"உன்மீது நீ அன்புகாட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்புகாட்டுவாயாக"
(மாற்கு.12:31)
"உன்மீது நீ அன்புகாட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்புகாட்டுவாயாக"
என்று சொன்ன நம் ஆண்டவர் உன் மீது அன்பு காட்டுவாயாக என்று சொல்லவில்லையே, ஏன்?
கடவுள் நம்மை தனது சாயலாக படைத்தார்.
தாயைத் தண்ணீர்க் கிணற்றில் பார்த்தால் மகளை வீட்டில் போல் பார்க்க வேண்டாம் என்பார்கள்.
காரணம் தாயும் மகளும் ஒரே சாயலாக இருப்பார்கள்.
அன்பு செய்வது கடவுளுடைய சுபாவம்.
கடவுள் தன்னைத் தானே நித்திய காலமும் அன்பு செய்கிறார்.
அவர் நம்மை தனது சாயலாக படைத்தபோது நாம் நம்மையே அன்பு செய்யக் கூடிய பண்போடு தான் படைத்தார்.
ஆக நம்மை நாமே அன்பு செய்வது நமது இயற்கையான சுபாவம்.
ஆகவே நம்மை நாமே அன்பு செய்ய தனியாக கட்டளை தேவை இல்லை.
நெருப்பைப் பார்த்து "ஒளி கொடு" என்று சொல்ல தேவை இல்லை. ஏனெனில் அதன் சுபாவமே ஒளியை கொடுப்பது தான்.
பிறரை அன்பு செய்யும் சுபாவமும் கடவுள் நமக்கு கொடுத்தது தான்.
ஆனால் அது நமது சிந்தனை, சொல், செயல் சுதந்திரத்திற்கு கட்டுப்பட்டது.
பிறர் மீது எவ்வளவு அன்பு செய்யவேண்டும், எப்படி செய்யவேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியது நமது தனிமனித சுதந்திரத்திற்கு உட்பட்டது.
கடவுள் நமது சுதந்திரத்திற்குள் குறுக்கிடுவது இல்லை.
ஆனாலும் நாம் பிறரை எப்படி அன்பு செய்ய வேண்டும் என்பதை கட்டளையாகக் கொடுத்திருக்கிறார்.
நமது சுதந்திரத்தை பயன்படுத்தி நம்மை நாம் அன்பு செய்வது போலவே மற்றவர்களையும் அன்பு செய்ய வேண்டும் என்று கடவுள் கட்டளை கொடுத்திருக்கிறார்.
இந்த கட்டளையைப் பற்றி கவலைப்படாதவர்கள் கூட மற்றவர்களை அன்பு செய்யத்தான் செய்வார்கள்,
ஆனால் அது தங்களை தாங்களே அன்பு செய்வது போல இருக்காது.
மற்றவர்களை தங்களுக்காக பயன்படுத்திக் கொள்வதற்காக இருக்கும்.
நம்மிடம் உள்ள பொருட்களை நாம் விரும்புகிறோம்.
எதற்காக?
அவற்றை நமக்கு பயன்படுத்திக் கொள்வதற்காக.
பயன்படாவிட்டால் விரும்ப மாட்டோம்.
பயன்படாத பொருள் தொலைந்தாலும் கவலைப்பட மாட்டோம்.
முதலாளிகள் வேலைக்காரர்களை விரும்புவது எதற்காக?
:
தங்களது பயன்பாட்டிற்காக,
பயன்படாத வேலைக்காரர்களை பணிநீக்கம் செய்து விடுவார்கள்.
ஆனால் இறைவன் கட்டளைப்படி
முதலாளிகள் தங்களை அன்பு செய்வது போலவே வேலைக்காரர்களையும்
அன்பு செய்ய வேண்டும்.
நம்மை நாமே அன்பு செய்வது போல மற்றவர்களையும் அன்பு செய்ய வேண்டுமென்றால்
முதலில் இக்கட்டளையை நமக்கு கொடுத்த எல்லாம் வல்ல இறைவனை எல்லாவற்றிற்கும் மேலாக, நமது முழு மனதோடு அன்பு செய்ய வேண்டும்.
கடவுளை நாம் முழுமனதோடு அன்பு செய்தால் மற்றவர்களையும் அன்பு செய்யாமல் இருக்க முடியாது.
ஏனெனில் நம்மைப் போலவே மற்றவர்களும் கடவுளால் படைக்கப்பட்டவர்கள்
நம்மைப் போலவே அவர்களும் அவருடைய பிள்ளைகள்.
நம்மை நேசிப்பது போலவே கடவுள் அவர்களையும் நேசிக்கிறார்.
கடவுளால் நேசிக்கப்
படுகின்றவர்களை நாம் நேசிக்கா விட்டால்
கடவுள் மீது நாம் கொண்டுள்ள அன்பு முழுமையாக இருக்க முடியாது.
கடவுள் நம்மை படைத்தவர். மனிதர்கள் அனைவரும் கடவுளுக்கும் சொந்தமானவர்கள்.
கடவுள் யார் யாரையெல்லாம் நேசிக்கிறாரோ அவர்களையும் நாமும் நேசித்தால் தான் கடவுள் மீது நாம் கொண்டுள்ள அன்பு முழுமையாகும்.
ஒரு ஆளை நாம் நேசிக்கும்போது அவரை முழுமையாக நேசிப்போம்.
கைகளை மட்டுமோ, கால்களை மட்டுமோ, தலையை மட்டுமோ நேசிப்போமா?
கடவுளை முழுமையாக நேசிக்கின்றவர்கள் அவருக்கு உரியவர்கள் அனைவரையும் நேசிப்பார்கள்.
ஆகவேதான் பிறரன்பு இறை அன்பில் அடங்கி இருக்கிறது.
ஒன்றிலிருந்து மற்றதைப் பிரிக்க முடியாது.
இறையன்பு உள்ளவனிடம் பிறரன்பும் இருக்கும்.
பிறரன்பு உள்ளவர்களிடம்
இறையன்பும் இருக்கும்.
'
இல்லாவிட்டால் அதன் பெயர் அன்பு அல்ல.
இறையன்பும், பிறரன்பும் நமது உயிர்.
உயிர் உள்ளவன் இயங்கிக் கொண்டேயிருப்பான்.
அன்பாகிய உயிரை கொண்டவன் எப்படி இயங்குவான்?
நம்மை அன்பு செய்யும் நாம் நமக்கு நல்லது நடக்க வேண்டும் என்று விரும்புவோம்.
நமக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக உழைப்போம்.
நமக்கு தீமை தரக்கூடியவற்றை விரும்பமாட்டோம்.
நன்மை செய்வது இயற்கை குணம்.
அன்பு செய்யப் படுகிறவர்களுக்கு நன்மை செய்வதற்காகவே இயங்கக்கூடியது தான் அன்பு.
கடவுள் சர்வ நன்மை சொரூபமானவர்.
அவரால் படைக்கப்பட்ட நம்மால் அவருக்கு ஒரு நன்மையும் செய்ய முடியாது.
நம்மால் முடிந்தது நம்மை படைத்தவராக அவரை ஏற்றுக்கொண்டு,
அவரை ஆராதித்து அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதுதான்.
ஆனாலும் உண்மையான அன்பு அன்பு செய்யப்படுபவருக்கு நன்மை செய்ய வேண்டுமே?
அதற்காகத்தான் இயேசு சொல்கிறார்:
"என்னால் படைக்கப்பட்ட மக்களுக்கு நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதை எனக்கே செய்கிறீர்கள்.
அவர்களுக்கு நீங்கள் செய்யும் உதவிகளை எல்லாம் எனக்கே செய்கிறீர்கள்.
அவர்களுக்கு எதிராக நீங்கள் நடக்கும் போதெல்லாம் எனக்கு எதிராக நடக்கிறீர்கள்.
ஆகவேஉங்கள் அயலானுக்கு சேவை செய்வதன் மூலம் எனக்கு சேவை செய்யுங்கள்.
பிறருக்கு நன்மை செய்வதன் மூலம் எனக்கு நன்மை செய்யுங்கள்."
"உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: சின்னஞ் சிறிய என் சகோதரருள் ஒருவனுக்கு நீங்கள் இவற்றைச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள்." (மத்.25:40)
நமது எதிரிகளையும் படைத்தவர் கடவுளே, ஆகவே நமக்கு எதிராக வேலை செய்கின்றவர்களையும் நாம் நேசிக்க வேண்டும்.
நமக்கு தீமை செய்கின்றவர்களும் கடவுளால் படைக்கப்பட்டவர்களே.
கடவுளால் படைக்கப்பட்ட சூரியன்
நல்லவர்களுக்கு ஒளி தருவது தருவது போலவே,
தீயவர்களுக்கும் ஒளி தருகிறது.
மழை நல்லவர்கள் மேலும் பெய்கிறது கெட்டவர்கள் மேலும் பெய்கிறது.
அஃறிணைப் பொருள்களே இவ்வாறு செயல் புரியும் போது,
நாம் கெட்டவர்களை ஒதுக்கலாமா?
நல்லவர்களோ, கெட்டவர்களோ எல்லோரையும் நாம் நேசிக்க வேண்டும்,
எல்லோருக்கும் நன்மையே செய்ய வேண்டும்.
பிறர் பணிக்கு நம்மை அர்ப்பணிப்பதன் மூலம்
இறைபணிக்கு நம்மை முழுவதும்
அர்ப்பணிப்போம்.
லூர்து செல்வம்.