" அவன், "ஐயா, இந்த ஆண்டும் இருக்கட்டும். சுற்றிலும் கொத்தி எருப்போடுவேன்."
(லூக். 13:8)
இயேசு,
"மனந்திரும்பாவிடில், நீங்கள் எல்லோரும் அவ்வாறு அழிவீர்கள்"
என்ற வாக்கியத்தோடு ஒரு உவமையை ஆரம்பித்துச் சொன்னார்:
ஒரு தோட்ட உரிமையாளர் தன்னுடைய அத்திமரம் வெகு வெகு நாட்களாக பழங்கள் தராததால் அதை வெட்டி விடும்படி தன்னுடைய பணியாளுக்குச் சொல்லுகிறார்.
பணியாளோ,
"ஐயா, இந்த ஆண்டும் இருக்கட்டும். சுற்றிலும் கொத்தி எருப்போடுவேன்.
காய்த்தால் சரி, இல்லாவிட்டால் வெட்டிவிடலாம்" என்றார்."
இந்த உவமை மூலம் இயேசு நமக்கு என்ன பாடம் கற்பிக்க விரும்புகிறார் என்பதைப் பற்றி தியானிப்போம்.
வெகுநாட்களாக காய்க்காதிருக்கும் அத்தி மரத்தால் எந்த பயனும் இல்லை என்று அதை வெட்டி விட சொல்கிறார் தோட்டத்தின் உரிமையாளர்.
ஆனால் தோட்டத்தில் வேலை செய்பவர்,
" மரத்திற்கு இன்னும் ஒரு ஆண்டு காலம் கொடுப்போம்.
அக்காலத்தில் மரத்தைக் சுற்றிலும் கொத்தி எருப்போடுவேன்.
அதன் பின்னும் அது காய்க்காவிட்டால் வெட்டி விடலாம்." என்கிறார்.
மனிதன் தன்னுடைய கட்டளைகளுக்கு கீழ்படிந்து தனக்கு ஏற்றவனாக நடப்பான் என்ற
எதிர்பார்ப்புடன்தான் இறைவன் மனிதனைப் படைத்தார்.
ஆனால் முதல் மனிதனே அவருடைய எதிர்பார்ப்புக்கு எதிராக நடந்து கொண்டான்.
கடவுள் நினைத்திருந்தால் அவனோடு மனிதகுலத்திற்கு அன்றே முடிவு கட்டியிருக்கலாம்.
ஆனால் அவர் மனிதன் திருந்தி வாழ காலம் கொடுத்தார்.
அந்த காலகட்டத்தில் தனது ஒரே மகனை மனிதனாக பிறக்கச் செய்து மனிதன் செய்த பாவத்திற்கு பரிகாரம் செய்து
அவனை நல்வழிப் படுத்த ஏற்பாடு செய்தார்.
அதனால் மனித குலத்தின் ஒருசாரார் திருந்தி வாழ்ந்தாலும்
மற்றொரு சாரார் இன்னும் பாவ நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனாலும் கடவுள் இன்னும் மனித குலத்தை அழிக்கவில்லை.
தொடர்ந்து காலம் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்.
இக்கால முடிவுக்குள் மனிதகுலம் திருந்த வேண்டும்.
திருந்தா விட்டால் அது அதற்கு உரிய பயனை அனுபவிக்கும்.
மனுக்குலம் முழுவதும் நமது கட்டுப்பாட்டுக்குள் இல்லை.
ஆனால் நாம் ஒவ்வொருவரும் நமது கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறோம்.
ஆகவே மொத்த மனுக்குலத்தையும் ஆராய்ச்சி செய்வதற்கு முன்னால் நாம் ஒவ்வொருவரும் நம்மைப் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி செய்வோம்.
நாம் முதல் பாவம் செய்த நாளை நினைத்துப் பார்ப்போம்.
நமது வாழ்வின் முடிவு நம்முடைய கையில் இல்லை, இறைவனது கையில்தான் இருக்கிறது, அவர் நினைத்த அன்று பிறந்தோம், அவர் நினைக்கிற அன்று இறப்போம்.
Suppose நாம் முதல் பாவம் செய்த அன்றே இறந்திருந்தால், நாம் நித்தியத்துக்கும் விண்ணகத்தை இழந்திருப்போம்.
அன்று இறக்காமல் நாம் தொடர்ந்து உயிர் வாழக் காரணம் நாம் அல்ல,
கடவுள் நாம் பாவத்திற்கு மனம் வருந்தி திருந்தி வாழ காலம் தந்து நம்மை வாழ வைத்தார்.
அன்று நாம் பாவ சங்கீர்த்தனம் செய்து நாம் செய்த பாவத்திற்கு மன்னிப்பு பெற்று விட்டோம் என்றே வைத்துக் கொள்வோம்.
தொடர்ந்து கிடைத்த காலத்தை பரிசுத்தமாய் வாழ பயன்படுத்திக் கொண்டோமா?
பாவம் செய்ய பயன்படுத்துகிறோமா? நினைத்துப் பார்ப்போம்.
பரிசுத்தமாய் வாழ பயன்படுத்திக்
கொண்டால், மிகவும் சந்தோஷம்.
பாவம் செய்ய பயன்படுத்தி கொண்டிருந்தால், உவமையில் வருகின்ற அத்திமரத்தின் கதைதான் நமக்கும்.
அதைச் சுற்றி கொத்திக் கொடுத்து உரம் போட்டு வருவதுபோல ஆன்மிக விசயத்திலும் நம்மை கவனித்துக்கொண்டு வருகிறார் இயேசு.
செபம், தவம், தர்மம் போன்ற பக்தி முயற்சிகளால் நம்மைச் சுற்றி கொத்தி, அவருடைய அருள் வரங்கள், திவ்ய நற்கருணை ஆகிய உரம் இட்டு நம்மை கவனித்துக் கொண்டு வருகிறார்.
ஒவ்வொரு நாளும் பலமுறை தந்தையை நோக்கி,
" எங்களுக்கு அன்றன்றுள்ள உணவை இன்று தாரும்"
என்று இயேசு கேட்கச் சொல்லியிருக்கிறார்.
நாம் உணவு என்றால் நமது உடம்புக்கு தேவையான உணவு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
உண்மையில் நாம் உணவு என்று சொல்லும்போது நமது ஆன்மீக வளர்ச்சிக்கு தேவையான எல்லா தேவைகளையும் குறிக்கும்.
இறைவனை நோக்கி நாம் செய்கின்ற செபம்,
செபம் சொல்ல ஆர்வம், நேரம்,
நற்செயல்கள் செய்வதற்காக ஆர்வம், அருள்,
ஆன்மீக உணவாகிய திவ்ய நற்கருணை
இன்னும் ஆன்மிக வளர்ச்சிக்கு தேவையான அத்தனையும்
அன்றாட உணவில் அடங்கும்.
உதாரணத்திற்கு,
"எங்களுக்கு அன்றன்றுள்ள உணவை இன்று தாரும்."
என்பதில்,
"எங்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான செப ஆர்வத்தைத்
தாரும்."
"நாங்கள் தினமும் உம்மை திவ்ய நற்கருணையில் உணவாக உண்ணும் வரத்தைத் தாரும்."
''எங்களது தினசரி ஆன்மீக வாழ்க்கைக்கு தேவையான அருள் வரங்களை நிறையத் தாரும்."
போன்ற செபங்களும் அடங்கும்.
காய்க்காத அத்தி மரமாக இருந்த நமக்கு இவ்வளவு உணவை ஆண்டவர் தரும்போது தொடர்ந்து காய்க்காமல் இருக்க முடியுமா?
ஆனால் ஆண்டவர் தரும் இந்த உணவை தகுதியான முறையில் நாம் உண்ண வேண்டும்.
அப்போதுதான் பலன் கிடைக்கும்'
ஏனோ தானோ என்று செபித்துவிட்டு,
தகுந்த தயாரிப்பு இன்றி நற்கருணையை உண்டுவிட்டு,
நல்ல செயல்களை ஆண்டவரது மகிமைக்காக செய்யாமல் நமது பெருமைக்காக செய்துவிட்டு
ஆன்மீகத்தில் வளர்ச்சியை காணோமே என்று சொல்லக்கூடாது.
ஆண்டவர் ஏற்படுத்திய திரு அருள் சாதனங்களை தகுந்த வகையில் பெற்றுக் கொண்டே வந்தாலே ஆன்மீகத்தில் வேகமாக வளர்வோம்.
நமது ஆன்மீகமாகிய அத்திமரம் பூத்து, காய்த்து, பழுத்து குலுங்கும்.
நம் ஆண்டவர் பழங்களை உண்டு மகிழ்வார்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment