"அவருடைய பேச்சில் குற்றம் கண்டுபிடிக்கும்படி சூழ்ச்சியாகக் கேள்விகள் பல கேட்கலாயினர்."
(லூக்.11:54)
கதாநாயகனிடமிருந்து மட்டுமல்ல வில்லனிடமிருந்து கூட நாம் பாடங்களை கற்றுக்கொள்ளலாம்.
வாழ்க்கையில் எப்படி செயல்பட வேண்டும் என்ற பாடத்தை கதாநாயகனிடமிருந்து கற்றுக்கொண்டால்,
எப்படி செயல்படக்கூடாது என்பதை வில்லனிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்.
எப்படி செயல்படக்கூடாது என்பதை
என்பதை கற்றுக்கொண்டாலே
எப்படி செயல்பட வேண்டும் என்பதும் புரியும்.
கிறிஸ்துவின் உலக வாழ்வில் கதாநாயகன் அவரே.
அவரது வில்லன்களாக செயல்படுபவர்கள் பரிசேயர்களும், சதுசேயர்களும், மறைநூல் வல்லுனர்களும்.
சாதாரண மக்கள் இயேசுவின் நற்செய்தியை கேட்பதற்கு என்று அவரை பின் தொடர்ந்து சென்ற போதெல்லாம்,
பரிசேயர்களும், சதுசேயர்களும், மறைநூல் வல்லுனர்களும் அவரது பேச்சில் குறை கண்டு பிடிப்பதற்காகவே அவரை பின்தொடர்ந்து சென்றனர்.
அவர்களது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் தீயவர்களாக இருந்தாலும்
தீமையில் இருந்தும் நன்மையை வரவழைக்கக் கூடிய இறைவன் இயேசு,
அவர்களது செயல்களை உலக மக்களின் மீட்புக்காக பயன்படுத்திக் கொண்டார்.
பாடுகள் பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, மரணம் அடைந்து அடைந்து பாவிகளை மீட்பதற்காக இயேசு உலகிற்கு வந்தார்.
ஒருவகையில் இயேசு பாடுகள் படவும், சிலுவையில் அறையப்படவும், மரணிக்கவும் உதவியவர்கள் இந்த வில்லன்கள் தான்!
ஆக பரிசேயர்களிடமிருந்து மிக முக்கியமான ஒரு பாடத்தை கற்றுக்கொள்கிறோம்.
தீமையால் நன்மையை வெல்ல முடியாது.
அது தன்னை அறியாமலேயே இறுதியில் நன்மை வெற்றி பெற உதவிகரமாகவே இருக்கும்.
"தந்தையே, இவர்களை மன்னியும்: ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை"(லூக். 23:34)
இவ்வார்த்தைகளை சொன்னவர் இறைமகன், இயேசு கிறிஸ்து.
இயேசு வெறுமனே ஒப்புக்காக வார்த்தைகளை சொல்லியிருக்க மாட்டார்.
இந்த செபத்தைச் சொன்ன இறைமகனும் தந்தையும் ஒரே கடவுள்தான்.
தந்தைக்கும் மகனுக்கும் ஒரே சித்தம், ஒரே வல்லமை, ஒரே
தேவசுபாவம் என்று நமக்குத் தெரியும்.
ஆக இயேசு தன்னை கொன்றவர்களை மன்னிக்கும்படி விரும்பியது தந்தையின் விருப்பமும்தான்.
இயேசுவின் ஒவ்வொரு வார்த்தையும் அவரது உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வருபவை.
அவர் மனிதர் அனைவரின் மீட்புக்காகவும்தான் மரித்தார்.
அவரைக் கொன்றவர்களும் அனைவரில் அடங்குவர்.
ஆகவே இயேசுவின் விசேசமாக அருள் வளர்த்தால்
அவர்கள் தாங்கள் மரணிக்கும் முன்
தங்களது சகல பாவங்களுக்காகவும் மனஸ்தாபப்பட்டு
மன்னிப்பு பெற்றிருப்பார்கள் என்றும் நம்பலாம்.
மற்றவர்களை தீர்ப்பிட தமக்கு அதிகாரம் இல்லை. ஆனால் மற்றவர்களைப் பற்றி நல்லதாக நினைப்பது தவறு இல்லை.
நாமும் நமது பாவங்களால் இயேசுவின் மரணத்திற்குக் காரணமானவர்களே.
நாமும் ஒவ்வொரு முறை பாவம் செய்யும் போதும் பாவசங்கீர்த்தனம் மூலம் மன்னிப்பு பெற்றுக் கொண்டு தானே இருக்கிறோம்!
ஆதாம் செய்த பாவம் இறைமகனேயே உலக மீட்பராக உலகத்திற்கு வர செய்ததால்
அந்தப் பாவத்தையே தாய்த் திருச்சபை தனது ஈஸ்டர் வழிபாட்டின்போது பாக்கியமான பாவம் என்று அழைக்கிறது.
"ஓ ஆதாமின் பாவமே!
உன்னை அழிக்க கிறிஸ்துவின் மரணம் திண்ணமாய்த் தேவைப்பட்டது!
இத்துணை மாண்புமிக்க மீட்பரை அடையப் பேறுபெற்றதால்
பாக்கியமான குற்றமே!"
பாவம் ஒரு தீமை.
ஆனாலும் அதன் விளைவாகத்தான் நாம் இன்று இறை மகனையே உணவாக உட்கொண்டுக் கொண்டிருக்கிறோம்!
தீமையிலிருந்தும் நன்மையை வரவழைக்க இறைவனால் முடியும்.
(தொடரும்)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment