Saturday, October 9, 2021

என்னோடு சேகரிக்காதவன் சிதறடிக்கிறான்."(லூக்.11:23)

என்னோடு சேகரிக்காதவன் சிதறடிக்கிறான்."
(லூக்.11:23) 


ஒப்புமைக்காக ஒரு ரோஜா மலரை எடுத்துக்கொள்வோம்.

 மலர் அழகாக இருக்கிறது, தன்னிலிருந்து அருகில் வருவோர்  மூக்கிற்கு இனிய வாசனையை வீசிக்கொண்டே இருக்கிறது.

மலர் இருக்கும்  இடத்தைச் சுற்றியுள்ளோர் அதன் வாசனையை அனுபவிக்காமல் இருக்க முடியாது.

மலர் வாடி விட்டால் அதன் அழகை ரசித்தவர்கள் வருத்தப்படாமல் இருக்க முடியாது.

சுருக்கமாகச் சொன்னால் ரோஜா மலர்  தன்னைச் சுற்றி உள்ளவர்களைப் பாதிக்கிறது,

 ஒன்று சந்தோஷப் பட வைக்கிறது, அல்லது வருத்தப்பட வைக்கிறது.


ரோஜா  மலரைப் போலவே நாமும் ஏதாவது ஒருவிதத்தில் நம்மைச் சுற்றி உள்ளவர்களை பாதிக்காமல் இருக்க முடியாது.

நம்மால் மற்றவர்கள் சந்தோஷப்படலாம் அல்லது வருத்தப் படலாம்.

நாம் நல்லவர்களாக இருந்தால் நமது பாதிப்பினால் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நல்லவர்களாக மாறுவார்கள்.

 நாம் கெட்டவர்களாக இருந்தால் நம்மை சுற்றியுள்ளவர்கள் நம்மைப் போல கெட்டவர்களாக மாறுவார்கள். 

நாம் மற்றவர்களுக்கு 
நல்மாதிரிகையாகவோ,
துர்மாதிரிகையாகவோ இருப்போம்.

நம்மால் மற்றவர்களை பாதிக்காமல் இருக்க முடியாது.
நாம் மற்றவர்களை நல்ல விதத்தில்  பாதிக்கும்படி நடந்து கொள்ள வேண்டும்.

நம் ஒவ்வொருவருக்கும் நற்செய்தியை பரப்பும் கடமை உண்டு.

நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் நற்செய்தியை நமது வாய்மொழி மூலமாகவோ 

அல்லது 

நமது முன்மாதிரியான கிறிஸ்தவ வாழ்வின் மூலமோ பரப்பலாம்.

நாம் நற்செய்தி படி நடந்தால் நம்மை சுற்றியுள்ளவர்களும் நற்செய்தி படி நடக்க நமது வாழ்க்கையினால் தூண்டப்படுவார்கள்.

நற்செய்திக்கு எதிராக நடந்தால் நம்மை சுற்றியுள்ளவர்களும் அவ்வாறு நடக்க தூண்டப்படுவார்கள்.

நல்ல கிறிஸ்தவர்களாக வாழ்ந்தால் நாம் கிறிஸ்துவுக்காக மக்களை சேகரிப்போம்.

நாம் கிறிஸ்தவ நெறிப்படி வாழா விட்டால் கிறிஸ்துவை தேடி வந்தவர்களையும் நமது துர்மாதிகையான வாழ்க்கையால்  சிதறடிப்போம்.

ஆகையினால்தான் நம் ஆண்டவர் சொன்னார்,

"என்னோடு சேகரிக்காதவன் சிதறடிக்கிறான்."

யாரும் சிதறடிக்க வேண்டும் என்ற   நோக்கத்தோடு சிதறடிப்பதில்லை.

 ஆனால் சேகரிக்காமல் இருப்பதே  சிதரடிப்பதற்குச் சமம்.

ஒருவன் முன்மாதிரிகையாக வாழும்போது ஆண்டவருக்கு ஆட்களை சேகரிக்கிறான். 

ஆனால் முன்மாதிரிகையாக வாழாவிட்டால், அவனைப் பார்த்து யாரும்  ஆண்டவரிடம் வரமாட்டார்கள், அதாவது சிதறடிக்கப்படுவார்கள்.

நாம் எப்படி வாழ்ந்தாலும் நமது வாழ்வு நாம் வாழும் சமூகத்தில் பிரதிபலிக்கும்.

ஒரு மாணவன் இரண்டு நாட்களாக பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை.

பக்கத்துவீட்டு பையனிடம் விசாரித்தபோது,

"சார் அவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறான்." 

என்றான்.

மறுநாள் சொன்ன பையனும் பள்ளிக்கு வரவில்லை.

 வீட்டில் போய் பார்க்க பார்த்தால் அவனும் விளையாடிக் கொண்டிருந்தான்.

முதலில் விளையாடிய பையனின் பாதிப்பு பக்கத்து வீட்டு பையனையும் விளையாட வைத்துவிட்டது.

மோட்சத்திற்கு போனாலும், நரகத்திற்குப் போனாலும், யாரும் தனியாக போக மாட்டார்கள் என்று சொல்வதுண்டு.

தங்கள் வாழ்க்கையினால் பாதிக்கப்பட்டோரையும் அழைத்துக்கொண்டுதான் போவார்கள்.

"ஏண்டா போன ஞாயிறு பூசைக்கு வரவில்லை?"

"அப்பா வரவில்லை.'' 

"நான் அப்பா வந்தாரா என்று கேட்கவில்லை. நீ ஏன் வரவில்லை?'

"அதுதான் சார் காரணம்.

அப்பா வராததால் நானும் வரவில்லை."

பிள்ளைகள் நல்லவர்களாக வாழ்வதற்கும், கெட்டவர்களாக வாழ்வதற்கும் அவர்களுடைய பெற்றோர்தான் காரணம்.

பெற்றோர் பிள்ளைகளைக் கெடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை, ஆனாலும் அவர்கள் நல்லவர்களாக வாழாவிட்டால் பிள்ளைகளை கெடுக்கிறார்கள்.

நாம் நற்செய்தியின்படி வாழ்ந்தால் ஆண்டவருக்கு ஆட்களை சேகரிக்கிறோம்.

 நற்செய்தியின்படி வாழா விட்டால் ஆண்டவருக்கு ஆட்கள் வராதபடி சிதறடிக்கிறோம்

இதை உணர்ந்து நற்செய்தியின் வழி வாழ்ந்து, ஆன்மாக்களை ஆண்டவர்பால் இழுப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment