Tuesday, October 26, 2021

" கடுகுமணிக்கு ஒப்பாகும். ஒருவன் அதை எடுத்துத் தன் தோட்டத்திலே விதைக்கிறான். அது வளர்ந்து பெரிய மரமாயிற்று. வானத்துப் பறவைகளும் அதனுடைய கிளைகளில் வந்து தங்குகின்றன" என்றார்"(லூக்.13: 19)

" கடுகுமணிக்கு ஒப்பாகும். ஒருவன் அதை எடுத்துத் தன் தோட்டத்திலே விதைக்கிறான். அது வளர்ந்து பெரிய மரமாயிற்று. வானத்துப் பறவைகளும் அதனுடைய கிளைகளில் வந்து தங்குகின்றன" என்றார்"
(லூக்.13: 19)

இயேசு கடவுளின் அரசை ஒரு கடுகு மணிக்கு ஒப்பிடுகிறார்.

விதைகளிலே மிகச் சிறியது கடுகு மணிதான். ஆனால் அதற்குள் 20 அடி வளரக்கூடிய மரம் ஒன்று இருக்கிறது.

 கடுகு மணியை தோட்டத்தில் ஊன்றி வைத்தால், அது முளைத்து

வானத்துப் பறவைகளும் அதனுடைய கிளைகளில் வந்து தங்குமளவிற்கு பெரிய மரமாக வளரும்.

ஒரு வார்த்தையை சொன்ன உடனே அது குறிக்கும் பொருளோ, செயலோ தமது மனக் கண் முன் வரவேண்டும்.

யானை என்று சொன்னவுடனே துதிக்கை உள்ள பெரிய விலங்கு நினைவுக்கு வருகிறது.

மரம் என்று சொன்னவுடனே கிளைகளும், இலைகளும், பூக்களும், காய்களும், கனிகளும் உள்ள தாவரம் நினைவுக்கு வருகிறது.

அதேபோல் கடவுளின் அரசு என்று சொன்ன உடனே நமது நினைவுக்கு வருவது எது?

அன்பு மயமானவர் கடவுள்.

தனது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் அன்பை வெளியிட்டுக் கொண்டிருப்பவர் கடவுள்.

அவரது அன்பு செயலில் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும் அரசுதான் கடவுளின் அரசு.

நமது ஆண்டவராகிய இயேசு எப்படி தனது வாழ்வாலும், பாடுகளாலும், சிலுவை மரணத்தினாலும் மனுக்குலம் மீது தனக்கு இருக்கும் அன்பை வெளிப்படுத்தினார் என்று நமக்குத் தெரியும்.

அவருடைய அரசில் வாழும் நாமும் நமது சிந்தனையிலும், சொல்லிலும் செயலிலும் இறை அரசை வாழ வேண்டும்.

நமக்குள்  இருக்கும் இறை அன்பையும், பிறரன்பையும்  நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் வாழும்போது நாம் இறையரசைச் சேர்ந்தவர்கள். 

கடவுளின் அரசு என்று சொன்ன உடனேயே நமக்கு நினைவுக்கு வர வேண்டியது அன்பு மயமான வாழ்க்கை.

கடவுள் தன்னுடைய அன்பினால் உலகை படைத்து பராமரித்து வருகிறார்.

அவரது உலகில் வாழும் நாம் அவரது அன்பை வாழ வேண்டும்.

நமது புனிதர்களின் வாழ்வு நமக்கு முன்மாதிரிகை.

அனேக புனிதர்கள் இயேசுவுக்காக தங்களது உயிரை தியாகம் செய்யும் அளவிற்கு செயலில் இறங்கினார்கள்.

அனேகர் இயேசுவின் நற்செய்தியை அறிவிப்பதற்காகவே  தங்கள் வாழ்நாள் முழுவதையும்  செலவழித்தார்கள்.

அனேகர் தங்களது செபத்தினாலும், தவத்தினாலும்  உலகம் மனம் திரும்ப உழைத்தார்கள்.

நமது பாப்பரசரசரும், ஆயர்களும், குருக்களும் இரவு பகலாய் நற்செய்தி பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

நாம் என்ன செய்கிறோம்?

புனிதர்களின் ஒவ்வொரு செயலிலும் கடவுளின் அரசு முழுமையாக இருக்கிறது.

புனிதர்கள் செய்த அளவிற்கு பெரிய பெரிய செயல்களையெல்லாம் சாதாரணமான நம்மால் செய்ய முடியுமா என்று கேட்கிறீர்களா?

புனித சவேரியாரைப் போலவும்,  புனித அருளானந்தரைப் போலவும் நம்மால் நாடுகள் கடந்து உழைக்க முடியுமா என்று கேட்கிறீர்களா?

கவலையே வேண்டாம்.

நம்மைப் போன்ற சாதாரண மக்களுக்காகத்தான் இயேசு கடவுளின் அரசை கடுகு மணிக்கு ஒப்பிட்டார்.

பெரிய பெரிய செயல்களில் மட்டுமல்ல, கடுகு மணிக்கு சமமான சிறிய சிறிய செயல்களிலும் கடவுளின் அரசு முழுமையாக இருக்கிறது.


நமது ஒவ்வொரு சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் 

அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும்,

அதில் கடவுளின் அரசு முழுமையாக இருக்கிறது.

நமது அயலானைச் சந்திக்கும்போது நாம் மனம் நிறைந்து சொல்லும்

"உங்களுக்கு சமாதானம்.''

"Praised be Our Lord."

போன்ற மிகச் சிறிய வாழ்த்துக்களில்  கூட கடவுளின் அரசு முழுமையாக இருக்கிறது.

இயேசு சமாதானத்தின் தேவன்.

சமாதானத்தை நமக்கு அளிக்கவே அவர் விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்தார்.

"உங்களுக்கு சமாதானம்.'' என்று நாம் கூறும் ஒவ்வொரு நேரமும் கிறிஸ்துவின் முழுமையான சமாதானத்தை நமது அயலானுக்கு  அளிக்கிறோம்.

அதாவது கிறிஸ்துவின் அரசை முழுமையாக அளிக்கிறோம்.

நாம் சந்திக்கும் ஒவ்வொரு அயலானிடமும் கிறிஸ்துவின் சமாதானத்தை அளித்துக்கொண்டிருந்தால்,

அதாவது கடவுளின் அரசை  அளித்துக்கொண்டிருந்தால்,

நாம் செய்வதும் புனித சவேரியார் செய்த அளவிற்கு சமமான நற்செய்திப் பணி தான்!

யார் யாருக்கெல்லாம் கிறிஸ்துவின் சமாதானத்தை அளிக்கின்றோமோ,

அவர்களுக்கெல்லாம் கிறிஸ்துவின் அரசைத்தான் அளிக்கின்றோம்.

அதுமட்டுமல்ல அவர்களோடு இறை அன்பிலும், பிறரன்பிலும் 
 நிலைத்திருப்போம்.


 "என் சீடன் என்பதற்காக இச் சிறியவருள் ஒருவனுக்கு ஒரே ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவனும் கைம்மாறு பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்." (மத்.10:42)

மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் போன்றவற்றை இயேசுவின்  புகழுக்காக நடத்திக் கொண்டிருக்கும் நமது துறவிகளுக்கு மட்டுமல்ல, 

இயேசுவின் சீடன் என்பதற்காக ஒரு சிறுவனுக்கு ஒரே ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவனுக்கும் நித்திய கைம்மாறு கிடைக்கும்.

நமது கன்னியர் உடல் பொருள் ஆவி அத்தனையும் அர்ப்பணித்து நடத்திவரும் மருத்துவமனையில் மட்டுமல்ல,

இயேசுவின் மகிமைக்காக கொடுக்கப்படும் ஒரு கிண்ணம் தண்ணீரிலும்  கடவுளின் அரசு முழுமையாக இருக்கிறது.

ஒரு கடுகுமணிக்குள் ஒரு பெரிய மரமே இருப்பதுபோல்,

ஒவ்வொரு சிறிய நற்செயலிலும் இறையரசு முழுமையாக இருக்கிறது.

சிறுசிறு துளிகள் ஒன்று சேர்ந்தது தான் மிகப்பெரிய கடல்.

Little drops of of water make a mighty ocean.

சிறுசிறு நற்செயல்கள் சேர்ந்ததுதான் ஒரு பெரிய வாழ்க்கை.

10,000 ரூபாய் காணிக்கை போடும் ஒரு பெரிய பணக்காரனுக்கு கிடைக்கும் அதே கைம்மாறு 

பத்து பைசா தர்மம்  செய்யும் ஏழைக்கும் கிடைக்கும்.

பத்து ஆண்டுகள் தேவ சாஸ்திரம் படித்துவிட்டு வந்து ஒரு குருவானவர் கொடுக்கும் அதே கடவுளின் அரசை,

எழுதப் படிக்கவே தெரியாத ஒரு சாதாரண கிறிஸ்தவனும் தன்னுடைய  சிறுசிறு நற்செயல்களால் கொடுக்கிறான்.

கடுகு மணி அளவிலான சிறிய சிறிய நற்செயல்களை வாழ்நாள் முழுவதும் செய்து கொண்டேயிருப்போம்.

இறையரசை எல்லோருக்கும் கொடுத்துக் 
கொண்டேயிருப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment