Sunday, October 24, 2021

"வேலை செய்ய ஆறு நாள் உண்டே அந்நாட்களில் வந்து குணம்பெற்றுப் போங்கள். ஓய்வுநாளில் ஆகாது" என்றான்.( லூக்.13:14)

"வேலை செய்ய ஆறு நாள் உண்டே அந்நாட்களில் வந்து குணம்பெற்றுப் போங்கள். ஓய்வுநாளில் ஆகாது" என்றான்.
( லூக்.13:14)

ஒரு ஓய்வுநாளில் இயேசு செபக்கூடம் ஒன்றில் போதித்துக்கொண்டிருந்தார்

பதினெட்டு ஆண்டுகளாகப் பேயால் நோயுற்றிருந்த ஒரு பெண்ணை அவர் ஓய்வு நாளில் குணமாக்கினார்.

இயேசு ஓய்வுநாளில் குணமாக்கியதைப் பார்த்து, செபக்கூடத்தலைவன் கோபவெறி கொண்டு, கூட்டத்தை நோக்கி,

 "வேலை செய்ய ஆறு நாள் உண்டே அந்நாட்களில் வந்து குணம்பெற்றுப் போங்கள். ஓய்வுநாளில் ஆகாது" என்றான்.

சட்டத்தின் நோக்கத்தை விட, எழுத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த ஆசாமிகளில் ஒருவன் அந்த செபக் கூடத் தலைவன்.

ஓய்வுநாளில் வேலை செய்ய கூடாது என்பது சட்டம்.

அதை இறை பணிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது சட்டத்தின் நோக்கம்.

அன்று என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதற்கு யூத குருக்கள் ஒரு பட்டியல் வைத்திருந்தார்கள்.

அவர்களுடைய பட்டியலின்படி ஓய்வுநாளில் குணப்படுத்துவது சட்டப்படி குற்றம்.

ஆனால் இயேசு ஓய்வு நாளிலும் நோயாளிகளை குணமாக்கினார்.

எழுத்துப்படி பார்த்தால் அவர்கள் வைத்திருந்த பட்டியலின் அடிப்படையில் அவர்களுக்கு அது ஒரு குற்றம்.

ஆனால் நோயாளியை குணமாக்குவது நாம் இறைவனுக்கு செய்யும் சேவை. ஏனெனில் அவன் இறைவனின் பிள்ளை.

சட்டத்தின் நோக்கப்படி பார்த்தால் இறைவனுக்கு செய்யப்படும் சேவை குற்றமற்றது.

இயேசு இறைமகன் என்ற விசுவாசம் நமக்கு இருக்கிறது. ஆனால் யூத மத குருக்களிடம்  இல்லை.

ஆகவே அவர்கள் அவரை சாதாரண மனிதன் போலவே மதிப்பீடு  செய்தார்கள்.

இயேசு ஓய்வு நாள்களில் அயலானுக்கு உதவி செய்வதில் தவறு இல்லை என்பதை சுட்டிக் காண்பித்தார்.

 சட்டத்தின் நோக்கத்தைவிட  எழுத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறவன் இறைவனை விட சட்டத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறான்.

நம்மை விக்கிரக ஆராதனைக்காரர்கள் என்று குற்றம் சாட்டி விட்டு நம்மை விட்டு   பிரிந்து சென்ற பிரிவினை சகோதரர்கள்

தங்கள் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாகக் காட்டும் பைபிள் வசனம்: 


''நாமே உன் கடவுள்.

நமக்கு முன்பாக வேறே தேவர்களை நீ கொண்டிராதிருப்பாயாக.


4 மேலே வானத்திலும் கீழே பூமியிலும் பூமியின் கீழுள்ள தண்ணீரிலும் உள்ளவைகளுக்கு ஒப்பான

 ஓர் உருவத்தையேனும் யாதொரு விக்கிரகத்தையேனும் உனக்கு நீ உண்டாக்கிக் கொள்ள வேண்டாம்.

5 அவைகளை வணங்கித் தொழவும் வேண்டாம்."
(யாத்.20:2-4)

அவர்கள் பிடித்துக் கொண்டிருக்கும் எழுத்துக்கள்:

" உருவத்தையேனும் யாதொரு விக்கிரகத்தையேனும் உனக்கு நீ உண்டாக்கிக் கொள்ள வேண்டாம்."


நோக்கத்தை குறிக்கும் வசன வார்த்தைகள்:

''நாமே உன் கடவுள்.

நமக்கு முன்பாக வேறே தேவர்களை நீ கொண்டிராதிருப்பாயாக.

ஓர் உருவத்தையேனும் யாதொரு விக்கிரகத்தையேனும் உனக்கு நீ உண்டாக்கிக் கொள்ள வேண்டாம்.

அவைகளை வணங்கித் தொழவும் வேண்டாம்."

அதாவது :

"நான் மட்டுமே நீ வணங்கி தொழவேண்டிய கடவுள்.

வணங்கி தொழுவதற்காக
உருவத்தையேனும், விக்கிரகத்தையேனும் உனக்கு நீ உண்டாக்கிக் கொள்ள வேண்டாம்."

அதாவது,

"என்னை வணங்கி தொழுவதற்கு பதிலாக, வணங்கவோ,  தொழவோ உருவத்தையோ விக்கிரகத்தையோ உண்டாக்க வேண்டாம்."

அதாவது,

எனக்கு பதிலாக விக்கிரகத்தை வணங்க வேண்டாம்.

அதாவது,

என்னை உனது கடவுளாக ஏற்றுக் கொள்வதற்குப் பதில் விக்கிரகத்தை கடவுளாக ஏற்றுக்கொள்ள வேண்டாம்.

"உண்மையான கடவுளை தொழுவதற்குப் பதில்,
தொழுவதற்குக்கென்று விக்கிரகத்தை உண்டாக்க வேண்டாம்." என்பதுதான் வசனங்களின் உண்மையான பொருள்.

"(எந்த நோக்கத்திற்காகவும்)  சுரு சுரூபத்தை உண்டாக்கக் கூடாது."
என்பது பொருளல்ல.

உண்மையான கடவுளை விட்டுவிட்டு ஒரு சிலையை கடவுள் என்று நினைத்து தொழுவதுதான் விக்கிரக ஆராதனை.

நாம் வைத்திருப்பது சுரூபங்கள், சிலைகள் அல்ல.

நாம் இயேசுவை கடவுளாக ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக அவரது சுருபத்தைக் கடவுளாக ஏற்றுக்கொள்ளவில்லை.

நமது பிள்ளையின் புகைப்படத்தை நமது பிள்ளையாக ஏற்றுக் கொள்கிறோமா?

புகைப்படம் புகைப்படம் தான்.

 பிள்ளை ஆகாது.

 அதுபோலவே சுரூபம் சுரூபம்தான், இயேசு ஆகாது.

நாம் புனிதர்களை வணங்குகிறோம், அவர்களுடைய சுருபங்களை அல்ல.

 இது நமக்கு தெரியும்.

நாம் சு௹பத்தை  இயேசுவாகவோ, புனிதராகவோ ஏற்றுக்கொள்வது போல் பேசுகின்றார்கள்.

சுரூபங்கள்  அடையாளங்கள் மட்டுமே.

உண்மை தெரியாமலா பேசுகிறார்கள்?

உண்மை தெரிந்தும் நம் மேல் குற்றம் சாட்டுவதற்காகவே அவ்வாறு பேசுகிறார்கள்.

தெரிந்தும் தெரியாதது போல் நடிப்பது தான் உலக மகா நடிப்பு!

ஒவ்வொரு பைபிள் வசனமும் எழுத்துக்களால் ஆனது, பொருளுடையது.

வசனத்தை வாசிக்கும் போது நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது பொருளையே, எழுத்துக்களை அல்ல.

எழுத்துக்கள் பொருள் ஏறிவந்த வாகனமே.

நமது நண்பர் காரில் ஏறி வந்தால் நாம் உபசரிக்க வேண்டியது நண்பரையே,  காரை அல்ல.


" கடவுள் தாம் ஏழாம் நாளிற்கு முன் செய்த வேலைகளையெல்லாம் முடித்து விட்டு ஏழாம் நாள் ஓய்வு எடுத்தார்."

"வாரத்தின் ஏழாம் நாள் இறைவனுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட நாள். ஓய்வுநாளை இறைவனுக்காக மட்டுமே செலவழிக்க வேண்டும்." என்பது மட்டுமே இந்த வசனத்தின் பொருள்.

கடவுள் ஓய்வு எடுத்தார் என்பது பொருளல்ல. ஏனெனில் கடவுளால் ஓய்வு எடுக்க முடியாது.

இறைவனுடைய சட்டங்களையோ, 
இறை வாக்கையோ இறைவனுடைய கண் நோக்கிலிருந்து  பார்க்க வேண்டுமே தவிர,

 நமது மொழி அகராதியின் கண் 
நோக்கிலிருந்து அல்ல..

இறைவனுடைய பண்புகளுக்கு எதிராக அவரது சட்டங்களுக்கு பொருள் கொள்ளக்கூடாது.

இறைவனும் தன்னுடைய அன்பு கண்ணால்தான் எல்லாவற்றையும் நோக்குகிறார்.

நாமும் அப்படியே செய்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment