"எவன் உங்களுக்குள் முதல்வனாய் இருக்க விரும்புகிறானோ அவன் எல்லாருக்கும் ஊழியனாய் இருக்கட்டும்."(மாற்கு, 10:44)
இயேசுவின் பன்னிரண்டு சீடர்களில் இருவர், யாகப்பரும், அருளப்பரும், இயேசுவின் அரசில் மிக உயர்ந்த இரண்டு பதவிகளை அவர்களுக்கு கொடுக்கும்படி கேட்கிறார்கள்.
இயேசு அவர்களிடம்,
"நீங்கள் கேட்பது என்னவென்று உங்களுக்குத் தெரியவில்லை. "
என்கிறார்.
உண்மையிலேயே அவர்கள் கேட்பது என்னவென்று அவர்களுக்கே தெரியாது.
இயேசு இவ்வுலகில் ஒரு சுதந்திர யூத சாம்ராஜ்யத்தை அமைக்கப்போகிறார் என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருந்திருக்கலாம்.
உண்மையிலேயே மெசியா அதைத்தான் செய்யப்போகிறார் என்று அனேக யூதர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் இயேசு அமைக்கவிருந்தது யூதர்களின் அரசியல் சார்ந்த அரசை அல்ல.
இவ்வுலகில் ஆன்மீகம் சார்ந்த துன்பங்களில் அரசையும்,
மறு உலகில் நித்தின்ப பேரின்பத்தின் அரசையும்.
துன்பங்களில் அரசின் வழியாகத்தான் பேரின்ப அரசுக்குள் போக முடியும்.
' அதனால்தான் என்னுடைய துன்பங்களில் உங்களால் பங்கு கொள்ள முடியுமா என்று கேட்கிறார்,
இவ்வுலகில் இயேசுவின் துன்பங்களில் பங்கு கொண்டால்தான் மறுவுலகில் அவர்கள் விண்ணக சாம்ராச்சியத்திகுள் நுழைய முடியும்.
அவர்கள் துன்பங்களில் பங்கு கொள்ள சம்மதித்து விட்டார்கள்.
ஆனால் இயேசு,
"எனது வலப்பக்கமோ இடப்பக்கமோ அமர அருள்வது என்னுடையதன்று."
என்றார்.
வேண்டியவர்களுக்கு விருப்பமான எதையும் கொடுக்க வல்லவர் கடவுள் ஒருவரே.
பிதாவோடும், தூய ஆவியோடும் ஒரே கடவுளாய் இருப்பவர்தான் இயேசு.
அவர் ஏன்,
"எனது வலப்பக்கமோ இடப்பக்கமோ அமர அருள்வது என்னுடையதன்று."
என்றார்?
யாராவது கேட்கக்கூடாத கேள்விகள் கேட்டால், அதற்கு தான் பதில் சொல்ல விரும்பவில்லை என்றால்
இயேசு இப்படி ஒரு பதிலைக் கூறுவது வழக்கம்.
ஒரு முறை "உமது வருகைக்கும் உலக முடிவுக்கும் அறிகுறி என்ன ? எங்களுக்குச் சொல்லும்" என்று சீடர்கள் தனியாகக் கேட்டனர் .
அப்போது இயேசு,
"அந்நாளோ நாழிகையோ ஒருவனுக்கும் தெரியாது:
தந்தைக்குத் தெரியுமேயன்றி, வானதூதருக்கும்
மகனுக்குங்கூடத் தெரியாது.''
என்றார்.
தந்தைக்குத் தெரிந்தது மகனுக்கு தெரியாமல் இருக்க முடியாது ஏனெனில் இருவரும் ஒரே கடவுள்.
அப்படியானால்
"மகனுக்குங்கூடத் தெரியாது."
என்று ஏன் சொல்லுகிறார்?
அலுவலக பொறுப்பாளரிடம் அலுவலகத்தை பற்றி சொல்ல கூடாத ரகசியத்தை கேட்டால்
,
அவர்
" எனக்குத் தெரியாது" என்றுதான் சொல்வார்.
அதாவது
"நான் சொல்லக்கூடாது. ஆகவே அந்த கேள்வியை 'கேட்காதீர்கள்" என்று அர்த்தம்
இங்கும் தாழ்ச்சியைப் போதிக்கும் ஆண்டவரிடம் போய் உயர்ந்த பதவி கேட்டால் அவர் என்ன பதில் சொல்வார்?
"அதைக் கொடுப்பது என்னுடையதன்று."
அதாவது
"இதுபோன்ற எனது விருப்பத்திற்கு விரோதமான விண்ணப்பங்களை
கொடுக்கக் கூடாது"
இயேசுவின் எண்ணப்படி வேலை ஏவுகிற முதலாளியை விட ஏவிய வேலையை செய்கிற பணியாளன் உயர்ந்தவன்.
வாழ்க்கையில் உயர்ந்தவன் ஆக வேண்டுமா? ஊழியராக இருக்க வேண்டும்.
இயேசுவின் அகராதியில்,
தாழ்மை = மேன்மை.
யாகப்பரும், அருளப்பரும் இயேசுவின் ஆட்சியில் உயர்ந்த பதவி கேட்டார்கள்.
இவ்வுலகில் இயேசு துன்பங்களின் ஆட்சியை நிறுவினார்.
தனது சிலுவையை சுமந்து கொண்டிருப்பவன்தான் அவரது ஆட்சியில் குடிமகனாக இருக்க முடியும்.
உயர்ந்த பதவி வேண்டுமென்றால்,
அதன் பொருள்,
சுமப்பதற்கு கனமான சிலுவை வேண்டும் என்பது தான்.
அதனால் தான் இயேசு அவர்களிடம்,
"நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்களும் குடிக்க முடியுமா? நான் பெறும் ஞானஸ்நானத்தை நீங்களும் பெற முடியுமா?"
கிண்ணம் ஞானஸ்நானம் ஆகிய வார்த்தைகள் இயேசு படவிருக்கும் பாடுகளை குறிக்கின்றன.
அவரது வலப்பக்கமும் இடப்பக்கமும் அமர வேண்டும் என்றால்,
அதாவது இயேசுவின் அரசில் முக்கிய பதவி வேண்டுமென்றால்,
அவரோடு பாடுகள் படவேண்டும்
பதவியே பாடுகளாகத்தான் இருக்கும்.
மிகப்பெரிய பதவி என்றால் மிக அதிகமான பாடுகள்.
நாம் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமான துன்பங்களை இயேசுவுக்காக தாங்கிக் கொள்கிறோமோ,
அவ்வளவுக்கு அவ்வளவு அவரோடு நெருங்கியவர்கள்.
இயேசு கேட்ட கேள்விக்கு அவர்கள் முடியும் என்று சொல்லிவிட்டார்கள்.
''உங்களுக்குள் எவன் பெரியவனாய் இருக்க விரும்புகிறானோ, அவன் உங்கள் பணியாளனாய் இருக்கட்டும்.''
"மனுமகன் பணிவிடை பெறுவதற்கன்று, பணிவிடை புரியவும், பலருடைய மீட்புக்கு விலையாகத் தம் உயிரை அளிக்கவும் வந்தார்."
எப்படி பணியாளனாய் இருக்க வேண்டும் என்பதையும் இயேசுவே சொல்லிவிட்டார்.
உயிரையும் அவருக்காக தியாகம் செய்யும் அளவிற்கு பணியாளனாய் இருக்க வேண்டும்.
யாகப்பருக்கும் அருளப்பருக்கும் இயேசு அளித்த பதிலில் இருந்து பின்வரும் ஆன்மீக பாடங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்:
1. சர்வ வல்லவராகிய கடவுள் தன்னால் படைக்கப்பட்ட மக்களுக்கு ஊழியம் செய்வதற்காகவே,
அதுவும், தனது உயிரையும் கொடுத்து ஊழியம் செய்வதற்காகவே, மனிதனாகப் பிறந்தார்.
நாமும் இறைவனுக்கும் அயலானுக்கும் ஊழியம் செய்வதற்காகவே படைக்கப் பட்டிருக்கிறோம்.
ஆகவே ஊழிய வாழ்வுக்காகவே நம்மை அர்ப்பணிப்போம்,
2. நாம் பிறர் ஊழியத்தில் துன்பப்படுவதற்காகவே உலகில் தனது சாம்ராச்சியமாகிய திருச்சபையை இயேசு நிறுவினார்.
ஆகவே பிறருக்காக துன்ப படுவத்திலேயே இன்பம் காண்போம்.
இயேசுவின் சீடர்கள் என்ற முறையில் உலகில் சிலுவையை சுமப்பது ஒன்றே நமது கடமை.
நமது கடமையை ஒழுங்காகச் செய்வோம்.
3.ஒருவன் எந்த அளவிற்கு பெரியவன் என்பது அவன் எந்த அளவிற்கு தாழ்ச்சியான பணியாளனாய் இருக்கிறான் என்பதை பொறுத்தது.
ஆகவே பணி புரிந்து ஆன்மீகத்தில் வளர்வோம்.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment