Friday, July 30, 2021

"இந்த ஞானமும் புதுமைகளும் இவருக்கு எங்கிருந்து வந்தன ?"(மத்.13:54).

"இந்த ஞானமும் புதுமைகளும் இவருக்கு எங்கிருந்து வந்தன ?"
(மத்.13:54).

இயேசு தம் சொந்த ஊருக்கு, அதாவது நசரேத்துக்கு,

 வந்து அவர்களது செபக்கூடத்தில் போதித்தபோது,

அவரது ஞானத்தையும், அவர் செய்த புதுமைகளையும் கண்டு மக்கள் ஆச்சரியப்பட்டனர்.

அவருடைய ஞானமும், புதுமைகள் செய்யும் வல்லமையும்
 அவருக்கு எங்கிருந்து வந்தன என்பது புரியாமல் ஆச்சரியப்பட்டார்கள்.

 இயேசு பொது வாழ்வுக்கு வருவதற்கு முன்,

 முப்பதாவது வயது வரை அவர்களுடன் தான் வாழ்ந்து வந்திருக்கிறார்.

அன்னை மரியாளின் தங்கை மரியாளுடைய, (அன்னம்மாளின் இரண்டாவது மகள்)

அதாவது இயேசுவின் சித்தி  மக்களாகிய,

 யாகப்பன், சூசை, சீமோன், யூதா ஆகியோரையும் அங்குள்ள மக்களுக்கு நன்கு தெரியும்.

இவர்களில் மூவர் இயேசுவின் அப்போஸ்தலர்கள்.

இயேசு 30ஆவது வயது வரை தச்சுத்தொழில் செய்து வந்ததால் அங்குள்ள மக்கள் அவரோடு 
பழகியிருப்பார்கள், அவரை நன்கு தெரிந்திருக்கும்.

அவரது நற்குணங்களையும் அறிந்திருப்பார்கள்.

சூசையின் மகனாகத்தான் அவரை பார்த்திருப்பார்கள்.

அவர் இறைமகன் என்ற உண்மை அவர்களுக்குத் தெரியாது.

தங்களோடு ஒருவராகத்தான் அவரை எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

தம் சொந்த ஊரில்  இறைவாக்கினருக்கு மதிப்பு இருப்பதில்லை.

ஆகவேதான் 

இறை மகனிடம் இருக்கவேண்டிய விசுவாசம் அவர்களுக்கு இல்லை.

"நம்முடன் இந்நாள்வரை வாழ்ந்துவந்த சூசையின் மகனுக்கு இவ்வளவு ஞானம் எங்கிருந்து வந்தது " என்று ஆச்சரியப்பட்டார்கள்.

அவர்களது விசுவாசமின்மை காரணமாக இயேசு அவர்களிடம் அதிகமான புதுமைகள் செய்யவில்லை.

இந்த மக்களிடமிருந்து நாம் ஒரு ஆன்மீகப் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

நமக்கு இயேசு இறைமகன் என்ற உண்மை தெரியும், நமது விசுவாசத்தின் மூலமாக,

அதுமட்டுமல்ல இறைவன் எங்கும் இருக்கிறார் என்ற உண்மையும் நமக்குத் தெரியும்.

எல்லோரையும் 

(நல்லவர்களையும், தீயவர்களையும், அவர்மேல் விசுவாசம் உள்ளவர்களையும் அவரை விசுவாசியாதவர்களையும்)

அவர் நேசிக்கிறார் என்ற உண்மையும் நமக்குத் தெரியும்.

அவர் எல்லோரிடமும் இருக்கிறார் என்ற உண்மையும் நமக்குத் தெரியும்.

நல்லவர்கள் தங்களை  நேசிக்கும் இறைவனை தாங்களும்  நேசிக்கிறார்கள்.

கெட்டவர்கள் தங்களை நேசிக்கும் இறைவனை நேசிக்கவில்லை.

தன்னை நேசித்தாலும் நேசிக்காவிட்டாலும் இறைவன் அவர்களிடம் இருக்கிறார், அவர்களை நேசிக்கிறார்.

தன்னை நேசிக்காதவர்களையும் படைத்தவரும் பராமரிப்பவரும் அவரே.

இறைவன் எல்லோரிடமும் இருப்பதால்தான் நாம் எல்லோரையும் நேசிக்க  வேண்டியிருக்கிறது.

அவர்களை மனிதர்கள் என்பதற்காக அல்ல,

 இறைவனது பிள்ளைகள்,

 அவரால் பராமரிக்கப்படுகிறவர்கள்  என்பதற்காக,

 நாம் நம்மை நேசிப்பது போலவே அவர்களை நேசிக்க வேண்டும்.

இந்த விசுவாசம் நம்மிடம் இருந்தால் நாம் நமது அயலானைப் பார்க்கும்போது அவனுள் வசிக்கும் இறைவனையும் பார்ப்போம்.

இறைவன் வசிக்கும் அவனை நேசிக்காவிட்டால்  அவனுள் வாழும் இறைவனையும் நாம் நேசிக்கவில்லை.

அவனை நேசித்தால்தான் 
அவனுள் வாழும் இறைவனையும் நேசிக்கிறோம்.

நமக்கு மிகவும் வேண்டிய ஒருவர் ஒரு காரில் பயணிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.

அந்தக் கார் பத்திரமாக செல்ல வேண்டும் என்று ஆசிப்போம்.

எதற்காக?

அதற்குள் அமர்ந்திருக்கும் நமது நண்பருக்காக.

அதேபோல்தான் நமது அயலானுள் வாழும் இறைவனுக்காக நாம் அவனை நேசிக்க வேண்டும். 

அனேக சமயங்களில் நாம் நமது அயலானில் காணப்படும் குற்றம் குறைகளுக்காக அவனை நேசிக்க மறுக்கிறோம்.

ஆனால் ஆன்மீகத்தில் நாம் 
அவனிடம் வாழும் இறைவனைப் பார்க்க வேண்டுமே தவிர அவனது குற்றங்களை அல்ல.

நண்பர் ஒருவர் ரூபாய்  பத்தாயிரத்திற்கான ரூபாய் நோட்டுகளை ஒரு அழுக்கான மணி பர்சில் வைத்து நம்மிடம்  தருகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

நாம் உள்ளே ரூபாய் நோட்டுக்கள் இருப்பதால் மணி பர்ஸ் அழுக்காக இருந்தாலும் வாங்கிக் கொள்வோமா,

 அல்லது மணி பர்ஸ் அழுக்காக உள்ளது என்பதற்காக பணத்தையும் வேண்டாம் என்போமா? 

இறைவன் பாவிகளுக்குள்ளும் வாழ்கிறார் என்பதற்காக அவரை நேசிக்காமலிருக்க முடியுமா?

அன்று இயேசு சிறுவயது முதல் தங்களோடு வாழ்ந்ததால் 

அவரது ஊரினர் அவரைத் தங்களைப் போல் ஒரு சாதாரண மனிதராக மட்டும் ஏற்றுக் கொண்டார்களே தவிர இறைமகனாக ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆகவே இயேசு அவர்களிடையே அதிகமான புதுமைகள் செய்யவில்லை.

"அவர்களிடம் விசுவாசமில்லாமையால் அவர் அங்குப் பல புதுமைகள் செய்யவில்லை." (மத் 13:58)

இன்று நாமும் நாசரேத் ஊர் மக்களைப் போல்தான் நடந்து கொண்டிருக்கிறோம்.

 நம்மோடு வாழும் மக்கள் நம்மைப் போலவே வாழ்ந்து கொண்டிருப்பதால் அவர்களுள் வாழ்ந்து கொண்டிருக்கும் இறைவனை நாம் காணத் தவறுகிறோம்.

நம்முள் வாழ்ந்து கொண்டிருக்கும் இறைவனை நாம் காண தவறுவதே மற்றவர்களுள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கும் அவரைக் காணத் தவறுவதற்கு காரணமாக இருக்கலாம்.

நற்செய்தியை வாசித்த பிறகாவது நம்மை நாமே திருத்திக் கொள்வோம்.

நமது அயலானைப் பார்க்கும்போது அவனுள் வாழும் இறைவனையும் பார்ப்போம்.

நமது அயலானை நேசிக்கும் போது அவனுள் வாழும் இறைவனையும் நேசிக்கிறோம் என்பதை உணர்வோம்.

நமது அயலானுக்கு சேவை செய்யும் போது நாம் இறைவனுக்கு சேவை செய்கிறோம் என்பதை உணர்வோம்.

நமது அயலானின் மனதை நோகச் செய்யும் போது நாம் இறைவனின் மனதைத்தான் நோகச் செய்கிறோம் என்பதையும் உணர்வோம். 

இறைவன் இல்லை என்று சொல்பவர்களையும் இறைவன்தான் படைத்து பராமரித்து வருகிறார்.
'
அவர்களை  தான் நேசிப்பது போலவே நாமும் நேசிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

இறைவனது சாயலில் படைக்கப்பட்ட நாம் அவரைப்போலவே எல்லோரையும் நேசிப்போம்.

அவர்களுக்கும் நம்மால்  இயன்ற உதவி செய்வோம்.

நமது அயலானைப் பார்க்கும்போது அவனுள் வாழும் இறைவனை பார்ப்போம்.

அவருக்காக அவனையும் நேசிப்போம்.

லூர்து செல்வம்.

Thursday, July 29, 2021

"சாலொமோனிலும் மேலானது இதோ! இங்குள்ளது." (மத்.12:43)(தொடர்ச்சி)

"சாலொமோனிலும் மேலானது இதோ! இங்குள்ளது." (மத்.12:43)
(தொடர்ச்சி)


தொடருமுன் ஒரு முக்கியமான உண்மையை நம் மனதில் பதிய வைக்க வேண்டும்.

அப்போதுதான் தொடர்ச்சி புரியும்.

சர்வ வல்லமையுள்ள கடவுளால் செய்யமுடியாத சில காரியங்களும் இருக்கின்றன. 

கடவுளால் பாவம் செய்ய முடியாது.
(It is impossible for God to sin.)

ஒரு சிறு தவறு கூட செய்ய முடியாது.

கடவுளால் தனது படைப்புகளை வெறுக்க முடியாது. ஏனெனில் அவர் அன்பே உருவானவர். நாம் பாவம் செய்யும்போது கூட கடவுள் நம்மை வெறுப்பதில்லை. பாவிகளையும் அன்பு செய்கிறார்.
சாத்தானை கூட அவர் வெறுப்பதில்லை.

கடவுள்  அன்பின் நிமித்தமே நம்மை படைத்தார். அவர் நம்மீது கொண்டுள்ள அன்பு எந்த சூழ்நிலையிலும் மாறாது. அவரை வேண்டாம் என்று  விண்ணகத்திற்குச் செல்லாதவர்களைக் கூட அவர் தொடர்ந்து நேசிக்கிறார்.

(It may be hard to accept, but God does not hate Satan. God does not hate even the worst of sinners.)


அவரது திட்டங்கள் அளவற்ற ஞானத்துடன் தீட்டப்பட்டவை. ஆகவே அவரால் மாறவும் முடியாது அவரது திட்டங்களை மாற்றவும் முடியாது.
(The decrees of God cannot be reversed.)

இந்த முக்கியமான உண்மைகளை  முதலில் குறிப்பிடுவதற்குக் காரணம் இருக்கிறது.

இந்த உண்மையின் அடிப்படையில்தான் கடவுளின் பராமரிப்பை நம்மால் புரிந்துகொள்ள இயலும்.

இந்த உண்மையை புரிந்து கொள்ளாததால்தான் கடவுளின் பராமரிப்பை பற்றி தேவையற்ற கேள்விகள் கேட்கிறோம். 

உண்மை புரியாமல் நாம் கேட்கும் சில கேள்விகள்:

மனிதன் பாவம் செய்வான் என்பது கடவுளுக்குத் தெரியுமே, தெரிந்தும் ஏன் அவனை படைத்தார்?

அவரால் நேசிக்கப்படுகிற மனிதர்களுக்கு மரணம் நேரிடும் என்று தெரிந்தும் ஏன் சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கை நிகழ்வுகளை அனுமதிக்கிறார்?

யூதாஸ் தன்னை காட்டிக் கொடுப்பான் என்று தெரிந்தும் அவனை ஏன் சீடனாகத் தேர்ந்தெடுத்தார்?

ஆயர்களும், குருக்களும், விசுவாசிகளும் இணைந்து எவ்வளவு மன்றாடியும் ஏன் இன்னும் கொரோனாவை உலகில் விட்டு வைத்திருக்கிறார்?

இதுபோன்ற வினாக்களுக்கு நம்மால் பதில் கூற இயலாது.

கடவுளால் தவறு செய்ய முடியாது என்ற விசுவாசம்தான் அவர் அனுமதிப்பதை எல்லாம் ஏற்றுக் கொள்ள வைக்கிறது.

நமது பெற்றோர் மீது நாம் வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கைதானே 

அவர்கள் நமக்காக என்ன செய்தாலும் நமது நன்மைக்காகத்தான் இருக்கும் என்று ஏற்றுக் கொள்ள வைக்கிறது!


நமது அறியாமை காரணமாக நாம் எழுப்பும் எல்லா வினாக்களுக்கும் நாம் விண்ணகம் சென்றபின்  நமக்கு விடை கிடைக்கும்.

அதுவரை பொறுத்திருப்போமே!

நோயிலிருந்து குணம் பெறுவதற்காக ஒரு மருத்துவரின் கையில் நம்மை ஒப்படைத்தபின் அவர் நம்மை என்ன செய்தாலும் ஏற்றுக் கொள்கிறோம். ஏன்?

அவர் மருத்துவத்தில் தவறு செய்ய மாட்டார் என்ற 
நம்பிக்கையில்தானே!

கடவுள் உலகையே பராமரிக்கும் போது அவரது சில செயல்கள் நமக்குப் புரிவதில்லை.

அவை எத்தகைய செயல்களாக இருந்தாலும் 

அவர் தவறு செய்ய மாட்டார் என்ற நம்பிக்கை நம் மனதில் ஆழமாக பதிந்திருந்தால் 

அவற்றை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வோம்.

அவர் நம்மை இவ்வுலகில் படைத்து வைத்திருப்பதே மறுஉலக பேரின்ப வாழ்வுக்கு நம்மையே தயாரிப்பதற்காகத்தான்.

தயாரிப்பின்போது நம்மை அவர் என்ன செய்தாலும் அது நமது விண்ணுலக நோக்கத்திற்காகவே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அவர் நமக்கு மரணத்தையே வரவழைத்தாலும் அதை நன்றியோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஏனெனில் அதுதான் விண்ணகத்திற்கான வாசல்.

கடவுள் அளவற்ற ஞானம் உள்ளவர் என்று  விசுவசிப்பவர்களுக்கு

அவருடைய பராமரிப்பின்மேல் சந்தேகம் வராது.

அவரைப்பார்த்து "ஏன்?"   என்று வினவ மாட்டார்கள்.

என்ன நேர்ந்தாலும்

 " ஏற்றுக்கொள்கிறேன், ஆண்டவரே,"   

என்று தான் சொல்வார்கள்.

நமது சந்தேகங்களுக்கு ஒரே மருந்து விசுவாசம் மட்டும்தான்.

விசுவசிப்போம்.

என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுவோம்.

லூர்து செல்வம்.

Wednesday, July 28, 2021

"சாலொமோனிலும் மேலானது இதோ! இங்குள்ளது." (மத்.12:43)

"சாலொமோனிலும் மேலானது இதோ! இங்குள்ளது." (மத்.12:43)


பழைய ஏற்பாட்டில் யூதர்களின் மன்னர் சாலமோன் அவரது ஞானத்திற்கு பெயர் போனவர்.

தனது அறிவை அல்லது அனுபவத்தைச் சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தவனை ஞானம் உள்ளவன் என்போம்.

சிலரிடம் அறிவும் (Knowledge) அனுபவமும்  (Experience) நிறைய இருக்கும்.

ஆனால் அவற்றை தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தத் தெரியாது.

அவர்களது அறிவாலும் அனுபவத்தாலும் அவர்களுக்கு ஒரு பயனும் இல்லை.

அப்படிப்பட்டவர்களை ஞானம் இல்லாதவர்கள் என்போம்.

சாலமோனிடம் அறிவுடன் ஞானமும் நிறைய இருந்தது.

ஞானம் மிகுந்த அவனை பார்க்க உலகின் எல்லையிலிருந்து தென்னாட்டு அரசி வந்தாள்.

இயேசு கடவுள். அளவற்ற ஞானம் உள்ளவர்.

இறைவனின் ஞானத்தோடு மனிதனுடைய   ஞானத்தை ஒப்பிட முடியாது.
 
மனிதன் துவக்கமும் முடிவும் உள்ள  காலத்தில் (Time) வாழ்கின்றவன்.

இறைவன் துவக்கமும் முடிவும் இல்லாத  நித்தியத்தில் (Eternity) வாழ்பவர்.

மனிதன் தாயின் வயிற்றில் உற்பவிக்கும் போது அவனிடம் அறிவு (Knowledge) கொஞ்சம் கூட கிடையாது.

உற்பவித்த பிறகுதான் தாயின் அறிவு குழந்தைக்கு தெரியாமலேயே அதன் மூளையில் பதிய ஆரம்பிக்கிறது.

குழந்தை பிறக்கும்போது அதன் பெற்றோர் யாரென்றே அதற்குத் தெரியாது.

வளர வளரத்தான் அது நேரடியாக அறிவை சேகரிக்கிறது.

கிடைத்த அறிவை பயன்படுத்தும் ஞானத்தையும் அது வளர வளரத்தான் கொஞ்சம் கொஞ்சமாக பெறுகிறது.

பெற்ற அறிவை சரியாக பயன்படுத்த தெரியாதவனிடம் ஞானமே இருப்பதில்லை.


பெற்ற அறிவை சரியாகப் பயன்படுத்துதல் என்றால் என்ன?

ஒரு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்த  ஒரு மாணவர் அங்கு அவர் பெற்ற அறிவை எதற்குப் பயன்படுத்த வேண்டும்?

ஒரு நல்ல ஆசிரியராகப் பணி புரிவதற்கு.

ஒரு சமையல் பயிற்சி பள்ளியில் பயின்ற ஒரு  மாணவர் அங்கு அவர் பெற்ற அறிவை எதற்குப் பயன்படுத்த வேண்டும்?

ஒழுங்காக சமைப்பதற்கு.

இவ்வுலகில் பிறந்த நாம் பெற்ற அறிவை எதற்கு பயன்படுத்த வேண்டும்?

இவ்வுலகில் நாம் எதற்காகப் படைக்கப்பட்டிருக்கின்றோமோ அந்த நோக்கத்தை அடைய பயன்படுத்த வேண்டும்.

அதாவது கடவுளை அறிந்து, அவரை நேசித்து, அவருக்குப் பணிபுரிந்து விண்ணரசில் நுழைவதற்காகப் பயன்படுத்த வேண்டும்.

ஒருவன் இந்த நோக்கத்திற்காக 
தான்  பெறுகின்ற அறிவை பயன்படுத்தாவிட்டால் அவன் ஞானம் இல்லாதவன்.

அவன் பெற்ற அறிவு அவனுக்கு பயன்படாத அறிவு.

இயற்கையை பற்றி படித்து அதில் Phd. பட்டம் பெற்ற ஒருவன், இயற்கையை படைத்தவர் இறைவன் என்ற உண்மையைத் தெரிந்து கொள்ளாவிட்டால் அவனது Phd. பட்டம் utter waste!

இயற்கையை நேசிக்கும் ஒருவனால் அதை படைத்த இறைவனை நேசிக்க தெரியாவிட்டால் அவனது இருதயம் waste!

மனிதாபிமானத்தைக் கொடுத்த அறிவால் இறையன்பை கொடுக்க முடியாவிட்டால் அவனது அறிவு waste!



விவிலியத்தைத்  தினமும் வாசிக்கும் ஒருவனால் இறை வாக்கின்படி வாழத் தெரியாவிட்டால் அவனது வாசிப்பால் என்ன பயன்?

விவிலியத்தைப் பற்றிய அறிவு மட்டும் வளரும்.

வாழப் பயன்படாத அறிவு செத்தவன் வாயில் இருக்கும் உணவு!

அவனுக்கும் பயன்படாது !

 அடுத்தவருக்கும் பயன்படாது!

இறை பயமே ஞானத்தின் துவக்கம்!

இறைவன் மனதை நோகச் செய்ய பயப்படுபவன் இறைவனது கட்டளைகளின் வழி வாழ்வான்.

அதாவது இறைவனையும் நேசிப்பான், அயலானையும் நேசிப்பான்.

இறைவனுக்கும் பணி புரிவான்.
அயலானுக்கும் பணி புரிவான்.

அவனே ஞானம் உள்ளவன்!

நமது அன்னையை 

"ஞானம் நிறை கன்னிகையே" என்று அழைக்கிறோம்.

ஏனெனில் அவள் இறைவனுக்கு அடிமையாய் பணிபுரிந்தாள்!

தாயைப் போல பிள்ளைகள் விளங்க வேண்டாமா?


மனிதன் இயல்பிலேயே அளவு உள்ளவன். ஆகவே அவன் பெறும் அறிவும் ஞானமும் முழுமையாக இருப்பதில்லை.

அனுபவத்தின் மூலமும், அறிவின் மூலமும், ஞானத்தில்  
வளர்ந்து கொண்டேயிருப்பவன்தான் மனிதன்.


ஆனால் கடவுள் அளவில்லாத ஞானம் உள்ளவர்!

அவரது எல்லா பண்புகளுமே அளவில்லாதவைதான்.
 
அவருக்கு  துவக்கமும் முடிவும் இல்லை. ஆகவே 
அவரது அறிவும் ஞானமும் துவக்கம் இல்லாத காலத்திலிருந்தே (From eternity) முழுமையாக இருக்கும்.

 அவருக்கு தன்னை பற்றியும்  முழுமையாக தெரியும்.

 தனது படைப்புகளைப் பற்றியும்  முழுமையாக தெரியும்.

அவர் நித்தியர், அவரது ஞானமும் நித்தியமானது.

அதாவது துவக்கமும் முடிவும் அற்றது.

நித்தியராகிய கடவுள் தனது படைப்புகளை காலத்தில் படைத்தார்.

அதாவது அவரது படைப்புகளுக்கு துவக்கம் உண்டு.

இயற்கையைப் படைத்த கடவுள் அது இயங்குவதற்கான விதிகளையும்  படைத்தார்.

அவர் உருவாக்கிய விதிகளின்படிதான்  இயற்கையின் ஒவ்வொரு பொருளும் இயங்குகிறது.

இயற்கை விதிகள் மாறாமல் இருப்பதால்தான் விஞ்ஞானம் சாத்தியமாகிறது.

மனித உடல் இயற்கை பொருட்களால் ஆனது, ஆகவே இயற்கை விதிகளுக்கு கட்டுப்பட்டது.

ஆனால் மனித ஆன்மா   இறைவனின் சாயலில் படைக்கப்பட்டது.

சிந்தனை செயல் சுதந்திரம் உட்பட தனது அனைத்து பண்புகளையும் மனித ஆன்மாவுடன் பகிர்ந்து கொண்டார்.

சிந்திக்கவும் செயல்படவும் மனிதனுக்கு முழுமையான சுதந்திரத்தை அளித்திருக்கிறார்.

மனித சுதந்திரத்தில் இறைவன் குறுக்கிடுவது இல்லை.

ஆனாலும் மனிதன் பின்பற்றவேண்டிய கட்டளைகளை இறைவன் அவனுக்கு கொடுத்திருக்கிறார்.

தனது முழு சுதந்திரத்தை பயன்படுத்தி மனிதன் இறைவனது கட்டளைகளின்படி வாழ வேண்டும்.


இறைவனது கட்டளைகளின்படி வாழும் மனிதனுக்கு நிலைவாழ்வை பரிசாக அளிக்கிறார்.

 தனக்கு அளிக்கப்பட்டிருக்கும்  சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி இறைவனது கட்டளைகளை மீறி வாழும் மனிதருக்கு நிலைவாழ்வு இல்லை.

மனிதன் தனது சுதந்திரத்தை எப்படி பயன்படுத்தி வாழ்வான் என்பது நித்திய காலமாகவே இறைவனுக்குத் தெரியும்.

மனிதனை படைப்பதற்கு இறைவன் நித்திய காலமாக திட்டமிடும்போதே அவன் பாவம் செய்வான் என்பது அவருக்கு தெரியும்.

ஆகவேதான் மனிதனாகப் பிறந்து மனுக்குலத்தை பாவத்திலிருந்து மீட்பதென்றும் இறைவன் நித்திய காலமாகவே இறைவன் திட்டமிட்டு விட்டார்.

மனுக்குலத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதி நாள் வரை வாழும் கோடிக்கணக்கான மனிதர்களுள் ஒவ்வொரு மனிதனும் எப்படி இயங்குவான் என்பது இறைவனுக்கு நித்திய காலமாகவே தெரியும்.

அவரது அறிவு (Knowledge) எல்லையற்றது.

அதன் அடிப்படையிலும்,

தனது எல்லையற்ற அன்பின் அடிப்படையிலும்

 அளவற்ற ஞானத்துடன் மனுக்குலத்தை இறைவன் பராமரித்து வருகிறார்.

(தொடரும்)

லூர்து செல்வம்

மனிதன், எதிர்மறைகளின் சங்கமம்.

மனிதன், எதிர்மறைகளின் சங்கமம்.
 

."Wish you a happy birthday..''

"Thank you.
But you have not wished me happiness.
You have wished it to my birthday, which is no more now!"

: "என்ன தத்துவம் பேசற?"

"தத்துவம் பேசவில்லை. யதார்த்தமான உண்மையைத்தான் சொல்றேன்."

"Birthday, which is no more now! ன்னு சொல்றது எப்படி உண்மையாகும்?

இன்று தானே உனது பிறந்தநாள்?"

"நீ தமிழ் இலக்கணம் படிக்கலியா?"

"படித்திருக்கிறேன்.''..

"காலங்கள் எத்தனை வகைப்படும்?''

"இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்.

Past tense,  present tense, Future tense."

"இன்று நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இது என்ன காலம்?"

"நிகழ்காலம்."

"நான் எண்பது ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தேன். 

இது என்ன காலம்?"

"இறந்த காலம்."

"அதாவது நான் பிறந்தது இறந்த காலம். சரியா?"

"என்னடா உளறுகிறாய்?"

"நான் உளரவில்லை. நீ தான் சொன்னாய் பிறந்தேன் என்பது இறந்த காலம் என்று.

அப்படியானால் நான் பிறந்தது இறந்த காலத்தில் தானே?"

." அது இலக்கணம்."

"அப்போ இலக்கணம் உண்மை இல்லையா?"

"உனக்கு என்னமோ ஆகிவிட்டது."

." ஒன்றும் ஆகவில்லை.

இப்போ ஒரு சின்ன கேள்வி.

குழந்தை பிறந்தபின் வளர ஆரம்பிக்கிறதா? தேய ஆரம்பிக்கிறதா?"

"பொடி வைத்து கேட்பதுபோல் இருக்கிறது!

வளர்வது  போல் தோன்றிக்கொண்டே தேய்கிறது."

"விளக்க முடியுமா?"

"குழந்தை உருவத்தில் வளர்கிறது.
வயதில்  தேய்கிறது,"

"வயதில் தேய்கிறது என்றால்?"

"அதன் மொத்த வயது 60 என்பது கடவுளின் திட்டம் என்று வைத்துக் கொண்டால்,

ஒவ்வொரு ஆண்டும் அதன் வாழ்நாள் ஒவ்வொரு ஆண்டாகக் குறையும். அது தேய்மானம்தானே."

"கரெக்ட். மனித வாழ்வின் அடிப்படை தத்துவமே

வளராமல் தேய முடியாது . தேயாமல் வளர முடியாது."

"அதாவது, எதிர்மறைகளின் சங்கமம்தான் மனிதன்."

"Yes. பார்க்க முடியாத ஆன்மா பார்க்க முடிகின்ற உடலோடு சங்கமிக்கும்போது மனிதன் தோன்றுகிறான்.

Man is a merger of Spirit and matter."

"ஆன்மாவும் உடலும்,
'
அதாவது,

ஆன்மீகமும், லௌகீகமும்

சேர்ந்துதான் பயணிக்க வேண்டும்.

ஆனால் பயணத்தில் ஆன்மீகம் வளரவேண்டும்,

லௌகீகம் தேய வேண்டும்.

அதுதான் ஆன்மீக வாழ்வின் வெற்றியின் அடிப்படைத்
தத்துவம்."

"அதாவது வாழ்வின் முடிவில் ஆன்மீகம் 100% ஆகவும்,
லௌகீகம் 0%ஆகவும் இருக்க வேண்டும்."

"Correct.

ஆன்மீகம் வளரவேண்டும் என்றால்  நம்மிடம் உள்ள கிறிஸ்தவத் தன்மை,

அதாவது

அன்பு,   இரக்கம்,    மன்னிப்பு,  பிறர் பணி, பணிவு போன்ற
கிறிஸ்தவ குணங்கள் வளர வேண்டும்.

"அவர் வளரவேண்டும், நானோ குறையவேண்டும்."

என்ற  ஸ்நாபக அருளப்பரின் வார்த்தைகள் ஞாபகத்திற்கு வருகின்றன.

நாமும் அப்படியே சொல்வோம்.

நம்முள் இயேசு வளர வேண்டும், நாம் தேய வேண்டும்."

"லௌகீகம் தேய வேண்டும் என்றால்?"

"இவ்வுலகைச் சார்ந்த ஆசைகள் குறைய வேண்டும்.
இவை உடல் சம்பந்தப் பட்டவை.

ஆன்மா விண்ணக வாழ்க்கைக்காக படைக்கப் பட்டது.

உடல் மண்ணிலிருந்து எடுக்கப்பட்டு மணணிற்குத் திரும்புவதற்காகவே படைக்கப் பட்டது.  

ஆன்மா விண்ணக வாழ்விற்கான தயாரிப்பில் உடலை தனக்கு சாதகமாக பயன் படுத்த   முயற்சி செய்யும்.

உடல் இவ்வுலக இன்பத்தை அனுபவிக்க ஆன்மாவைப் பயன்படுத்த முயற்சி செய்யும்.

ஆன்மா வெற்றி அடைந்தால் ஆன்மீகம் வளரும்.

உடல் வெற்றி அடைந்தால் அடைந்தால் லௌகீகம் வளரும்.

ஆன்மாவின் வெற்றிக்குத் துணையாக இருப்பவர் நமது ஆண்டவரும் மீட்பவரும் ஆகிய இயேசு கிறிஸ்து.

அவர் நமக்கு முன் மாதிரிகை காட்டவே தனது உடலை நோன்பினாலும், தவத்தினாலும், பாடுகளினாலும், சிலுவை மரணத்தாலும்  ஒறுத்தார்.

நாமும் அவரது முன் மாதிரிகையைப் பின்பற்றி நமது உடலை  ஒறுக்க   வேண்டும்."

"இயேசு தனது மரணத்தின் மூலம் நமக்கு நித்திய வாழ்வைப் பெற்று தந்தார்.

இயேசுவின்  மரணம் நமக்கு நித்திய வாழ்வு தந்தது.

துன்பத்தின் வழி இன்பம் என்பதே நமது மீட்பின்  அடிப்படை தத்துவம்."

"அப்படியானால் இன்பத்தின் வழி?"

" துன்பம். இவ்வுலகில் இன்பத்தில் மூழ்க ஆசைப்படுவோர்  மறுவுலகில் துன்பத்தில் மூழ்க தயாராக இருக்க வேண்டும்."

"Correct. இன்னும் சில எதிர்மறைகள்.

பாவம் தேயத்தேய புண்ணியம் வளரும்.

சுயநலம் தேயத்தேய பொதுநலம் வளரும்.

இவ்வுலக  நாட்டம் தேயத்தேய மறுஉலக  நாட்டம் வளரும்.

பேரின்பம் வேண்டுமா? சிற்றின்பத்தை மறப்போம்.

பிறருக்காக வாழும்போது உண்மையில் நமக்காகத்தான் வாழ்கிறோம். 

ஏனெனில்

பிறருக்காக நாம் வாழும் காலம் முடியும்,

அதனால் நாம் பெறும் நிலைவாழ்வு என்றும் நீடிக்கும்.

இவ்வுலகிற்கு மரித்தால்தான் மறு உலகிற்குப் பிறப்போம்.

லூர்து செல்வம்.

Sunday, July 25, 2021

புனிதர்களாய் வாழ்வது மிக எளிது!

புனிதர்களாய் வாழ்வது மிக எளிது!
**********************************

"சீக்கிரம் டீயைக் குடிங்க. உங்ககிட்ட முக்கியமான கேள்வி ஒண்ணு கேட்கவேண்டியிருக்கு."

"கேள்வியை முதல்ல கேளு, டீயை அப்புறமா குடிச்சிச்கிடலாம்."

"இல்ல இல்ல,  டீயை முதல்ல குடிங்க, அல்லது ஆறிப்போயிடும்."

..."இங்க பாரு, சுடச்சுட குடிச்சாலும் குடித்தபின் ஆறித்தான் போயிடும். கேள்வியை முதல்ல கேளு."

"நம்ம கோயில் திருவிழா இறுதித் திருப்பலியில பிரசங்கம் வச்ச சாமியார் என்ன சொன்னாரு?"

..."ஏண்டி, திருவிழா முடிஞ்சி ஒன்றரை மாதம் ஆகுது. நீ இப்போ கேட்கிற!

அந்தோனியார் மேல உண்மையான பக்தி உள்ளவங்க அவரைப் போலவே புனிதர்களாக மாற வேண்டும்னு சொன்னாரு. சரியா?"

"Correct. இப்போ என் கேள்வி,

'நாம் எவ்வளவுதான் முயன்றாலும் அவர் அளவிற்கு புனிதர்கள் ஆக முடியுமா?' "

..."அதாவது கோடிக்கணக்கில் புதுமைகள் செய்யும் அளவிற்கு, அப்படித்தானே?"

"ஆமா."

..."அப்படீன்னா நீ  சாமியார் சொன்னத சரியா புரிந்துகொள்வில்லை."

"நாம் புனிதர்மேல் பக்தி வைத்திருப்பது வெறுமனே நமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்காக மட்டுமல்ல,

நாமும் அவர்களது வாழ்க்கை முறையைப் பின்பற்றி அவர்களைப்போல புனிதர்களாக மாறுவதற்காகவே

என்றுதான் சொன்னார்.

'அவர்களைப்போல புனிதர்களாக மாறுவதற்காக' என்பதற்கு வேறு என்ன அர்த்தம் இருக்கமுடியும்?"

..." 'எங்க அம்மாவைப் போல நானும் ஒரு டீச்சர்'னா என்ன அர்த்தம்?"

" 'எங்க அம்மா ஒரு டீச்சர், நானும் ஒரு டீச்சர்'னு அர்த்தம்."

..."அதே மாதிரிதான் சாமியார் சொன்னதன் அர்த்தம்,

'அந்தோனியார் புனிதராய் வாழ்ந்தார், நாமும் புனிதராய் வாழவேண்டும்' என்பதுதான்.

அவரது புனிதத்துவத்தின் அளவை (Degree of his holiness) எய்தினால்தான் நாம் புனிதர் என்று அர்த்தல்ல.

மாதாமீது எவ்வளவு பக்தி வைத்திருந்தாலும் அவளதுபுனிதத்துவத்தின் அளவை நம்மால் எட்ட முடியுமா?

மோட்சத்தில் வாழும் எந்தப் புனிதரும் அவள் அளவுக்கு புனிதத்தில் உயரவில்லை.

ஆகவேதான் மற்ற புனிதர்களுக்கு வணக்கம் செலுத்தும் நாம்

மாதாவுக்கு விசேச வணக்கம்  செலுத்துகிறோம்."

" புனிதத்தின் அளவு என்று கூறுகிறீர்களே, அது சடப்பொருள் இல்லையே, அளப்பதற்கு.

எதை வைத்து அதை அதிகம், குறை என்று வித்தியாசப்படுத்துகிறோம்? "

..."நீ கேட்பது சரிதான்.
நாம் பயன்படுத்தும் அளவுகோல்கள், அவற்றைக் குறிக்கும் வார்த்தைகள் எல்லாம் சடப்பபொருள் சம்பந்தப்பட்டவை என்பது உண்மை.

சடப்பொருள் (Matter)
சம்பந்தப்பட்ட வார்த்தைகளை ஆன்மீக (spiritual) காரியங்களை அளக்க பயன்படுத்த முடியாது என்பதும்
உண்மை.

ஆனாலும் மனிதர்களாகிய நமக்குத் தெரிந்தது Human language மட்டும்தானே.

ஆகவே வேறு வழி இல்லாமல் ஆன்மீகக் காரியங்களைக் குறிக்கவும் நமக்குத் தெரிந்த மொழியைப் பயன் படுத்துகிறோம்.

உதாரணத்திற்கு,

இரண்டு ஆன்மாக்களுக்கு இடையே ஏற்படும் ஈர்ப்பை குறிக்க 'அன்பு' என்ற மனித மொழியைப் பயன்படுத்துகிறோம்.

அந்த ஆன்மீக ஈர்ப்பை உணரத்தான் முடியும்,  பார்க்க முடியாது.

அறிமுகமானவர்கட்கு இடையே நிலவும் அன்பு,

நண்பர்களிடையே நிலவும் அன்பு,

உறவினர்களுக்கு இடையே நிலவும் அன்பு,

உடன் பிறந்தோர்களுக்கு இடையே நிலவும் அன்பு,

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே நிலவும் அன்பு,

கடவுளுக்கும் நமக்கும் இடையே நிலவும் அன்பு

இவை எல்லாம் அளவில் வித்தியாசமானவையா? இல்லையா? "

"வித்தியாசமானவை."

..."அளவு என்றாலே ' அதிகம், குறைவு' என்ற வார்த்தைகள் ஞாபகத்திற்கு வந்து விடும்.

அதிக அன்பு, குறைந்த அன்பு இரண்டும் உணரப்படக்கூடியவை,

வார்த்தைகளால் வெளிப்படுத்தப்படக் கூடியவை அல்ல.

நமது  அன்பை நாம்தான் உணர முடியும்.

அடுத்தவர் அன்பை அவர்தான் உணரமுடியும்.

அப்படியிருக்க யாருடைய அன்பு அதிமானது என்று நம்மால் எப்படிக் கணக்குப் பார்க்க முடியும்?"

" அன்பு செயலில் வெளிப்படும்.

செயலில் வெளிப்படாத அன்பு செத்த அன்பு."

..."கரெக்ட்.

ஒரு கணித ஆசிரியர் மாணவர்களிடம் வெற்றுக் கணத்திற்கு ( Null set) உதாரணம் சொல்லச்
சொன்னார்.

ஒரு பையன் சொன்னான், 'செயலில்லா அன்பு.' "

"கரெக்ட்,  எப்படி 'உயிருள்ள பிணம்' இருக்க முடியாதோ அதே போல் 'செயலில்லா அன்பு'ம் இருக்க முடியாது."

..."விசயத்துக்கு வருவோம்.

அன்னை மரியாள் இயேசுவின்மேல்  கொண்டிருந்த அன்பிற்கும்,

நாம் அவர்மேல் கொண்டிருக்கும் அன்பிற்கும்

அளவில் வித்தியாசம் இருக்கிறதா? இல்லையா? "

"அது தாய்க்கும் மகனுக்கும் இடையே நிலவும் அன்பு.

நிச்சயமாக மாதா மகனை நேசித்த அன்பிற்கு ஈடாக எந்த மனிதனாலும் இயேசுவை அன்பு செய்ய முடியாது.

அது ஈடு, இணையற்ற அன்பு."

...'இப்போ புனிதத்துவத்துக்கு வருவோம்.

புனிதத்துவத்துக்கு அடிப்படை இறைவனுக்கும் நமக்கும் இடையே நிலவும்  அன்புறவுதான்.

அந்த அடிப்படையில் மாதாவை மிஞ்ச யாராலும் முடியாது.

ஒவ்வொரு புனிதரும் இறைவன்மேல் கொண்டிருக்கும் அன்பின் அடிப்படையில் புனிதத்துவத்தின்  அளவு மாறும்.

ஆனால் புனிதர்களின் புனிதத்துவத்தை அளப்பது நம்மால் முடியாது, அது நமது வேலையும் அல்ல.

நாம் இறைவன்மீது கொண்டுள்ள அன்பின் அடிப்படையில் புனிதர்களாக வாழ வேண்டும்."

"நீங்கள் சொல்வதைக் கேட்க இனிமையாகத்தான் இருக்கிறது.

ஆனால் புனிதர்களாக வாழ்வது அவ்வளவு எளிதான காரியமா? "

..."அதாவது அன்பு செய்வது அவ்வளவு எளிதான காரியமா
என்று கேட்கிறாய்.

அன்பின் உருவான இறைவனால், அவரது அன்பின் காரணமாகவே நாம் படைக்கப்பட்டிருப்பதால் இயல்பாகவே அன்பு செய்வது நமக்கு மிக எளிது.

இறைவன் நம்மைப் படைத்திருப்பதே அவரை அறிந்து, நேசித்து, சேவை செய்து, அவரோடு நித்தியமாக வாழ்வதற்காகத்தான்."

"அதாவது ஒரு பொருளை Design செய்கின்றவர் 

அது எந்த நோக்கத்திற்காகச் செய்யப்படுகிறதோ

அந்நோக்கம் நிறைவேறும் வகையில்தான் செய்திருப்பபார்.

உதாரணத்திற்கு ஒரு கார் ஓடுகிறது என்றால்,  அது அந்நோக்கத்தோடு செய்யப்பட்டிருப்பதால்தான்.

அது பறப்பதற்காகவும் செய்யப்பட்டிருந்தால், பறக்கவும் செய்யும்."

..."கரெக்ட்.  மனிதன் நேசிப்பதற்காகவே படைக்கப்பட்டிருக்கிறான்.

ஆகவே நேசிப்பதுதான் அவனுக்கு மிக எளிய செயல்.

ஆகவே இறையன்பிற்கு எதிரானவற்றை விலக்கி விட்டு அவரை நேசித்தாலே அவன் புனிதன்தானே!

உண்மையில் பாவியாக வாழ்வதைவிட புனிதனாக வாழ்வதுதான் எளிது."

"அதெப்படி. பாவி அவன் இஸ்டப்படி வாழ்கிறான்.

புனிதன் கட்டளைகட்குக் கட்டுப்பட்டு வாழ்கிறான்.

கட்டுப்பட்டு வாழ்வதைவிட இஸ்டப்படி வாழ்வதுதானே எளிது."

..."சம்பளத்திற்கு வேலை பார்ப்பது எளிதா?  முதலாளியாய் இருப்பது எளிதா?"

"சம்பளத்திற்கு வேலை பார்ப்பதுதான் எளிது."

..."ஏன்?"

"முதலாளி முதல் போட வேண்டும்.

அடுத்து போடப்பட்ட முதல் குறையாமல் வளர திட்டங்கள் தீட்டவேண்டும்.

திட்டங்களை சரியாக நிறைவேற்ற வேண்டும்.

நிறைவேற்றுவதில்  பிழை ஏற்பட்டால் முதல் போய்விடும்.

ஆனால் வேலைக்காரன் முதல் போட வேண்டியதில்லை.

திட்டங்கள் தீட்ட வேண்டியதில்லை.

முதலாளி சொல்வதைச் செய்தால் போதுமே!

ஆகவே சம்பளத்திற்கு வேலை பார்ப்பதுதான் எளிது!"

..."புனிதனைப் பொறுத்தமட்டில் முதல் போடுபவர் கடவுள்.

புனிதன் கடவுள் சொன்னதைச் செய்தால் போதும்.

புனித சூசையப்பரைப் பார். அவர் கடவுள் சொன்னதை அப்படியே செய்தார். நீதிமான் ஆனார்.

'மரியாளை ஏற்றுக்கொள்."

'ஏற்றுக்கொள்கிறேன்.'

'குழந்தையையும், தாயையும் அழைத்துக்கொண்டு எகிப்துக்குப் போ.'

'போகிறேன்.'

'எகிப்திலிருந்து திரும்பி வா.'

'வருகிறேன்.'

'நசரேத்துக்குப் போ.'

'போகிறேன்.'

Blind obedience to God's words!

மாதாவைப் பார்.

'இதோ ஆண்டவரின் அடிமை. உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது.'

Total surrender to the will of God!

அடிமையின் வேலையே சொன்னதைச் செய்வதுதான்!

தன்னையே இறைவனின் அடிமையாக ஆக்கியதால்தான்

இறைவன் அவளை விண்ணக, மண்ணக அரசியாக்கினார்!

ஆனால் பாவியைப் பார்.

முதல் போடுபவன் அவன். போட்ட முதலைக் காப்பாற்ற அவன் படும்பாடு அவனுக்குதான் தெரியும்.

ஒரு பொய்யை முதலாகப் போட்டால் அந்தப் பொய்யைக் காப்பாற்ற வாழ்நாளெல்லாம் விதவிதமாகப் பொய் சொல்ல வேண்டும்.

இந்தத் திறமை நல்லவனிவிடம்
இருக்காது!

அதுபோலவே ஏமாற்றுதல், திருட்டு, லஞ்சம் போன்றவற்றில் முதலீடு செய்பவர்கள் படும் பாட்டை நாம் அன்றாட செய்திகளில் பார்க்கிறோமே!

ஆகையால்தான்  சொன்னேன் புனிதனாக வாழ்வது மிக எளிது,

பாவியாக வாழ்வது மிகக் கடினம்."

"ஆனால் அட்டூளியம் செய்கிறவர்கள்தானே ஆடம்பரமாக வாழ்க்கையை அனுபவிக்கிறாகள்.

புனிதமாக வாழ்பவர்கள் கஸ்டங்களை அல்லவா அனுபவிக்கிறாகள்!"

..."நேசிக்கிறவன் தன் நேசருக்காக எந்தக் கஸ்டத்தையும் மன மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வான்.

அவன் மனசாட்சிப்படி வாழ்வதால் மனதில் எப்போதும் சமாதானம் நிலவும்.

'நன் மனதுள்ளோர்க்கு  சமாதானம் உண்டாகுக' என்ற இறைத் தூதர்களின் வாழ்த்து அவனை வாழவைக்கும்.

ஆனால் அட்டூழியர்கள் தங்கள் மனசாட்சியை அடகுவைத்து ஆடம்பரத்தை வாங்கியிருப்பதால் தங்கள் ஆடம்பரத்தை தக்கவைத்துக்கொள்ள போராடிக் கொண்டிருப்பார்கள்.

குறுக்கு வழியில் பணம் ஈட்டி ஆடம்பரமாக வாழ்பவன் பயந்து பயந்து வாழ்ந்து கொண்டிருப்பான்.

ஆம்பரம் வேறு, உண்மையான மகிழ்ச்சி வேறு.

உண்மையான மகிழ்ச்சி அன்பின் சொத்து."

"எளிது என்கிறீர்கள், கஸ்டங்களைத் மகிழ்ச்சியோடு தாங்கிக் கொள்வார்கள் என்கிறீகள்.

கஸ்டங்கள் இல்லாவிட்டால்தானே எளிது என்கலாம்?"

..."இந்த சந்தேகம் உனக்கு வந்திருக்கக்கூடாது."

"ஏன்?"

..." நீ மூன்று பிள்ளைகளைப் பெற்றவள்.

பேறுகால வேதனையை அனுபவித்தவள்.''

"சாரிங்க. புரிகிறது. கஸ்டங்கள் மனிதவாழ்வில் இயல்பாவை.

இறைவனை அன்பு செய்பவன் அவரது திருப்திக்காக எந்தக் கஸ்டத்தையும் மன மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வான்.

இறைவனை அன்பு செய்யாதவன் தனது கஸ்டங்களை நீக்க எந்த அட்டூழியத்தையும் செய்வான்.

இன்னும் ஒரு கேள்வி.

புனித வாழ்வு வாழ இறைவார்த்தையை, அதாவது பைபிளை, ஒழுங்காக வாசிக்க வேண்டும்.

எழுத வாசிக்கத் தெரியாத அறிவிலி என்ன செய்வான்?"

..."ஒரு அடிப்படை உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அன்பு செய்வதற்கும் பைபிளை வாசிப்பதற்கும் சம்பந்தம் இல்லை.

விசுவாசத்தின் தந்தையாகிய அபிரகாம் இறைவனை மிகவும் அன்பு செய்தார்.

ஆனால் பைபிள் வாசிக்கவில்லை, ஏனெனில்,  அவர் காலத்தில் பைபிள் எழுதப்பட்டிருக்கவில்லை.

இறைவன் அவரோடு நேரடியாகப் பேசினார்.

இறைவன் நமக்குத் தந்திருப்பதற்குதான் கணக்குக் கேட்பார்.

We will have to give  account for whatever we have received from Him.

தாலந்துகள் உவமை இதைத் தெளிவுபடுத்துகிறது.

ஆகவே இறுதிநாளில் எல்லோரும் ஒரே மாதிரிக் கணக்கு கொடுக்க வேண்டியிருக்காது.

Theology யில் degree வாங்கிக்கிறவர்கள் அதிகம் பெற்றிருக்கிறார்கள்.

அவர்கள் அதிகம் கணக்குக் கொடுக்கவேண்டியிருக்கும்.

எழுத்தறிவே இல்லாத ஒரு பட்டிக்காட்டு பாட்டி,

அவள் பெற்றிருப்பதற்கு ஏற்ப கணக்குக் கொடுத்தால் போதும்.

அவளுக்கு பங்கு சாமியாருடைய பிரசங்கம்தான் பைபிள்.

ஒரு ஆண்டு ஒழுங்காக ஞாயிறு பூசைக்கு  வந்தாலே

வாசகங்களும், பிரசங்கங்களும்

அவள் கடைப்பிடிக்க வேண்டிய இறையறிவை அவளுக்குக் கொடுத்துவிடும்.

அவள் அதன்படி வாழ்ந்தாலே போதும்.

அவள் செய்யவேண்டியதெல்லாம் கடவுளை நேசிக்க வேண்டியது மட்டும்தான்.

அவளது சக்திக்கு ஏற்றபடி நேசித்தால்

இறைவன் கட்டளைகளின்படியும், பங்கு சாமியாரின் சொற்படியும் நடப்பாள்.

வாழ்க்கையில் கஸ்டங்களை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வாள்.

அவளது அன்பின் ஆழத்திற்கு ஏற்ப அவளது புனிதத்துவம் அதிகமாகும்.

அன்பு அதிகமாக அதிகமாக அவளது அன்புப் பணிகளும் அதிகமாகும்.

அன்புப் பணிகளின் அடிப்டையில்தான் இறுதித் தீர்ப்பும் இருக்கும்.

உனக்கு எவ்வளவு தெரியும் என்று இறைவன் கேட்கமாட்டார்.

என்ன செய்தாய் என்றுதான் கேட்பார்.

ஆகவே,

அன்பு செய்வதற்காகவே படைக்கப்பட்ட நமக்கு

அன்பு செய்வது எளிது,

புனிதர்கள் ஆவதும் எளிது."

"Tea குடிச்சிட்டீங்களா?"

..."இங்க வா ஆளுக்குப் பாதியாய்க் குடிப்போம்."

லூர்து செல்வம்..

Saturday, July 24, 2021

"உள்ளத்தின் நிறைவினின்றே வாய் பேசும்." (மத்.12:34)

"உள்ளத்தின் நிறைவினின்றே வாய் பேசும்." (மத்.12:34)

சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும்.

சட்டியில் சோறு இருந்தால் அகப்பையில் சோறுதான் வரும்

சட்டியில் கறி இருந்தால் அகப்பையில் கறிதான் வரும்.

சட்டியில் எதுவுமே இல்லாவிட்டால் எதுவும் வராது.

தேர்வு எழுதுவது கைதான். உள்ளத்தில் உள்ளதைத்தான் கை எழுதும்,


பேசுவது வாய்தான். உள்ளத்தில் உள்ளதைத்தான் வாய் பேசும்.

 புத்தி சிந்திக்கிறது. உள்ளம் சிந்தனைகளை சேர்த்து வைக்கிறது. உள்ளத்தில் உள்ளதைத்தான் வாய் பேசுகிறது, மெய் செய்கிறது.


உள்ளத்தில் உள்ளது உண்மை.
உள்ளத்தில் உள்ளதை அப்படியே வாய் பேசினால் அது வாய்மை.

சிந்தனைகள்தான் சொற்களாகவும் செயல்களாகவும் உருப்பெறுகின்றன.

ஒருவனது வாழ்க்கையின் தன்மையை தீர்மானிப்பது அவனது சிந்தனைகளே.

சிந்தனைகள் தூய்மையானவையாய் இருந்தால்  வாழ்க்கை குற்றமற்றதாய் இருக்கும். 

சிந்தனைகள் மோசமானவையாய் இருந்தால் வாழ்க்கையும் மோசமானதாக இருக்கும்.

பரிசுத்தமான வாழ்க்கை நடத்த வேண்டுமென்றால் நமது உள்ளத்தில் சிந்தனைகள் பரிசுத்தமானவையாய் இருக்க வேண்டும்.

நமது சிந்தனைகளின் தன்மையை தீர்மானிப்பது நமது புத்தியும், சூழ்நிலையும்.

புத்திதான் சிந்தனைகளின் பிறப்பிடம்.

நாம் வாழும் சூழ்நிலையும் நமது சிந்தனைகளை பாதிக்கின்றன.

சூழ்நிலையிலிருந்து நமது ஐம்பொறிகளின் வழியாக செய்திகள் நமது உள்ளத்திற்கு செல்கின்றன.

மனிதன் ஒரு சமூக பிராணியாகையால் அவன் வாழும் சமூகமும் அவனது சிந்தனைகளை பாதிக்கின்றது.

 சூழ்நிலையும், சமூகமும் அவனது ஐம்பொறிகளின் வழியாக அவனை பாதிக்க மட்டுமே செய்யும்.

ஆனால் சிந்திக்க வேண்டியது முழுக்க முழுக்க அவனது சொந்த வேலை.

வெளியிலிருந்து வரும் பாதிப்புகளை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதும் அவனது சொந்த விருப்பம்.

 உதாரணத்திற்கு,

நாம் நமது வீட்டிலிருந்து புறப்பட்டு கோவிலுக்குப் போய்க் கொண்டிருப்பதாக வைத்துக் கொள்வோம்.

வழியில் ஒரு கழைக்கூத்தாடி வித்தைகள் போட்டுக் கொண்டிருக்கிறான்.

அவன் போட்டுக்கொண்டிருக்கும் வித்தைகள் நமது கண்கள் வழியாக நமது கவனத்தை ஈர்க்கின்றன.

ஈர்ப்பை (Attraction) ஏற்று வித்தைகளை பார்ப்பதற்காக கோவிலுக்கு செல்லாமல் அங்கேயே நின்று விடுவதும், 

ஈர்ப்பை நிராகரித்து அங்கு நிற்காமல் கோவிலுக்குச் செல்வதும் நமது விருப்பம்.

 ஆனாலும், இதைப்போன்ற  ஈர்ப்புகள் நமது ஐம்பொறிகளின் வழியாகக் நமக்குள் செல்லும்போது,

ஏற்கனவே நம்முடைய முதல் பெற்றோர்களின் பாவத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் நமது மனித சுபாவம் 

விலக்கப்பட்ட கனிகளைத் தின்ன, 

அதாவது பாவத்துக்கு ஏதுவான 
ஈர்ப்புகளை ஏற்றுக்கொள்ள சோதிக்கும்.

சாத்தானின் இந்த சோதனைகளை நாம் ஏற்றுக்கொள்ளாமல் நமது சிந்தனைகளை பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது நமது கடமை.

அதற்காக பாவ சூழ்நிலைகளை தவிர்ப்பதும் நமது கடமை.

நாம் வாழும் இன்றைய உலகம் நமது சிந்தனைகளை பாதிக்கக்கூடிய ஈர்ப்புகளை நாம் திரும்பும் இடமெல்லாம் நமது ஐம்பொறிகளின் முன்னால் வைக்கின்றது.

அன்று நமது முதல் பெற்றோரைச்  சோதித்த அதே சாத்தானுக்கு நம்மை சோதிப்பதும் முழுநேர வேலை.

 இன்று உலகம் மிகுதியாக பயன்படுத்தும் Social mediaவைத்தான் சாத்தானும் அதிகம் பயன்படுத்துகிறான்.

Social mediaவிற்குள் நுழைபவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

திரும்புகிற இடமெல்லாம் சாத்தான் வலையோடு காத்துக் கொண்டிருப்பான்.

அசந்தவர்களை அள்ளிக்கொண்டு போய் விடுவான்.

நற்செய்தி அறிவித்ததற்கு நாமும் Social mediaவைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

அதற்காக நாம் அதற்குள் நுழைந்தாலும் நமது ஐம்பொறிகளையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்.

இன்றைய இளைஞர்களின் எண்ணங்களைக் கெடுத்துக் கொண்டிருப்பது Social media தான் என்று உலகமே சொல்கிறது.

நற்செய்தியை அறிவதற்கும், சிந்தனைகளை இறைவனை நோக்கி  திருப்புவதற்கும் எத்தனையோ வழிகள் திறந்திருக்கின்றன.

பைபிளை வாசித்துத் தியானித்தல்,

புனிதர்களின் வரலாற்றை வாசித்தல்,

கிறிஸ்துநாதர் அனுசாரம் போன்ற தியான நூல்களை வாசித்தல்,

 அடிக்கடி திருப்பலியில் குருவானவரின் பிரசங்கங்களைக் கேட்டல்,

தியானங்களில் (Retreats) கலந்து கொள்ளுதல்,

ஜெப கூட்டங்களில் கலந்து கொள்ளுதல் 

போன்றவற்றாலும்  நமது உள்ளத்தையும் சிந்தனைகளையும் பரிசுத்தமாக வைத்துக்கொள்ளலாம்.

சிந்தனைகள் பரிசுத்தமாக இருந்தால்தான் நமது பேச்சும், செயலும் பரிசுத்தமாக இருக்கும்.

நமது எண்ணங்களை பரிசுத்தமாக வைத்துக் கொள்வதோடு அவற்றை நமது நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதும் நல்லது.

இது மற்றவர்களும் தங்கள் எண்ணங்களை பரிசுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்.

நல்லதையே நினைப்போம்.

 நல்லதையே பேசுவோம்.

 நல்லதையே செய்வோம்.

லூர்து செல்வம்


.

Thursday, July 22, 2021

"என்னோடு இல்லாதவன் எனக்கு எதிராய் இருக்கிறான். என்னோடு சேகரிக்காதவன் சிதறடிக்கிறான்.''(மத்.12:30)

."என்னோடு இல்லாதவன் எனக்கு எதிராய் இருக்கிறான். என்னோடு சேகரிக்காதவன் சிதறடிக்கிறான்.''
(மத்.12:30)

அரசியலில் அணிசேராக் கொள்கை அனுபவரீதியாக பாராட்டப்பட்ட ஒன்று.

எதிர் எதிர் கொள்கைகளை உடைய இரண்டு அணிகள் ஒன்றை ஒன்று வெல்வதற்காக போட்டி போட்டுக்கொண்டிருக்கும்போது

 எந்த அணியிலும் சேராமல் தனியாக இயங்குவது 
இக்கொள்கையின் நோக்கம்.

 ஒரு காலத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும்  எதிர் எதிர் பொருளாதாரக் கொள்கைகளை உடைய இரண்டு வல்லரசுகளாக விளங்கின.

வல்லரசு என்றாலே அழிக்க வல்ல அணு ஆயுதங்களைக் கொண்ட அரசு என்பதுதான் பொருள்.

இரண்டும் எப்போதும் யுத்தத்திற்கு தயாராக இருக்கும்.

பொருளாதார உதவிக்கும், யுத்த காலங்களில் உதவுவதற்கும் மற்ற நாடுகள் ஏதாவது ஒரு அணியில் கூட்டு சேர்வது வழக்கம்.

கூட்டு சேர்ந்தால் வல்லரசுகள் ஒன்றோடொன்று மோதும்போது அணிசேர்ந்த நாடுகளும் போரின் பலனை அனுபவிக்க வேண்டியிருக்கும்.

ஆகவே இந்தியா எந்த அணியிலும் கூட்டுச் சேராக் கொள்கையை கடைப்பிடித்து வந்தது.

நடுநிலைமை வகிப்பது அரசியலில் பாராட்டத்தக்கது.

ஆனால் ஆன்மீகத்தில் கூட்டுச் சேரா கொள்கையை பயன்படுத்த முடியாது.

உலகில் இரண்டு ஆன்மீக அணிகள் இயங்கி வருகின்றன.

ஒன்று கடவுளை தலைமையாகக் கொண்ட விண்ணக அணி.

மற்றொன்று சாத்தானின் ஆலோசனையில் இயங்கும் மண்ணக அணி.

விண்ணக அணியில் சேர்ந்தோர் நித்திய பேரின்ப வாழ்க்கையை நோக்கமாகக் கொண்டு இவ்வுலகில் இயேசுவின் போதனைகளின்படி வாழ்வர்.

மண்ணக அணியினர் இவ்வுலக சிற்றின்ப  வாழ்க்கையை நோக்கமாகக் கொண்டு இவ்வுலகில் சாத்தானின் ஆலோசனைகளின்படி வாழ்வர்.

ஒருவன் இந்த இரு அணிகளில்   ஒன்றின் பக்கம் இருந்துதான் ஆகவேண்டும்.

எந்த அணியிலும் இல்லாமல் தனித்து வாழ முடியாது.

ஒருவன் இறைவனின் அணியில் இருந்தால் சாத்தானின் அணியில் இருக்க முடியாது.

இறைவனின் அணியில் இல்லாவிட்டால் அவன் சாத்தானின் அணியில்தான் இருப்பான்.

ஒரே நேரத்தில் இரண்டு அணிகளிலும் இருக்க முடியாது.

"எவனும் இரு தலைவர்களுக்கு ஊழியம் செய்யமுடியாது.

 ஏனெனில், ஒருவனை வெறுத்து மற்றவனுக்கு அன்பு செய்வான்.

 அல்லது, ஒருவனைச் சார்ந்துகொண்டு மற்றவனைப் புறக்கணிப்பான். 

கடவுளுக்கும் செல்வத்திற்கும் நீங்கள் ஊழியம் செய்யமுடியாது." (மத். 6:24)

இயேசு சொல்கிறார்,

" ஒரே நேரத்தில் நம்மால் கடவுளுக்கும், பணத்துக்கும் ஊழியம் செய்யமுடியாது.

இறைப்பற்று உள்ளவனிடம் பணப் பற்று இருக்க முடியாது.

பணத்தின் மேல் பற்று உள்ளவனிடம் இறைவன் மேல் பற்று இருக்க முடியாது.

இயேசுவின் அணியில் இல்லாதவன் எதிரணியில்தான் இருந்தாக வேண்டும்.

நண்பர் ஒருவர் கேட்கிறார்:

உலகமே இல்லாமல்,

உலகத்தில் உள்ள பொருள்களும் இல்லாமல்,

 பணமும் இல்லாமல் 

எப்படி உலகில் வாழ முடியும்?

 உலகையும், பணம் உட்பட அதிலுள்ள பொருட்களையும்

படைத்தவர் நம்மை படைத்த அதே இறைவன் தான்.

அவற்றை எதற்காகப் படைத்தார்?

நாம் அவரது ஊழியத்தில் பயன்படுத்துவதற்காக அவற்றைப் படைத்தார்.

நம்மைப் படைத்தது அவருக்கு ஊழியம் செய்வதற்காக.

நாம் வாழ்வது அவருக்கு ஊழியம் செய்வதற்காக மட்டுமே.

நாம் மூச்சு விடுவது முதல் நமது ஒவ்வொரு அசைவும்,உண்ணுதல், உடுத்தல், இருத்தல், எழுதல்....உறங்குதல் உட்பட 

நமது அனைத்து வேலைகளையும் இறைவனுக்காகவே செய்ய வேண்டும் .

அப்படியானால் பணம் உட்பட அனைத்துப் பொருள்களும் இறைவனுக்காகவே 

அதாவது இறைவனுக்கு சேவை செய்வதற்காகவே பயன்படுத்தப்பட வேண்டும்.

நாம் வாழும் உலகத்தை இறைவனுக்கு சேவை செய்வதற்காகவே பயன்படுத்த வேண்டும்.

நாம் இறைவனுக்கு சேவை செய்யும் போது உலகத்தை பயன்படுத்துகிறோம்.

இறைவனுக்கு சேவை செய்யாவிட்டால் நாம் உலகத்திற்கு சேவை செய்கிறோம்.

நடுநிலைமை வகிக்க முடியாது.

நாம் இறைவனுக்கு சேவை செய்கிறோமா,

 அல்லது,

உலகிற்கு  செய்கிறோமா 

என்பதை நாம் சுயபரிசோதனை செய்து அறிந்து கொள்ள வேண்டும்.

எப்படி அறிந்து கொள்வது?

நமது வாழ்வின் ஒவ்வொரு செயலும் நாம் யாருக்கு சேவை செய்வோம் என்பதை நமக்கு புரியவைக்கும்.

உதாரணத்திற்கு,

படித்து முடித்துவிட்டு ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்.

 வேலை கிடைக்கும்படி இறைவனிடம் வேண்டுகிறோம். திருப்பலி ஒப்புக் கொடுக்கிறோம்.

இறைவன் அருளால் வேலையும் கிடைத்து விட்டது.


இறைவன் அருளால் கிடைத்த வேலையை இறைவனது மகிமைக்காக செய்ய வேண்டும்,

இறைவனுக்காக செய்யப்படும் வேலை இறைப் பணியாக மாறும்.

இங்கு நமது வேலையை இறைவனது மகிமைக்காக பயன்படுத்துகிறோம்.

ஆகவே நாம் இறைவனுக்கே சேவை செய்கிறோம். 

ஆனால், வேலை கிடைத்தவுடன் இறைவனை மறந்து விட்டு, நமது சொந்த நலனை மட்டும் மையமாக வைத்து நாம் வேலையைச் செய்தால்,

நாம் உலகத்திற்காக இறைவனைப் பயன்படுத்தியிருக்கிறோம்.

அதாவது நாம் உலகத்திற்கு சேவை செய்கிறோம்.

ஒரே நேரத்தில் இறைவனுக்கும் உலக செல்வத்திற்கும் சேவை செய்ய முடியாது.

சிலர் உலக தேவைகள் நிறைவேறுவதற்காக இறைவனுக்கு நேர்ச்சைகள் செய்வார்கள்.

உதாரணத்திற்கு குடும்பத்தில் நிலவும் கடன் பிரச்சனைகள் நீங்குவதற்காக பதிமூன்று செவ்வாய்க்கிழமைகள் திருப்பலியில் கலந்துகொள்வதாக நேர்ந்திருப்பார்கள்.

பிரச்சனைகள் தீராவிட்டால் அப்புறம் திருப்பலியையும்,  இறைவனையும் மறந்து விடுவார்கள். 

இவர்கள் தங்கள் தேவைக்கு இறைவனைப் பயன்படுத்த முயன்றிருக்கிறார்கள்.

இவர்கள் சேவை செய்வது உலகத்திற்குதான்.

இறைவனுக்கு சேவை செய்பவர்கள் வேண்டியது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இறைவனுக்கு நன்றி கூறுவார்கள்.

எந்த சூழ்நிலையிலும் இறைவனை மறக்க மாட்டார்கள்.

ஒருவர் தினமும் கோவிலுக்கு போகிறார் என்பதிலிருந்து அவர் இறைவனுக்கு சேவை செய்கிறார் என்று முடிவு செய்ய முடியாது.  

எதற்காக போகிறார் என்பதை அறிய வேண்டும்.

இறைவனை தன் இறைவன் என்பதற்காக வழிபட போகிறாரா,

 அல்லது தனக்கு ஏதாவது உலக உதவி கேட்டு மட்டும் போகிறாரா

என்பதை அறிந்தால் மட்டும் அவரது சேவை யாருக்கு என்று கண்டுபிடிக்க முடியும்.

ஆனால் அப்படி கண்டுபிடிப்பது மற்றவர்களுடைய வேலை அல்ல.

அவராகவே சுயபரிசோதனை செய்து தான் செய்யும் சேவை 
இறைவனுக்கா அல்லது உலகத்திற்கா என்பதை அறிந்து,

தவறு இருந்தால் தன்னைத் தானே திருத்திக் கொள்ள வேண்டும்.

ஒழுங்காக இறைப் பணி ஆற்றிக் கொண்டு இருப்பவர்கள் கூட,

ஏதாவது உலகப் பொருள் மீது பற்று வைக்க ஆரம்பித்தால்,

 தவறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இறைப் பணி ஆற்றும் ஒவ்வொருவரும் இரவில் படுக்கப் போவதற்கு முன்,

சுய பரிசோதனை செய்து,

எந்தப் பொருள் மீதாவது அன்று பகலில் பற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதை  அறிந்து, 

தங்களது இறைப் பற்றைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

இறை மகனையே சோதித்தவன் சாத்தான்.

பணத்தின் மீது ஆசைகாட்டி நாம் தடம் மாற முயற்சி செய்வான்.

பணப் பற்று அதிகமானால் இறைப்பற்று காணாமல் போய்விடும்.

ஆகவே நாம் ஒவ்வொரு வினாடியும் கவனமாக இருக்க வேண்டும்.

உலகின் மீது  பற்று ஏற்படாதவாறு நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

யூதாசுக்கு உண்மையிலேயே இயேசு மேல் பாசம் இருந்தது.


ஆகவேதான் அவர் தண்டனைக்கு உள்ளானதைக் கண்டு, 

மனம் வருந்தி, 

முப்பது வெள்ளிக் காசுகளையும் ஆலயத்தில் எறிந்துவிட்டு

 நான்றுகொண்டான்.

அவனைக் கெடுத்தது அவனுடைய பணப்பற்று.

ஆகவே பணத்தை பார்க்கும்போது கவனமாக இருப்போம்.

லூர்து செல்வம்.

Monday, July 19, 2021

" பலர் பின்தொடர அவர்கள் அனைவரையும் குணமாக்கினார்." (மத்.12:15)

" பலர் பின்தொடர அவர்கள் அனைவரையும் குணமாக்கினார்."
(மத்.12:15)

",ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதுபோல் தெரிகிறது!"

"ஆழ்ந்த சிந்தனைதான். ஆனால் இப்போது பயனில்லாத சிந்தனை."

", ஏன் பயனில்லாத சிந்தனை?"

"நடக்கக்கூடாத ஒன்றைப்பற்றி சிந்தித்தால் அதனால் நமக்கு என்ன பயன் இருக்கும்?"

", நடக்கமுடியாத எதைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தாய்?"

"இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இயேசு வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த நாட்டில் பிறந்திருந்தால் நமக்கு நலமாக இருந்திருக்கும்.

இயேசுவின் பின்னால் போனாலே நமது நோய்களையெல்லாம் அவர்
குணமாக்கியிருப்பார்!

அதை இப்போது நினைத்து என்ன பயன்?

இனிமேல் எப்படி 2000 ஆண்டுகளுக்கு முன்னால் நம்மால் பிறக்க முடியும்?"

",இயேசு வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த நாட்டில் பிறந்திருந்தால் நமக்கு நலமாக இருந்திருக்கும் என்றுதானே நினைக்கிறாய்?

இப்போதும் நாம் இயேசு வாழ்கின்ற காலத்தில், வாழ்கின்ற நாட்டில்தானே பிறந்திருக்கிறோம்!"

"என்ன சொல்கின்றீர்கள்? இயேசு வாழ்ந்து 2021 ஆண்டுகள் ஆகிவிட்டன. நீங்கள் சொல்வது புரியவில்லை."


"நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."
(மத். 28:20)

என்று 2021 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது யார்?"

"நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.''

",இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளில் நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா?"

"அவரது வார்த்தைகளில் நம்பிக்கை இல்லாவிட்டால் நான் எப்படி கிறிஸ்தவனாக இருக்க முடியும்?"

",நம்பிக்கை இருந்தால் நாம் இன்றும் கிறிஸ்து வாழ்கின்ற காலத்தில்தான் இருக்கிறோம் என்பதையும் நம்ப வேண்டுமே!

 ஏனெனில் இயேசு   சொன்னபடி நம்மோடு இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்."

"இப்போது  புரிகிறது. இப்பொழுது இயேசு திவ்ய நற்கருணையில் உண்மையிலேயே நம்மோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் என்பது புரிகிறது.

ஆனால் அன்று போல் இன்று புதுமைகள் செய்து கொண்டிருப்பதுபோல் தெரியவில்லையே?"

",அன்றும் தனது சொந்த ஊருக்குச் சென்றபோது அங்கு அதிகமாக புதுமைகள் செய்யவில்லையே, ஏன்?"

"அவர்களிடம் விசுவாசமில்லாமையால் அவர் அங்குப் பல புதுமைகள் செய்யவில்லை." (மத்.13:58)

'',உங்கள் கேள்விக்கு நீங்களே பதில் சொல்லிவிட்டீர்கள்.

இயேசு வாழ்ந்த அந்த காலத்திலும் விசுவாசம் உள்ளவர்களுக்கு  நோய்களைக் குணமாக்கினார்.

இயேசு வாழ்கின்ற இந்த காலத்திலும் விசுவாசம் உள்ளவர்களுக்கு 
நோய்களைக் குணமாக்கிக் கொண்டுதான் இருக்கிறார்.

 வாளியில் தண்ணீர் இருக்கிறது.

அதைக் கோதி நம்மேல் ஊற்றினால்தான் நம் உடல் நனையும். தண்ணீரை பார்த்தவுடன் நம் உடல் நனையாது.

விசுவாசத்தோடு இயேசுவிடம் கேட்பது எல்லாம் கிடைக்கும்."

"எல்லாம் என்றால்?"

", எல்லாம்தான். நமது ஆன்மாவின் மீட்பிற்கு எதெல்லாம் தேவையோ அதெல்லாம் கிடைக்கும்."

"உலக வாழ்விற்கு தேவையான எதையும் கேட்டால் கிடைக்காதோ?"

",நாம் எதற்காக உலகில் வாழ்கிறோம்?"

 " விண்ணகம் செல்ல நம்மை நாமே தயாரிப்பதற்காகத்தான்."

",அதன் பெயர்தான் மீட்புப் பெறுதல். மீட்பு பெற்ற ஆன்மா விண்ணகத்திற்குத்தான் செல்லும்."

"நான் கேட்ட கேள்விக்கு பதிலை என்னிடமிருந்தே வாங்குகிறீர்கள்.

விண்ணக வாழ்வுக்காக அன்றி இவ்வுலக வாழ்வுக்காக மட்டும் கேட்டது கிடைக்குமா?"

",அது ஆன்மீக வாழ்விற்கு  இடைஞ்சலாக இல்லாவிட்டால் அதுவும் கிடைக்கும். ஆனால் விசுவாசத்தோடு கேட்க வேண்டும்.

பைபிள் வாக்கியத்தை கவனியுங்கள்.

'பலர் பின்தொடர அவர்கள் அனைவரையும் குணமாக்கினார்.

இந்த வாக்கியத்தில் இருந்து உனக்கு என்ன புரிகிறது?"


"இயேசுவை பின்தொடர்பவர்கள் அனைவரையும் குணமாக்குவார்."

", 'பின்தொடர' என்ற வார்த்தை உனக்கு ஏதாவது செய்தியை சொல்கிறதா?"

"மத்தேயு இதை எழுதும்போது இயேசுவின் பின்னால்  சென்றவர்கள் (many followed him,) என்ற பொருளில்தான் எழுதினார்.

அவர்கள் நடந்துதான் போயிருப்பார்கள்.

ஆனாலும் பைபிள் வார்த்தைகள் வாசிப்பவர்களுக்கு தேவையான பொருளை அவர்களுக்குள் தூண்டும். (Will inspire)


என்னது மனதில் தூண்டப்பட்டு எழும் பொருள்: இயேசுவை பின்பற்றுகிறவர்கள், அதாவது அவரது போதனைப் படி நடப்பவர்கள்.

இயேசுவிடம் நாம் கேட்டது கிடைக்க வேண்டுமென்றால் முதலில் நாம் அவரது  போதனையை பின்பற்றும் சீடர்களாக மாற வேண்டும்."

", very good. இயேசு அந்தக் காலத்திலும் உடல் நோய்களை குணமாகியது வெறுமனே நோயை குணமாக்குவதற்காக மட்டுமல்ல.

குணமாக்கப் படுகின்றவர்களிடத்தில் விசுவாசத்தை விதைப்பதற்காகத் தான்.

விசுவசித்தவர்கள் மட்டுமே குணமானார்கள்."


"அந்த இறை வாக்கை தியானித்தால்  இன்னொரு  இறைத் தூண்டுதலும் எழும். 


இயேசுவை பின்தொடர்பவர்கள், அதாவது அவரது  போதனைப்படி நடப்பவர்கள்

அவரிடம் எதை கேட்க வேண்டுமோ அதை மட்டுமே கேட்பார்கள்.

அவர்கள் தங்களது உடல் நோயைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

தங்களது பாவங்களுக்கு பரிகாரம் செய்யவும், விண்ணகத்தில் தங்களது பேரின்ப அளவை கூட்டவும் தங்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு ஆசீர்வாதமாகவே உடல் நோயைக் கருதுவார்கள்.

ஆன்ம நோயாகிய பாவத்தில் விழாதிருக்கவும், புண்ணியத்தில் வளரவும்தான் வரம் கேட்பார்கள்.

அது அவர்களுக்கு உறுதியாக கொடுக்கப்படும்.''

 " கேட்டவரமெல்லாம் கிடைக்க வேண்டுமா?
இயேசுவைப் பின்பற்றுங்கள்."

லூர்து செல்வம்.

Sunday, July 18, 2021

"மனுமகன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவர்"  (மாற்கு, 2:28)

"மனுமகன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவர்"  (மாற்கு, 2:28)

உலகத்தின் படைப்பின்போது கடவுள்  "ஏழாம் நாள் ஓய்வு எடுத்தார்" என்ற இறைவாக்கை அடிப்படையாகக் கொண்டு

 யூதர்கள் ஒவ்வொரு வாரமும் ஏழாம் நாளை ஓய்வு நாளாக 
அனுசரித்தார்கள் .

ஒவ்வொரு இறைவார்த்தையிலும்  ஒரு இறைச்செய்தி அடங்கியிருக்கும்.

செய்திதான் (Message) முக்கியமே அன்றி வார்த்தைகள் அல்ல.

பரிசேயர்கள் இந்த இறை வாக்கில் அடங்கி இருக்கும் இறைச் செய்தியை எந்த அளவுக்கு புரிந்து கொண்டார்களோ தெரியவில்லை.

ஆனால் அவர்கள் நடந்துகொண்ட முறையைப் பார்த்தால் தெரிய வேண்டிய செய்தியை சரியாக தெரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

ஏனெனில் அவர்கள் மற்ற நாட்களைப் போலவே 

ஓய்வு நாளிலும் இயேசுவின் செயல்களில் குற்றம் கண்டு பிடிப்பதற்காகவே அவர் பின்னாலேயே அலைந்து கொண்டிருந்தார்கள்.

குற்றம் கண்டு அதனடிப்படையில் அவரைக் கொல்வதுதான் அவர்களது திட்டம்.

இறைமகனை கொல்வதற்காக வழி தேடுவதற்காக ஓய்வு நாள் படைக்கப் படவில்லை என்பது உறுதி.

ஆகவே எதற்கெடுத்தாலும் சட்டத்தையே சுட்டி காண்பிக்கும் பரிசேயர்கள் 

சட்டத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதை மட்டும் அவர்களது செயல்கள் காண்பிக்கின்றன.

"பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன்" என்ற இறை வாக்கின் கருத்தை  அவர்கள் புரிந்து கொள்ளவே இல்லை.

எப்படி இரக்கம்  கலவாத பலியை இறைவன் விரும்பவில்லையோ

 அதேபோல இரக்கம் கலவாக சட்டத்தையும் இறைவன் விரும்பவில்லை.

இரவு பகல் முழுவதும் இறைமகன் கூடவே இருந்த சீடர்களின் பசியின் மேல் இரக்கம் கொள்ளாத பரிசேயர்கள் 

கோதுமை மணிகளை  கசக்கித் தின்ற செயலில் உள்ள சட்டத்தை மட்டுமே பார்த்தார்கள்.

இரக்கச் செயல்களில் குறுக்கே சட்டம் வரக்கூடாது.

"உங்களுள் ஒருவனுடைய மகனோ மாடோ கிணற்றில் விழுந்தால், ஓய்வுநாளென்றாலும் உடனே அவன் தூக்கிவிடமாட்டானோ?"
(லூக்.14:5)

என்று இயேசுவே பரிசேயர்களிடம் கேட்டிருக்கிறார்.

இயேசு இரக்கத்தின் ஆண்டவர்.

அவர் சொல்கிறார்,

"மனுமகன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவர்" என்று.

ஓய்வு நாள் மனுமகனின் நாள் என்றாலே அது இரக்கத்தின் நாள் என்பதுதான் பொருள்.

அதாவது அது படுத்து தூங்கி ஓய்வு எடுக்க வேண்டிய நாள் அல்ல.

சுறுசுறுப்பாக இரக்கத்தின் செயல்களை செய்ய வேண்டிய நாள்.

இரக்கத்தின் செயல்களுக்காகவே ஒதுக்கப்பட்ட நாள்.

மனுக்குலத்தின் மீது இறைமகன் கொண்ட அளவற்ற இரக்கத்தின் காரணமாகவே 

அவர் மனுமகன் ஆகி 

பாடுகள் பட்டு, 

தன்னையே சிலுவை மரத்தில் பலியாக ஒப்புக்கொடுத்தார்.

அந்த இரக்கத்தின் பலியைத்தான்  
நாம் குருவானவர் நிறைவேற்றும் திருப்பலியில் நினைவு கூறுகிறோம்.

நமது ஓய்வு நாளாகிய ஞாயிற்றுக்கிழமையை இரக்கத்தின் நாளாக அனுசரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் 

இறைமகனின் இரக்கத்தை நினைவுகூரும் திருப்பலியில் காலையில் கலந்து கொண்டு 

இரக்கத்தில் நாளாகிய ஓய்வுநாளை ஆரம்பிக்கிறோம்.

ஆண்டவர் அறிவித்த நற்செய்தியின் ஒவ்வொரு வாக்கிலும் அவரின் இரக்கம் அடங்கி இருக்கிறது.

இறை இரக்கத்தின் வெளிப்பாடுதான் இயேசுவின் நற்செய்தி.

நற்செய்தி என்றாலே இரக்கத்தின் செய்திதான்.

ஆண்டவர் தனது சீடர்களை நோக்கி சொன்ன,

"உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்.
16 விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான்,"
(மாற்கு, 16:15,16)

என்ற வாக்கைக் கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும்:

உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவிப்பதன் நோக்கம், "மீட்பு."

மீட்பு இறை இரக்கத்தின் செயல்.
இறைவனின் இரக்கம் இன்றி நம்மால் மீட்பு பெற இயலாது.

இறைவனின் இரக்கப் பெருக்கத்தால்தான் நாம் நமது பாவங்களுக்கு மன்னிப்பு பெறுகிறோம்.

 மன்னிப்பு பெருவதால்தான் மீட்புப் பெறுகிறோம்.

ஆகவே, ஞாயிற்றுக்கிழமை வாசிக்கப்படும் நற்செய்தி வாசகங்களும், குருவானவர் அளிக்கும் விளக்கமும் 

அன்று நாம் செய்யவேண்டிய இரக்கக் செயல்களைத்தானே நோக்கமாக கொண்டவை.

இரக்கத்தின் செய்தியையும் கேட்டுவிட்டு,

இரக்கத்தின் பலியிலும் கலந்து விட்டு,

இரக்கத்தின் ஆண்டவரையே உணவாக உண்டுவிட்டு 

அன்று இரக்கச் செயல்களே இல்லாமல் நாம் நடந்து கொண்டால் 

அன்றைக்கு திருப்பலியில் கலந்து கொண்டதால் நாம் எந்த பயனும் அடையவில்லை.

குளிக்கும் முன்பு இருந்த அழுக்கு குளித்த பின்னும் அப்படியே இருந்தால் குளித்து என்ன பயன்?

இரக்கத்தில் நாளை எப்படி அனுசரிப்பது?

நமது சிந்தனையிலும் சொல்லிலும் இருக்கும் இரக்கம் அன்று செயல்களாக உருப்பெற வேண்டும்.

"பசியாய் இருந்தேன், எனக்கு உண்ணக் கொடுத்தீர்கள். தாகமாய் இருந்தேன், எனக்குக் குடிக்கக் கொடுத்தீர்கள். அன்னியனாய் இருந்தேன், என்னை வரவேற்றீர்கள்.
36 ஆடையின்றி இருந்தேன், என்னை உடுத்தினீர்கள். நோயுற்றிருந்தேன், என்னைப்  பார்க்க வந்தீர்கள். சிறையில் இருந்தேன், என்னைக் காணவந்தீர்கள் " 
(மத்.25:35, 36)

நாம் செய்யவேண்டிய இரக்கச் செயல்களில் சிலவற்றைக் ஆண்டவரே குறிப்பிட்டுக் காண்பித்திருக்கிறார். 

பசியாய் இருப்பவர்களுக்கு உணவு கொடுப்பது,

(வீட்டில் பசியாய் இருக்கும் மனைவி மக்களுக்கு பிரியாணி உணவு போடுவதைப் பற்றி
 ஆண்டவர் சொல்லவில்லை.

பசியாய் இருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு போடக்கூடிய உணவைப் பற்றி ஆண்டவர் சொல்லுகிறார்)

தாகமாய் இருப்பவர்களுக்கு தண்ணீர் கொடுப்பது,

முன் பின் தெரியாதவர்களை வரவேற்று உபசரிப்பது,

ஆடை இல்லாத ஏழைகளுக்கு ஆடை கொடுப்பது,

நோயாளிகளை விசாரித்து ஆறுதல் சொல்வது,

சிறையில் இருப்பவர்களை சென்று பார்ப்பது 

என்று ஒரு சில உதாரணங்களை ஆண்டவர் கொடுத்திருக்கிறார்.

ஆனாலும் நாம் செய்யக்கூடிய நற்செயல்கள் ஏராளம் இருக்கின்றன.

அவற்றில் நம்மால் இயன்றவற்றை ஆண்டவருக்காக ஓய்வுநாளில் செய்ய வேண்டும்.

இவ்வுதவிகள் சட்டங்களுக்கு அப்பாற்பட்டன.

சமீபத்தில்  மறை சாட்சியாக மரித்த 
அருள்திரு ஸ்டேன் சுவாமி அடிகளார் நாட்டின் சட்டங்களை மீறித்தான்   ஆதிவாசிகளுக்கு உதவியாக இருந்தார்.


பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கிறோம்.

பள்ளிக்கூட  ஒழுங்கின் படி காலை ஒன்பது மணிக்கு பள்ளியில் இருக்க வேண்டும்.

வரும் வழியில் முன்பின் தெரியாத ஒரு   ஆள் வழியில் மயங்கி கிடக்கிறார்.

அவருக்கு முதலுதவி செய்துவிட்டு செல்வது  இரக்கத்தின் செயல்.

ஆனால் இரக்கப்பட்டு அந்த ஆளுக்கு உதவி செய்துவிட்டு பள்ளிக்கூடம் போனால்

பள்ளிக்கூட ஒழுங்கை மீறி பிந்தி போக வேண்டியிருக்கும்.

இரக்கத்திற்காக ஒழுங்கை மீறினாலும், 

அதற்காக பள்ளிகூடத்தில் தண்டனை கிடைத்தாலும் கடவுளுக்காக ஒழுங்கை மீறி உதவி செய்யத்தான் வேண்டும்.

இரக்கத்திற்காக செய்யும் செயல் ஆண்டவருக்காக செய்யும் செயல்.
'
மனிதர்கள் மீது இரக்கம் காட்டுபவர் மேல் இறைவனும் இரக்கம் காட்டுவார்.


"இரக்கமுடையோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர்." (மத். 5:7)

லூர்து செல்வம்.

"பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன்"  (மத்.12:7)

"பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன்"  (மத்.12:7) 

", ஏன் தம்பி, கொஞ்ச   நாளா பூசைக்கு வந்தது மாதிரியே தெரிய வில்லை, என்ன காரணம்."

"ஆண்டவர்தான் காரணம்."

", நீ பூசைக்கு வராததற்கு ஆண்டவர்தான் காரணமா?

  உன்னிடம்  வந்து இனிமேல் பூசைக்கு போகாதே என்று சொன்னாரா?"

"ஆமா. பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன்  என்று
ஆண்டவர் தானே சொன்னார்!"

",ஆண்டவர் தன்னையே தந்தைக்கு சிலுவையில் பலியாக ஒப்புக் கொடுத்ததைத்தானே திருப்பலியின் போது நினைவு கூறுகிறோம்!

பைபிளை வாசித்துவிட்டு இறைவார்த்தையை தப்புத்தப்பாக புரிந்து கொள்வதுதான் உங்கள் வேலையா?"

"பலியை அன்று என்று சொன்னாரா இல்லையா?"

",உனது அப்பா எப்போதாவது உனக்கு செலவுக்கு பணம் தந்திருக்கிறாரா? "

"தந்திருக்கிறார்."

", அன்புடன் தந்திருக்கிறாரா?
அல்லது திட்டிக்கொண்டே தந்திருக்கிறாரா?"

"அன்புடன்தான் தந்திருக்கிறார்.
திட்டிக்கொண்டே  தந்தால் பணத்தை நான் வாங்க மாட்டேன்."

", ஏன்?"

"நான் என்னுடைய தந்தையிடமிருந்து அதிகமாக  எதிர்பார்ப்பது அவருடைய அன்பைத்தான். அன்பிற்கு  அடையாளம்தான் அவர் தருகின்ற பணம். 

நான் ஆசைப்படுவது தந்தையின் அன்பிற்குத்தானேயொழிய பணத்திற்கு அல்ல."

",திரும்ப சொல்லு."

"நான் ஆசைப்படுவது தந்தையின் அன்பிற்குத்தானேயொழிய பணத்திற்கு அல்ல."

", இப்போ ஆண்டவர் சொன்னதை சொல்லு."

"பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன்"

", நீ அப்பா பணம் தரும் போது வாங்கி கொள்கிறாய். ஆனால் அன்பு இல்லாமல் பணத்தை தந்தால் வாங்க மாட்டாய்.

இப்போ ஆண்டவர் சொல்வது புரிகிறதா?"

"இப்போ புரிகிறது.

ஆண்டவர் பலியை வேண்டாம் என்று சொல்லவில்லை,

 இரக்கத்தோடு செலுத்தப்படாத பலியை விரும்பவில்லை என்று சொல்கிறார். சரியா?"

'',ஆண்டவரது சிலுவைப் பலி எப்படி பட்டது?"

"புரிகிறது. மனுக்குலத்தின் மீது அவர் கொண்டிருந்த இரக்கத்தின் விளைவுதான் சிலுவைப் பலி.

ஆகவே அது இரக்கத்தின் பலி, இரக்கத்தோடு கூடிய பலி.

ஆகவே இறை தந்தைக்கு பிடித்தமான பலி."

",இனி திருப்பலிக்கு வருவாயா?"

"கட்டாயம் வருவேன்."

",ஆண்டவர் எந்த சூழ்நிலையில்

'பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்றுசொன்னார்?"

" ஆண்டவர் தனது சீடர்களோடு   ஓய்வுநாளில் விளைச்சல்வழியே சென்றார். 

அவருடைய சீடர்களுக்குப் பசியெடுக்க, அவர்கள் கதிர்களைக் கொய்து தின்னத்தொடங்கினர்.

சீடர்கள் பசியின் காரணமாக கதிர்களைக் கொய்து  தின்றதை ஓய்வுநாளை மீறுவதாக குற்றம் சாட்டினார்.

அவர்கள் பசியோடு இருந்த சீடர்கள் மீது இரக்கம் காட்டாமல் சட்டத்தை மட்டும் சுட்டிக் காண்பித்தார்கள். 

ஆண்டவர் இரக்கத்திற்கு முதல் இடம் கொடுப்பவர்.

மனிதர்கள் அவருக்கு விரோதமாக பாவங்கள் செய்திருந்தாலும் சட்டப்படி அவர்களை தண்டியாமல், இரக்கப்பட்டு 

அவர்கள்  பாவத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக அவரே பாடுகள்  படுவதற்காக மனுவுரு எடுத்தார்.

"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே"
(அரு. 3:17)

இரக்கமே இல்லாத சட்டத்தினால் மனிதருக்கு எந்த பயனும் இல்லை.

பரிசேயர்கள் சட்டத்தைக் காரணம் காட்டி குற்றமற்ற சீடர்களை குற்றம் சாட்டிய சூழ்நிலையில்தான்

  'இயேசு பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகின்றேன்' என்பதன் கருத்தை பரிசேயர்கள் புரிந்து கொள்ளவில்லை என்கிறார்.

புரிந்து கொண்டிருந்தால் குற்றமற்றோரைக் கண்டனம் செய்திருக்கமாட்டார்கள்.

இயேசு இரக்கத்தின் காரணமாக
பரிசேயரின் முன்னிலையிலேயே 
நோயாளிகளைக் குணமாக்கியிருக்கிறார்.

இரக்கம் அன்பிலிருந்து பிறந்தது. இறைமகன் அன்பே உருவானவர்.

எப்படி அன்பு செய்வது அவரது இயல்போ அதே போல் தான் இரக்கப்படுவதும் அவரது இயல்பு.

இரக்கத்தின் காரணமாகவே விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணை மன்னித்தார்.


இரக்கத்தின் காரணமாகவே காலில் கண்ணீர் விட்டு அழுத பாவியை மன்னித்தார்


இரக்கத்தின் காரணமாகவே
அவரது மரணத்திற்குக் காரணமானவர்களை மன்னிக்கும்படி தந்தையிடம் வேண்டினார்.


இரக்கத்தின் காரணமாகவே
மனம் திரும்பிய திருடனையே மன்னித்து ஏற்றுக்கொண்டார். 

இரக்கத்தின் காரணமாகவே
அவரை கைது செய்ய வந்த பகைவனின் வெட்டப்பட்ட காதை இயேசு ஒட்ட வைத்தார்.


இரக்கத்தின் காரணமாகவே அவரை மூன்று முறை மறுதலித்த இராயப்பரையே மன்னித்தார்.

இரக்கத்தின் காரணமாகவே நமக்காக அடிபட்டு, மிதிபட்டு, உதை பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, உயிரையும் பலியாக்கினார்.


நம்மீது அவருக்கு உள்ள இரக்கத்தின் காரணமாகவே திவ்ய நற்கருணைப் பேழையில்  இரவு பகலாய் நமக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

இரக்கத்தின் காரணமாகவே பாவசங்கீர்த்தனம் மூலம் நமது பாவங்களை மன்னிக்கிறார்.

இரக்கத்தின் காரணமாகவே
 தன்னையே நமக்கு ஆன்மீக உணவாகத் தருகிறார்.

 நாமும் நமது அயலானுடன் உள்ள உறவில்  இரக்கத்திற்கு முதலிடம் கொடுப்போம்.

பசித்தவர்களுக்கு உணவு கொடுப்போம்.

உடை இல்லாதவர்களுக்கு உடை கொடுப்போம்.
 
நோயுற்றோருக்கு ஆறுதல் சொல்லுவோம்.

   நமது வாழ்நாள் முழுவதும் நமது சிந்தனை, சொல், செயல் அனைத்திலும் இரக்கமே ஆட்சி புரிவதாக.

யார் குற்றவாளி என்று தீர்ப்புக் கூற நமக்கு அதிகாரம் இல்லை.

 ஆனால் எப்படிப்பட்டவராய் இருந்தாலும் அவர்மேல் இரக்கப்பட நமக்கு முழு உரிமையும் கடமையும் இருக்கிறது.

கீழே விழுந்து கிடப்பவர்களை இரக்கத்துடன் தூக்கி விட வேண்டுமே தவிர 

அவர்கள் விழுந்ததற்கான காரணத்தை ஆராய்ந்து கொண்டிருக்க கூடாது.

உலகத்தை ஆட்சி செய்வதற்கான உரிமை சட்டத்தை விட இரக்கத்திற்கே அதிகம் உள்ளது.

இரக்கமற்ற சட்டத்திற்கு தண்டிக்க மட்டுமே தெரியும்.

இரக்கத்திற்கு மன்னிக்க மட்டுமே தெரியும்.

இயேசு உலகிற்கு வந்தது பாவிகளை தீர்ப்பிடுவதற்கு அல்ல, அவர்களை  மீட்கவே, அதாவது பாவங்களை மன்னிக்கவே.

இரக்கம் உலகை ஆட்சி செய்தால் அனைவரது வாழ்க்கையும் ஏற்றம் பெறும். 

லூர்து செல்வம்.

Friday, July 16, 2021

" மனமிரங்கி நெடுநேரம் போதிக்கலானார்."(மாற்கு. 6:34)

" மனமிரங்கி நெடுநேரம் போதிக்கலானார்."
(மாற்கு. 6:34) 



நண்பர் ஒருவருக்கு இரவு வெகுநேரம்வரை தூக்கம் வரவில்லை.

உருண்டு புரண்டு   படுத்துப் பார்த்தார். கண்ணை மூடிக்கொண்டு முயன்று பார்த்தார். தூக்கம் வரவில்லை.

இரவு மணி 12 ஆகிவிட்டது.

அருகில் வைத்திருந்த Cell phone ஐக் கையில் எடுத்து ஒரு நம்பருக்கு phone செய்தார்.

பங்குக் குருவானவர் வெளியூரில் இரவு விசாரணைப் பூசை வைத்து விட்டு, 
bike ல் ஐந்து மைல் பயணம் செய்து, 
அறை வீட்டிற்கு வந்து,
களைப்போடு களைப்பாக குளித்து விட்டு,
 இரவு உணவு அருந்திவிட்டு, மறுநாள் பூசை பிரசங்கத்திற்கு குறிப்புகள் எடுத்து விட்டு, 
இரவு செபம் முடித்துவிட்டு, களைப்புடன் படுக்கைத்துச் செல்லும்போது மணி பன்னிரெண்டு.

படுத்து தலை சாய்க்கும் போது செல்போன் அலறியது.

"இந்நேரம் யாராக இருக்கும்?" என்று எண்ணிக்கொண்டே
 
Cell phone ஐக் கையில் எடுத்தார்.

"Hello! உங்களுக்கு சமாதானம்.
Parish priest here."

"வணக்கம் Father! நான் லூர்துசாமி பேசுகிறேன்."

"சொல்லுங்கள்."

"சாமி, எவ்வளவோ முயன்று பார்த்தேன் தூக்கம் வரவில்லை." 

''அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? உங்கள் தூக்கத்திற்காக ஜெபம் சொல்லுகிறேன்.'' 

"சாமி, வேண்டாம். ஒரு பிரசங்கம் வையுங்கள்."

"கொஞ்சம் பொறுங்கள்."

youtube ஐ எடுத்து, ஏதோ ஒரு சாமியாரின் பிரசங்கத்தை வந்த நம்பருக்கு Share செய்துவிட்டு படுத்துக் கொண்டார்.

பயங்கர களைப்பு. அப்படியே தூங்கி விட்டார்.

நண்பரும் youtube பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டே தூங்கிவிட்டார். 


இயேசு சென்ற இடமெல்லாம் அவரது பிரசங்கத்தை கேட்க மக்கள் கூட்டம் கூட்டமாக (In multitudes) சென்றார்கள்.

 சென்ற மக்கள் இயேசுவின் போதனையை ஆர்வத்தோடு கேட்டார்கள்.

ஆனால் அவரை பின்பற்றுகிற நாமோ தூங்குவதற்கென்றே பிரசங்கத்தைக் கேட்க போகிறோம்.

சிலருக்கு பிரசங்கம் தூக்க மாத்திரை!

திருப்பலிக்கு போகும்போதே நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது:

1.பாவம் இல்லாத நிலையில் திருப்பலி காண வேண்டும்.

பாவம் இருக்குமானால் பாவசங்கீர்த்தனம்  மூலம் பாவமன்னிப்பு பெற்றுக் கொள்ள வேண்டும்.

2.திருப்பலியின் போது வாசிக்கப்படும் வாசகங்களை கூர்ந்து கவனிக்க வேண்டும். 

3. அன்றைய வாசகங்களை குருவானவர் பிரசங்கத்தில்  விளக்கும்போது கூர்ந்து கவனிக்க வேண்டும்.

4. நடுப் பூசையில் குருவானவர் இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் ஒப்புக்கொடுக்கும் போது   நாம் நூற்றுக்கு நூறு குருவானவரோடு ஒன்றித்திருக்க வேண்டும்.

5.இயேசுவை உணவாக உண்கிறோம் என்ற உணர்வோடு திருப்பந்தியில் கலந்து கொள்ள வேண்டும்.

6.இயேசுவை உணவாகப் பெற்றபின் அவரோடு பேச வேண்டும். உரையாடலின்போது
இயேசுவுக்கு நன்றி கூற வேண்டும்.

இத்தனை செயல்களையும் முழு மனத்தையும் செலுத்தி செய்ய வேண்டும்.

நமது ஆண்டவரின் வாழ்க்கையே திருப்பலி நேரத்தில் நமது உள்ளத்தில் வாழப்படுகிறது'

நற்செய்தி அறிவிக்க ஆரம்பித்த காலத்திலிருந்து கல்வாரி மலையில் இயேசு நமக்காக பலியான நிகழ்வு வரை  நாம் இயேசுவோடு ஒன்றித்து பயணிக்கிறோம். 

பிரசங்கத்தின் போது நாம் தூங்கினால் இயேசுவின் நற்செய்தியை தூங்கிக்கொண்டே கேட்டுக்கொண்டு அவர் பின்னாலே போனதற்கு சமம்.

இயேசு நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்த போது அவரது வார்த்தைகளுக்கு செவிமடுத்துக் கொண்டிருந்த மக்கள் எல்லோரும் குறட்டைவிட்டு தூங்கிக்கொண்டிருந்தால் ஆண்டவர் அவர்களைப் பார்த்து என்ன சொல்லியிருப்பார் என்று கற்பனை செய்து பார்ப்போம்.

உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள் என்ற இயேசுவின் அறிவுரைக்கு ஏற்பவே குருக்கள் திருப்பலியின்போது நமக்கு திருவுரை ஆற்றுகிறார்கள்.

பிரசங்க மேடையிலிருந்து பேசுபவர் நம் ஆண்டவர் இயேசுவே என்ற நினைவோடு நாம் பிரசங்கத்தை கேட்டுக்கொண்டிருந்தால் தூக்கம் வராது,

ஆனால் நாம் நேர போக்கிற்காக திருப்பலிக்கு வந்திருந்தால் தூக்கம் வரத்தான் செய்யும்.

நமது நோய்க்கு மருத்துவம் பெறுவதற்காக மருத்துவமனைக்குச் சென்று

 டாக்டர் என்னென்ன மருந்தை, எப்பெப்போ சாப்பிட வேண்டும் என்று சொல்லும்போது தூங்கிக்கொண்டிருந்தால்

நம்மால் எப்படி ஒழுங்காக மருந்தை சாப்பிட முடியும்?

எப்படி நோய் குணமாகும்?

மருத்துவமனைக்கு  சென்றும் நமக்கு எந்த பயனும் இல்லை.

திருப்பலியின் போது வாசகங்களில் ஆண்டவர் நமது மீட்பிற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்ற அறிவுரை தருகின்றார்.

நாம் அதையும் கூர்ந்து கவனிப்பதில்லை.

இயேசுவின் அறிவுரையை குருவானவர் விளக்குகிறார்.

அப்போதும் தூங்கிக் கொண்டிருந்தால் நம்மால் இயேசுவின் போதனைப்படி எப்படி வாழ முடியும்?

இயேசுவின் போதனைப்படி வாழாவிட்டால் எப்படி மீட்பு கிடைக்கும்?

பிரசங்க நேரத்தில் தூங்கிக்கொண்டிருந்தால்  நாம் பூசைக்கு செல்வதால் எந்தவித ஆன்மீகப் பயனும் இல்லை.

சிலர் பிரசங்க நேரத்தில் தூங்க மாட்டார்கள்.

ஆனால் பிரசங்கம் ஆரம்பித்தவுடன் எழுந்து கோவிலை விட்டு வெளியே போய்விடுவார்கள்.

பிரசங்கம் முடிந்தவுடன் கோவிலுக்குள் வருவார்கள்,

இறைவாக்கிற்கு  மரியாதை கொடுக்காதிருப்பது இறைவனுக்கு மரியாதை கொடுக்காதிருப்பதற்குச் சமம்.

சிலர் பிரசங்கத்தைக் கவனிப்பார்கள் ஆனால் பிரசங்கத்தைக் கவனிக்க மாட்டார்கள்.

அதெப்படி?

பிரசங்கத்தில் கவனிப்பார்கள். ஆனால் பிரசங்கத்தில் கருத்தைக் கவனிக்க மாட்டார்கள்.

அதற்கு பதிலாக சுவாமியாரின் மொழி நடையை கவனிப்பார்கள்.

"சாமியார் அழகு தமிழில் பேசினார்.
சரியாக தமிழ் பேசத் தெரியவில்லை. 
கருத்தை  விளக்க தெரியவில்லை.
நகைச்சுவையாகப் பேசினார்.
பிரசங்கம் போரடித்தது.
நேரம் போனதே தெரியவில்லை.
இவ்வளவு நேரம் பேசியிருக்கக் கூடாது."

என்றெல்லாம் விமர்சனம் செய்து கொண்டிருப்பார்கள்.

என்ன பேசினார் என்பதை மட்டும் கவனிக்க மாட்டார்கள்.

இவர்களுக்கும் இறை வார்த்தையால் எந்த பயனும் கிட்டவில்லை.

மருத்துவமனைக்கு செல்பவர்கள் மருத்துவத்தில் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவரை விமர்சிப்பதில் கவனம் செலுத்தினால் 
 மருத்துவத்தால் பயனில்லை.

பிரசங்கத்தின் கருத்துக்களை கூர்ந்து கவனித்து அதை தங்களது வாழ்வாக்குபவர்கள் இயேசு கொண்டு வந்த மீட்பை பெறுவார்கள்.

என்னுடைய அம்மாவுக்கு எழுத வாசிக்க தெரியாது.  ஆகவே பைபிளை வாசித்ததேயில்லை.

ஆனால் தேவ சாஸ்திரம் படித்தவர்களுக்கு நிகராக இறையியல் பேசுவார்கள்.

அவர்களிடம் இருந்ததெல்லாம்

 தியானப் பிரசங்கங்கள், திருப்பலி  பிரசங்கங்கள் ஆகியவற்றை கேட்ட அறிவு மட்டும்தான்.

எனது மூத்த சகோதரர் குருவானவர் ஆனதற்கு காரணமே என்னுடைய அம்மா கற்றுக் கொடுத்த ஞானோபதேசம்தான்.

 எழுத வாசிக்க தெரியாதவர்களுக்கு பங்கு சாமியார்தான் பைபிள்!

லூர்து செல்வம்.

Thursday, July 15, 2021

என்னைவிடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன் எனக்கு ஏற்றவன் அல்லன். என்னைவிடத் தன் மகனையோ மகளையோ அதிகம் நேசிக்கிறவனும் எனக்கு ஏற்றவன் அல்லன்." (மத்.10:37)(தொடர்ச்சி)

"என்னைவிடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன் எனக்கு ஏற்றவன் அல்லன். என்னைவிடத் தன் மகனையோ மகளையோ அதிகம் நேசிக்கிறவனும் எனக்கு ஏற்றவன் அல்லன்." (மத்.10:37)

(தொடர்ச்சி)

",இறைவனுக்காக செய்யப்படும் அன்பே உண்மையான அன்பு."

"என்னையே நான் நேசிக்க வேண்டியது இறைவனுக்காக மட்டுமே , சரியா?"

'',கரெக்ட். நாம் இறைவனுக்காக படைக்கப்பட்டிருப்பதால் நமது வாழ்வின் ஒவ்வொரு அசைவும் இறைவனுக்காக மட்டுமே இருக்க வேண்டும்.

நாம் மூச்சு விடுவது கூட இறைவனுக்காக மட்டுமே இருக்க வேண்டும்.

இறைவனுக்காக செய்யப்படும் ஒவ்வொரு செயலுக்கும்

 அது மிகச் சிறியதாக இருந்தாலும் சரி 

மிகப் பெரியதாக இருந்தால் சரி,

 விண்ணகத்தில் சன்மானம் உண்டு.

ஆகவேதான் காலையில் எழுந்தவுடன் 

தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் 

அன்றைய நாளின் நமது நடவடிக்கைகளை எல்லாம் இறைவனுக்கு ஒப்புக் கொடுத்து விடுகிறோம்.

அன்பு புரியும் ஒவ்வொரு செயலின் போதும் இறைவன் நமது ஞாபகத்தில் இருக்க வேண்டும்.

அதாவது ஒவ்வொரு நாளையும் இறைவனுடைய சன்னிதானத்தில் வாழ வேண்டும்.

நமது உலகைச் சார்ந்த செயல்கள் கூட இறைவனுக்காக செய்யப்படும்போது அவை இறைவனைச் சார்ந்த ஆன்மீக செயல்களாக மாறிவிடுகின்றன.


நமது அயலானை நேசிக்க.
 வேண்டும்.

எதற்காக?

நம்மைப் படைத்த அதே தந்தையால் அவனும் படைக்கப்பட்டிருக்கிறான் என்பதற்காக மட்டும்.

அதாவது இறைவனுக்காக மட்டும், 
நமது பெற்றோர் உட்பட அனைவரையும் நேசிக்க வேண்டும்.

"உன் கடவுளாகிய ஆண்டவருக்கு முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் முழு மனத்தோடும் அன்பு செய்வாயாக."
(மத்.22:37)

என்று இயேசு கட்டளை கொடுத்திருக்கிறார்.


அன்பின் நிமித்தம் நமது முழு உள்ளத்தையும், முழு ஆன்மாவையும், முழு மனத்தையும் இறைவனுக்கு கொடுத்து விட வேண்டும்.

நமது முழு அன்பையும் இறைவனுக்குக் கொடுத்து விடுகிறோம்.

 அதன்பின் அவருக்காக அவரது பிள்ளைகளையும் அன்பு செய்கிறோம்.

இப்போது ஒரு கேள்வி எழும்.

நமது முழு அன்பையும் இறைவனுக்குக் கொடுத்து விட்டோமே. பிறகு, எந்த அன்பை வைத்து நமது அயலாரை அன்பு செய்ய? 

ஒரு சிறிய ஒப்புமை:

வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது.

 நம்மிடம் ஒரு குடை இருக்கிறது.

 அதை முழுவதுமாக தந்தையிடம் கொடுத்து விடுகிறோம்.

 அப்புறம் நாமும் நமது உடன் பிறந்தோரும் அந்த குடைக்குள் சென்று விடுகிறோம்.

ஒரே குடைக்குள் குடும்பத்தினர் அனைவரும் சென்று விடுகிறோம்.

அன்பு ஒன்று தான்.

அதை முழுமையாக இறைவனிடம் கொடுத்து விடுகிறோம்.

 அப்புறம் நமது அயலானை அந்த அன்பிற்குள் கொண்டு வந்து விடுகிறோம்.

நமது இறையன்பு வட்டத்திற்குள் தான் பிறரன்பு செயல்படுகிறது.

நமது இறையன்பிற்குள்தான் 
பிறரன்பும் இருக்கிறது.  

இறையன்பை எடுத்து விட்டால் பிறர் அன்பும் இல்லை.

நமது முழுமையான இறையன்பிற்குள் பிறரன்பும் 
வந்துவிடுவதால் 

இறைவனை அன்பு செய்து கொண்டே நமது பிறரையும் அன்பு செய்ய முடிகிறது.

 அதுமட்டுமல்ல பிறருக்கு செய்வதையெல்லாம் இறைவனுக்கே செய்வதாகவும் ஆகிவிடுகிறது.

அதனால் தான் இயேசு 'எனது சகோதரருக்கு நீங்கள் செய்வதையெல்லாம் எனக்கே செய்கிறீர்கள்' என்று கூறுகிறார்.

மேலும் நமது அன்பு முழுவதையும் முழுமனதோடு இறைவனுக்கு கொடுத்துவிட்டதால் நாம் இறைவனையே எல்லாருக்கும் மேலாக அன்பு செய்கிறோம்.

மற்றவர்களை இறைவனுக்காகவே அன்பு செய்கிறோம்.

இறைவனை இறைவன் என்பதற்காக அன்பு செய்கிறோம்.

 மற்றவர்களை இறைவனது பிள்ளைகள் என்பதற்காக மட்டும் அன்பு செய்கிறோம்.

ஆகவே இறைவனைவிட அதிகமாக  வேறு யாரையும்,

 தாயையும், தந்தையையும் கூட,
 அன்பு செய்யவில்லை.

யார் மீது உள்ள அன்பும் இறைவன் மீது உள்ள அன்பிற்கு ஈடாகாது."


"கொஞ்சம் பொறுங்கள். ஒரு சிறு சந்தேகம். 

 இறை நம்பிக்கை இல்லாதவர்கள்கூட மற்றவர்களை நேசிக்கிறார்களே.

மற்றவர்களுக்கு சேவையும் செய்கிறார்களே.
  
அப்போ அது அன்பு இல்லையா?"

",அது உலக அன்பு. இறைவனது சன்மான வட்டத்திற்குள் அது வராது.

அரசாங்கத்தால் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் வங்கியில் செல்லும்.

அரசாங்கத்தால் அச்சடிக்கப்படாத
ரூபாய் நோட்டுகள் வங்கியில் செல்லாது.

அதேபோல்,

இறையன்பிலிருந்து பிறந்த 
பிறரன்பு மட்டுமே விண்ணகத்தில் செல்லும்.

இறையன்போடு சம்பந்தம் இல்லாத அன்பு விண்ணகத்தில் செல்லாது.

விண்ணகம் இறைவனுக்கும், அவரோடு சம்பந்தம் உள்ளவர்களுக்கும் மட்டுமே உரியது.

இறைவனை மறுப்பவர்களுக்கு உரியது அல்ல.

இறைவனை மறுப்பவர்கள் யாருக்கு என்ன சேவை செய்தாலும் அது இறைவனுக்கு செய்யும் சேவை ஆகாது.

வெறும் மனித சேவை மட்டுமே."

"அன்பு ஒரு பண்பு. அதை அளப்பதற்கு நம்மிடம் எந்த அளவுகோலும் இல்லை.

அப்படி இருக்கும்போது மற்றவர்களைவிட இறைவனை அதிகமாக அன்பு செய்கிறோம் என்பதை எப்படி கண்டு கொள்வது?"

",அன்பினை அளக்க இறைவனால் மட்டுமே முடியும். 

ஏனெனில் நாம் அவர் மீது நாம் கொண்டுள்ள அன்பின் அளவிற்கு ஏற்ப நமக்கு சன்மானம் தரப்போகின்றவர் அவரே.

நம்மால் அன்பினைப் பார்க்க முடியாவிட்டாலும்

 யார் மீது நாம் கொண்டுள்ள அன்பு 

யார் மீது நாம் கொண்டுள்ள அன்பை விட 

 அதிகமானது அல்லது குறைவானது என்பதை உணர முடியும்.

உதாரணத்திற்கு,

ஒரு மகன் தன் பெற்றோரை விட்டு விட்டு காதலி பின்னால் ஓட தயாராக இருந்தால் 

அவனது காதலி மேல் கொண்டுள்ள அன்பை விட பெற்றோர் மீது கொண்டுள்ள அன்பு குறைவானது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

ஒருவன் தனக்கு தேவ அழைத்தல் இருக்கிறது என்பதை உணர்ந்த பின் 

தனது பெற்றோர் அவனை தடுத்தும் கேட்காமல் அழைத்தலை ஏற்றுக் கொண்டால் அவன் தனது பெற்றோரை விட இறைவனை அதிகம் நேசிக்கிறான்.

ஆனால் பெற்றோர் தடுத்தவுடன்  
தேவ அழைத்தலைக் 
கைவிட்டானென்றால் அவன் கடவுளைவிட பெற்றோரை அதிகம் நேசிக்கிறான்.

வெகுநேரம் தூங்குவதற்காக காலைத் திருப்பலிக்குச் செல்லாவிட்டால் அவன் இறைவனை நேசிப்பதை விட தன்னையே அதிகமாக நேசிக்கிறான்.

இறைவனை எல்லோருக்கும் மேலாக நேசிப்பவன்
இறைவனுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்ய தயாராக இருப்பான்.

வேதசாட்சிகள் தங்கள் உயிரை நேசிப்பதை விட இறைவனை அதிகமாக நேசித்ததால்தான் இறைவனுக்காக தங்கள் உயிரையே தியாகம் செய்தார்கள்.

நாம் உலகில் உள்ள எல்லாப் பொருள்களையும், எல்லா மனிதர்களையும் நேசிப்பதை விட தன்னை அதிகம் நேசிக்க வேண்டும் என்று இறைவன் விரும்புகிறார்.

ஆகவேதான் என்னைவிடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன் எனக்கு ஏற்றவன் அல்லன் என்று இயேசு சொல்கிறார்."

''படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக, மனுவை படைத்தான் தனக்காக."

நாம் வாழ்வதும், நேசிப்பதும் இறைவனுக்காக மட்டுமே.

லூர்து செல்வம்.

"என்னைவிடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன் எனக்கு ஏற்றவன் அல்லன். என்னைவிடத் தன் மகனையோ மகளையோ அதிகம் நேசிக்கிறவனும் எனக்கு ஏற்றவன் அல்லன்." (மத்.10:37)

"என்னைவிடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன் எனக்கு ஏற்றவன் அல்லன். என்னைவிடத் தன் மகனையோ மகளையோ அதிகம் நேசிக்கிறவனும் எனக்கு ஏற்றவன் அல்லன்." (மத்.10:37)

"அண்ணாச்சி. ஒரு சின்ன சந்தேகம்."

", கேள்."

"இயேசுவை நேசிக்க வேண்டும், ஏனென்றால் அவர் கடவுள், நம்மைப் படைத்தவர் , 

நமது அயலானை நேசிக்க வேண்டும் ஏனென்றால் அவன் இறைவனில் நமது சகோதரன்.

நேசிக்க வேண்டும். சரி.

 ஏன் இயேசுவை  மற்ற எல்லாரையும் விட அதிகமாக நேசிக்க வேண்டும்"

",நீ பள்ளிக் கூடத்திற்கு போகிறாய்.
எதற்காகப் போகிறாய்?"

"கல்வி கற்க."

",கல்வி கற்பதற்காக மட்டும்தானா? வேறு எதற்காகவுமா?"

"பள்ளிக்கூடத்தில் 
 வேறு எத்தனையோ காரியங்களை செய்கிறோம். 

நண்பர்களோடு பேசுகிறோம். சாப்பிடுகிறோம். விளையாடுகிறோம்.

ஆனால் இதற்காகவெல்லாம் பள்ளிக்கூடத்திற்கு போகவில்லை.

கல்வி கற்பது மட்டும்தான் பள்ளிக்கூடத்திற்கு செல்வதன் நோக்கம்."

", very good. வகுப்பறையில் பாடம் கற்கிறாய். மத்தியானம் ஓய்வு நேரத்தில் சாப்பிடுகிறாய். நேரம் கிடைக்கும்போது நண்பர்களோடு பேசுகிறாய்.

படிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பாயா? மற்ற காரியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பாயா?"

"படிக்கத்தானே போகிறேன்! ஆகவே படிப்பிற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பேன்."

",படிப்பைவிட  சாப்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால்,

அதாவது வகுப்பில் இருக்கும்போது கூட சாப்பாட்டை அள்ளி வைத்துக் கொண்டிருந்தால், 

ஆசிரியர் என்ன சொல்லுவார்?"

"படிப்பைவிட சாப்பாடு தான் முக்கியம் என்றால் வீட்டிலிருந்து சாப்பிட்டுக்கொண்டே இருந்திருக்கலாம் அல்லவா? எதற்காக பள்ளிக்கூட வந்தாய்? என்று கேட்பார்."

", Correct.  உனது வயது என்ன?"

"15."

",17 ஆண்டுகளுக்கு முன்னே நீ எங்கே இருந்தாய்?"

"நானே இல்லை."

", ஒன்றுமே இல்லாதிருந்த நீ எப்படி உலகிற்குள் வந்தாய்?"

"விஞ்ஞான ரீதியாக சொல்ல வேண்டுமென்றால் அம்மா என்னை பெற்றபோது உலகிற்குள் வந்தேன்.

ஆன்மீக ரீதியாக சொல்ல வேண்டுமென்றால் இறைவன் என்னை படைத்ததால் உலகிற்குள் வந்தேன்."


",ஆன்மீக ரீதியாக இறைவன் உன்னை எதற்காகப் படைத்தார்? அதாவது,

 எந்த நோக்கத்திற்காக படைத்தார்?"

"இறைவனை அறிந்து,

 அவரை நேசித்து,

 அவருக்கு சேவை செய்து,

 அவரோடு நித்திய வாழ்வு  வாழ்வதற்காக என்னைப் படைத்தார்."

",அதில் எந்தவித சந்தேகமும் இல்லையே?"

"இல்லை, அதுதான் எனது விசுவாசம்"

",இறைவனை அறிய வேண்டும், அவரை நேசிக்க வேண்டும், அவருக்கு சேவை செய்ய வேண்டும், அவரோடு நித்திய வாழ்வு வாழ வேண்டும். வாழ வேண்டும். 

இறைவன் நம்மை   படைத்ததற்கு, இதைத் தவிர வேறு ஏதாவது நோக்கம் இருக்கிறதா?''

"நமது விசுவாச அடிப்படையில் வேறு நோக்கம் எதுவும் இல்லை."

",இது மட்டும் நோக்கம் என்றால், நாம் இந்த உலகில் வாழ்கின்றோமே.   அது எதற்காக?" 

"நான் கேள்வி கேட்டால் நீங்கள் பதில் சொல்வதற்குப் பதிலாக நீங்களே கேள்வி கேட்டுக்கொண்டே வருகிறீர்கள்.

 நான்தான் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்."

",உனக்கு தெரியாததைத்தான் நான் சொல்ல வேண்டும். தெரிந்ததை நீ தான் சொல்ல வேண்டும். இப்போ சொல்லு, நாம் எதற்காக இவ்வுலகில் வாழ்கிறோம்?

அதாவது இறைவனை அறிவதையும், நேசிப்பதையும் தவிர வேறு எதற்காக இவ்வுலகில் வாழ்கிறோம்?"

"அவருக்கு சேவை செய்வதற்காக என்று நினைக்கிறேன்."
 
", நீ நினைப்பது முற்றிலும் சரி.
இறைவனுக்கு சேவை செய்வது எதில் அடங்கியிருக்கிறது?"

" இறைவனுக்கு சேவை செய்வதற்காகத்தான் அவர் நமக்கு இந்த உலகையும் அதில் உயிர் வாழ்வன அனைத்தையும் நமக்கு தந்திருக்கிறார்.

தந்தையால் படைக்கப்பட்ட அனைத்தையும் சிந்தனையாலும், சொல்லாலும் ,செயலாலும் நேசிப்பதில்தான் இறைவனுக்கு நாம் செய்யும் சேவை அடங்கியிருக்கிறது."

",அப்போ நீ என்னிடம் சந்தேகம் கேட்கவில்லை."

"சந்தேகம்தான் கேட்டேன்.

 ஆனால் நீங்கள் ஆசிரியர் வேலை பார்ப்பவர் ஆயிற்றே.

 மாணவர்களிடம் கேள்வி கேட்டு பதில் வரவழைப்பதும் ஒரு போதனா முறைதானே. 

சரி, தொடர்ந்து கேளுங்கள்.

 நான் முடிந்தவரை பதில் சொல்கிறேன்.

 முடியாதபோது நீங்கள் சொல்லுங்கள்."

",படைக்கப்பட்ட  அனைத்தையும் எப்படி நேசிப்பது?"

"முதலில் இறைவனால் படைக்கப்பட்ட இயற்கையை நேசிக்க வேண்டும்."

",  இயற்கையை   நேசிக்க வேண்டும் என்று இயேசு சொன்னதாக தெரியவில்லையே? அது அவர் அளித்த இரண்டு கட்டளைகளில் அது இல்லையே?"

"உன்னை நேசிப்பது போல உனது அயலானையும் நேசி என்று இயேசு சொல்லி இருக்கிறார் அல்லவா ?"

", ஆமா."

"நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள்?"

",வீட்டில் வசிக்கிறேன்."

"உங்கள் வீட்டை யாராவது இடித்து நொறுக்கி விட்டால் நீங்கள் சந்தோஷப் படுவீர்களா? வருத்தப்படுவீர்களா?"

",கட்டாயம் வருத்தப்படுவேன்" 

"உங்கள் வீடு இயற்கை பொருள்களால் ஆனது தானே!

இயற்கையை நேசிக்காதவன்தான்  இயற்கையில் ஆன பொருள்களுக்கு சேதம் விளைவிப்பான். 

நாம் இயற்கை பொருள்களை அழிப்பது உண்மையில் அதில் வாழும் மக்களை நேசிக்காததிற்கு சமம்.

உதாரணத்திற்கு சென்னையில் ஏரிகளை அழித்து வீடுகள் கட்டியதால் தானே ஆயிரக்கணக்கானோர் மழை நேரத்தில் வீடு இல்லாமல் தவிக்கிறார்கள்?

அணு ஒரு இயற்கைப் பொருள்.

 அதை மனிதன் நேசிக்காததினால்தான் அதைக்கொண்டு அழிவுக்குரிய ஆயுதங்கள் செய்து 

உலகப் போர்களின்போது கோடிக்கணக்கான மனித உயிர்களை கொன்று குவித்தான்.

" அவர்களை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகிப் பூமியை நிரப்பி அதனைக் கீழ்ப்படுத்துங்கள்: 

கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், பூமியின் மீது அசைந்து உலாவும் உயிரினங்கள் அனைத்தையும் ஆண்டு கொள்ளுங்கள் என்றார்."
(ஆதி. 1:28)


இறைவன் இயற்கையை ஆளும்படி உத்தரவிட்டார். ஆனால் மனிதன் அதை அழித்துக் கொண்டிருக்கிறான்.

இயற்கையை அளிப்பதன் மூலம் அதில் வாழும் இறைவனின் பிள்ளைகளையும் அழிக்கிறான்."

",ஒரு மிக முக்கியமான கேள்வி. இயற்கையை எதற்காக நேசிக்க வேண்டும்?" 

''அது மனிதர்களுக்கு உதவியாக இருப்பதால்."

",தவறு.

முதன் முதல் நீ கேட்க கேள்வி எது?"

"ஏன் இயேசுவை  மற்ற எல்லாரையும் விட அதிகமாக நேசிக்க வேண்டும்"

",இப்பொழுது நீ செய்த 
தவறினால்தான் அந்தக் கேள்விக்கு உனக்குப் பதில் தெரியவில்லை.

இயற்கையை நீ நேசிக்க வேண்டியது மனிதனுக்காக அல்ல.

இயற்கையை மட்டுமல்ல நீ நேசிக்க வேண்டிய எதையும் நேசிக்க வேண்டியது மனிதனுக்காக அல்ல,

 இறைவன் ஒருவருக்காக மட்டுமே நேசிக்க வேண்டும்.

உன் தந்தையாக இருந்தாலும் சரி, 

 தாயாக இருந்தாலும் சரி, 

 சகோதர, சகோதரிகளாக இருந்தாலும் சரி,

 நண்பர்களாக இருந்தாலும் சரி,

 யாராக இருந்தாலும் சரி அவர்களை நேசிக்க வேண்டியது இறைவனுக்காக மட்டுமே.


இறைவனுக்காக செய்யப்படும் அன்பே உண்மையான அன்பு."

(தொடரும்)

லூர்து செல்வம்

Wednesday, July 14, 2021

"கொராசின் நகரே, உனக்கு ஐயோ கேடு! பெத்சாயிதா நகரே, உனக்கு ஐயோ கேடு! ஏனெனில், உங்களிடம் செய்த புதுமைகள் தீர், சீதோனில் செய்யப்பட்டிருப்பின், முன்பே கோணி உடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பர்."(மத்.11:21)

"கொராசின் நகரே, உனக்கு ஐயோ கேடு! பெத்சாயிதா நகரே, உனக்கு ஐயோ கேடு! ஏனெனில், உங்களிடம் செய்த புதுமைகள் தீர், சீதோனில் செய்யப்பட்டிருப்பின், முன்பே கோணி உடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பர்."
(மத்.11:21)

 ஒரு நாள் முதல் பிரிவு வேளையின்போது  ஒரு மாணவனுடைய தந்தை வகுப்பிற்குள் நுழைந்தார்.

"என்ன, ஐயா, பையனைப் பார்க்க வேண்டுமா?"

"இல்லை, உங்களைத்தான் பார்க்க வேண்டும்" 

"என்ன விஷயம் சொல்லுங்கள்."

"சார், நீங்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக சம்பளம் வாங்குகின்றீர்களா, அல்லது மாணவர்களை சாபம் போடுவதற்காக   சம்பளம் வாங்குகின்றீர்களா?"

சம்பந்தப்பட்ட மாணவனை     அழைத்து,

"உனக்கு என்னடா பிரச்சினை?"

"நேற்று இப்படி படிக்காமல் வந்தால் வாழ்க்கையில் உருப்பட மாட்டாய் என்று சொன்னீர்கள் அல்லவா?"

"இதற்குப் பெயர்தான் சாபமா?

இங்கே பாருங்கள், ஐயா, மாணவர்கள் ஒழுங்காகப் படிக்காவிட்டால் அல்லது தவறு செய்தால் 

அவர்களை படிக்க வைப்பதற்காக அல்லது திருத்துவதற்காக சில கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி 

கண்டிப்பது ஆசிரியர்களது வழக்கம்.

ஆசிரியர்கள் கண்டிப்பது மாணவர்களது நலனுக்காகத்தான்.

என்மேல் நம்பிக்கை இருந்தால் உங்கள் பையனை என்னிடம் ஒப்படைத்து விட்டு போங்கள்.

இல்லாவிட்டால் உங்களுக்கு விருப்பமான ஆசிரியரிடம் அவனைச் சேருங்கள்."

"அப்பா நான் இங்கேயே இருக்கிறேன்.
எல்லா ஆசிரியர்களும் கண்டிக்கதான்  செய்வார்கள்." 

"பிறகு ஏண்டா என்னிடம் வந்து ஆவலாதி  சொன்னாய்?"

"இனிமேல் சொல்ல மாட்டேன்."

அடுத்து ஒன்றும் சொல்லாமல் அவர் போய்விட்டார்.

ஆசிரியர் மாணவர்களை அடிப்பது, திட்டுவது அவர்களது நலன் கருதியே.

கண்டிக்கும் போது ஆசிரியர் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கு அகராதியை பார்த்து பொருள் கொள்ளக் கூடாது,

 சந்தர்ப்பத்தை பார்த்துதான் பொருள் கொள்ள வேண்டும்.

"நாளைக்கு வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டால் 'கொன்றுவிடுவேன்' என்று ஒரு ஆசிரியர் சொன்னால் அவர் மீது கொலை மிரட்டல் வழக்கு போடலாமா?

இயேசு மக்களது குற்றங்களின் கனாகனத்தைப் புரிய வைப்பதற்காக சில சமயங்களில் 

"ஐயோ கேடு!" என்ற வார்த்தைகளை பயன்படுத்துவார்.

இயேசு யாரையும் சபிப்பதற்காக மனிதராக பிறக்கவில்லை.

இரட்சிப்பதற்காக மட்டுமே பிறந்தார்.

யாரைப் பார்த்து இயேசு அந்த வார்த்தைகளை பயன்படுத்துகிறாறோ அவர்கள் தங்களது குற்றங்களின் கனா கனத்தை உணர்ந்து| மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு, திருந்த வேண்டும். அதுவே இயேசுவின் நோக்கம். 

ஒருவகையில் அவர்கள் மீது அன்பும், அக்கறையும் அதிகம் வைத்திருக்கிறார் என்றுதான் அர்த்தம்.

கொராசின்,   பெத்சாயிதா நகர்களில் இயேசு ஏராளமான புதுமைகளை செய்திருந்தார்.

ஆனால் அவைகளில் அநேகர் மனம் திரும்பவில்லை.

அதைச் சுட்டி காண்பிக்கவே பேசு இயேசு   அவர்களை பார்த்து

" ஐயோ கேடு!" என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்.

பரிசேயர்களும், சதுசேயர்களும் மனம் மாறி நல்லவர்களாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் அவர்களைப் பற்றி பேசும் போதும் இந்த வார்த்தைகளை பயன்படுத்தினார்.

சாபம் இடுவதற்காக இருந்திருந்தால் 

மரண வேளையில் அவரது  மரணத்திற்கு காரணமாக இருந்த  அவர்களை மன்னிக்கும்படி ஏன் பரலோகத் தந்தையிடம் செபித்தார்? 


கொராசின்,   பெத்சாயிதா நகர்கள்
யூத மக்கள் வாழ்ந்த நகர்கள்.  அதாவது சிதறிப்போன இஸ்ராயேல் குலத்து ஆடுகள் வாழ்ந்த நகர்கள். 

அவர்களிடையே இயேசு அநேக
புதுமைகள் பல செய்து நற்செய்தியை அறிவித்தார்.

ஆனாலும் அந்நகர மக்கள் இயேசு ஆசைப்பட்ட அளவு திருந்தி வாழ வில்லை.

ஆகவேதான் இயேசு அவர்களைக் கண்டிக்கிறார்.

இன்று நம்மை எடுத்துக் கொள்வோம்.

நாம் இயேசுவின் ஞான உடலைச் சேர்ந்த அவரது பிள்ளைகள்.

கொராசின்,   பெத்சாயிதா நகர மக்களைவிட எவ்வளவோ மேலானவர்கள்.

அவர்களுக்கு செய்ததைவிட பன்மடங்கு இயேசு நமக்கு செய்து கொண்டு வருகிறார்.

நாம் ஞானஸ்தானம் பெற்று பரிசுத்த ஆவியினால் நிரப்பப் பெற்றிருக்கிறோம்.

பச்சாத்தாபம் என்ற தேவ திரவிய அனுமானத்தின் மூலம் நமது பாவங்களுக்கு மன்னிப்பு பெற்றுக் கொண்டிருக்கிறோம்.

கிறிஸ்துவின் திருப்பலியில் நாமும் கலந்து கொண்டு இருக்கிறோம்.

பலிப்பொருளாகிய கிறிஸ்துவையே நமது ஆன்மீக உணவாக உண்டு கொண்டிருக்கிறோம்.

வேண்டும் போதெல்லாம் நமக்கு ஆன்மீக ஆலோசனை தருவதற்காக 

திரும்பும் இடமெல்லாம் குருக்கள் நிறைய பேர்  நம்மிடையே இருக்கிறார்கள்.

இவ்வளவு நன்மைகளை பெற்றிருந்தும் நாம் எப்படி நடந்துகொள்கிறோம்?

இயேசுவிற்கு ஏற்றபடி நடந்து கொள்கிறோமா?

     கொராசின்,   பெத்சாயிதா நகர மக்களைப் போல நமது மனதிற்கு ஏற்றபடி நடந்து கொள்கிறோமா?

நம்மை நற்செய்திப்படி வாழ வைப்பதற்காகதான் 

நாம் இச்செய்தியை படிப்போம் என்பதை முன்னுணர்ந்து

அன்றே இயேசு அவ்வாறு பேசினார்.

இயேசுவின் வாக்கு அக்கால மக்களுக்கு மட்டும் அல்ல எக்கால மக்களுக்கும் பொருந்தும்.

அன்று அவர் பேசியதை இன்றும் நாம் அறிந்து நமது வாழ்க்கையில் பயன்படுத்துவதற்காகத்தான் நற்செய்தியாளர்கள் அவற்றை எழுதி வைத்திருக்கிறார்கள்.

நமது கிறிஸ்தவ வாழ்வை ஒழுங்காக வாழ்கின்றோமா அல்லது கொராசின்,   பெத்சாயிதா நகர மக்களைப் போல வாழ்கின்றோமா என்பதை சிந்தித்து பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம்.

ஞான ஸ்தானத்தின் போது பரிசுத்த ஆவியை பெற்றுக்கொண்டது உண்மைதான்.

ஆனால் அவருடைய தூண்டுதல்களின் (Inspirations)படி நடக்கிறோமா?

பாவசங்கீர்த்தனத்தின் மூலம் பாவமன்னிப்பு இயேசு நமக்கு வாய்ப்பு தந்திருக்கிறார். அந்த வாய்ப்பை பயன்படுத்துகிறோமா?

நமது ஆன்மீக வளர்ச்சிக்காக இயேசு தன்னையே நமது ஆன்மிக உணவாகத் தந்திருக்கிறார். திருவிருந்தின்போது நாம் இயேசுவை உணவாகப் பெறுவது உண்மைதான்.

ஆனால் தகுந்த தயாரிப்புடன் ஆன்மாவில் பாவமாசின்றி பரிசுத்தராகிய இயேசுவை உட்கொள்கிறோமா?

ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பலியில் கலந்து கொள்ள நாம் ஆலயத்திற்கு வருவது உண்மைதான்,

ஆனால் திருப்பலியில் முழு ஈடுபாட்டுடன் குருவோடு இணைந்து திருப்பலி ஒப்புக்கொடுக்கிறோமா?

திருப்பலி முடிந்து நடைபெறும் ஞானோபதேச வகுப்புகளுக்கு நமது பிள்ளைகளை  அனுப்புகிறோமா? 

பங்கு குருவை சந்தித்து ஆன்மீக ஆலோசனைகள் பெறுகிறோமா?

ஞாயிற்றுக்கிழமைகளில் ஆன்மீக காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமா?

தேவைப்படுவோருக்கு உதவுவது உண்மைதான். ஆனால் அதை ஆண்டவரது மகிமைக்காக மட்டும் செய்கிறோமா அல்லது நமது சுய திருப்திக்காக செய்கிறோமா?

"கேளுங்கள் கொடுக்கப்படும்" என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறார்.

நாமும் நிறைய கேட்டு பெற்றிருக்கிறோம்.

நாம் கேட்டதில் ஆன்மீக காரியங்கள் அதிகமா, லௌகீக காரியங்கள் அதிகமா என்று நினைத்துப் பார்ப்போம்.

ஆன்மீக காரியங்கள் அதிகமாக இருந்தால் நாம் விண்ணகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம் என்று அர்த்தம்.

நாம் பெற்ற லௌகீக உதவிகளை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்து அவற்றை ஆன்மீகம் காரியங்களாக மாற்றியிருக்கிறோமா?

நமக்கு வருகின்ற சிலுவைகளை பொறுமையோடு ஆண்டவருக்காக சுமந்திருக்கிறோமா?

நமது ஆன்மீக வாழ்க்கையை பற்றி சுயபரிசோதனை செய்து 

எந்த அளவிற்கு ஆண்டவரின் போதனைகளின்படி வாழ்கிறோம் என்பதை கண்டுபிடித்தால் 

ஆண்டவர் அவரது போதனைகளை கடைப்பிடிக்க நமக்கு தந்திருக்கும் சந்தர்ப்பங்களை எந்த அளவிற்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பது தெரியவரும்.

கொராசின், பெத்சாயிதா மக்கள் தங்களுக்கு கிடைத்த வாழ்க்கை சந்தர்ப்பங்களை இயேசுவின் போதனைகளை பின்பற்ற பயன்படுத்தவில்லை.

அது இயேசுவுக்கு பிடிக்கவில்லை.

நாம் இயேசுவுக்கு பிடித்த படி வாழ்கின்றோமா அல்லது கொராசின், பெத்சாயிதா மக்களைப் போல் வாழ்கின்றோமா?

சுயபரிசோதனை (Self examination of conscience) மூலம் கண்டுபிடித்து இயேசுவின் போதனைப் படி வாழ ஆரம்பிப்போம்.

ஏற்கனவே அதன்படியே வாழ்ந்து கொண்டிருந்தால் அதைத் தொடர்வோம்.

லூர்து செல்வம்.