Saturday, October 30, 2021

" உன்னை ஒருவன் மணவிருந்திற்கு அழைக்கும்போது, நீ முதலிடத்தில் அமராதே.." (லூக். 14:8)

" உன்னை ஒருவன் மணவிருந்திற்கு அழைக்கும்போது, நீ முதலிடத்தில் அமராதே.." (லூக். 14:8)

குணத்தின் அடிப்படையில் மனிதர்களை இரண்டு வகையினராகப் பிரிக்கலாம்.

1. இயல்பாகவே தாழ்ச்சி உள்ளவர்கள்.

2.இயல்பாகவே முதல் இடத்தை தேடுபவர்கள்.


இயல்பாகவே தாழ்ச்சி உள்ளவர்கள் கூட்டங்களில் முதல் இருக்கையில் அமர விரும்ப மாட்டார்கள். 

அதாவது மற்றவர்கள் முன் தங்களைப் பெரியவர்களாக நினைக்க மாட்டார்கள். 

இறைவன் முன் அவர்கள் எப்படியோ அப்படியே கூட்டங்களில் இருப்பார்கள். 

இறைவன் முன் தாங்கள் ஒன்றும் இல்லாதவர்கள் என்று அவர்களுக்குத் தெரியும்.

அந்த குணத்திற்கு ஏற்றபடி 
தாழ்ச்சியோடு நடந்து கொள்வார்கள்.

இயல்பாகவே முதல் இடத்தை தேடுபவர்கள் மற்றவர்களை விட தாங்கள் தான் பெரியவர்கள் என்று என்ணுவதோடு அப்படியே கூட்டங்களில் நடந்து கொள்வார்கள்.

மற்றவர்கள் தங்களை விட தாழ்ந்தவர்கள் என்று அவர்கள் எண்ணுவதால் கூட்டங்களில் முதலிடத்தை தேடுவார்கள்.

இயேசு பரிசேயரின் தலைவன் ஒருவன் வீட்டில் அவர் உணவருந்தச் சென்றிருந்தபோது

அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதலிடங்களைத் தேர்ந்துகொள்வதைக் கண்டார்.

தாழ்ச்சியின் அவசியத்தை அவர்களுக்கு புரிகிற வகையில் இயேசு எடுத்து சொன்னார்.

"நீங்கள் நினைப்பது போல் நீங்கள் மற்றவர்களை விட பெரியவர்கள் அல்ல. 

நீங்கள் முதலிடத்தில் அமர்ந்தால் உங்களை விட பெரியவர்கள் வரும்போது உங்கள் இடத்தை அவர்களுக்கு கொடுத்துவிட்டு கடைசி  இடத்திற்குச் செல்லவேண்டியிருக்கும்.

நீங்கள் முதலிலேயே கடைசி இடத்தில் அமர்ந்து விட்டால் ஒருவேளை உங்களை அழைத்தவன் உங்களை முதல் இடத்திற்கு வரச் சொல்லலாம்.

  அப்பொழுது அது பெருமையாக இருக்கும்."

இயேசு முதலில் இருக்கையை விரும்புகிறவர்களுக்கு இந்த புத்திமதியைக் கூறுகிறார்.

"முதல் இருக்கைக்கு  ஆசைப்படுபவர்கள் கடைசி இருக்கையில் அமருங்கள்.

கடைசி இருக்கையில்   அமர்ந்தால்தான் முதல் இருக்கை கிடைக்கும்."

 இது பெருமையைத் தேடுபவர்களுக்கு இயேசு வழங்கும் புத்திமதி.

இயேசு ஒரு நல்ல ஆசிரியர்.

நல்ல ஆசிரியர் மாணவர்களின் இயல்பு அறிந்து அவர்களுக்கு ஏற்றவாறு புத்திமதி கூறுவார்.

பெருமையை விரும்புபவர்களுக்கு அவர்கள் போக்கின்படி தாழ்ச்சியின் பெருமையை விளக்குகிறார்.

"தன்னை உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான்: தன்னைத் தாழ்த்துகிறவனோ உயர்த்தப்பெறுவான்."


''உயரவேண்டுமா? உன்னையே தாழ்த்திக் கொள்.

ஏனெனில் உன்னை நீயே உயர்த்தி கொண்டால் தாழ்த்தப் படுவாய்."

வகுப்பில் நல்ல மதிப்பெண் பெறுகின்ற அளவிற்கு புத்தியுள்ள மாணவர்களும்,

Fail ஆகும் அளவிற்கு குறைந்த மதிப்பெண்  பெறுகின்ற மாணவர்களும் இருப்பார்கள்.

நல்ல மதிப்பெண் பெருகின்ற மாணவர்கள்  நூற்றுக்கு நூறு எடுக்க வேண்டும்.

Fail ஆகின்றவர்கள் pass பண்ண வேண்டும்.

ஆசிரியர் இரு வகையினருக்கும் ஒரே மாதிரியான புத்திமதியை கூறமாட்டார். அவரவருக்கு பொருத்தமான புத்திமதியைக் கூறுவார்.

அன்னை மரியாள் இயல்பாகவே தாழ்ச்சி உள்ளவள்.  பெருமையை விரும்பாதவள்.  

கடவுள் அவளுக்கு தனது தாயாகும் பெரிய பாக்கியத்தை கொடுத்தாலும்,

 அவள் 

'இதோ ஆண்டவரின் அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்,"

 என்றுதான் சொன்னாள்.

எஜமானரின் சொல்லுக்கு அடிமை கீழ்ப்படிய வேண்டும்.

"இறைவனின் தாய்" என்ற பெருமையை கடவுள் அவளுக்குக் கொடுத்தாலும் அதை அவரது அடிமை என்ற முறையிலேயே கீழ்ப்படிதலுடன்  ஏற்றுக்கொண்டாள்.

"நீ எனது அடிமை என்று ஏற்றுக் கொண்டால் உனக்கு எனது தாய் என்ற பாக்கியத்தை கொடுப்பேன்" 

என்று இறைவன் அவளுக்கு செய்தி அனுப்பவில்லை.

இறைவனின் தாய் என்ற பெருமையை கபிரியேல் தூதர் அவளுக்கு அறிவித்த பிறகுதான் 

தான் இறைவனின் அடிமை என்ற தனது இயல்பான நிலையை அவள் அறிவித்தாள்.

நன்கு படிக்கும் மாணவர்கள் 
மதிப்பெண்ணுக்காக படிக்க மாட்டார்கள்.

அவர்கள் படிப்புக்காகத்தான் மதிப்பெண் வரும்.


அதேபோல அன்னை மரியாள் இறைவனின் தாயாக வேண்டும் என்பதற்காக தன்னையே தாழ்த்த வில்லை.

அவளது தாழ்ச்சிக்காகத்தான் இறைவனின் தாயென்ற உயர்வு கிடைத்தது.

குறைந்த மதிப்பெண் எடுக்கிற மாணவர்களுக்கு ஏதாவது ஆசையை காண்பித்துதான் அவர்களை நன்கு படிக்கும்படி செய்ய வேண்டும்.

அவர்களாக படிக்க மாட்டார்கள்.

அதேபோல்தான் ஆண்டவர்  உணவு அருந்திய பரிசேயர் தலைவன் வீட்டுக்கு வந்த மற்றவர்களிடம் தாழ்ச்சி இல்லை.

அவர்களுக்கு பெருமை கிடைக்கும் என்ற ஆசையை காண்பித்து தான் அவர்களுக்கு தாழ்ச்சியின் அவசியத்தை ஆண்டவர் போதித்தார்.

நாம் அன்னை மரியாளைப் போல இயல்பாகவே தாழ்ச்சியாக இருக்க வேண்டும். 

 பரிசேயர் தலைவன் வீட்டுக்கு சாப்பிட வந்தவர்களை போல் இருந்தால் ஆண்டவர் நம்மிடமும்,

"தன்னை உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான்: தன்னைத் தாழ்த்துகிறவனோ உயர்த்தப்பெறுவான்."

என்றுதான் சொல்வார்.

தாழ்ச்சி     புண்ணியங்களின் அரசி. (Queen of all the virtues)

தாழ்ச்சி   உள்ளவனால்தான்  மற்ற புண்ணியங்களையும் சம்பாதிக்க முடியும். 

லூசிபெருக்கு தாழ்ச்சி இல்லை.

தாழ்ச்சி இல்லாதவனுக்கு  அவன் கதிதான்.

நம்மிலேயே நாம் ஒன்றும் இல்லாதவர்கள்.

We are nothing by ourselves.

நம்மிடம் இருப்பதெல்லாம் இறைவன் தந்தவை.

நமது உண்மை நிலையை ஏற்றுக் கொள்வதுதான் தாழ்ச்சி.

நாம் நமது  ஒன்றும் இல்லாமையை ஏற்றுக்கொண்டால் எல்லாம் உள்ள கடவுள் தன்னையே நமக்கு அளித்து விடுவார்.

கடவுள் தான் நமக்கு எல்லாம்.

ஒரு கதை சொல்லுவார்கள்.
கற்பனை கதைதான். கதையைவிட கருத்துதான் முக்கியம். 

ஒரு நாள் திருச்சபையின் தலைவரான புனித இராயப்பர் இயேசு தனக்கு தந்த 
சாவிகளுடன் மோட்சத்தை சுற்றிப் பார்த்தார்.

மோட்சத்தின் ஒரு பகுதியில் தான்  அதுவரை பார்த்திராத சில சாதாரண மக்கள் உட்கார்ந்திருந்தார்கள்.

"மோட்சத்தின் சாவி என் கையில் இருக்கிறது. எனக்குத் தெரியாமல் உள்ளே எப்படி வந்தீர்கள்?''
  
" அதோ பாருங்கள்."

இராயப்பர் பார்த்தபோது மோட்சத்தின் சுவற்றில் ஒரு பெரிய ஓட்டை போட்டிருந்தது.

"அதன் வழியாக உள்ளே வந்தோம்."

"யார் அந்த ஓட்டையைப் போட்டு குறுக்கு வழியில் உங்களை உள்ளே விட்டது?" 

''நாங்கள் மிகவும் , சாதாரணமானவர்கள். எங்களை எப்படியாவது மோட்சத்திற்கு அழைத்துச்செல்ல சூசையப்பரிடம் தினம் வேண்டினோம்.

அவர்தான் இந்த ஓட்டையை போட்டு எங்களை உள்ளேன் விட்டார்."

தலைவராகிய தனக்கு தெரியாமல் எப்படி அவர்களை உள்ளே விடலாம் என்று சூசையப்பர் மீது அவருக்கு கோபம் வந்தது.

உடனே மோட்சத்தின் பொது சபையைக் கூட்டினார்.

சூசையப்பரை முன்னால்  அழைத்தார்.

அழைத்தவுடன் அவரும் முன்னால் வந்தார்.

எதுவும் விசாரிக்காமலேயே,

" திருச்சபையின் தலைவராகிய எனக்கு தெரியாமல் உங்களுக்கு வேண்டிய சாதாரண மக்களை உள்ளே விட்டிருக்கிறீர்கள். அதற்கு தண்டனையாக நீங்கள் மோட்சத்தை விட்டு வெளியேற வேண்டும்."

சூசையப்பர் மறுவார்த்தை பேசாமல் வெளியேற ஆரம்பித்தார்.

உடனே அன்னை மரியாள்,

"கொஞ்சம் நில்லுங்கள். கணவனுடன் மனைவி வருவதுதான் நியாயம். நானும் உங்களோடு வருகிறேன்."

என்று கூறி அவரோடு சென்றார்.

உடனே இயேசு எழுந்து,

"என்னை வளர்த்தவர்களுடன் நானும் போகிறேன்."

என்று கூறி அவரும் புறப்பட்டார்.

அவர் புறப்பட்ட உடனே மோட்ச வாசிகள் அனைவரும்,

"இயேசு இல்லாத இடத்தில் எங்களுக்கு என்ன வேலை. இராயப்பரே சாவிகளை பத்திரமாக வைத்துக்கொள்ளும்."

என்று அவர்களின் பின்னால் புறப்பட்டார்கள்.

இராயப்பருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. 

வேகமாக ஓடி சூசையப்பரின் கையை பிடித்துக்கொண்டு,

"உள்ளே வாருங்கள். தெரியாமல் சொல்லிவிட்டேன். உங்களது தாழ்ச்சியின் முன்புதான் மோட்சமே இருக்கிறது."

இப்போதும் சூசையப்பர் மறுவார்த்தை பேசாமல் உள்ளே வந்துவிட்டார். 

அனைவரும் அவரோடு  வந்து விட்டனர்.

சூசையப்பரின் தாழ்ச்சி நமக்கும் இருக்க வேண்டும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment