Friday, October 29, 2021

ஒடுக்கமான வாயில்வழியே நுழையப் பாடுபடுங்கள்'' (லூக்.13:24)(தொடர்ச்சி)

'ஒடுக்கமான வாயில்வழியே நுழையப் பாடுபடுங்கள்'' 
(லூக்.13:24)
(தொடர்ச்சி)

காலம் மாற மாற, விஞ்ஞானம் வளர வளர, உலகமும் மாறிக் கொண்டேயிருக்கிறது.

விஞ்ஞான வளர்ச்சியினால் நமது ஆன்மீகம் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே அநேகர் ஒடுக்கமான வாயில்வழியே நுழைய வருத்தப்பட்டு அகலமான பாதை வழியே நடந்து கொண்டிருந்தார்கள்.

இப்போது விஞ்ஞான வளர்ச்சி அகலமான பாதையை கவர்ச்சிகரமானதாக 
மாற்றியிருக்கிறது.

கவர்ச்சியினால் கவரப் படுவோர் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போகிறது.

சமூக வலை தளங்களில்  (Social media) ஒளிபரப்பப்படும் கவர்ச்சி நிகழ்ச்சிகளில் எண்ணற்றோர் தங்கள் பொன்னான நேரத்தை  வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

TV,. YouTube போன்ற புதிய விஞ்ஞான கண்டு பிடிப்புகளை சமூக வலை தளங்கள் இதற்கு பயன்படுத்தி கொண்டிருக்கின்றன.

நம்மவர்கள் சமூக வலை தளங்களில்  (Social media) ஒளிபரப்பப்படும் 
கவர்ச்சி நிகழ்ச்சிகளில் சிக்கி கெட்டுப் போகாதவாறு தடுப்பதற்காக 

நாமும் நமது ஆன்மிக நிகழ்ச்சிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இந்த புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளை பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

கோவில்கள் எல்லாம் அடைபட்டிருந்த கொரோனா காலத்தில் நமது திவ்ய பலி பூசையைக் கூட  YouTube மூலம்தான் பார்க்க வேண்டியிருந்தது.

ஆனால் அது எவ்வளவு தூரம் நமக்கு பயன்பட்டது  என்பது விவாதத்துக்குரிய விஷயம்.

முதலாவது பூசையைப் பார்க்க மட்டுமே முடிந்தது. அதில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆண்டவரை படத்தில்தான் பார்த்தோம், நாவில் வாங்க முடியவில்லை.

இரண்டாவது, திருப்பலி ஒளிபரப்பு இப்போதும் தொடர்கிறது. இயல்புநிலைக்கு திரும்பிய பின்னும் இன்னும் சிலர் YouTube ஐ விட்டு கோவிலுக்கு வராமல் இருக்கிறார்கள். இப்போது கோவிலில் பழைய கூட்டம் இல்லை.

மூன்றாவது திருப்பலி பார்ப்பதற்கென்று YouTubeக்குள் நுழைபவர்கள் அங்கு ஒளிபரப்பாகும் வேண்டாத நிகழ்ச்சிகளிலும் மாட்டிக்கொள்கிறார்கள்.

நான்காவது, தியான நிகழ்ச்சிகளுக்கு கோவிலுக்கு மட்டுமே செல்வோம். ஆனால் இப்போது அவை YouTubeலும் ஒளிபரப்பப்படுவதால் சிலர் அதுவே போதுமென்று கோவிலுக்கு செல்வதில்லை. YouTube ல் எப்படி பாவசங்கீர்த்தனம் செய்ய முடியும்?

ஐந்தாவது, பக்தி பாடல்களை கோவிலுக்கு சென்று நாம் கேட்போம், பாடுவோம்.

ஆனால் YouTube ல் கேட்க மட்டுமே முடியும். அதுமட்டுமல்ல பக்திப் பாடல்களை நடனம் ஆடிக்கொண்டே பாடும் நிகழ்ச்சிகளும் இருக்கின்றன. நாம் பாட்டை கேட்போமா? நடனத்தை ரசிப்போமா?

கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவதை ஒடுக்கமான வாயிலுக்கும்,

YouTube ல் இறைவழிபாட்டு  நிகழ்ச்சிகளைக் காண்பதை அகலமான பாதைக்கும் ஒப்பிட தோன்றுகிறது.

ஏன்?

கோயில் இறை வழிபாட்டுக்கு மட்டுமே உரியது.  அதைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சிக்கும் அங்கு இடமில்லை.

ஆனால் YouTube ல் வரையறுக்க முடியாத எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அங்கே இடம் உண்டு.

ஒருவர் திருப்பலி நிகழ்ச்சியை காண YouTubeற்குள்  போகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

சாலை வழியே செல்லும்போது கண்டகண்ட நிகழ்ச்சிகளெல்லாம் கண்ணில் படுவது போல,

திருப்பலி நிகழ்ச்சிக்குள் நுழையும் முன்னாலே நான் காண தேவையற்ற அல்லது காண கூடாத நிகழ்ச்சிகளுக்கான விளம்பரங்கள்    கண்ணில்  தோன்றும்.  

திருப்பலியை பார்த்துக் கொண்டிருக்கும் போதும் அவை தோன்றி மறையும்.

 அவற்றைத் தடுக்க முடியாது, ஏனெனில் அது பொது இடம். 

திருப்பலி காண்போர் அது முடிந்தவுடன் அல்லது முடிவதற்கு  முன்னாலேயே 

மற்ற நிகழ்ச்சிகளுக்குள்  நுழைந்து தங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்கும் ஆபத்து இருக்கிறது.

YouTube  என்ற அகலமான பாதைக்குள் நுழைந்தோர்  அதைவிட்டு வெளியேறுவது மிகவும் கடினம்.

திருமண விழாவிற்கு அழைப்பு பெற்றோர் நேரடியாக அங்கு சென்று, மணமக்களை வாழ்த்தி விட்டு, விருந்து உண்டுவிட்டு வரவேண்டும்.

விழாவின் ஒளிபரப்பை மட்டும் பார்ப்போர் எப்படி மணமக்களை வாழ்த்த முடியும்?

விருந்தில் அமர்ந்து, இலையில் பரிமாறப்படும் உணவை  உண்டால் வயிறு நிறையும்.

மற்றவர்கள் உண்ணும் விருந்தை படத்தில் மட்டும் பார்த்தால் நமது வயிறு எப்படி நிறையும்?

Online ல் ஒளி பரப்பாகும் திருப்பலி உடல்நிலை காரணமாக கோவிலுக்கு செல்ல முடியாதவர்களுக்கு மட்டும்தான்.

 மற்றவர்களுக்கு அல்ல.

  அகலமான பாதைக்குள் நுழையாமல்,

ஒடுக்கமான வாயில் வழியே கோவிலுக்குள்  நுழைந்து  இறை  வழிபாட்டில் பங்கெடுப்பதுதான் முறையானது.

"வேளாங்கண்ணி திருவிழா நிகழ்ச்சிகள் Super!"

"கோவிலுக்குப் போயிருந்தாயா?"

"இல்லை. TV யில் பார்த்தேன்."

'மோட்சத்தையும் TV யில்  பார்த்தால் போதுமா?"

நவீன கண்டுபிடிப்புகள் உடல் ரீதியான அநேக வசதிகளை பெற்றுத் தந்துள்ளன.

 ஆனால் ஆன்மாவை அடகு வைத்துவிட்டு உடல் வசதிகளை மட்டும் அனுபவித்தால் மீட்புப் பெற முடியாது.

 அகலமான வழி சென்று வசதிகளை அனுபவிக்க விரும்பும் உடலை ஒறுத்து, அடக்கி தவம் செய்து, 

 ஆன்மா இறைவனின் கட்டளைகளுக்கு பணிந்து, 

அவர் காட்டும்  ஒடுக்கமாக வாயில் வழியே 

விண்ணகத்திற்குள் நுழைய வேண்டும்.

இதுவே இயேசுவின் விருப்பம்.

அதன்படி நடப்போம்.

 விண்ணகம் நமக்கு உறுதி.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment