''விண்ணகத்தில் இருக்கும் எங்கள் தந்தையே!"
விண்ணகத்தில் இருக்கும் தனது தந்தையை
"எங்கள் தந்தையே!" என்று அழைக்கும்படி நமக்கு கற்றுத் தந்தவர் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.
இயேசுவின் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஒரு நற்செய்தி இருக்கும்.
"எங்கள் தந்தையே" என்ற வார்த்தைகளில் பைபிள் முழுவதுமே அடங்கியிருக்கிறது.
படைப்பு, பாவம், மீட்பு, விண்ணகம் இதுதான் பைபிள் தரும் செய்தி.
கடவுள் மனிதனைப் படைத்தார்.
மனிதன் பாவம் செய்தான்.
இறைமகன் மனிதனாய்ப் பிறந்து
சிலுவையில் தன்னையே பலியாக்கி, மனிதனை பாவத்திலிருந்து மீட்டார்.
மீட்பின் பயனாய் நாம் விண்ணக வாழ்வு பெறுவோம்.
இயேசு தந்தை இறைவன் பெற்ற மகன். (Begotten Son)
தந்தையோடு ஒரே கடவுளாக இருப்பதால் விண்ணக வாழ்வு அவருக்கு உரியது.
நாம் கடவுளால் படைக்கப்பட்டவர்கள், பெறப்பட்டவர்கள் அல்ல.
பிள்ளைகளுக்குரிய எந்த உரிமையையும் நம்மால் கேட்க முடியாது.
ஆனால் கடவுள் நாம் கேட்காமலேயே மகனுக்கு உரிய விண்ணக உரிமையை நமக்கும் தர விரும்புகிறார்.
ஆகவே பெறப்படாத நம்மை தத்து பிள்ளைகளாக அவராகவே மனமுவந்து ஏற்றுக் கொள்கிறார்.
ஒரே கடவுள் என்பதால் தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவிக்கும் ஒரே விருப்பம் தான்.
கடவுள் நம்மை படைக்கும் போதே நம்மை பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டு விண்ணக வாழ்வதற்காகவே படைத்தார்.
ஆனால் நாம் பாவம் செய்து பிள்ளைகளுக்கான உரிமையையும்,
விண்ணக வாழ்வுக்கான உரிமையையும் நாமாகவே முறித்துக்கொண்டோம்.
ஆனால் கடவுள் மாறாதவர்.
ஆகவே அவரது நித்திய கால விருப்பத்தில் எந்த மாற்றமும் இல்லை.
ஆகவே நமது பாவங்களுக்காக பரிகாரம் செய்து,
நம்மை பாவத்திலிருந்து மீட்டு,
அதன் விளைவாக
விண்ணக வாழ்வுக்கான உரிமையை நாம் மீண்டும் பெற நித்திய காலமாக விரும்புகிறார்.
அதற்காகவே இறைமகன் மனிதன் ஆனார்.
அவரது நித்திய கால விருப்பப்படி நாம் தந்தை இறைவனின் பிள்ளைகள், இறைமகனின் சகோதரர்கள்.
நாமாக முறித்துக்கொண்ட சகோதர உறவை நாம் திரும்பவும் பெற வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டி,
அதற்கான முயற்சியில் நாம் இறங்குவதற்காக,
அதாவது,
நாம் பாவத்திலிருந்து மீள அவரது மீட்புப் பணியில் முழுமையாக ஒத்துழைப்பதற்காக
தனது தந்தையை
''எங்கள் தந்தையே" என்று அழைக்கச் சொன்னார்.
"எங்கள் " என்ற வார்த்தையில்
மனுக்குலம் முழுவதும் அடங்கியிருக்கிறோம்.
"தந்தையே" என்ற வார்த்தையின் மூலம், தந்தை இறைவனை நமது தந்தையாகவும்,
அவரது மகனாகிய இயேசுவை நமது சகோதரராகவும் ஏற்றுக் கொள்கிறோம்.
நாமே முறித்துக்கொண்ட சகோதர உறவை மீண்டும் பெற நமக்கு உள்ள ஆசையையும் தந்தையிடம் தெரியப்படுத்துகிறோம்.
இதையே கொஞ்சம் விரிவாகச் சொல்ல வேண்டுமென்றால்,
"இறைவா, மனுக்குல மக்களாகிய எங்கள் அனைவரையும் உமது தத்துப் பிள்ளைகளாகப் படைத்தீர்.
நாங்கள் பாவத்தின் மூலம் உமது தத்துப் பிள்ளைகளுக்கான உறவை நாங்களே முறித்துக்கொண்டோம்.
நாங்கள் முறித்துக்கொண்ட உறவை மீண்டும் பெற,
எங்களை பாவத்திலிருந்து மீட்பதற்காக உமது திருமகன் மனித உரு எடுத்தார்.
மீட்பின் பயனாகிய பாவமன்னிப்பை நாங்கள் விரும்புகிறோம்.
நாங்கள் பாவ மன்னிப்பு பெற்று, மீட்பு அடைந்து, விண்ணகம் வந்து சேர உதவியருள உம்மை நோக்கி மன்றாடும்படி
உமது திருமகனும் எங்களது அன்பு சகோதரருமாகிய இயேசு கிறிஸ்து கற்றுத் தந்த இந்த செபத்தை செபிக்கிறோம்."
தனிப்பட்ட ஒவ்வொருவரும் இந்த செபத்தைக் சொன்னாலும்,
தனிப்பட்ட ஒவ்வொருவருக்காகச் சொல்லவில்லை.
பனுக்குல மக்கள் அனைவருக்குமாகவே சொல்கிறோம்.
மக்கள் அனைவரையும் நமது சகோதரர்களாக ஏற்றுக் கொள்கிறோம்.
இந்த செபத்தை வெறுமனே வாயிலிருந்து மட்டும் சொல்லாமல் நமது உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொன்னால்
நாம் மக்கள் அனைவரையும் உடன் பிறந்தவர்களாக ஏற்று நேசிக்க ஆரம்பித்து விடுவோம்.
நமது மனதும் நல்லதாகவும் சமாதானத்தின் உறைவிடமாகவும்
மாறிவிடும்.
கர்த்தர் கற்பித்த செபத்தை மனப்பாடம் ஒப்பிப்பது போல் சொல்லக்கூடாது.
ஒவ்வொரு வார்த்தையும்
உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரவேண்டும்.
ஒவ்வொரு வார்த்தையையும் பொருளுணர்ந்து சொல்ல வேண்டும்.
செபம் வார்த்தைகளில் அடங்கியிருக்கவில்லை,
இறைவனோடு நமது உள்ளம் ஒன்றித்திருப்பதில் அடங்கியிருக்கிறது.
ஒன்றிப்பின் நெருக்கத்திற்கு ஏற்ப நமது செபத்தின் சக்தி மாறும்.
நமது உள்ளம் இறைவனுடைய உள்ளத்தோடு இணைவதுதான் செபம்.
நமது உள்ளம் இறைவனுடைய உள்ளத்தோடு இணையும்போது
இறைவனது சித்தத்தை உணர்ந்து அதன்படி வாழ நமக்கு வழி பிறக்கும்.
செபத்தின்போது நாம் செய்யும் ஒவ்வொரு மன்றாட்டும் இறை உறவின்போது நாம் ஆற்ற வேண்டிய கடமைகளை நினைவூட்டுகின்றன.
ஆகவே நமது உள்ளத்தின் ஆழத்திலிருந்து கர்த்தர் கற்பித்த செபத்தைச் சொல்வது
இறைவனுடைய சித்தப்படி நல்ல கிறிஸ்தவர்களாக வாழ நமக்கு உதவும்.
நல்ல கிறிஸ்தவர்களாக வாழ்வது மட்டுமே நமக்கு விண்ணக வாழ்வை ஈட்டித்தரும்.
கர்த்தர் கற்பித்த செபத்தின் மூலம் அனைத்துலக சகோதரர்ளுக்காகவும் செபிப்போம்.
அனைவரும் விண்ணகத்தில் நமது வீட்டில் சந்திப்போம்.
லூரது செல்வம்.
No comments:
Post a Comment