"உண்பதற்கு முன்னால் கைகால் கழுவாததைக் கண்டு பரிசேயன் வியப்படைந்தான்."
(லூக்.11:38)
"அம்மா, பள்ளிக்கூடம் போக time ஆகிவிட்டது. சாப்பாடு ரெடியா?"
"ரெடி. சமையல் கட்ல இருக்கு. வந்து எடுத்துக்கொண்டு போ."
"Super மா. Tiffin carrier அ super ஆ தேய்ச்சிருக்கீங்க."
"சரி, சரி. புகழ்ந்தது போதும். மிச்சம் வைக்காமல் சாப்பிடு."
பள்ளிக்கூடத்தில் மத்தியானம் சாப்பாட்டு நேரத்தில் சாப்பிடுவதற்காக பாத்திரத்தை திறந்தான்.
சாப்பிட ஆரம்பித்தான். பாதி சாப்பாடு சாப்பிட்டிருக்கும் போது உள்ளேயிருந்து ஒரு பேப்பர் எட்டி பார்த்தது.
பேப்பரை வெளியே எடுத்தான்.
முந்திய நாள் தேர்வு கால அட்டவணையை எழுதி அவன் உள்ளே வைத்திருந்த பேப்பர்..
எழுதிய மை எல்லாம் சோற்றோடு கலந்துவிட்டது.
மீதி சோற்றை குப்பைத் தொட்டியில் கொட்டினான்.
பயங்கர கோபம்.
மாலையில் வீட்டில்:
"ஏம்மா, பாத்திரத்தை உள்ளுக்குள் தேய்த்து சாப்பாடு வைத்திருக்கக் கூடாதா? இன்று மத்தியானம் பட்டினி."
"ஏண்டா, என்ன ஆச்சி?"
"நேற்று நான் பாத்திரத்திற்குள் வைத்திருந்த பேப்பரோடு சாப்பாட்டையும் வைத்திருக்கிறீர்கள்.
சோறெல்லாம் ஒரே மை. எப்படிச் சாப்பிட முடியும்? குப்பைத் தொட்டியில் கொட்டினேன்."
"ஏன் பேப்பரை உள்ளே வைத்தாய்?"
"நான் வைத்தது இருக்கட்டும்.
நீங்கள் ஏன் பாத்திரத்தின் உள்ளே தேய்க்கவில்லை. சாப்பாடு வைப்பது உள்ளேயா, வெளியேயா?
'ஒய்யார கொண்டையாம், தாழம்பூவாம்,
உள்ளுக்குள் இருக்குமாம், ஈரும் பேனும் '
என்பதுபோல் இருக்கிறது.
உள்ளே சுத்தம் செய்யாமல் வெளியே சுத்தம் செய்து என்ன பயன்?"
* * * * * *
"ஹலோ, டிப்டாப்பா ட்ரஸ் அணிந்து கொண்டு எங்கே போறீங்க?"
"ஹோட்டலுக்கு.''
"ஹோட்டலுக்கா? எதுக்கு?"
"ஹோட்டலுக்கு எதுக்குப் போவாங்க? சாப்பிட."
"ஏன்? வீட்டில சாப்பாடு இல்லையா?"
"பீசா சாப்பிடனும்போலிருக்கு. வீட்டில யார் பீசா போட்டுத் தருவா?"
"பீசா வயிற்றுக்குக் கேடு விளைவிக்கும், தெரியாதா?"
"ஆனா ருசியாய் இருக்கே!"
"வயிற்றைக் கெடுக்கதான் இந்த டிப்டாப் ட்ரஸா?"
* * * * * *
நம்மில் அநேகர் வெளிப்பார்வைக்கு அழகாகவும் ஆடம்பரமாகவும் இருக்க விரும்புகிறார்கள். உடலுக்கு உள்ளே என்ன நேர்ந்தாலும் அவர்களுக்கு கவலை இல்லை. விளைவு? வியாதி, மரணம்.
இதே கொள்கையை ஆன்மீக விஷயத்திலும் பின்பற்றினால், விளைவு நித்திய மரணம்தான்.
வெளிப்பார்வைக்கு கிறிஸ்தவர்களாய் வாழ்ந்தால் மட்டும் போதாது, ஆன்மாவிலும் கிறிஸ்தவர்களால் வாழ வேண்டும்.
ஆன்மா சுத்தமாக இருக்கிறதா, அசுத்தமாக இருக்கிறதா என்பதைப்பற்றி படாமல்
வெள்ளி பார்வைக்கான சடங்குகளை பற்றி மட்டும் கவலை படுபவர்களுக்கு தான் ஆண்டவர் சொல்கிறார்:
'நீங்களோ, பரிசேயரே,
கிண்ணத்தையும் உணவுப் பாத்திரத்தையும் வெளிப்புறத்தில் தூயதாக்குகிறீர்கள்.
உங்கள் உள்ளத்திலோ கொள்ளையும் தீமையும் நிறைந்துள்ளன.
40 அறிவிலிகளே, வெளிபுறத்தை உண்டாக்கியவரே உட்புறத்தையும் உண்டாக்கினார் அன்றோ?"
கடவுள் மனிதரை ஆன்மாவோடும் சரீரத்தோடும் படைத்தார்.
ஆன்மா சரீரத்திற்காகப் படைக்கப்படவில்லை, சரிரம்தான் ஆன்மாவுக்காக படைக்கப்பட்டிருக்கிறது.
பாவமோ புண்ணியமோ செய்வது ஆன்மாதான். சரீரம் அதற்கு உதவியாக இருக்கிறது.
ஆன்மா வெளியே தெரியாது. சரீரம் மட்டும்தான் வெளியே தெரியும்.
இறைவனை வழிபடும் போது ஆன்மாவும், சரீரமும் சேர்ந்துதான் செயல்படுகின்றன.
சரீரம் சேர்ந்து இருப்பதால்தான் வழிபாட்டிற்குரிய சடங்குகள் வெளியே தெரிகின்றன.
நம்மால் சடங்குகளை மட்டும் தான் கண்ணால் பார்க்க முடியும், அதோடு செயல்படும் ஆன்மாவின் நிலையை கண்ணால் பார்க்க முடியாது.
வெளியே பார்க்க படக்கூடிய சடங்குகளும், பார்க்க முடியாத ஆன்மாவும் இணைந்தே வழிபாட்டில் செயல்பட வேண்டும்.
வழிபாடு என்று சொல்லும்போது நாம் கோவிலில் செய்யும் வழிபாட்டை மட்டும் குறிப்பிடவில்லை.
நமது வாழ்க்கையே இறைவனுக்கு நாம் செய்யும் வழிபாடுதான்.
இறைவனுக்காக,
இறைவனை நினைத்து,
இறைவனை நேசித்து,
இறைவனுக்கு சேவை செய்வதுதான் வாழ்க்கை என்னும் வழிபாடு.
உள்ளத்தில் உலகத்தையும், உலகு சம்பந்தப்பட்ட ஆசைகளையும் வைத்துக்கொண்டு,
இறைவனுக்காக வாழ்வது போல் உடலால் நடிப்பது இறைவழிபாடு அல்ல.
ஆன்மாவில் பாவச் சுமையை சுமந்து கொண்டு, அதை இறக்கி வைக்காமல்
உடலால் மட்டும் கோவிலுக்கு சென்று வருவது இறைவழிபாடு அல்ல.
கோவிலுக்குச் செல்லும்போது நமது உடையை எவ்வளவு சுத்தமாக வைத்திருக்கிறோமோ
அதேபோல நமது ஆன்மாவையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
உடையில் அழுக்கு சேர்ந்தால் அதை துவைத்து விட்டு தானே கட்டுகிறோம்?
அதேபோல ஆன்மாவில் பாவம் சேர்ந்தால் அதற்காக மனம் வருந்தி, இறைவனிடம் மன்னிப்புப் பெற்று விட்டுதான் இறைவனை வழிபட வேண்டும்.
பாவமன்னிப்பு பெறுவதும் இறை வழிபாட்டை சேர்ந்ததுதான்.
உள்ளத்தை அசுத்தமாக வைத்துக்கொண்டு
வழிபாட்டிற்கான சடங்குகளைச் செய்வது
கைகால்களை கழுவிட்டு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவை உண்பது மாதிரி.
வீட்டை வெள்ளை அடிப்பதிலும்,
Star தொங்கப் போடுவதிலும்,
குடில் கட்டுவதிலும்,
புத்தாடை அணிவதிலும்,
நடுச்சாம பூசைக்கு கோவிலுக்குச் சென்று வருவதிலும்
கிறிஸ்மஸ் கொண்டாட்டம் அடங்கி இருக்கவில்லை.
இவற்றையெல்லாம் செய்ய வேண்டும்.
ஆனால்
பாவசங்கீர்த்தனம் செய்து,
ஆன்மாவில் பாவ அழுக்கு இல்லாமல்.
இவற்றை செய்தால் தான் இயேசு பாலனுக்கு நமது வழிபாடு பிடிக்கும்.
உள்ளத்தில் தற்பெருமையோடு ஏழைகளுக்கு எவ்வளவு செய்தாலும் பயனில்லை.
இறைவன் பெயரால், அவரது புகழுக்காக ஒரு தம்ளர் தண்ணீர் கொடுத்தாலும் அதற்கு நித்திய கால பலன் உண்டு.
பிறர் நம்மை புகழவேண்டும் என்பதற்காக எப்படி வாழ்ந்தாலும் பயனில்லை.
இறைவன் நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே வாழ வேண்டும்,
மனிதர் நமது வெளி வாழ்க்கையை மட்டுமே பார்ப்பார்கள்,
ஆனால் இறைவன் நமது உள்ளத்தை மட்டுமே பார்க்கிறார்.
வெளிப்பார்வைக்கு உடலை சுத்தமாக வைத்துக் கொள்வதில் ஆன்மீகம் அடங்கியிருக்கவில்லை ஆன்மாவை சுத்தமாக வைத்துக் கொள்வதில்தான் ஆன்மீகம் அடங்கி இருக்கிறது.
வாழ்வோம்.
தூய்மையான உள்ளத்தோடு வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment