" சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள். உங்களை நான் இளைப்பாற்றுவேன்."
(மத்.11:28)
"ஏங்க, ரோட்டோரத்தில் சில இடங்களில இரண்டு கற்களை நட்டு, அதன் மேல் ஒரு கல் வைத்திருப்பதைப் பார்த்திருக்கீங்களா?
ப' வை குப்புற வைத்தது மாதிரி.
என்னங்க அது?"
"அது சுமை தாங்கிக் கல்."
",ரோட்டு வழியே கனமான சுமையை சுமந்து செல்கின்றவர்கள்
சுமையோடு நடக்க கஷ்டமாக இருந்தால்
சுமையை இந்த கல்லின்மேல் இறக்கி வைத்துவிட்டு, கொஞ்சம் ஓய்வு எடுத்துவிட்டு பழையபடி சுமையை சுமந்து சொல்லலாம்."
"ஆனால் சுமையின் கனம் குறையாதே! பழையபடி அதே சுமை தானே!"
", அதற்கும் ஒரு சுமைதாங்கி இருக்கிறது.அதிலே சுமையை இறக்கி வைத்தால்
தொடர்ந்து சுமையை சுமக்க வேண்டிய அவசியமே இருக்காது சுமை காணாமல் போய்விடும்!"
"ஐய்யெய்யோ! அப்போ அதிலே யாரும் சுமையை இறக்கி வைக்க மாட்டார்கள்."
", அவசரப்படாதே.
",'சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள்.'
என்று அது அழைத்துக் கொண்டேயிருப்பது உன் காதில் விழவில்லையா?"
"இது நமது ஆண்டவரின் அழைப்பு அல்லவா! அவர் சொல்வது நமது ஆன்மா சுமந்து கொண்டிருக்கும் சுமைகளை அல்லவா?''
",ஆமா. நமது உடல் சுமக்கக்கூடிய சுமைகளை இந்த கல்லின் மேல் இறக்கி வைக்கலாம்.
ஆனால் ஆன்மா சுமக்கும் சுமைகளை ஆண்டவர் முன் தான் இறக்கி வைக்க முடியும்."
"இப்போ புரிகிறது. நீங்க சொல்வது ஆதாம் ஏவாள் நம் மீது ஏற்றி வைத்த பாவச் சுமை.''
",அவர்கள் மட்டுமா?
நாமும் நம்மீது பாவச்சுமையை ஏற்றிக் கொண்டு தானே இருக்கிறோம்.
அதை சுமந்து கொண்டு விண்ணை நோக்கி பிரயாணம் செய்ய முடியுமா?
அந்தச் சுமையை நம்மிடமிருந்து வாங்கி அழிப்பதற்காகத்தான் இயேசு விண்ணிலிருந்து மண்ணிற்கு வந்தார்.
நாம் நமது பாவச் சுமையை இறக்கி வைக்க வேண்டிய ஒரே இடம் இயேசுவின் முன்தான்.
அதற்காகத்தான் தான் விண்ணகம் எய்துமுன் நமது பாவங்களை மன்னித்து அழிக்கும் வல்லமையை தனது சீடர்களுக்குக் கொடுத்து அவர்களை உலகெங்கும் அனுப்பி வைத்தார்.
இப்போது நமது பாவச் சுமையை இறக்கி வைக்க வேண்டிய வேண்டிய இடம்
பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை இயேசுவிடமிருந்து பெற்றிருக்கும் குருக்கள்தான்.
நமது உடலில் நோயால் ஏற்படக்கூடிய வலிகளைக் கூட ஆன்மாதானே உணர்கிறது!
உடலோடு ஆன்மா இல்லாவிட்டால் அதற்கு உணர்ச்சியே இருக்காதே!"
"உடலில் வலி ஏற்பட்டால் டாக்டரிடம் போனால் அவர் ஊசி போடுவார் வலி குறையும்.
இயேசுவிடம் போனால்?"
