Wednesday, October 13, 2021

"உடலைக் கொன்றபின் அதற்குமேல் ஒன்றும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்சாதீர்கள்." (லூக்.12: 4)

"உடலைக் கொன்றபின் அதற்குமேல் ஒன்றும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்சாதீர்கள்."    (லூக்.12: 4)

கடவுள் மனிதனைப் படைக்கும் போது முழு மனச் சுதந்திரத்தோடு படைத்தார்.

அதாவது எதை நினைக்க, வேண்டும் எதைப் பேச வேண்டும், எதை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க அவனுக்கு முழு சுதந்திரத்தை கொடுத்திருந்தார்.

ஆனால் அதோடுகூட அவன் அனுசரிக்க வேண்டிய கட்டளைகளையும் கொடுத்திருந்தார்.

அவற்றை அனுசரிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை தீர்மானிக்க  அவனுக்கு முழு சுதந்திரம்  இருந்தது.


முழு சுதந்திரத்தோடு கட்டளைகளை 
அனுசரிப்பவனுக்கு அவரோடு இணைந்து வாழும் நித்திய வாழ்வு உண்டு.

அனுசரியாகதவனுக்கு நித்திய ஆன்மீக மரணம்.

 மனிதன் தனது முழு சுதந்திரத்தை பயன்படுத்தி நித்திய வாழ்வை ஈட்டிக் கொள்ள வேண்டும்.

ஆனால் மனிதன் இறைவனது கட்டளைக்குப் பணிந்து நடப்பதை சாத்தானின் ஆலோசனையை கேட்டு
 கைவிட்டு விட்டான்.

அதாவது தன்னை படைத்த இறைவனின் சொல்லை கேளாமல்,

எதிரியான சாத்தானின் சொல்லை கேட்டு நடந்தான்.

அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து சாத்தான் மனிதர்களுடைய சுதந்திரத்தை சோதிக்கும் வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறது.

இன்றும் மனிதனுடைய மனதில் 
சாத்தானுக்குக் கீழ்ப்படிவதா, கடவுளுக்குக் கீழ்ப்படிவதா என்ற எண்ணங்களுக்கு இடையில் போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது. 

இந்த  எண்ணங்களில் எதை ஏற்றுக்கொள்வது என்று தீர்மானிக்க வேண்டியது நாம்தான்.

இதற்கு ஆலோசனையாகத்தான் இயேசு

 "உடலைக் கொன்றபின் அதற்குமேல் ஒன்றும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்சாதீர்கள்."

சாத்தான் தனது வேலையை நேரடியாக செய்யாமல் ஏற்கனவே தன் கையில் போட்டுக் கொண்ட மனிதர்களின் மூலமாக செய்கிறான்.

இறைவன் நமது உள்ளங்களில் நேரடியாகவும், வெளியில் அவரது பிரதிநிதிகள் மூலமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

நாம் சாத்தானின் ஆட்களின் சொல்லை கேட்கவேண்டுமா?

இறைவனின் சொல்லை கேட்க வேண்டுமா? 

இயேசு சொல்கிறார்,

'உடலைக் கொன்றபின் அதற்குமேல் ஒன்றும் செய்ய இயலாதவர்களின் சொல்லை கேட்கவேண்டாம்.

கொன்றபின் நரகத்தில் வீழ்த்த வல்லவரது சொல்லையே கேளுங்கள்.

சாத்தானின் ஆட்கள்,

"கடவுளின் கட்டளையை கடைப்பிடித்தால் உன்னை கொன்று போடுவோம்"

என்று பயம் காட்டினாலும் அவர்களுக்கு பயப்பட வேண்டாம்.

ஏனெனில்  அவர்களுக்கு உங்கள் மரணத்திற்கு பின் உங்கள் மேல் எந்த அதிகாரமும் இல்லை.

ஆனால் மரணத்திற்கு பின் உங்களுக்கு விண்ணக வாழ்வையோ, நரக வாழ்வையோ தரவல்லவர் இறைவன் மட்டுமே."

ஆகவே அவருக்கு மட்டுமே பயப்பட வேண்டும், அவரது சொல்லை மட்டும் கேட்க வேண்டும். 

நாம் இயேசுவின் சொல்லுக்கு மட்டும் கட்டுப்படுவோம்.

திங்கள் கிழமை அரசு பொதுத்தேர்வு ஆரம்பிக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை காலையில் திருப்பலிக்கு புறப்பட்டு கொண்டிருக்கிறோம்.

அப்போது சாத்தான் நமது காதுக்குள் ஊதுகிறது,

"நாளைக்கு பொதுத்தேர்வு.
 இன்று முழுவதும் உட்கார்ந்து படித்தால்தான் தேர்வை நன்கு எழுத முடியும். 
திருப்பலிக்குச் சென்றால் படிக்க நேரம் இருக்காது.
தேர்வை சரியாக எழுத முடியாது.
ஆகவே திருப்பலிக்குச் செல்லாமல் உட்கார்ந்து படி."

அப்போது ஆண்டவர் சொல்கிறார்,

"ஞாயிற்றுக்கிழமை கடன் பூசை. 
பூசைக்கு செல்லா விட்டால் பாவம்.
பாவத்திற்கு தண்டனை கொடுக்கக் கூடியவன் நான் மட்டுமே. ஆகவே நான் சொல்கிறேன், திருப்பலிக்குப் போய்விட்டு வந்து படி. தேர்வு நேரத்தில் நான் உனக்கு உதவியாக இருப்பேன்."

நாம் ஆண்டவர் சொற்படிதான் நடக்க வேண்டும்.

கத்தோலிக்க திருமறையைச் சேராத ஒரு பணக்கார வீட்டுப் பெண் உன்னை காதலிக்கிறது.

சாத்தான் காதுக்குள் ஊதுகிறது,

"அவளது காதலை ஏற்றுக் கொண்டு, அவளையே திருமணம் செய்துகொள். பணம் ஏராளமாகக் கிடைக்கும். வசதியாக வாழலாம். அவள் எந்த மதத்தைச் சேர்ந்தவளாய் இருந்தால் என்ன. வசதியான வாழ்க்கை தேடிவரும்போது  யாராவது வேண்டாம் என்று சொல்வார்களா?"


அப்போது ஆண்டவர் சொல்கிறார்,

"வசதியான வாழ்க்கை தேடி வருகிறது என்று நமது திருமறையில் சேராத பெண்ணை நீ  திருமணம் செய்து கொண்டால் உனது ஆன்மீக வாழ்க்கை கேள்விக் குறியாகிவிடும். உனது வாழ்க்கையும் கெடும், பிள்ளைகளின் வாழ்க்கையும் கெடும். இவ்வுலக வாழ்க்கையை விட மறுவுலக வாழ்க்கையே முக்கியமானது. நமது திருமறையை  சேராத இந்த பெண் வேண்டாம். பக்தியுள்ள கத்தோலிக்க பெண் வரும்போது திருமணம் செய்து கொள்."

ஆண்டவருக்கு நமது ஆன்மாவும் மறுவுலக வாழ்வும்தான் முக்கியம்.
நமது ஆன்மீக வாழ்வுக்கு பணமும் வசதியான வாழ்வும் முக்கியமல்ல.
 
 மறுஉலக வாழ்க்கையை விலையாகக் கொடுத்து   இவ்வுலக வாழ்க்கையை வாழ்ந்து என்ன பயன்?

சாத்தான் நம்மை சோதிக்கும் போது நிரந்தரமற்ற இந்த உலகத்தை நிரந்தரமானது போல் காண்பிக்கும்.

ஆண்டவர் நம்மை அழைக்கும்போது   இவ்வுலகின் நிலையற்ற தன்மையை சுட்டி காண்பித்து,

 மறுஉலக நிலைவாழ்வையும்  ஞாபகப்படுத்துவார்.

சாத்தான் இவ்வுலகின் சிற்றின்பத்தை காட்டி  பாவம் செய்ய சோதிப்பான்.

ஆண்டவர் இவ்வுலகில் நாம் சுமக்க வேண்டிய சிலுவைகளைக் காண்பித்து, அவற்றை சுமந்தால் தான் மறுவுலக பேரானந்தஸம் கிட்டும்  என்பார்,

சாத்தானுக்கு நம்மை சோதிக்க மட்டுமே அதிகாரம் உண்டு. அதற்குமேல் அதற்கு நம் மேல் எந்த அதிகாரம் இல்லை.

ஆண்டவரால் நம்மை விசுவாசத்தில் ஆழப் படுத்த முடியும். பசாசின் சோதனைகளில் வெல்வதற்கு தேவையான அருள் வங்களை அவரால் மட்டுமே தரமுடியும். அவருக்கு நம்மேல் சர்வ அதிகாரம் உண்டு.

 அவரது  சொற்படி நடந்தால் நமக்கு வாழ்வு தரவும், எதிராக நடந்தால் நித்திய வாழ்வை மறுக்கவும் அவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. 

நம்மை சோதிப்பதைத் தவிர நம்மேல் வேறு எந்த அதிகாரமும் இல்லாத சாத்தானுக்கு நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

 நம்மேல் சர்வ அதிகாரமும் உள்ள இறைவனுக்கே அஞ்சி நடப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment