"என்னோடு இல்லாதவன் எனக்கு எதிராய் இருக்கிறான். என்னோடு சேகரிக்காதவன் சிதறடிக்கிறான்."
(லூக்.11:23)
அரசியலில் நடுநிலைமை கொள்கை என்ற ஒரு கொள்கை உண்டு.
இந்தியா சுதந்திரம் பெற்ற ஆரம்ப காலத்தில் இந்த கொள்கையைத்தான் பின்பற்றி வந்தது.
அந்த சமயத்தில் உலக அரங்கில் அமெரிக்கா, ரஷ்யா என்ற இரண்டு வல்லரசுகளும் இரண்டு அணிகளுக்கு தலைமை தாங்கின.
இந்தியா எந்த அணியிலும் சேராமல் நடுநிலைமை வகித்தது.
அரசியலில் இது சரியாக இருக்கலாம்.
ஆனால் ஆன்மீகத்தில் நடு நிலைமை வகிக்க முடியாது.
மனிதன் ஆன்மாவும், சரீரமும் சேர்ந்தவன்.
'இறைவனைப் போல்ஆவியாகிய ஆன்மா இறைவனோடு இணைந்து வாழ்வதற்கென்றே படைக்கப்பட்டது. அவன் நிரந்தரமான வீடு விண்ணகம்.
சடப் பொருளாகிய சரீரத்தோடு சேர்ந்து வாழ்ந்தாலும் அது சேவை செய்ய வேண்டியது இறைவனுக்கு மட்டுமே,
சரீரத்திற்கோ, உலகத்திற்கோ அல்ல.
ஆன்மா அனுபவிக்க வேண்டிய பேரின்பம் விண்ணகத்திற்கு உரியது.
சரீரம் அனுபவித்துக் கொண்டிருக்கிற சிற்றின்பம் உலகத்திற்கு உரியது.
உலக வாழ்வு, விண்ணக வாழ்வு என்ற இரண்டில் மனிதன் ஏதாவது ஒன்றுக்காகத்தான் வாழ முடியும்.
விண்ணக வாழ்வுக்காக வாழ விரும்புபவன் உலகத்திற்காக வாழ முடியாது.
உலகத்திற்காக வாழ விரும்புபவன், விண்ணகத்திற்காக
வாழ முடியாது.
"இரண்டுக்காகவும் வாழ மாட்டேன். நடு நிலைமை வகிப்பேன்" என்று கூற முடியாது.
'விண்ணிற்காக வாழ்பவன் இறைவனுக்கு மட்டுமே கீழ்ப்படிந்து வாழ வேண்டும்.
இறைவனுக்காக வாழாதவன் அவருக்கு எதிராக வாழ்கின்றான்.
இறைவனுக்காக வாழ்வது என்றால் அவரை எல்லாவற்றுக்கும் மேலாக நேசித்து அவரது கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்வது.
இறைவனுக்காக வாழ்பவன் தன்னை முழுவதும் அவருக்கு அர்ப்பணித்து விடுகிறான்.
ஒருவன் ஞானஸ்நானம் பெற்று விடுவதால் மட்டும் இறைவனுக்காக வாழ்கிறான் என்று கூற முடியாது.
ஞானஸ்நானம் பெற்ற ஒருவன் இறைவனுக்குத் தன்னை அர்ப்பணிக்காமல்,
தனக்காக மட்டுமே வாழ்ந்தால் அவன் இறைவனுக்கு எதிராக வாழ்கிறான்.
இதைத்தான் இயேசு,
"என்னோடு இல்லாதவன் எனக்கு எதிராய் இருக்கிறான்." என்கிறார்.
கோவிலுக்கு போவதால் மட்டும் இறைவனுக்காக வாழ்கிறான் என்று கூற முடியாது.
இறைவன் விருப்பப்படியே எதுவுமே செய்யாமல் இறைவன் தனக்கு ஏதாவது செய்வார் என்று தனக்காகவே கோவிலுக்கு போகிறவன் எப்படி இறைவனுக்காக வாழ்கிறான் என்று கூற முடியும்?
அப்படிப்பட்டவனைப் பொறுத்தமட்டில் இறைவன் தான் அவனுக்காக வாழ்கிறார்,
அவன் இறைவனுக்காக வாழவில்லை.
தன்னைப்பற்றி கவலைப்படாமல்
இறைவனை ஆராதிக்க வேண்டும்,
இறைவனுக்கு நன்றி கூற
வேண்டும்
இறைவன் சித்தப்படி நடக்க வேண்டும்
என்று இறைவனுக்காக மட்டும் கோவிலுக்கு போகிறவன்தான் இறைவனுக்காக வாழ்கிறான்.
தியேட்டருக்கு சினிமா பார்க்கப் போகிறவன் தியேட்டர்காரனின் நன்மைக்காக போகவில்லை.
தனது பொழுதுபோக்கிற்காக போகிறான்.
பள்ளிக்கூடத்திற்குப் படிக்கப் போகிறவன் பள்ளிக்கூட நன்மைக்காக போகவில்லை.
தனது படிப்புக்காக போகிறான்.
கடைக்குப் போகிறவன் கடைக்காரன் இலாபம் அடைவதற்காகப் போகவில்லை.
தனக்குப் பொருள் வாங்குவதற்காக போகிறான்.
அதைப்போலவே,
கோவிலுக்கு போகிறவனும் இறைவனை ஆராதிக்க வேண்டும் எந்த நோக்கோடு போகாமல்
தனக்கு ஏதாவது வரம் வாங்கி வர வேண்டும் என்ன நோக்கோடு போனால்
அவனை எப்படி இறைவனுக்காக வாழ்கிறான் என்று கூற முடியும்?
" என்ன திடீரென்று வேளாங்கண்ணிக்கு?"
"குழந்தை வரம் கேட்டு போகிறோம்.
"குடும்பத்தில் கடன் தொல்லை நீங்குவதற்காகவும், கடன் இல்லாமல் வாழ போதிய வருமானம் தருவதற்காகவும்
பதின்மூன்று செவ்வாய்க் கிழமைகள் தொடர்ந்து அந்தோணியார் கோவிலுக்கு பூசைக்கு போகிறேன்."
." இன்று Interview. அதில் வெற்றி பெறவும் தொடர்ந்து வேலை கிடைக்கவும் உதவும்படி இன்றைய திருப்பலியை ஒப்புக்கொடுக்கிறேன்."
முழுக்க முழுக்க உலகத்தனமான ஆசைகள் நிறைவேறும்படி இறைவனிடம் கேட்பது,
" நான் உலகிற்கு சேவை செய்ய எனக்கு உதவும் ஆண்டவரே" என்று ஆண்டவரிடம் கேட்பது போல் இருக்கிறது.
நம்மால் இரு எசமானர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது என்று ஆண்டவரே கூறியிருக்கிறார்.
உலகத்திற்கு ஊழியம் செய்ய விரும்பினால் இறைவனுக்கு ஊழியம் செய்க முடியாது.
முழுக்க முழுக்க நம்மை இறைவனுக்கு அர்ப்பணித்தால் தான் நாம் இறைவனுக்கு ஊழியம் செய்வதாக அர்த்தம்.
விண்ணக இராட்சியத்தை அடையும்படி உதவ ஆண்டவரிடம் கேட்பதை விட்டுவிட்டு
உலகில் நன்றாக வாழ மட்டும் உதவி கேட்பது
ஆண்டவருக்கு எதிரான எஜமானனுக்கு ஊழியம் செய்ய அவரிடமே உதவி கேட்பது போல் ஆகும்.
''எதை உண்போம், எதைக் குடிப்போம், எதை உடுப்போம் என்று கவலைப்படவேண்டாம்."
" உங்களுக்கு இவையனைத்தும் தேவை என உங்கள் வானகத் தந்தைக்குத் தெரியும்.''
", கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்: இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்."
(மத். 6:31 - 33)
" தேவைகளைப் பற்றி கவலைப்படாமல்
இறைவனுடைய ராஜ்யத்தைப் பற்றி மட்டுமே அக்கரை கொள்ளுங்கள்.
உலக தேவைகள் நீங்கள் கேட்காமலேயே பூர்த்தி செய்யப்படும், ஏனெனில் உங்களுக்கு என்ன தேவை என்று தந்தைக்குத் தெரியும்."
என்று ஆண்டவர் சொல்லுகிறார்.
அப்படியானால் உலக வசதிகளைக் கேட்டு செபிப்பது தவறா?
தவறே இல்லை,
இறை பணியைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல்
உலக தேவைகளை பற்றி மட்டுமே செபிப்பதுதான் தவறு.
" ஆண்டவரே, உமக்கு ஊழியம் புரிய உதவியாயிருக்கும் பொருட்டு எனக்கு நல்ல உடல் நலத்தை தாரும்."
"உமது ஊழியத்தில் உதவியாய் இருக்க எங்களுக்கு குழந்தை வரம் தாரும்."
"நீர் கேட்டுக்கொண்டபடி ஏழைகளுக்கு உதவ போதுமான வருமானத்தைத் தாரும்."
"மக்கள் மத்தியில் உமக்கு சேவை செய்ய எங்களுக்கு உதவியாக இருக்க ஒரு வேலையைத் தாரும்"
என்று இறை ஊழியத்திற்கு முதலிடம் கொடுத்து
அதற்கு உதவியாக இருக்க உலக தேவைகளை பூர்த்தி செய்ய ஆண்டவரிடம் கேட்டால்
உலக சம்பந்தப்பட்ட வேலைகளையும் முழுக்க முழுக்க ஆன்மீக மயமாக்கி விடலாமே!
. இந்த உதவிகளைக் கேட்பதற்கு உள்ளூர் கோயிலுக்கு ஒழுங்காக போனால் போதுமே!
நம் ஊரில் இருக்கும் அதே ஆண்டவர் தான் வேளாங்கண்ணியிலும் இருக்கிறார்!
நாம் ஆண்டவரை விட வேளாங்கண்ணிக்குச் செல்லவிருக்கும் உல்லாசப் பயணத்திற்கு தானே முக்கியத்துவம் கொடுக்கிறோம்!
நம் ஊரில் இருக்கும் அதே அந்தோணியார்தானே உவரியிலும் இருக்கிறார்.
நாம் முக்கியத்துவம் கொடுப்பது அந்தோணியாருக்கா அல்லது கடலுக்கும், மீனுக்குமா?
நாம் உலகில் வாழ்பவர்கள். ஆனால் உலகிற்காக வாழவில்லை.
விண்ணக வாழ்விற்காகத்தான் உலகில் வாழ்கிறோம்.
நமது ஆசைகளிலும், செயல்பாடுகளிலும் முதலிடம் கொடுக்க வேண்டியது விண்ணக வாழ்வுக்கே.
உலகில் வாழ்வது கடவுளுக்காக,
உலக வாழ்க்கையை கடவுளுக்காகப் பயன்படுத்த வேண்டும்.
கடவுளுக்காகப் பயன்படுத்துவதின் மூலம் அதை ஆன்மீக மயமாக்கி விட வேண்டும்.
உலகில் பயணம் செய்யும்போது இது ஓய்வு எடுத்து பயணத்தை தொடரலாம்.
ஆனால் விண்ணக பயணத்தின்போது ஓய்வு எடுக்க முடியாது.
ஒவ்வொரு வினாடியும் நாம் முன்னேறிக்கொண்டே இருப்போம்,
ஓய்வு எடுத்தால் பின் நோக்கி செல்வோம்.
முன்னேறாமலும், பின் நோக்கி செல்லாமலும் இருக்க முடியாது.
ஆகவே ஒவ்வொரு வினாடியையும் வீணாக்காமல் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும்.
விண்ணகம் சென்ற பிறகே ஓய்வு.
ஆண்டவருக்காக வாழ்வோம்.
ஆண்டவருக்காக மட்டும் வாழ்வோம்.
ஓய்வு எடுக்காமல், வாழ்ந்து கொண்டேயிருப்போம்.
(தொடரும்)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment