" உங்களுக்குச் செவிசாய்ப்பவன் எனக்குச் செவிசாய்க்கிறான். உங்களைப் புறக்கணிப்பவன் என்னைப் புறக்கணிக்கிறான்."
(லூக்.10:16)
இயேசு நற்செய்தி அறிவிக்க அனுப்பிய 72 சீடர்களைப் பார்த்து கூறிய வார்த்தைகள் இவை.
இவை நற்செய்தி அறிவித்துக் கொண்டிருக்கும் இயேசுவின் அனைத்து சீடர்களுக்கும் , பொருந்தும்.
இயேசு பிறந்து,
வாழ்ந்து,
நற்செய்தி அறிவித்து,
பாடுகள் பட்டு,
'மரித்து,
உயிர்த்து விண்ணகம் எய்திவிட்டார்.
இனி நேரடியாக உலகிற்கு வந்து நற்செய்தியை அறிவிக்க மாட்டார்.
அதற்கான முழுப் பொறுப்பையும், அதிகாரத்தையும் அவர் தன்னுடைய திருச்சபைக்கும், அதில் அங்கம் வகிக்கும் அவருடைய சீடர்களுக்குக் கொடுத்திருக்கிறார்.
பரிசுத்த பாப்பரசரும், ஆயர்களும், குருக்களும் இணைந்து இயேசுவின் பிரதிநிதிகளாய் செயல்பட்டு,
அவர் அன்று செய்த நற்செய்திப் பணியை இன்று செய்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுடைய குரலுக்கு செவிமடுத்து,
அவர்கள் சொல்வதை விசுவாசத்தோடு கேட்கும் பொழுது,
நாம் இயேசுவின் வார்த்தைகளையே கேட்கிறோம்.
அவர்கள் சொன்னபடி நடக்கும்போது நாம் இயேசுவுக்கே கீழ்ப்படுகிறோம்.
அவர்கள் சொல்வதை மறுக்கும்போது இயேசுவையே மறுக்கிறோம்.
நம்மில் அனேகருக்கு பைபிளின் முக்கியத்துவம் புரிகிறது,
ஆனால் அதற்கு விளக்கம் கொடுக்கக்கூடிய அதிகாரம் கத்தோலிக்க திருச்சபைக்கு மட்டுமே உள்ளது என்பது புரியவில்லை.
அவர்களுக்காகத்தான் இயேசு சொல்கிறார்,
"உங்களுக்குச் செவிசாய்ப்பவன் எனக்குச் செவிசாய்க்கிறான். உங்களைப் புறக்கணிப்பவன் என்னைப் புறக்கணிக்கிறான்."
இயேசு விண்ணகம் சென்று விட்டாலும் இன்றும் தான் ஏற்படுத்திய கத்தோலிக்க திருச்சபையுடன் தான் இருக்கிறார்.
திருச்சபையை வழி நடத்துபவர் அவரே.
ஞாயிற்றுக்கிழமை திருப்பலிக்கு செல்லும் நமக்கு
இயேசுவை பலியாக ஒப்பு கொடுப்பதுடன்
அவரது வார்த்தைகளைக் கேட்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா?
நற்செய்தி வாசகங்களையும், அவற்றுக்குக் குருவானவர் பிரசங்கத்தில் கொடுக்கிற விளக்கத்தையும் காது கொடுத்து கேட்கின்றோமா?
அல்லது வேறு வழி இல்லாமல் உட்கார்ந்திருக்கிறோமா?
திருப்பலியின்போது கேட்ட இறைவாக்கின்படி அந்த வாரம் முழுவதும் வாழ்கின்றோமா?
அல்லது கேட்டதை கோவிலிலேயே விட்டுவிட்டு வந்து விடுகிறோமா?
சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்து உடலோடு சேர்ந்தால்தான் சாப்பாடு பயனுள்ளது.
ஒரு வழியே உள்ளே சென்று,
உடலோடு கலக்காமல் மறுவழியே வெளியே வந்துவிட்டால் சாப்பிட்டு என்ன பயன்?
இயேசுவின் பிரதிநிதியாகிய குருவானவர் கொடுக்கின்ற நற்செய்தி விளக்கத்தின்படி வாழாவிட்டால் அந்த வாரம் waste!
ஒரு உண்மையை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
நாம் இவ்வுலகத்தில் வாழ்வதே இறைவனுக்காக மட்டும்தான்.
இறைவன் அளித்த நற்செய்தியை நன்றாக அறிந்திருந்தால் தான் அதன்படி அவருக்காக வாழ முடியும்.
இறை மகன் இயேசு விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்ததே நமக்கு அவருடைய நற்செய்தியை வார்த்தையின் மூலமும், வாழ்க்கையின் மூலமும் அறிவிப்பதற்காகத் தான்.
நற்செய்தியை அறிந்த ஒவ்வொருவருக்கும் அதை மற்றவர்களுக்கு அளிக்க கடமை உண்டு.
குறிப்பாக நமது குருக்கள் அதற்கென்றே இறைவனால் அழைக்கப்பட்டு அதற்காக பயிற்சியும் பெற்றிருக்கிறார்கள்.
குருக்கள் இயேசுவின் பிரதிநிதிகள்.
குருக்கள் யாருடைய பாவங்களை மன்னிக்கிறார்களோ அவர்களுடைய பாவங்களை இயேசுவும் மன்னிக்கிறார்.
குருக்கள் அப்பத்தை எடுத்து
''இது என் சரீரம்" என்று சொல்லும்போது அது கிறிஸ்துவாக மாறிவிடுகிறது.
குருக்களை நாம் ஏற்றுக் கொள்ளாவிட்டால் இறைவனையே ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆகவே குருக்களை நமது ஆன்மீக வழிகாட்டிகளாக ஏற்று, அவர்கள் காட்டும் வழியில் நடந்து விண்ணகம் செல்வோம்.
லூர்து செல்வம்.
Dear Brother I want to discuss with you. I humbly request you to send your e-mail i-d. Thanks a lot.
ReplyDelete