",இயேசு கடவுள். நாம் கடவுளின் சித்தத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்கள்.
வலி நீங்க வேண்டும் என்பது இயேசுவின் சித்தமானால் அது முற்றிலுமாக நீங்கிவிடும்.
நாம் வலியை தாங்கிக் கொள்ள வேண்டும் என்பது அவரின் சித்தமானால்
அதை ஏற்றுக்கொள்வதற்கு வேண்டிய மனத்தையும்,
தாங்குவதற்கு போதிய ஆன்ம பலத்தை கொடுப்பார்.
இயேசுவின் சீடர்கள் என்ற வகையில் நாம் நமது சிலுவையைச் சுமந்து கொண்டு
அவர் பின்னால் செல்ல வேண்டும்.
அது நமது கடமை.
இயேசுவிடம் வேண்டினால் சிலுவையை சுமக்க வேண்டிய தைரியத்தை கொடுப்பார்.
உடல் வலிக்கு மட்டுமல்ல வாழ்க்கையில் ஏற்படும் மக்க கஷ்டங்களுக்கும் இது பொருந்தும்.
கஷ்டங்களை அவருக்காக தாங்கிக்கொள்ள வேண்டிய தைரியத்தை கொடுப்பார்.
அதனால்தான்
"உங்கள்மேல் என் நுகத்தை ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்.
என் நுகம் இனிது, என் சுமை எளிது."
என்று அவரே கூறியிருக்கிறார்.
நாம் சுமக்க வேண்டிய சுமையை எளிதாக்கி விடுவார்.
அவருடைய உதவி இல்லாமல் முணு முணுத்துக்கொண்டே தாங்கிய வலியை
அவர் உதவியுடன் புன்முறுவலுடன் தாங்குவோம்."
"உங்களை நான் இளைப்பாற்றுவேன் என்றால்?"
",வாழ்க்கையில் கஷ்டங்களை இயேசு ஏன் அனுமதிக்கிறார் என்பது புரியாமல்
கஷ்டங்களை கஷ்டங்களாக மட்டுமே பார்ப்பதால் சுமக்க மனதின்றி சுமக்கும் போது மனதில் சோர்வு ஏற்படுகிறது.
ஆனால் இயேசுவிடம் சென்று நமது கஷ்டங்களை நாம் கூறும்போது அவருக்காக சுமப்பதால் நமக்கு விண்ணகத்தில் காத்திருக்கும் பேரின்பத்தை புரிய வைக்கிறார்.
கஷ்டங்களால் விளையும் பேரின்பத்தை நாம் எண்ணும்போது நமது மனதில் ஆறுதல் ஏற்படுவதால் மனச் சோர்வு நீங்கி இளைப்பாற்றி கிடைக்கும்.
கஷ்டங்களை கஷ்டங்களாக மட்டும் பார்க்கும்போது சோர்வு ஏற்படும்.
கஷ்டங்களை கஷ்டங்களாகப் பார்க்காமல் பேரின்பத்திற்கான வழி என்று பார்த்தால் ஆறுதல் ஏற்படும்.
பிறக்கவிருக்கும் குழந்தையை நினைத்து பிரசவ வேதனையை பெண் தாங்கிக் கொள்கின்றாளே!
சிலுவைக்குப் பின் மகிமை என்பது புரிந்துவிட்டால் சிலுவையே இன்பம் ஆகிவிடும்."
"நம்மேல் பாவச் சுமை இருந்தால் உடனடியாக இயேசுவின் முன் இறக்கி வைப்போம்.
உடல் சம்பந்தப்பட்ட சுமைகளை இயேசுவால் அனுமதிக்கப்பட்ட சிலுவை என்று உணர்ந்து நல்ல மனதோடு சுமப்போம்.
சிலுவை மிக கனமாக இருந்தால் அதை சுமப்பதற்கு வேண்டிய வலிமையை இயேசுவிடமிருந்து கேட்டு பெற்றுக்கொள்வோம்
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment