றோர் நமது தோல்வியை சுட்டி காண்பித்துக் கொண்டேயிருப்பர்
தோல்வி என்பது நாம் நினைப்பது போல அவமானப்பட வேண்டிய காரியம் அல்ல.
உண்மையில் நமது வாழ்வில் தோல்விகள் என்பது கிடையாது.
இதைப் புரிந்து கொண்டால் தோல்வி என்று நாம் கருதுகிற நிகழ்வைப் பற்றி கவலைப்படவே மாட்டோம்.
பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்கள் தோல்வி அடைந்தவர்கள் அல்ல.
பள்ளிக்கூட படிப்பை நிறுத்திவிட்டு வேறு பணிகளில் இறங்கவேண்டும் என்பதற்கு அது ஒரு கைகாட்டி மட்டுமே.
வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் பள்ளிக்கூடத்திற்குப் போனவர்கள் அல்ல.
பள்ளி படிப்பில் தோல்வி அடைந்தவர்கள் விஞ்ஞானிகளால் கூட மாறியிருக்கிறார்கள்.
விவசாய தொழிலில் வெற்றி பெறுவதற்கு பள்ளிப்படிப்பு தேவையில்லை.
கையெழுத்துப் போட கூட தெரியாதவர்கள் வியாபாரத்திலும் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள்.
என்னிடம் பயின்ற ஒரு மாணவன் தேர்வுகளில் தோல்வி அறிந்துகொண்டேன் இருந்தான்.
நான் உண்மையிலேயே எரிச்சலுடன்,
"நீ பள்ளிக்கு வருவதை விட கடை ஒன்றில் வேலைக்கு நின்றால் சம்பளமாவது கிடைக்கும்" என்றேன்.
அவன் மறுநாள் முதல் பள்ளிக்கு வரவில்லை.
பல ஆண்டுகள் கழித்து அவனைச் சந்திக்க நேர்ந்தது.
அவனாகவே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
"சார், பத்து ஆண்டுகளுக்கு முன்னால் பள்ளிக்கு வர வேண்டாம். ஏதாவது கடைக்கு வேலைக்கு போ என்று சொன்ன மாணவன் நான் தான்."
"எனக்கு ஞாபகம் இருக்கிறது.
இப்பொழுது எந்த கடையில் வேலைக்கு இருக்கிறாய்?"
"நீங்கள் சொன்ன ஆண்டு ஒரு கடையில் கையாள் வேலைக்குச் சேர்ந்தேன்.
தினம் 100 ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக மிச்சம் பிடித்து மறு ஆண்டு அந்தப் பணத்தில் சிறியதாக ஒரு பெட்டிக்கடை ஆரம்பித்தேன்.
ஒரு ஆண்டு காலத்தில் அது பெரிய பல சரக்குக் கடை ஆகியது.
இப்போது எனது கடையில் 10 பேர் வேலைக்கு நிற்கிறார்கள்.
அதோடு வட்டி வரவு செலவில் நல்ல வருமானம்.
பள்ளிக்கூட படிப்பை நிறுத்திவிட்டு கடை வேலைக்கு போகச் சொன்ன உங்களை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்."
"ரொம்ப சந்தோசம். படிப்பு மட்டும் நம்மை காப்பாற்றும் என்று எண்ணத் தேவையில்லை. யார் யாருக்கு என்ன வேலையில் ஆர்வம் அதிகமோ அந்த வேலையை செய்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்."
படிக்கின்ற காலத்தில் படிப்பை நிறுத்திவிட்டு கடை வேலைக்கு போகச் சொன்னதை அவன் அவமானமாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆசிரியர் காட்டும் பாதையாக எடுத்துக் கொண்டான்.
வெற்றிகள் மட்டுமல்ல தோல்விகளும் இறைவன் சித்தமே என்று எடுத்துக்கொண்டு
வாழ்க்கைப் பாதையில் அவரை நினைத்துக்கொண்டு நடை போடுவதே உண்மையான ஆன்மீகம்.
எல்லாவற்றிலும் இறைவனை நினைத்துக்கொண்டு நடக்கின்றவர்களுககுக் கிடைப்பதெல்லாம் வெற்றியே.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment