"நான் மண்ணுலகிற்குச் சமாதானத்தை அளிக்க வந்தேனென்றா எண்ணுகிறீர்கள்? இல்லை, பிரிவினை உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்லுகிறேன்."
(லூக்.12:51)
நாம் செய்த பாவத்தினால் இறைவனுக்கும் நமக்கும் இடையே இருந்த சமாதான உறவு கெட்டுப் போய்விட்டது என்றும்,
அதை மீட்டுத் தரவே இறைமகன் மனித உரு எடுத்து நம்மிடையே வந்தார் என்றும் நமக்குத் தெரியும்.
இயேசு மனிதனாய் பிறந்த அன்று வானவர்கள்,
"மண்ணுலகில் நல்மனதோருக்கு சமாதானம் உண்டாவதாக" என்று பாடினார்களே!
இயேசு தனது சீடர்களை போதிக்க அனுப்பும்போது, அவர்கள் சென்ற வீட்டினரை
"உங்களுக்குச் சமாதானம் " என்று வாழ்த்த சொன்னாரே!
அவர் சமாதானத்தின் தேவன் என்று நம் அனைவருக்கும் தெரியுமே!
அவர் ஏன்,
" நான் மண்ணுலகிற்குச் சமாதானத்தை அளிக்க வந்தேனென்றா எண்ணுகிறீர்கள்? இல்லை, பிரிவினை உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்லுகிறேன்.." என்று சொல்கிறார்?
அவர் சமாதானத்தை அளிக்கவே வந்தார்.
அதற்கு மனிதர் எப்படி எதிர்வினை (React) ஆற்றுகிறார்கள் என்ற நிதர்சனமான உண்மையை சொல்கிறார்.
அவர் நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்த காலத்திலேயே அவர் சொன்னது உண்மையாயிற்று.
நற்செய்தி அறிவிப்பதற்கு முன்னால் யூத மதத்தவர் மத அனுசாரத்தைப் பொறுத்தமட்டில் யூத மத குருக்களுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தார்கள்.
ஆனால் அவர் நற்செய்தி அறிவித்த பின்
அவர்களிடையே இயேசுவின் நற்செய்தியை
ஏற்றுக்கொண்டவர்கள் ஏற்றுக்கொள்ளாதவர்கள் என இரண்டு பிரிவுகள் ஏற்பட்டன.
சாதாரண மக்கள் அவரது நற்செய்தியை மனதார ஏற்றுக்கொண்டார்கள்.
ஆனால் அதுவரை அவர்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருந்த பரிசேயர்கள், சதுசேயர்கள், மறைநூல் அறிஞர்கள், மதகுருக்கள் ஆகியோர் இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லை.
சாதாரண மக்கள் இயேசுவை பின்பற்றினார்கள்.
ஆனால் அவரை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அதுவரை தங்களுக்கு கட்டுப்பட்டு நடந்தவர்கள் அனைவரும் இயேசுவின் பின்னால் போய் விடுவார்களோ என பயந்து
இயேசுவையே சிலுவையில்
அறைந்து கொன்று விட்டார்கள்!
ஏற்றுக்கொண்டோர் கிறிஸ்தவர்களாக மாறிவிட்டார்கள்,
ஏற்றுக்கொள்ளாதோர் இன்றுவரை யூத மதத்தவர்களாகவே இருக்கிறார்கள்.
நற்செய்தியை ஏற்றுக்கொண்டவர்கள் அதற்கு எப்படி எதிர்வினை ஆற்றுகிறார்கள்?
அவர்கள் நற்செய்தி படி வாழ்பவர்கள்,
அதன்படி வாழாதவர்கள் என இரண்டு
பிரிவினராய் இருக்கிறார்கள்.
அதாவது நற்செய்தியை வாழ்க்கையாக ஏற்றுக் கொள்பவர்கள்,
கொள்கை அளவில் மட்டும் ஏற்றுக் கொள்பவர்கள்.
வாழ்க்கையாக ஏற்றுக் கொள்பவர்கள் கிறிஸ்தவர்களாக வாழ்வார்கள்.
கொள்கை அளவில் மட்டும் ஏற்றுக் கொள்பவர்கள் கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் மட்டும் வாழ்வார்கள்.
நாம் பாவ நிலையில் இருந்தபோது இறைவனோடு சமாதானம் அற்ற நிலையில் இருந்தோம்.
ஞானஸ்நானம் பெற்றபோது பாவ நிலையிலிருந்து விடுதலை பெற்று, இறைவனோடு சமாதானம் ஆகிவிட்டோம்.
ஞானஸ்நானம் பெற்றவுடன் இறைவனோடு சமாதானம் உள்ள
கிறிஸ்தவர்களாக மாறினோம்.
ஞானஸ்நானம் பெற்ற நிலையில் தொடர்ந்து இருக்கிறோமா?
அதாவது பாவமே செய்யாமல் இருக்கிறோமா?
அப்படியே பாவம் செய்துவிட்டாலும் அதிலிருந்து விடுதலை பெற பாவசங்கீர்த்தனம் எனும் திரு அருள் சாதனத்தைப் பயன்படுத்துகிறோமா?
ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்னால் நாம் எல்லோரும் ஒரே மாதிரி இருந்தோம், அதாவது, எல்லோரும் பாவ நிலையில் இருந்தோம்.
ஞானஸ்நானம் பெற்ற பின்
பாவம் இல்லாதவர்கள்,
பாவம் உள்ளவர்கள் என இரண்டு பிரிவுகளாக பிரிந்திருக்கிறோம்.
இதைத்தான் இயேசு
"பிரிவினை உண்டாக்கவே வந்தேன்." என்று குறிப்பிடுகிறார்.
பள்ளிக்கூடம் வருவதற்கு முன்னால் ஒரு ஊர் முழுவதும் படிக்காதவர்கள் மட்டும் இருந்தார்கள்.
பள்ளிக்கூடம் வந்தபின் படித்தோர், படியாதோர் என இரு பிரிவு மக்கள் வாழ்ந்தார்கள்.
இப்பிரிவுக்கு காரணம் பள்ளிக்கூடம் அல்ல, அதில் படிக்காதவர்கள்.
அதுபோல்தான் நம்மிடையே பாவம் உள்ளவர்களும், இல்லாதவர்களும் இருப்பதற்கு இயேசு காரணம் அல்ல, நாம்தான் காரணம்.
ஆனாலும் இயேசு நமது பழியை தன் மேல் போட்டுக்கொள்கிறார்.
நமது பாவங்களுக்கு பரிகாரமாக நாம் நமது ரத்தத்தை சிந்த வேண்டியிருக்க,
நமது பாவங்களை எல்லாம் அவரே சுமந்து சிலுவையில் அவரது ரத்தத்தை சிந்தி பரிகாரம் செய்தாரே.
"நான் பெற வேண்டிய ஞானஸ்நானம் ஒன்று உண்டு. அது நிறைவேறுமளவும் நான் எவ்வளவோ ஏக்கமாயிருக்கிறேன்."
இங்கு இயேசு குறிப்பிட்டது நமது பாவங்களுக்கு பரிகாரமாக அவர் சிலுவையில் படவிருந்த ரத்தக் குளிப்பையே.
நமது பாவங்களை கழுவ இயேசு தன் ரத்தத்தாலே தன்னையே கழுவிக்கொண்டார்.
தனது ரத்தத்தால் கழுவுவதற்காகத் தான் நமது பாவங்களை கல்வாரி வரை சுமந்து சென்றார்.
நமக்கும் அவருக்கும் இடையில் சமாதான உறவை ஏற்படுத்துவதற்காகவே இயேசு தன் இரத்தத்தால் குளித்தார்.
நாம் சிலுவையைச் சுமக்கவே பயப்படுகிறோம்.
சமாதானம் என்றால் சண்டை போடாமல் இருத்தல் என்று பொருள் அல்ல.
விரோதிகள் கூட அடுத்த சண்டைக்குப் தயாரிக்கும்போது சண்டை போடாமல் தான் இருப்பார்கள்.
சமாதானம் என்றால் ஒருவருக்கொருவர் இனிய உறவோடு இருப்பது.
திருப்பலியின்போது குருவானவர் "ஒருவருக்கொருவர்
சமாதானத்தை அறிவித்துக் கொள்வோம்' என்று சொல்லும் போது அருகில் இருப்பவரைப் பார்த்து தலை ஆட்டிக் கொள்கிறோம்.
நாம் யாரோடு நல்ல உறவில் இல்லாமல் இருக்கிறோமோ அவரிடம் சென்று சமாதானம் என்று சொல்ல வேண்டும்.
ஆனால் நாம் கோவிலில்கூட அவரோடு உட்காருவது இல்லை.
சமாதானம் செய்யப்படவேண்டிய ஆளோடுதான் கோவிலில் அமர வேண்டும்.
அவரைப்பார்த்து புன்சிரிப்போடு சமாதானம் சொல்ல வேண்டும்.
''நான் பிரிவினையை ஏற்படுத்த வந்தேன்"
என்று இயேசு சொல்வது நம்மிடையே சமாதான உணர்வை தூண்டுவதற்காகத்தான்.
எல்லோரும் இயேசுவின் சமாதானத்தில் வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment