Thursday, October 7, 2021

" கதவைத் தட்டிக்கொண்டே இருந்தால், அவன் தன் நண்பன் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவனுடைய தொல்லையின் பொருட்டாவது எழுந்து, அவனுக்கு எத்தனை தேவையோ அத்தனையும் கொடுப்பான் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்."(லூக் 11:8)

" கதவைத் தட்டிக்கொண்டே இருந்தால், அவன் தன் நண்பன் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவனுடைய தொல்லையின் பொருட்டாவது எழுந்து, அவனுக்கு எத்தனை தேவையோ அத்தனையும் கொடுப்பான் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்."
(லூக் 11:8)


நாம் கர்த்தர் கற்பித்த செபம் சொல்லும்போதெல்லாம்,

 நமக்காக மட்டுமல்ல,

 உலகோர் அனைவரின் சார்பாகவும் அனைவருக்காகவுமே செபிக்கிறோம்.

அனைவர் சார்பாகவே இறைவனைப் புகழ்கிறோம்.

அனைவருடைய தேவைகளை பூர்த்தி செய்யும் படியும் கேட்கிறோம்.

அனைவர் சார்பாக நாம் உட்பட  அனைவரின் பாவங்களுக்கும் மன்னிப்பு கேட்கிறோம்.
..
அனைவருக்குமே சோதனை நேரத்தில் உதவ வேண்டுகிறோம்.  

அனைவரையுமே தீமையிலிருந்து இரட்சிக்க வேண்டுகிறோம்.

அனைவருக்குமாக இறைவனை வேண்டும்படி கற்றுத் தந்த பிறகு தொடர்ந்து ஒரு உவமை சொல்கிறார்.

ஒருவன் தனது நண்பனுக்கு கொடுப்பதற்காக இன்னொரு நண்பனிடம் நள்ளிரவில் சென்று  உதவி வேண்டுகிறான்.

அந்த நண்பனோ.

" என்னைத் தொந்தரவுசெய்யாதே. கதவு பூட்டியாயிற்று. என் குழந்தைகளும் என்னோடு படுக்கையில் உள்ளனர். எழுந்து உனக்குக் கொடுக்கமுடியாது "

என்றான்.

ஆனாலும் இவன் கதவை தட்டிக் கொண்டேயிருந்ததால் தொந்தரவு தாங்க மாட்டாமல் கேட்டதைக் கொடுத்தான்.

நாமும் இறைவனிடம் ஒரு உதவி வேண்டும் போது உடனே கிடைக்காவிட்டாலும் 

தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தால் உறுதியாக கிடைக்கும் என்று ஆண்டவர் சொல்கிறார்.

இந்த உவமையில்கூட ஒருவன் தனக்காக தன் நண்பரிடம் உதவி கேட்கவில்லை.

 இன்னொரு நண்பனுக்கு கொடுப்பதற்காக கேட்கிறான். 

இந்த உவமையிலிருந்து இரண்டு பாடங்களை கற்றுக் கொள்ளலாம்.

1.இறைவனிடம் வேண்டும்போது நமக்காக மட்டும் வேண்டாமல் நமது அயலானுக்காகவும் வேண்ட வேண்டும்.

இயேசு தனக்காக பாடுபட்டு மரிக்கவில்லை.
 நமக்காகப் பாடுபட்டு மரித்தார்.

அவரது மரணத்தால் அவருக்கு எந்த நன்மையும் இல்லை. ஏனெனில் அவர் அளவில்லாத விதமாய் சகல நன்மைகளையும் கொண்ட கடவுள்.

அவர் பாடுபட்டு மரித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.

அவரது மரணத்தால் நமக்குதான் மீட்பு கிடைத்தது.

ஆனாலும் நமக்கு ஒரு பாடம் கற்பிப்பதற்காக,

நாம் மற்றவர்களது நலனுக்காக உழைக்க வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்துவதற்காக,

தேவைகளே இல்லாத கடவுள் நமது தேவைகளுக்காக மரணம் அடைந்தார்.

அவருடைய சீடர்களாகிய நாம் நமது செபத்தில் நமது தேவைகளை விட மற்றவர்களது தேவைகளுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

பெற்ற தாய் தனது தேவைகளை தியாகம் செய்துவிட்டு அவளது குழந்தையின் நலனை மட்டும் கவனிப்பது போல,

நாமும் நமது அயலான் விஷயத்தில் செயல்பட வேண்டும்.

பள்ளிக்கூடத்தில் முதல்தரமான மதிப்பெண் பெற்ற சிலர் 

அதை பயன்படுத்தி நிறைந்த வருமானம் தரும் உயர்ந்த வேலைகளுக்கு போயிருக்கலாம்.

 ஆனால் அதைத் தியாகம் செய்து

 நமது ஆன்மீக நலனுக்காகவே  இயேசுவைப் போலவே ஏழைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் குருக்களை கண்கூடாக பார்க்கிறோம்.  

அவர்கள் இயேசுவின் உண்மையான சீடர்கள்.

2. தொடர்ந்து செபம் சொல்ல வேண்டும்.

"கேளுங்கள் கொடுக்கப்படும்" என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறார்.

"கேட்டவுடன் கொடுக்கப்படும்" என்று சொல்லவில்லை.

கடவுளை பொறுத்தமட்டில் கேட்டவுடன் கொடுக்கப்படுவது மன்னிப்பு மட்டுமே.

வருடக்கணக்காக பாவம் செய்திருந்தாலும்,
நமது பாவங்களுக்காக மனம் வருந்தி கடவுளிடம் மன்னிப்பு கேட்டால் அந்த வினாடியே மன்னித்து விடுவார்.

தொடர்ந்து பாவ சங்கீர்த்தனமும் செய்ய வேண்டும். இது  இயேசுவின் விருப்பம்.

  வாழ்நாள் முழுவதும் பாவத்திலேயே வாழ்ந்திருந்தாலும்

 மரணிக்கும் போது ஒரு வினாடி போதும் 

மனம் வருந்துவதற்கும், மன்னிப்பு கேட்பதற்கும்.

 அந்த விநாடியே பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்.

மற்ற பொருள்களையும், உதவிகளையும் பொறுத்தமட்டில் எப்போது அவற்றைத் தந்தால் நமக்கு அது பயன் உள்ளதாக இருக்குமோ அப்போதுதான் தருவார்.

கேட்டவுடன் தராமல் இருப்பதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது.

நாம் எப்போதும் இறைவனோடு செபத்தில் இணைந்திருக்க வேண்டும் என்று கடவுள் ஆசைப்படுகிறார்.

கேட்டது உடனே கிடைத்துவிட்டால் அந்த திருப்தியில் தந்தவரை மறந்துவிடும் சுபாவம் மனிதனிடம் இருக்கிறது.

தேவைகள் இருந்தால் மட்டும் கடவுளைத் தேடும் சுபாவமும் இருக்கிறது.

கேட்டது உடனே கிடைக்காமல் இருந்தால்தான் நாம் தொடர்ந்து அப்பொருள் கிடைக்கும் வரை கேட்டுக்கொண்டே இருப்போம்.

நம்மை அவரோடு பேச வைப்பதற்காகத்தான் நமக்கு தர ஆசைப்படுவதை உடனே தராமல் காலம் தாழ்த்துகிறார்.

நமக்கு துன்பங்களை அனுப்புவது கூட நம்மை அவரோடு பேச வைப்பதற்காகத்தான்.

கடவுள் அன்பு மிகுந்த நல்ல தந்தை. தன்னுடைய பிள்ளைகளோடு எப்பொழுதும் உறவுடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்.

ஆகவே கேட்டது கிடைக்கும் வரை நாம் அவரைக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

 கிடைத்தபின் அவருக்கு நன்றி கூறிக் கொண்டே இருக்க வேண்டும்.

நமக்கு தேவைகளை அனுமதிப்பதே நாம் எப்போதும் அவரோடு செபத்தில் இணைந்திருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

நமது விண்ணக தந்தையின் அன்பிற்காக அவருக்கு எப்போதும் நன்றி கூறுவதோடு,

 அவரோடு எப்போதும் செபத்தில் இணைந்திருப்போம்.

எப்போதும் அவரோடு செபத்தில் இணைந்திருக்க நாம் ஆசைப்பட்டால்தான் 

நம்மால் அவரோடு நித்திய காலமும் பேரின்பத்தில் இணைந்திருக்க முடியும்.

நமக்குத் தேவைகளே ஏற்படாவிட்டாலும் கூட 

அவரோடு இணைந்திருக்க ஒரே ஒரு காரணம் மட்டுமே போதும்.

அன்பு மட்டுமே போதும்.

உண்மையான அன்பு இருந்தால் கடவுள் ஆசைப்படுவதை எல்லாம் நாம் செய்துகொண்டேயிருப்போம்.

நாம் அவரோடு நித்திய காலமும் பேரின்பத்தில் வாழவேண்டும் என்பதே அவரது ஆசை.

அவரது பிள்ளைகள் நாம்.

தந்தையின் ஆசையை நிறைவேற்றுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment