Thursday, October 28, 2021

"ஒடுக்கமான வாயில்வழியே நுழையப் பாடுபடுங்கள்'' (லூக்.13:24)

"ஒடுக்கமான வாயில்வழியே நுழையப் பாடுபடுங்கள்'' 
(லூக்.13:24)

உலக அனுபவத்தில் சாலைகள் மிக அகலமானவை.

அகலமானவை என்பதற்காக அதில் மட்டும் திரிந்து கொண்டிருப்பவன் ஒருநாளும் வீட்டுக்குப் போக முடியாது. Bus stand க்கு வேண்டுமானால் போகலாம்.

வீட்டின் நுழைவாயில் ஒடுக்கமானது.
 
ஒடுக்கமானதானாலும் அதன் வழியே நுழைபவன்தான் வீட்டிற்குள் நுழைய முடியும்.

நாம் வாழ வேண்டியது வீட்டில் தான், சாலைகளில் அல்ல.

ஒடுக்கமானது என்பதற்காக அதன் வழியே நுழைய விரும்பாதவன் வீட்டிற்குள் போக முடியாது.

விண்ணகப் பாதையில் பயணம் செய்வோர் இரண்டு வகையான வாழ்க்கை முறைகளை சந்திக்க நேரிடும்.

ஒன்று சாலைகளைப் போல அகலமானது.சுதந்திரமாக இஷ்டம் போல் வாழ அனுமதிப்பது. உலக சிற்றின்பங்கள் நிறைந்தது. 

எப்படி அகலமான சாலைகள் மட்டும் திரிபவன் வீட்டிற்குள் செல்ல முடியாதோ,

அப்படியே இஷ்டம் போல் வாழ விரும்புகிறவன் விண்ணக வீட்டிற்குள் நுழைய முடியாது.

இன்னொன்று கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட, கஷ்டங்கள் நிறைந்த, இஷ்டம் போல் வாழ முடியாத ஆன்மீக வாழ்க்கை.

இதை வாழ்பவர்கள் மட்டுமே விண்ணகம் செல்ல முடியும்.

இப்படி வாழ வேண்டும் என்று சொல்பவர் நமது விண்ணக பாதையின் ஒரே வழிகாட்டியான நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து.

அவர் வெறுமனே வழிகாட்டி மட்டுமல்ல, நம்முடன் நடந்து வருபவர்.

நாம் எப்படி நடக்க வேண்டும் என்று நடந்து காட்டியவர்.

அவரது வார்த்தை மட்டுமல்ல, வாழ்க்கையே நமக்கு வழிகாட்டி தான்.

நித்திய காலமாக விண்ணகத்தில் வாழ்ந்துவரும் அவர்,

 துவக்கமும் முடிவும் உள்ள மண்ணக வாழ்வு வாழ உலகிற்கு வந்ததே நம்மை விண்ணகத்திற்கு வழிகாட்டி அழைத்து செல்வதற்காக தான்.

"ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றவர்கள்: ஏனெனில், கடவுளின் அரசு உங்களதே."
(லூக்.6:20)

என்று சொல்ல மட்டும் செய்யவில்லை.

அவரே ஏழையாகப் பிறந்தார், ஏழையாக வாழ்ந்தார், ஏழையாக மரித்தார்.

நம்மை மட்டும் அவர் சிலுவையை சுமக்க சொல்லவில்லை,

நமக்கு முன்மாதிரிகையாக அவரே சிலுவையைச் சுமந்தார் சிலுவையிலேயே இறந்தார்.

"நீதியினிமித்தம் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர், ஏனெனில், விண்ணரசு அவர்களதே."
(மத். 5:10)

என்று சொல்ல மட்டும் செய்யவில்லை,

 தன் வாழ்நாள் முழுவதும் துன்பங்களையே அனுபவித்தார்.

ஆக ஆன்மீக வாழ்வு கிறிஸ்துவைப் போல்

ஒடுக்கமான வாயில்வழியே செல்வதுதான்.

அகலமான பாதையில் இஷ்டப்படி நடப்பது அல்ல.

 அகலமான பாதை உலகின் வழி வாழ்வதைக் குறிக்கிறது.

ஒடுக்கமான வாயில் விண்ணுலகின் வழி வாழ்வதைக் குறிக்கிறது.

உலகின் வழி வாழ்வது கட்டுப்பாடு இல்லாமல் இஷ்டம் போல் வாழ்வது,

விண்ணுலகின் வழி வாழ்வது இறைவனின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு வாழ்வது.

உலகின் வழி வாழ்பவன் மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட உலகின் வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பான்.

விண்ணுலகின் வழி வாழ்பவன் 
விண்ணுலக வாழ்வுக்கென்றே  படைக்கப்பட்ட  ஆன்மாவின் தேவைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பான்.

மீட்பின் பாதையில் ஆன்மாவும், சரீரமும் சேர்ந்தே பயணிக்கின்றன.

ஆன்மா விண்ணக வாழ்வைத் தேடுகிறது.  சரீரம் உலக வசதிகளை தேடுகிறது.

ஆன்மாவின் தேவைகள் நிறைவேற்றப்பட்டால் தான் மீட்பு.

சரீரத்தின் தேவைகள் மட்டும் நிறைவேற்றப்பட்டால் மீட்பு இல்லை.

சரீரம் இஷ்டம்போல் வாழ உதவும் அகலமான பாதையை தேடுகிறது.

ஆன்மா மீட்பு பெற தேவையான ஒடுக்கமான வாயிலைத் தேடுகிறது.

உடலுக்கும், ஆன்மாவிற்கும் இடையில் நடைபெறும் இந்த போராட்டமே நமது வாழ்க்கை. 

ஒவ்வொரு வினாடியும் ஆன்மாவும், உடலும் போராடிக் கொண்டுதான் இருக்கின்றன.

போராட்டத்தில் ஆன்மா வெற்றி பெற வேண்டும். ஆன்மாவின் வெற்றிதான் அதன் வளர்ச்சி.

ஆன்மா வெற்றி பெற வேண்டும் என்றால் உடலின் ஆசைகள் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட வேண்டும். இதற்கு பெயர் தான் தவம்.

ஆன்மாவின் வெற்றிக்கு செபம் உதவும்.

செபமும், தவமும் சேர்ந்துதான் நமக்கு மீட்பைப் பெற்றுத் தருகின்றன.

ஆன்மா அதிகாலையிலேயே நம்மை எழுப்பி செபம் சொல்ல தூண்டுகிறது.

உடல் இன்னும் கொஞ்சம் தூங்க ஆசைப்படுகிறது.

உடலின் ஆசையை அடக்கி,

 அதாவது ஒரு தவ முயற்சி செய்து,

எழுந்து தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே செபம் செய்து நமது நாளை ஆரம்பிக்க வேண்டும்.

நாள் முழுவதுமே ஆன்ம, சரீர போராட்டம் தொடரும்.

ஒவ்வொரு போராட்டத்திலும் ஆன்மா வெற்றி பெறவேண்டும்.

அதற்கு உதவியாக காலையிலேயே நமது அன்றைய செயல்களையெல்லாம் இறைவனுக்கு ஒப்புக் கொடுத்து விட வேண்டும்.

இறைவனுக்கு ஒப்புக் கொடுத்து விட்டால் ஒவ்வொரு செயலிலும் இறைவன் ஆன்மாவிற்கு தனது அருள் வரத்தால் உதவி செய்து கொண்டிருப்பார்.

நமது ஒவ்வொரு செயலையும் தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் ஆரம்பிக்க வேண்டும்.

உணவு உடல் ருசியைத் தேடும்.
தேவைக்கு அதிகமாகவே சாப்பிடத் தூண்டும்.

உடலின் இந்த ஆசைக்கு போசனப் பிரியம் என்று பெயர். ஏழு தலையான பாவங்களில் ஒன்று.

ஆனால் நாம் உடலில் அந்த ஆசையை அடக்கி, பசிக்காக, அளவோடு, உணவைத் தந்த இறைவனுக்கு நன்றி கூறி உண்ண வேண்டும்.

அனேகர்  ருசியாக உண்ண வேண்டும் என்ற ஆசையில் விதவிதமான, உடம்புக்கு கேடு தரக்கூடிய உணவு வகைகளை உண்கிறார்கள்.

உடல் கடவுள் நமக்கு தந்த பரிசு.
 அதற்கு கேடு எதுவும் ஏற்படாமல் பேணி காக்க வேண்டியது நமது கடமை.

மது போன்ற போதை தரும் உணவு வகைகளை உட்கொள்வதால் நாம் உடலை மட்டுமல்ல ஆன்மாவையும் கெடுத்துக் கொள்கிறோம்.

உடல் அழியக்கூடிய பொருளாக இருக்கலாம், ஆனால் அதன் அழிவுக்கு நாம் காரணமாக இருக்கக்கூடாது.

"நான் பசியாய் இருந்தேன் எனக்கு உணவு தந்தாய்"

என்ற இயேசுவின் வார்த்தைகளை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு இயன்ற போதெல்லாம் ஏழைகளுக்கு உணவிட வேண்டும்.

ஏழைகளுக்கு கொடுக்கும் போது இறைவனுக்கு கொடுக்கிறோம்.

இறைவன் தரும் அருள் உடை அணிந்து அவர் முன்  பரிசுத்தமாகவும் அழகாகவும் இருக்க வேண்டியது ஆன்மா. 

ஆனால் சிலர் ஆன்மீக அழகைப் பற்றி கவலைப்படாமல் அழியக்கூடிய உடல் அழகைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

இவர்களுக்கு ஆன்மா எவ்வளவு அசுத்தமாக இருந்தாலும் சரி,

 ஆடம்பர உடை அணிந்து உடல் அழகாக காட்சியளிக்க வேண்டும்.

மானம் காக்க எளிமையான சுத்தமான உடை அணிய வேண்டும்.

ஆண்டவர் விரும்புவது நாம் பாவமாசின்றி வாழ்வதையே. 

ஆண்டவரது விருப்பத்திற்கு ஏற்ப வாழ்வதுதான் நமது வாழ்வின் குறிக்கோள், ஆடம்பர உடை அணிந்து உலகை கவர்வது அல்ல.

கிறிஸ்மஸ் விழாவின்போது லட்சக்கணக்கில் செலவழித்து வாங்கிய உடையணிந்து கோவிலுக்கு வருகின்றவர்கள்

 மாட்டுத் தொழுவில் ஏழ்மையில் பிறந்திருக்கும் இயேசு பாலனை தங்கள் உடையால் மகிழ்விக்க இயலாது.

 அந்த பணத்தை ஏழைகளுக்கு இலவசமாக உடை வாங்க கொடுத்திருந்தால் இயேசு பாலன் மகிழ்ச்சி அடைவார்.

கோவிலுக்கு வரும் போது ஒழுக்கமான (decent ) உடை அணிந்து வரவேண்டும்.

Fashion என்ற பெயரில் ஒழுக்கமில்லாத (Indecent)உடை அணிந்து வருவோர் மற்றவர்களது பார்வையைக் கெடுத்த குற்றத்திற்கும் . கடவுளிடம் கணக்கு கொடுக்க வேண்டும்.


ஊண், உடை, இருப்பிடம் ஆகிய மூன்றும் மனிதனின் அடிப்படைத் தேவைகள்.

அப்படியிருக்க, உண்பதும், உடுப்பதும் குற்றமா?

உண்பதும், உடுப்பதும் குற்றமல்ல, ஆனால் ஆன்மாவின் மீட்பை பற்றி கவலைப் படாமல், உடலின் ஆசைகளை மட்டுக்கு மீறி திருப்திப் படுத்த முயல்வதுதான் குற்றம்.

மீட்புப் பெற செபமும், தவமும் அவசியம். 

ஆன்மா இறைவனோடு இணைந்து இருக்கும் நிலையே செபம்.

ஆன்மா இறைவனோடு இணைந்திருக்க வேண்டுமானால், உடல் தவ நிலையில் இருக்கவேண்டும்.

அதற்கு உடல் கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment