Tuesday, October 12, 2021

"இவற்றைத்தாம் கடைப்பிடித்திருக்க வேண்டும்: அவற்றையும் விடலாகாது."(லூக். 11:42)

"இவற்றைத்தாம் கடைப்பிடித்திருக்க வேண்டும்: அவற்றையும் விடலாகாது."
(லூக். 11:42) 

'ஆனால் பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு! 

ஏனெனில், நீங்கள் புதினா, சதாப்பு, காய்கறி முதலியனவற்றுள் பத்திலொரு பாகம் செலுத்துகிறீர்கள். 

ஆனால், நீதியையும் கடவுளன்பையும் பொருட்படுத்துவதில்லை.

 இவற்றைத்தாம் கடைப்பிடித்திருக்க வேண்டும்:

 அவற்றையும் விடலாகாது.

இயேசு பரிசேயர்களை நோக்கி,

"ஐயோ கேடு!''  என்பதால் அவர்களை சபிக்கிறார் என்று அர்த்தமல்ல.

அவர்களது பாவத்தின் கனாகனத்தை  அவர்களுக்குப் புரிய வைக்கவே அந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்.

அவர்கள் இறைவனுக்கு கொடுக்க வேண்டிய காணிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டு,

 இறைவன் விரும்புகின்ற அன்பும் நீதியும் நிறைந்த வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. 

நாம் வாழும் பிரபஞ்சத்தையும் நாம் வாழும் அதிலுள்ள சகல பொருட்களையும் படைத்தவர் அவரே.

அவருக்கு உரிய பொருட்களையே நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

அவர் தந்த பொருள்களில் சிலவற்றை மட்டும் அவருக்கு கொடுத்துவிட்டு அதற்கு காணிக்கை என்று பெயர் 
சூட்டியிருக்கிறோம்.

உண்மையில் காணிக்கை என்றால் நாம் அவருக்கு கொடுக்கக்கூடிய பொருள் அல்ல. 

அது அவருக்கே சொந்தமான பொருள். 

அவருக்கு கொடுப்பதற்கு நமக்குச் சொந்தமானது எதுவும் இல்லை.

 நாமே அவருக்கு சொந்தமானவர்கள்தான்.

உண்மையில் நாம் அவருக்கு சொந்தமானவர்கள் என்பதை ஏற்றுக்கொள்வதே நாம் கொடுக்கும் மிகப்பெரிய காணிக்கை.

 காணிக்கை என்பது பொருள் மட்டுமல்ல, பொருளோடு நாம் அவருக்கு கொடுக்கக்கூடிய  நமது அன்பு தான் உண்மையான காணிக்கை

 உண்மையான இறையன்பு இல்லாமல் கொடுக்கக்கூடிய எந்தப் பொருளுக்கும் காணிக்கை அல்ல பெயர் பொருந்தாது.

 அவர் விரும்புவது நாம் கொடுக்கும் பொருட்களை அல்ல, நமது உள்ளத்தையும் அதில் நிறைந்திருக்கும் அன்பையும்தான். 

அதுகூட அவர் நம்மோடு பகிர்ந்துகொண்ட பண்புதான்.

 காணிக்கை அன்பின் அடிப்படையில் மட்டும் செலுத்தப்படக் கூடிய ஒன்று.

அவர் நமக்கு செய்துவரும் உதவிகளுக்கு நன்றி செலுத்தும் வகையில்

 நன்றி எந்த வார்த்தை மட்டும் போதாது என்று தோன்றுபவர்கள்

 தங்கள் நன்றி உணர்வை தெரிவிப்பதற்காக தங்களிடம் உள்ளதை இறைவனோடு பகிர்ந்து கொள்வதுதான் காணிக்கை.

இங்கு முக்கியத்துவம் பெற வேண்டியது நம்முடைய நன்றி உணர்வுதான், நாம் கொடுக்கும் பொருள் அல்ல.

நன்றி உணர்வு இல்லாமல் இறைவன் செய்த உதவிகளுக்கு பதில் உதவி செய்வது போல 

 வெறும் பணத்தை மட்டும் உண்டியலில் போடுவது காணிக்கை அல்ல.

இறைவனை பார்த்து,

''நீர் எனக்கு இந்த உதவியை செய்யும், நான் உமக்கு  இவ்வளவு காணிக்கை போடுகிறேன்"

என்று கூறினால், அது இறைவனது உதவிக்கு விலை கூறுவது போலிருக்கும்.

இறைவன் நமக்கு செய்துகொண்டிருக்கும் உதவிகளுக்கு பதில் உதவி நம்மால்  செய்ய முடியாது. |


 பரிசேயர்கள் காணிக்கை பொருள்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை

 இறையன்பு பிறரன்பு கலந்த வாழ்க்கைக்கு கொடுக்கவில்லை.

இயேசு காணிக்கை கொடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை.

அன்பில்லாத கரங்களிலிருந்து வரும் காணிக்கைப் பொருள் உண்மையான காணிக்கை இல்லை என்றுதான் சொல்கிறார்.


"பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், செபக்கூடங்களில் முதல் இருக்கைகளையும், பொது இடங்களில் வணக்கத்தையும் விரும்புகிறீர்கள்."

உண்மையான இறை அன்பு உள்ளவன் தனது ஒன்றும் இல்லாமையை உணர்வான்.

தனது ஒன்றுமில்லாமையை  உணர்பவன் கடவுளே தனக்கு எல்லாம் என்பதையும் உணர்வான்.

கடவுளே தனக்கு எல்லாம் என்பதை
உணர்பவன் ஒன்றுமில்லாத தனக்கு முதலிடத்தை தேட மாட்டான்.

பரிசேயர் இறைவன் தான் எல்லாம் என்பதை உணராததால்தான் ஒன்றுமில்லாத தங்களுக்கு 
செபக்கூடத்தில் முதலிடம் வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.

அது தவறு என்று இயேசு சுட்டிக்காட்டுகிறார்.

இயேசு சொல்வது 
பரிசேயர்களுக்கு மட்டுமல்ல,
 நமக்கும்தான்.

திருவிழா காலங்களில் முன்னின்று நடத்துபவர்கள் தங்களது முயற்சியால்தான் எல்லாம் நடக்கிறது மற்றவர்களுக்கு காண்பிக்க ஆசைப்பட்டு அதன்படி செயல்படுகிறார்கள்.

எல்லாம் நம்மால்தான் நடக்கிறது என்று எண்ண ஆரம்பிக்கிற வினாடி, இறைவன் முன் கடைசி இடத்திற்கு வந்து விடுகிறோம்.

நாம் ஒன்றும் இல்லாதவர்கள், நம்மால் எதுவும் நடக்கவில்லை, இறைவனால் தான் நடக்கிறது என்று எண்ண ஆரம்பிக்கிற வினாடி நாம் இறைவனை நெருங்கி வந்து விட்டோம்.

நாம் மற்றவர்களைவிட பெரியவர்கள் என்று எண்ணினால் மற்றவர்களிடமிருந்து வணக்கத்தை எதிர்பார்ப்போம்.

அது தவறு என்று ஆண்டவர் சொல்லுகிறார்.

உண்மையில் வணக்கத்துக்கு உரியவர் இறைவன் மட்டுமே.

நமது அன்றாட வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் வாழ்த்தி கொள்வதற்காக செய்யும் வணக்கத்தை இயேசு குறிப்பிடவில்லை. 

நாம் மற்றவர்களை விட பெரியவர்கள், ஆகவே வணக்கத்துக்கு உரியவர்கள் என்று நாம் பெருமையாக எண்ணுவதைத் தான் தவறு என்று இயேசு சொல்கிறார்.

நாம் இயேசுவின் விருப்பப்படி வாழ்வதுதான்  அவருக்கு விருப்பமான காணிக்கை.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment