Thursday, October 21, 2021

"எவனுக்கு அதிகம் அளிக்கப்பட்டதோ அவனிடம் அதிகம் எதிர்பார்க்கப்படும்."(லூக்.12:48)

"எவனுக்கு அதிகம் அளிக்கப்பட்டதோ அவனிடம் அதிகம் எதிர்பார்க்கப்படும்."
(லூக்.12:48)

உலக அனுபவத்தில் 

அதிகம், குறைவு, 
பெரிய, சிறிய,

போன்ற அளவுகளின் அடிப்படையில் மனிதர்களையும் பொருட்களையும் மதிப்பீடு செய்கின்றோம்.

இறைவன் அளவு இல்லாதவர்.

நமது அனுபவத்தில் அளவில்லாமை கிடையாது.
ஏனெனில் நாம் அளவுள்ளவர்கள்.

இயேசு அளவில்லாத கடவுள்.

 ஆனாலும் அளவுள்ள மனிதனாகப் பிறந்திருப்பதால் 

நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நாம் பயன்படுத்தும் வார்த்தைகளையே அவரும் பயன்படுத்துகிறார்.

நாம் எங்கு பிறக்க வேண்டும், யாருக்கு பிறக்க வேண்டும், எப்போது பிறக்க வேண்டும், என்பதையெல்லாம் நாம் தீர்மானிப்பதில்லை.

 இறைவன் மட்டுமே தீர்மானிக்கிறார்.

ஜனநாயக நாட்டில் பிறக்க வேண்டுமா, சர்வாதிகார நாட்டில் பிறக்க வேண்டுமா,

 ஏழைப் பெற்றோருக்கு பிறக்க வேண்டுமா, பணக்கார பெற்றோருக்கு பிறக்க வேண்டுமா என்பதையும்,

எந்த நூற்றாண்டில், எந்த ஆண்டில், எந்த நாளில், எந்த நேரம் பிறக்க வேண்டும்  என்பதையும்
தீர்மானிக்கிறவர் அவரே.

ஒருவன் பிறக்கும்போதே ஏழையாக பிறக்கிறான்,

இன்னொருவன் பணக்காரராகப் பிறக்கிறான்.

ஏழையாகப் பிறந்தாலும், பணக்காரனாக பிறந்தாலும் இறைவனுக்கு கணக்கு கொடுக்கவேண்டிய விஷயத்தில் இருவரும் ஒன்றுதான்.

அதாவது அவனுக்கு கொடுக்கப்பட்டதின் அடிப்படையில் கணக்கு கொடுக்க வேண்டும்,

பள்ளிக்கூடத்தில் வகுப்புகளில் மாணவர்களை நான்கு தரங்களாக பிரித்து வைத்திருப்பார்கள்.

மிக நன்றாகப் படிப்பவர்கள்,
 நன்றாகப் படிப்பவர்கள்,
 சுமாராக படித்தவர்கள்,
படிப்பே வராதவர்கள்.

ஆசிரியர் ஒருவர் தான்.

தனிக்கவனம் (Individual attention) செலுத்துவதற்காக இந்தப் பிரிவு.

ஆனால் தேர்வுத் தாள்களை மதிப்பீடு செய்வது ஒரே மாதிரி தான்.

ஆனால் இறைவன் அப்படி அல்ல.

ஒவ்வொருவருக்கும் திறமைகளை கொடுப்பவர் அவர்தான்.

 ஆகவே அவரவருக்கு கொடுக்கப்பட்ட திறமைகளின் அடிப்படையில் அவருடைய எதிர்பார்ப்பு இருக்கும்.

படிப்பே வராதவர்கள் என்று நாம் கருதுபவர்கள் கூட இறைவன் முன்னால் அவர்களால் இயன்ற அளவு உழைத்தால்

 அவர்களுடைய உழைப்புக்கு ஏற்ற படி வெற்றியும் இருக்கும்.


 உதாரணத்திற்கு அவர்கள் 34 மதிப்பெண்கள் எடுத்தாலும் வெற்றிதான்.

இறைவன் கணக்கில் எடுத்துக் கொள்வது தான் கொடுத்த திறமையையும் மாணவர்களுடைய உழைப்பையும்தான்.

ஆன்மீகத்தில் நம்மால் இயன்ற அளவு பிறருக்கு உதவி செய்ய வேண்டும்.

ஏழையாக பிறந்தவன் அவனால் இயன்ற உதவி செய்ய வேண்டும்.

செல்வந்தனாக பிறந்தவன் அவனால் இயன்ற உதவி செய்ய வேண்டும்.

வசதி உள்ளவன் வசதி இல்லாதவன் அளவிற்கு உதவிகள் செய்துவிட்டு

 மீதியை எதிர்கால சந்ததிக்கு சேர்த்து வைத்தால் அவன் கடவுள் முன் கணக்குக் கொடுக்க வேண்டும்.

ஏனெனில்  அன்றன்று பிறப்பவர்களுக்கு அன்றன்றைய தேவைகளை பூர்த்தி செய்பவர் இறைவனே.


''அன்றன்று உணவு எங்களுக்கு இன்று தாரும்" என்றுதான் கர்த்தர் ஜெபிக்கச் சொன்னார். 

"எங்கள் எதிர்கால சந்ததிக்கும் சேர்த்துத் தாரும் " என்று ஜெபிக்க சொல்லவில்லை.

உலக நோக்கில் எதிர்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது சரியாக இருக்கலாம்.

ஆனால் தன்னுடைய பிறனுக்கு உதவ வேண்டியதை கொடுத்து உதவாமல் 

அதை தன்னுடைய எதிர்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது இறைவன் முன் சரி அல்ல.

 ஏழைகள் அவர்களால்  இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.

 வசதியுள்ளவர்கள் அவர்களால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்


"எவனுக்கு அதிகம் அளிக்கப்பட்டதோ அவனிடம் அதிகம் எதிர்பார்க்கப்படும்
எவனிடம் அதிகம் ஒப்படைத்தார்களோ அவனிடம் இன்னும் அதிகமாய்க் கேட்பார்கள்."

ஆகவே ஏழைகள் வசதி உள்ளவர்களின் அளவிற்கு உதவி செய்ய முடியவில்லையே என்று கவலைப்பட வேண்டாம்,

 தங்களால் இயன்ற அளவு உதவி செய்வதே போதுமானது.

நம்மிடமிருந்து சிலரை ஆண்டவர் தன்னுடைய விசேஷமாக ஊழியத்திற்காக அழைக்கிறார்.

அதற்கு ஏற்றபடி அவர்களை தயார் செய்கிறார்.

சாதாரண, படிப்பறிவில்லாத மக்களிடமிருந்து எதிர்பார்ப்பதைவிட அவர்களிடமிருந்துதான் அதிகமாக இறைவன் எதிர்பார்ப்பார். 

பைபிளை வாசிக்கவே தெரியாதவர்கள் அவர்களுடைய பங்கு குருவானவர் காட்டுகின்ற வழியில் முழுமையாக நடந்தாலே போதுமானது.


"முழுமையாக" முக்கியம். அதாவது அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு.

அழைக்கப்பட்டவர்கள் அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உழைக்க வேண்டும்.

உலக நோக்கில் இருவருடைய உழைப்பிலும் வித்தியாசம் இருப்பதுபோல் தோன்றும்,

ஆனால் அவரவர்கள்  அவரவர்களால் இயன்ற அளவு உழைக்க வேண்டும் என்று தான் இறைவன் எதிர்பார்க்கிறார்.

விண்ணகத்தில் அவரவர் அளவிற்கு ஏற்றபடி பேரின்பம் பரிபூரணமாக இருக்கும்.

அழைக்கப்பட்டவர்கள் தங்களுடைய உழைப்பினால் பெரிய பாத்திரங்களாக மாறி விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

சாதாரண மக்கள் தங்களுடைய உழைப்பிற்கு ஏற்றபடி சிறிய பாத்திரங்களாக மாறிவிட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம்.


மோட்சத்தில் இரண்டு வகைப் பாத்திரங்களும் பேரின்பத்தால் நிறைந்திருக்கும்.

நிறைவில் குறைவு இருக்காது.

 அவரவர்களுக்கு  இறைவன்  கொடுத்திருக்கும் வரங்களை முழுமையாகப்  பயன்படுத்துவோம்.

அதுவே இறைவனை முழுமையாக திருப்திப்படுத்தும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment